கறுப்பதனை குறையெனவே வெறுத்துவிடல் முறையாமோ ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


கறுப்பென்றால் வெறுக்கின்றார்
      காறியும் உமிழ்கின்றார் 
கறுத்தநிறம் கொண்டோரை
      வெறித்தனாமாய் தாக்குகிறார் நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம்
     நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து
வெறுத்தவரே வியக்கின்றார்
   விருப்பமின்றிப் பார்க்கின்றார் !


காந்தியைக் கறுப்பரென்று
   காலாலே மிதித்தார்கள்
கருணையின்றி அவர்வாழ்வில்
    கஷ்டம்பல கொடுத்தார்கள்
சாந்திதனை வேண்டியவர்
   சாப்பிடவே மறுத்ததனால்
கறுப்பரெனப் பார்த்தவரே
   கதிகலங்கி போனார்கள்  !


கறுப்பினத்தை விலங்கெனவே
    கண்டுநின்ற கூட்டத்தார்
கனவுகாணா வகையினிலே
  கறுப்பரே தலைமையானார் வெறுத்தொதுக்கி நின்றவினம்
   பொறுத்தொதுங்கி போகாமல்
வீரமுடன் எழுந்ததனால்
   வெற்றிகொண்டே  நிற்கிறதே !

 
வான்கறுக்கா நின்றுவிடின்
   மழைவருதல் இல்லையன்றோ
 
இரவுவரவில்லை என்றால்
 
   பகலுக்கே அர்த்தமுண்டோ
 
கறுப்புநிற ரத்தமதை
    கண்டுவிடல் சாத்தியமா
 
கறுப்பதனை வெறுப்பதற்குக்
    காரணம்தான் விளங்கவில்லை !


  
கறுப்பதனை வெறுப்போர்கள்
 
    கறுப்புமுடி வருவதற்கு
  
காசுபல செலவழித்து
      காணுகிறார் இன்பமதில்
  
கறுப்புடுப்புப் போடுகிறார்
     கறுப்புக்கார் வாங்குகிறார்
  
கறுப்புநிறப் பொருள்வாங்கி
 
     காணுகிறார் மனமகிழ்வை  !

   
வெள்ளைநிற முள்ளவரே
 
     வெள்ளைமுடி வெறுக்கின்றார்
   
விதம்விதமாய் சாயத்தை
 
     விலைகொடுத்தே வாங்குகிறார்
   
அள்ளியள்ளி அதைப்பூசி       ஆனந்தம் காணுகிறார்
   
அவர்வெறுத்த கறுப்புதனை
  
    அவரேற்றே  மகிழுகிறார் !

    
வெள்ளையினக் கூட்டத்தை
 
      வென்றுநின்ற மாமனிதர்
    
நெல்சனாம் மண்டேலா
   
   நெஞ்சுரத்தைப் பார்த்துவிட்டு
    
கறுப்புநிற ரோஜாவாய்
 
      கருத்தினிலே கொண்டதனால்
    
பொறுப்புமிகு பதவிபெற்றார்
   
     கறுப்புநிறப் பெருமகனும் !


    
வெள்ளைநிற முடையோரின்
    
    விருப்பமெலாம் மாறிடினும்
     
வெள்ளையரை விரட்டிவிட்டோர்
     
   வேறுருவம் கொண்டுவிட்டார்
     
கள்ளமனம் அவரிடத்தில்          மெள்ளவுருக் கொண்டதனால்
     
கறுப்புதனை அவருமிப்போ          வெறுப்புடனே நோக்குகிறார் !


    
வெள்ளையாய் பிள்ளைபெற
        விதம்விதமாய் உண்ணுகிறார்
    
வெள்ளையாய் பெண்தேடி
   
     விரைந்தோடி அலைகின்றார்
    
உள்ளமதை வெள்ளையாய்
    
    உருவாக்க மறுக்கின்றார்
    
கள்ளமனம் எல்லாமே
 
        கறுப்பாக இருக்கிறதே !


     
சாமியிருக்கும் கருவறையும்
     
   சரியான கறுப்புத்தான்
     
சாமிசிலை அத்தனையும்
   
      சரியான கறுப்புத்தான்
     
தாயினது கருவறையும்
    
     சரியான கறுப்புத்தான்
     
கறுப்பதனை குறையெனவே
  
        வெறுத்துவிடல் முறையாமோ !


No comments: