'வடிவினை முடியக் கண்டார்?' பகுதி 01: -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-


லகு இறையின் படைப்பு.
காணப்படும் உலகைக் கொண்டு,
காணப்படா இறைவனைக் காண முயல்வது கற்றோர் வழமை.
காணப்படா இறைவனைக் காணப்புகுந்தார்,
தத்தம் ஆன்ம அனுபவத்திற்கேற்பவும், அறிவு விரிவிற்கேற்பவும்,
எல்லைப்படா இறைவனை எல்லைப்படுத்த முயன்று,
அவன் வடிவு இஃது எனவும்,
அவன் நாமம் இஃது எனவும்,
அவனை அடையும் வழி இஃது எனவும்,
தத்தம் தரிசனத்திற்கேற்ப புதிய புதிய நெறிகளைச் சமைத்தனர்.
அந்நெறிகள் ஒவ்வொன்றும் அவர்களைப் பின்பற்றுவோரால்,
புதிய சமயங்களாய் உலகில் பதிவாக்கப்பட்டன.
இவ்வுலகில் சமயங்கள் பல்கிப் பெருகியதற்காம் காரணம் இதுவேயாம்.
🦢 🦢 🦢 🦢
பலரும் தத்தம் ஆன்ம அனுபவத்திற்கேற்ப,
இறைவனை வேறு வேறாய்க் காண முயன்றதில் தவறில்லை.
ஒன்றேயான கடல்நீர்,
அள்ளப்படும் பாத்திரங்களுக்கேற்ப,
வேறு வேறாய் வடிவுகொள்ளுதல் போல்,
வடிவைக்கடந்த அவ் இறைவனும்,
காணப்புகுந்தார் தரத்திற்கேற்ப,
ஆயிரமாய் வடிவு கொண்டான்.
பின் ஆயிரமாய் நாமங் கொண்டான்.
ஒருநாமம், ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு,
ஆயிரம் திருநாமம் சூட்டித் திளைத்தனர் ஞானியர்.
அன்பால் எந்நாமம் சூட்டி அழைப்பினும்,
நம்பால் ஓடிவரும் குழந்தையைப் போல்,
ஆண்டவனும் அந்த ஞானியரின் அன்பு அழைப்பை ஏற்று,
வேண்டியது தந்து விருப்புற்றான். 
🦢 🦢 🦢 🦢
எவர் அழைத்தாலும், எப்படி அழைத்தாலும்,
இரங்கிவரும் இறைவனின் பேரருளைப் புரியாது,
தாம் நினைத்த வடிவோடு, தாம் அழைத்த நாமத்தோடு,
தம் அழைப்பேற்று இறைவன் வந்ததால், 
இஃதே இறைவனின் வடிவமும், நாமமும் என,
வானத்தை வரைவு செய்தாரின் அறியாமைச் செயல்போல,
அவரவர் தாம் தாம் கண்ட இறையை,
இதுவே உண்மை இறையென உரைக்கத்தலைப்பட்டு மதிமயங்கினர்.
அவர்தம் கூற்று உண்மையுமாம், பொய்மையுமாம்.
🦢 🦢 🦢 🦢
தாம் கண்ட வடிவோடும் தாம் அழைத்த நாமத்தோடும் வந்த இறையை,
அவ் வடிவிற்கும் அந்நாமத்திற்குமே உரிய பொருளென,
அவர்கள் தம்மளவில் கண்டிருந்தால் தவறு நிகழாதிருந்திருக்கும்.
ஆனால் அவரோ அந்த அளவில் நிறுத்தாது,
ஒப்பீட்டில் மற்றைச் சமயங்களை உரசிப்பார்க்கத் தலைப்பட்டனர்.
தாம் கண்ட வடிவமும், நாமமும் மட்டுமே இறைக்குரியது எனக் கூறி,
தத்தம் தர்க்க அறிவால் அத்தயாநிதியைத் தமதாக்கி,
மற்றையோர் தரிசனத்தை மதிக்கத் தவறி மாண்பிழந்தனர்.
இங்குதான் சமயப்பாதைகள் தடம்புரளத் தழைப்பட்டன.
மணிவாசகர் இவர்தமை நினைந்தே,
சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைத்தனர் என்கிறார்.
🦢 🦢 🦢 🦢
இங்ஙனமாய்த்தான் சமயப்பூசல்கள்,
உலகில் சடசடவென வளர்ந்;தன.
எல்லோர்க்கும் பொதுவான இறையை,
வல்லோர்கள் தம்வயப்படுத்த முயல,
சூதும், வாதும், மோதும் வரிசையாய் நிகழத் தொடங்கின.
🦢 🦢 🦢 🦢
சமயங்கள் வேறுவேறாய் விரியினும்,
அவற்றுக்குள் ஒற்றுமையும், வேற்றுமையும்,
ஒன்றாய்க் கிடந்தது ஓர் அதிசயமே.
குறித்த ஒரு பொருளை,
வேறு வேறு திசைகளில் நின்று தேடிவருவார்தம் பாதைகள்,
அவரவர் நிற்கும் நிலைகளைப் பொறுத்து,
ஒன்றுக்கொன்று வேறுபடுதல் இயல்பு.
எனினும் அவ்வேறுபாடுகளுக்கிடையில் அவர் அடையும் பொருள் ஒன்றேயாம்.
பாதைகள் வேறுபடுதலால் அடையும் பொருள் வேறுபடாது.
🦢 🦢 🦢 🦢
வௌ;வேறு திசைகளிலிருந்து ஒரு பொருளைத் தேடிவருவோர்,
அப்பொருளினின்றும் தூர நிற்கையில்,
தாம் தாம் வந்த பாதைக்கேற்ப வேற்றுமைகளையும்,
அருகில் செல்கையில் அவ்வேற்றுமைகள் நீங்க ஒற்றுமைகளையும்,
ஒருமித்துக் காண்பது இயல்பேயாம்.
ஒரு பொருளைத் தேடி கிழக்கிருந்து வருபவனின் பாதைக் குறிப்பு,
மேற்கிருந்து வருபவனின் பாதைக்குறிப்பினின்றும் நிச்சயம் வேறுபடும்.
அங்ஙனமே மற்றைத் திசைகளிலுமாம்.
ஆனால் எத்திசையிலிருந்து வந்தாலும்,
தேடிவந்த பொருளை அண்மித்ததும்,
எல்லோர்க்குமான அடையாளங்கள் ஒன்றேயாதல் இயல்பன்றோ!
சமயங்களின் இறைத்தேடலிலும் இஃதேதான் நடந்தது.
🦢 🦢 🦢 🦢
மேற் கருத்தைப் புரிந்து கொண்டால்,
ஒரே இறையை வேறு வேறு வழிகளில் தேடும் சமயங்களைச் சார்ந்தார்,
தமக்குள் வேற்றுமை காணின்,
அவர்கள் இறையினின்றும் தூர நிற்கிறார்கள் என்றும்,
ஒற்றுமை காணின்,
அவர்கள் இறையை அண்மித்தனர் என்றும் அனுமானிக்கலாம்.
🦢 🦢 🦢 🦢
வேறுபட்ட எல்லாச் சமயங்களுக்குள்ளும்,
மற்றைச் சமயத்தாருடன் வேற்றுமை காண்பாரும், 
ஒற்றுமை காண்பாரும் இருக்கவே செய்தனர்.
இறையுடனான அவர்தம் நெருக்கம் பற்றி நிகழ்ந்த வேறுபாடுகள் இவை.
வேற்றுமை கண்டாரை சமயிகள் எனவும்,
ஒற்றுமை கண்டாரை ஞானிகள் எனவும்,
உரைத்தல் பொருத்தமாம்.
🦢 🦢 🦢 🦢
இறையை அண்மித்த ஞானியர்க்கு,
தூர நின்று சமயிகள் போடும் சண்டை,
வியப்பும், வெறுப்பும் தருதல் இயல்பு.
அதனால் அந்த ஞானியர்கள்,
அச்சமயிகளின் அறியாமைகண்டு எள்ளுவர்.
ஒற்றுமைக்காம் கருவியாக வேண்டிய இறைவனை,
வேற்றுமைக்காம் கருவியாக்கும் அச்சமயிகளின் வீண் முயற்சி,
ஞானியர்க்கு நகைப்பையே உண்டாக்குமாம்.
🦢 🦢 🦢 🦢
நம் தமிழ்ப் புலமை மரபில்,
இறையை அண்மித்த உயர்ஞானிகளின் ஆக்கங்கள் பல உள.
அவ் ஆக்கங்கள் எல்லாமே,
சமயப் பூசலாளர்களை வன்மையாய்க் கண்டிக்கும்.
அந்த உயர்ஞானிகள் வரிசையில்,
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் ஒருவனாய்ப் பதிவாகிறான்.
கம்பகாவியத்துள் பல இடங்களில் சமயப்பூசலாளர்தம் அறிவின்மையை,
கம்பன் அற்புதமாய்ச் சுட்டி நிற்கின்றான்.
அங்ஙனம் அவன் சுட்டும் ஒரு சில இடங்களைக் காண்பாம்.
🦢 🦢 🦢 🦢
(அடுத்தவாரம் தொடரும்)

நன்றி - உகரம் |இலக்கியக் களம்| கம்பவாரிதி. இலங்கை ஜெயராஜ் | www.uharam.com



No comments: