மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 42 முருகபூபதி


வெளியே சென்றிருந்த ஜீவிகாவும் ஜெயசீலனும் வீடு திரும்பியபோது, கலகலப்பு மீண்டும் ஜீவிகாவின் களீர் சிரிப்புடன் தொடங்கியது.
 “ அபிதா…. உங்களுக்கும் சேர்த்து ஐஸ்கிறீம் வாங்கி வந்துள்ளோம்.  இது கொஞ்சநேரம் ஃபிரிட்ஜில் இருக்கட்டும்  “ எனச்சொன்னவாறு, அந்த ஐஸ்கிறீம் கன்டேயினரை உள்ளே வைத்தான் ஜெயசீலன்.
‘  யாருக்கு ஐஸ்…?  எந்தக்  கொஞ்சலுக்கு…?  ‘ அபிதா மனதிற்குள் சிரித்தாள்.
“  வெளியே போய்வந்திருக்கிறோம். நீங்க போய் முதலில் குளித்துவிட்டு வாங்க.   “ ஆசனத்தில் அமரச் சென்ற சீலனை, ஜீவிகா கலைத்தாள்.
“  என்ன சொல்லுறீர்… நான் மாற்று உடுப்பு ஏதும் கொண்டு வரவில்லை.  “ 
“  அதெல்லாம் தரலாம். பாத்ரூமில் வோஷிங் மெஷின் இருக்கிறது.  போட்டால், எடுத்து காயப்போடலாம். போகும்போது அயர்ன் பண்ணித்தாரன்.  லண்டன் பெரியப்பாவின் சாரம்  மாற்றுடைக்கு  இருக்கிறது. தாரன். “  ஜீவிகா அதனை எடுக்க திரும்பியபோது,  “ வேறு என்ன இருக்கிறது..?  “ என்று சீலன் கண்ணைச் சிமிட்டிக்கேட்டான்.
“  அடியிருக்கிறது….  ஆளைப்பாரு ஆளை…?  “  முகத்தை சுழித்துக்கொண்டு லண்டன்காரரின் உடைகளுக்கு மத்தியிலிருந்து ஒரு சாரமும், ரீ சேர்ட்டும் எடுத்துவந்தாள் ஜீவிகா.
 “ அபிதா… இந்த மெடமுடன் எப்படி காலம் தள்ளுறீங்க...  “ என்று அபிதாவைப்பார்த்துக் கேட்டான் சீலன்.
“  நான் காலம் தள்ளுவது ஒரு புறம் இருக்கட்டும், நீங்கள் இனிமேல் எவ்வாறு காலம் தள்ளப்போகிறீர்கள்..? அதைப்பற்றி யோசியுங்க அய்யா.  “   என்றாள் அபிதா.
 “ என்ன அய்யாவா…? எனக்கு உங்களை விட வயது குறைவாகத்தான் இருக்கும்.  தம்பி என்று கூப்பிடுங்க.  சீலன் – ஜெயா என்றும் கூப்பிடலாம் .  “ 
 “  சரி தம்பி….. போய் குளித்துவிட்டு வாங்க தம்பி. நானும் குளிக்கவேண்டும் தம்பி… இனிப்போறீங்களா தம்பி…. “ ஜீவிகா சீலனை குளியலறை நோக்கித்தள்ளிவிட்டு களீரென சிரித்தாள்.
இந்த வேடிக்கைக்கூத்து எதனையும் பார்ப்பதற்கு  சுபாஷினி, மஞ்சுளா, கற்பகம் ரீச்சர், லண்டன்காரருக்கு சந்தர்ப்பம் இல்லாமல்போய்விட்டதே…! என்று அபிதா மனதிற்குள் சிரித்தாள்.
அத்துடன் இனம்புரியாத பயமும் அவளது மனதில் துளிர்விட்டது.

ஏற்கனவே சுபாஷினி ஒரு காதலனிடமும் கற்பகம் ரீச்சர் வெளிநாடுவரையும் சென்று தாலிகட்டிய கணவனிடமும் ஏமாந்திருக்கிறார்கள்.  மஞ்சுளாவின் அம்மாவுக்கு என்ன நடந்தது…?  என்பதும் முழுமையாகத் தெரியாது.  இப்போது,  இந்த வீட்டு எஜமானியாக என்னிடம் வேலைகளை வாங்கி, மாதம் முடியுமுன்பே சரியாக சம்பளத்தை எண்ணித்தந்துவிடும் இந்த ஜீவிகா, இதுவரையில் தனது எதிர்காலம் பற்றி ஏதும் சொல்லாமலேயே என் முன்னிலையில் வார்த்தைகளினால் காதல் சரசமாடுகிறாள்…. இது எங்கே சென்று முடியும்….!?
சீலனைப்பார்த்தால் வயதுக்கேற்ற குறும்புத்தனம் தென்படுகிறது. கிறிஸ்தவம்தான் என அடையாளப்படுத்துவதற்கு   அவனது கழுத்தில் தொங்கும் தங்கச்சங்கிலியில் சிலுவை தெரிகிறது. இவள் ஜீவிகா யாழ்ப்பாணத்து சைவம். அலுவலக காதல் -  பாடசாலைக்காதல் -  பல்கலைக்கழகக் காதல், ரயில் – பஸ் – விமானப்பயண காதல், கண்டதும் காதல் – முகநூல் காதல் – இவையெல்லாம் சமகாலத்தில், முன்பு பேனா நட்புக்காதலும் இருந்தது.
கடற்கரை, பூங்கா, என்று தொடங்கி, விடுதிகள் வரையில் தொடர்ந்து முறிந்துபோன காதல், தனியார் மருத்துவமனைகளில் கள்ளத்தனமாக கருச்சிதைவு வரையில் சென்று முடிவுற்ற காதல் பற்றியெல்லாம் அபிதாவுக்கு யோசனை வருகிறது.
ஈழப்போர் முனையில் ஆண் – பெண் போராளிகளுக்கிடையில் அரும்பிய காதல் பற்றிய கதைகளை அபிதாவுக்கு சொன்ன, கணவன் பார்த்திபனும் வீட்டில் காதல்மொழிபேசியதும் குறும்புத்தனங்கள் செய்ததும் அபிதாவின் நினைவுப்பொறியில் சுடர்விட்டது.
எதுவும்பேசாமல் மௌனமாக சமையலில் மூழ்கினாள்.
சீலன் குளித்து உடைமாற்றிக்கொண்டு வந்தான். அவனிடத்தில்   ஜீவிகாவிடமிருந்து  வழக்கமாக வரும் பெஃபியூம் வாசனை வந்தது.
 “  வாங்க… ஏதும் குடிக்கத்தரட்டுமா…?  “ சீலனைப்பார்த்து அபிதா கேட்டாள்.
“  வேண்டாம்.  பசிக்கிறது சாப்பிடுவோம்.   “ என்றான்.
 “ ஜீவிகாவும் வரட்டுமே  “ என்றாள் அபிதா.
 “ அவவா… அடக்கடவுளே… அவ பாத்ரூம்போனால்,  திரும்புவதற்கு ஒரு மணிநேரமாகுமே…  தெரியாதா…?  “ என்று சீலன் சொன்னதும் அபிதா சற்றுத்திகைத்தாள்.
“  இந்த உண்மை இவனுக்கு எப்படித் தெரியும்…? “  அபிதாவுக்கு பலவிதமாகவும் யோசனை வந்தது.  தனது பிடரியில் தானே அடித்துக்கொள்ளவேண்டும் போலவும் தோன்றியது.
சீலன் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதற்கு முன்னால்  அமர்ந்தான்.  குடிப்பதற்கு தண்ணீர்கேட்டான். அபிதா கண்ணாடித்தம்ளரில் கூசாவிலிருந்து எடுத்துவந்து கொடுத்தாள்.
“  தேங்ஸ் அபிதா… இந்த ரெலிவிஷன் செனலுக்கும் நான் பகுதிநேர வேலை செய்யிறனான்.  உங்கட சமையல் மிகவும் பிரமாதம். ருசி தனிரகம்.  எங்கே இந்த வித்துவத்தை கற்றீங்கள்...? " 
"  என்ன… ஐஸ்கிறீமுடன் வந்து எனக்கு ஐஸ் வைக்கிறீங்களா…? எதற்கும் யோசிக்கவேண்டாம்.  ஜீவிகா அம்மாவின் பெரியப்பா லண்டனிலிருந்து வந்திருக்கிறார். அவர் போகும் முன்னர் ஜீவிகா அம்மாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டுவிடுங்கள். சரியா… சேர்…! “ 
 “ என்ன நீங்க… அவளை அம்மா… அம்மா… என்று கூப்பிடுறீங்க… என்னை அய்யா…சேர்…. என்றெல்லாம் அழைக்கிறீங்கள்…. இதுவெல்லாம் சரிப்படாது,  மீண்டும் சொல்றன்… என்னை சீலன் என்றும் ஜெயா என்றும் அழைக்கலாம். அல்லது ஜெயசீலன் என்றே கூப்பிடலாம்…. உந்த அய்யா, சேர், வேண்டாம் அபிதா. அத்தோடு அவவையும் அம்மா – கொம்மா என்றெல்லாம் அழைப்பதை நிறுத்திவிடுங்கள். நானும் அவவிட்ட சொல்கிறேன்.  “ என்றான் சீலன்.
 “ என்ன இருந்தாலும் அவுங்க எனக்கு படியளக்கும் வீட்டு எஜமானி. நீங்கள் அவுங்கட வருங்காலத்  துணைவர். மரியாதையோடுதானே அழைக்கவேண்டும்.  “
அதனைக்கேட்ட சீலன் சிரித்தான். தண்ணீரை அருந்தியவாறு சிரித்தமையால், புரைக்கேறியது.  தானே தனது உச்சந்தலையில் தட்டிக்கொண்டான்.
 “ அதென்ன வருங்காலத்துணைவர்….. இப்போது மாத்திரம் இல்லையா..? ஒஃபீஸில் சின்ன விடயங்களுக்கும் அவவுக்கு நான்தான் வேண்டும். எனது  துணையில்லாமல் சிறு துரும்பும் அசைக்கமாட்டா. அது தெரியுமா…? உங்களுக்கு…?  “
 “ என்னவாம்…. என்னவாம்…. எல்லாம் எனக்குக் கேட்கிறது. அபிதா, அவர் சொல்வதையெல்லாம் நம்பவேண்டாம்.   “ ஜீவிகா, சுடிதாருடன் வந்து முன்னால் நின்று எப்படி இருக்கிறது சீலன். நீங்கள் போனவருடம்  என்ர பேர்த்டேக்கு வாங்கித்தந்ததுதான்.  இன்னமும் அளவாத்தான் இருக்கிறது. பார்த்தீங்களா… இதிலிருந்து என்ன தெரிகிறது….?  எனக்கு வெயிட் போடவில்லை.   “
மதியநேரப்பசி, அவளை துரிதப்படுத்திவிட்டது.
 ‘ போனவருடம் பிறந்த நாளுக்கா…? அப்படியென்றால்… இந்தக்காதலுக்கு எத்தனை வயது…?  இதற்கு முன்னர் சீலன் இந்தப்பக்கம் வரவில்லையே…!  ‘ அபிதாவுக்கு,  அவர்கள் இருவரதும் சரசம்தான் பல கேள்விகளை மனதில் தூண்டியவாறு இருந்தது.
“  ஜீவிகா…  நான் சொன்னவிடயத்தை அபிதாவுக்கு நீர் இன்னமும் சொல்லவில்லையா…?  “
“ நீங்களே சொல்லுங்க… முதலில் சாப்பிடுவோம். பசிக்கிறது  “ ஜீவிகா மேசையை தயார் செய்தாள்.  அபிதா,  சிக்கன் புரியாணியுடன், உணவுத்தட்டங்களையும் எடுத்துவைத்தாள். தயிர் கலந்த சலாட், இறைச்சிப்பொறியல், கிழங்குப்பிரட்டல்… இன்னும் சில டிஷ்களும் மேசைக்கு வந்தன.
சீலன் எழுந்து,  தனது கெமராவை எடுத்து  மேசையில் பரிமாறப்பட்டவற்றை  சில கோணங்களில் படமெடுத்தான்.
“  என்ன ஃபேஸ் புக்கில் போடப்போறீங்களா…?  “   அபிதா கேட்டபோது, கெமராவிலிருந்து கண்ணை எடுக்காமலேயே,                   “  இல்லை… இல்லை…. இது  வேறு ஒரு இடத்திற்குப்போகுது.  அபிதா. நீங்கள் முகத்தை கழுவி, பவுடர் போட்டுக்கொண்டு  வாங்க…  அதிகம் பூசவேண்டாம். ஜீவிகா, உம்மிட்ட ஃபேஸ் கிறீம் இருந்தா கொடும். அபிதாவை அழகாக ட்ரெஸ் பண்ணவைத்து அழைத்துவாரும்.  இன்னும் சில ஷொட்ஸ் எடுக்கவேண்டும்.  “
 “ என்னத்துக்கு….? வேண்டாம்… வேண்டாம்….” அபிதா விலகி ஓடினாள்.
 “ இங்கே வாங்க அபிதா… எல்லாம் காரணத்தோடுதான்.  வாங்க… என்னுடைய உடுப்புகளைத்தாரன். முதலில் ஒரு சின்னவோஷ் எடுத்திட்டு வாங்க…ஒரு நல்ல செய்தியுடன் இன்றைக்கு உங்கட விருந்தை எங்கட சீலன் சாப்பிடப்போகிறார்….”  என்று சொன்னவாறு, அபிதாவை இழுத்துவந்து குளியலறைக்குள் தள்ளினாள் ஜீவிகா.
என்ன நடக்கப்போகிறது…?  என்பது தெரியாமல் பதகளிப்புடன் குளியலறைக்குச்சென்று அபிதா திரும்பியதும்,  ஜீவிகா அவளை அழைத்துக்கொண்டு தனது அறைக்குச்சென்று அவளை தயார்ப்படுத்தினாள்.
 “ என்னம்மா… எதுக்கம்மா… வேண்டாம் அம்மா…  “ என்றவாறு ஜீவிகா அம்மா புராணம் பாடிக்கொண்டிருந்தாள்.
 “ இரண்டுபேரும் கெதியா வாங்கோ… இந்த புரியாணி வாசம் மூக்கைத்துளைக்குது , பசி வயிற்றைக்கிள்ளுது… “
ஜெயசீலன் வரும்போது எடுத்துவந்த வீடியோ கெமராவையும் தூக்கி, கோணங்களை பார்த்தான்.
சில நிமிடங்களில் அபிதா, திருமணவைபவத்தில் வரும் மணமகளின் தோழிபோன்று நாணிக்கொண்டு வந்து கண்கள் சிமிட்ட லேசான நடுக்கத்துடன் நின்றாள்.
 “ அபிதா… ஒரு டென்ஷனும் வேண்டாம்…. இயல்பாக வந்து நில்லுங்க…. நீங்கள செய்திருக்கும் புரியாணியை பிளேட்டுக்களில் பரிமாறுங்க…. முகத்தில் இயல்பான புன்சிரிப்பு வர வேண்டும்.  என்ன…  ஜீவிகா… லிப்ஸ்டிக் பூசிவிடவில்லையா…?   “  சீலன் உரத்துச்சத்தம் போட்டான்.
 “ பெர்ஃபியூமும் அடிக்கட்டுமா…  சீலன்…?  “எனக்கேட்ட ஜீவிகா, அபிதாவை மீண்டும் அறைக்கு அழைத்துச்சென்று அவளது உதட்டுக்கு சாயமும் பூசி, கூந்தலையும் அழகாக படரவிட்டு அழைத்துவந்து, அணைத்தவாறு நின்று,   “ சீலன்… முதலில் எங்கள் இரண்டுபேரையும் எடுங்கள்… பிளீஸ்….”  என்று கெஞ்சினாள்.
 “ உம்மட பெர்ஃபியூம் படத்தில் மணக்காது.  உம்மை விட… இப்போது அபிதா அழகாக இருக்கிறாங்க… “ என்று சொல்லி கண்ணைச்சிமிட்டினான் சீலன்.
 “ இப்பா….என்னிட்ட வாங்கப்போறீர்….முதலில் படத்தை எடும்  “
சீலன் இரண்டு மூன்று கோணங்களில் அவர்கள் இருவரையும் படம் எடுத்தான்.
இந்தக்கூத்தெல்லாம் எதற்கு நடக்கிறது…?  என்பது புரியாமல், இந்த நாடகத்தின் அடி நுனி தெரியாமல் அபிதா தயங்கித்தயங்கி படங்களுக்கு போஸ் கொடுத்தாள்.
அதன்பின்னர் சீலன் சொன்னவாறு சாப்பாட்டு மேசையருகே வந்து நின்று,  ஒரு சினிமா இயக்குநரின் கட்டளைகளுக்கு அடிபணிவது போன்று அபிநயம் காண்பித்தாள்.
ஜீவிகா மென்மையாக  சிரித்துக்கொண்டே இருவரையும் மாறி மாறிப்பார்த்துக்கொண்டு ஏதோ சொல்ல வந்தாள்.
 “ பிளீஸ்… ஜீவிகா…. இப்போது பேசவேண்டாம்.  “
எல்லாம் முடிந்ததும்,   “சரி…. ஓகே…. டேக்… ஓகே…..வாங்க சாப்பிடுவோம்  “ சீலன் கைகழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான். ஜீவிகா பரிமாறினாள்.
 “ அம்மா…இந்த உடுப்பையெல்லாம் மாற்றிவிட்டு வரட்டுமா…?  ஏன் இப்படி ஒரு விளையாட்டுக் காட்டினீங்க… தம்பி….? எனக்கு எதுவும் புரியவில்லை. இந்த அம்மாவும் எதுவும் சொல்றாங்க இல்லை.  “ 
 “ எல்லாம் சொல்கிறேன். முதலில் நீங்களும் வாங்க சாப்பிடுவோம்.   நல்லா இருக்கிறது அபிதா… நல்ல டேஸ்ட்… ? உங்களுக்கு மரக்கறி டிஷ்களும் தயாரிக்கத்தெரியும் என்று ஜீவிகா சொல்லியிருக்கிறா…? அதிலும் சத்தான உணவு பற்றியெல்லாம் உங்களுக்கு நல்ல அறிவு இருக்கிறது என்றும்.  வீட்டுக்குப்பின்னால் அழகான மரக்கறித்தோட்டமும் பராமரிக்கிறீங்க என்றும்  அறிந்தேன். சாப்பிட்ட பிறகு உங்களை அங்கும் நிற்க வைத்து சில படங்கள் எடுக்கவேண்டும்  “
“  என்னம்மா…? இங்கே என்ன நடக்கிறது.  தம்பி… அவர்பாட்டுக்கு என்னவெல்லாமோ செய்யிறார். ஏதும் முன்னேற்பாட்டுடன்தான் இவரை இங்கே அழைத்திருக்கிறீங்களா…? சொல்லுங்க அம்மா…?   “ அபிதாவுக்கு பதட்டம் அதிகரித்தது.
 “ எல்லாம் சஸ்பென்ஸ்… அபிதா… வாங்க வந்து சாப்பிடுங்க…  “ ஜீவிகா அழைத்தாள்.
அபிதா,  தனது தட்டத்தில்  உணவை எடுத்துக்கொண்டு, அந்த மேசையிலிருந்து மூன்று அடிதூரம்  அகன்று,   தனக்குரிய சமையலறை ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டாள்.
 “ இப்படி வாங்க… வந்து மேசையில் வைத்து சாப்பிடுங்க… கீழே சிந்தப்போகுது  “ சீலன் அழைத்தான்.
 “வேண்டாம் தம்பி….  இப்படி இருந்து சாப்பிட்டு பழகிட்டன்.  நீங்க சாப்பிடுங்க… தேங்ஸ்.  “ அபிதாவுக்கு தொண்டை அடைத்தது.
தன்னை ஒரு சாதாரண வேலைக்காரியாக – சமையல்காரியாக பார்க்காமல் சக மனுஷியாக நடத்தும் சீலனும் ஜீவிகாவும் நன்றாக இருக்கவேண்டும் என்று மனதிற்குள் வாழ்த்தினாள்.  அவளையும் அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
அதனை மறைத்துக்கொண்டு விம்மியவாறு எழுந்து சென்று, கண்களை துடைத்துக்கொண்டாள்.
 “ அவ… கொஞ்சம் சென்டி மென்ட் பெண். அதனால் நாங்கள் எல்லாம் அவவுடன் அவதானமாகத்தான் நடப்போம். நீங்களும் அப்படி நடந்தால் சரி சீலன்  “ ஜீவிகா மெதுவாகச்சொன்னாள்.
அபிதா புன்னகை சிந்தியவாறு,   “  மன்னிக்கவும். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்  “ மீண்டும் வந்து அமர்ந்து உணவருந்தினாள்.
 “ கொஞ்சம் இல்லை.  அதிகம்.   சரி… இனிச்சொல்லுறன். நான் சொல்லட்டுமா… ஜீவிகா… நீர் சொல்றீரா…?  “
ஒரு செக்கண்ட் மௌனத்திற்குப்பின்னர், ஜீவிகாவே சொன்னாள்.
 “ பாருங்க அபிதா,  உங்களை சீலன்  பகுதி நேரமாக வேலைசெய்யும் தொலைக்காட்சி சேவைக்கு அறிமுகப்படுத்தப் போகிறார்…. “
“  என்னது…?!  “ அபிதா திடுக்கிட்டு எழுந்தாள்.
 “ உட்காருங்க அபிதா… முதலில் அவர் சொல்லப்போவதைக் கேளுங்க….” 
“  என்னம்மா… நீங்க….” அபிதா சிணுங்கியவாறு அமர்ந்தாள். கையில் உருட்டி எடுத்த புரியாணியை வாயில் வைக்காமலே சீலனின் முகத்தை ஊடுறுவிப்பார்த்தாள்.
 “ அபிதா அறுசுவை  “ இது தான் பெயர்.  உங்களைப்பற்றி எங்கட நிகழ்ச்சித் தயாரிப்பாளரிடமும் டிரெக்டரிடமும் சொல்லி வாரம் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் தோன்றி சமையல் குறிப்பும் – செய்முறையும் சொல்லப்போறீங்க…. எப்படி நானும் ஜீவிகாவும் வைத்திருக்கும் தலைப்பு…? “  என்று சீலன் சொன்னதும் அபிதா திடுக்கிட்டு எழுந்தாள்.
( தொடரும் )

No comments: