புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 01 முருகபூபதி


 ( மதுரை  உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய தொடர் ஆய்வரங்கில்,  மெல்பனிலிருந்து காணொளியூடாக சமர்ப்பிக்கப்பட்ட உரை )
அறிமுக உரை:  ஜான்ஸி ராணி – மதுரை
முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13)  இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன்.
முருகபூபதி இலங்கையில்  நீர்கொழும்பூரில் தற்போதைய  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
இவர் 1972 இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் 1974  இல் வெளியானது. இந்நூலுக்கு இலங்கை சாகித்திய விருது  1975 இல் கிடைத்தது.
1972 முதல் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக பணியாற்றிய இவர்,   1977 இல்  இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கினார்.   1985 இல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில்  மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார்.  நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.
 1987 இல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர்.  சிறுகதை, நாவல் , கட்டுரை,  நேர்காணல் , பயண இலக்கியம்,  சிறுவர் இலக்கியம்,  விமர்சனம்,  புனைவுசாரா பத்தி எழுத்துக்கள்   முதலான துறைகளில் எழுதுகிறார்.   இதுவரையில் 24 நூல்கள்  எழுதியுள்ளார்.
பறவைகள் நாவலுக்கு 2003 இல் இலங்கையில் சாகித்திய விருது கிடைத்தது.
முருகபூபதியின் சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
இவரது படைப்புகளை,  இலங்கை பேராதனை பல்லைக்கழக மாணவி ஒருவரும் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழக  மாணவி ஒருவரும் தமது MPhil பட்டத்திற்காக  ஆய்வு மேற்கொண்டனர்.

முருகபூபதி தற்போது அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் மாநகரில் வசிக்கிறார்.
அவுஸ்திரேலியா தினத்தின்போது (2002 )  விக்ரோரியா மாநிலத்தில்  சிறந்த பிரஜைக்கான விருதும்,  2013 ஆம் ஆண்டில் விக்ரோரியா மாநில அரசின் பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருதும் பெற்றார்.
விக்ரோரியா தமிழ்ச்சங்கம்,  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம் மற்றும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆகியனவற்றினால், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் பெற்றவர்.
தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளர்கள் - அறிஞர்கள்  தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், தொ.மு. சிதம்பர ரகுநாதன் ஆகியோரின் உறவு முறையில் அவர்களின் பேரன் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2020 ) அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (2004 – 2020 ) ஆகியவற்றின்  ஸ்தாபக உறுப்பினருமான முருகபூபதி இன்று வரையில் இந்த அமைப்புகளின் பணிகளிலும் இணைந்தவாறு இலக்கியப்பிரதிகள்  எழுதிவருகிறார்.
 
பனியும் பனி சார்ந்த நிலமும் -   ஆறாம்திணை
அனைவருக்கும் வணக்கம்.  அனைவரும் நலம்தானே..?
சமகால சமூக இடைவெளி பேணல் சூழ்நிலை எம்மை இவ்வாறு இணையவழியில் சந்தித்து கலந்துரையாடச்செய்துள்ளது.  அதனால்,  உங்களையெல்லாம் தொலைதூரத்திலிருந்தும் பார்த்து பேசுவதற்கும் சாத்தியமாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள மதுரை தமிழ்ச்சங்கத்திற்கும், எம்மோடு தொடர்புகொண்ட சகோதரி ஜான்ஸி ராணி அவர்களுக்கும், திரு. அன்புச்செழியன் அவர்கட்கும், இக்கலந்துரையாடலில் இணந்துள்ள அன்பர்களுக்கும்  இத்தகையதோர் தொடர்பாடலுக்கு எம்மையும் இணைத்துவிட்ட அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எங்கள் இலக்கியக் குடும்பத்தைச்சேர்ந்த சகோதரி முனைவர் திருமதி சந்திரிக்கா சுப்பிரமணியன் அவர்கட்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு,  எனது உரையை  சமர்ப்பிக்கின்றேன்.
கங்காரு தேசம் எனவும், கடல் சூழ்ந்த கண்டம் எனவும் அழைக்கப்படும், வர்ணிக்கப்படும் நாம் புகலிடம் பெற்று வாழும் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளை -  புள்ளிக்கோலங்களினால் பால் வீதியையும் வரைந்து டிரிடிடிஜூ என்ற வாத்திய கருவியினால் தமது இசையை அனைத்துலகத்திற்கும் அறிமுகப்படுத்திய இத்தேசத்தின் மூத்த குடிமக்களை நினைவு கூர்ந்தவாறு எனது உரையை தொடங்குகின்றேன்.
எமது முன்னோர்கள் ஐவகைத்திணைகளை எமக்கு அறிமுகப்படுத்தினர்.
குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை - காடும் காடுசார்ந்த நிலமும் / மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும் / பாலை - மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்
தமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது.
அவுஸ்திரேலியா கண்டம் நால்வகை பருவகாலங்களை கொண்டது. இளவேணிற்காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம். இங்கு பனியும் கொடுமை, கோடையும் கொடுமை என்பர் அனுபவித்தோர்.
 நான் வதியும் விக்ரோரியா மாநிலத்தில் தினமும் நான்குவகையான பருவகாலங்கள் வந்து மறையும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
எனினும் ,  பனிக்குள் நெருப்பாக வாழும் மக்களைப்பற்றியும் அதே சமயம் தங்கள் தாயகத்தின் நினைவுகளையும் அதாவது இலங்கையைச்சேர்ந்தவர்கள் இலங்கை பற்றிய நினைவுகளுடனும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா பற்றிய நினைவுகளுடனும் மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு உட்பட ஏனைய தேசங்களைச்சேர்ந்தவர்கள் அந்தத்தேசங்களின் நினைவுகளுடனும்தான் வாழ்கிறார்கள்.
ஆகாயத்தில் வட்டமிட்டுப்பறக்கும் பறவையும்கூட  தனக்கான உணவைத்தேடி தரைக்குத்தான்  வருகிறது.
அத்தகைய உறவுதான் ஒவ்வொருவரதும் தாயகம் – புகலிட தேசம் தொடர்பான விட்டு விலகமுடியாத நேசம்!
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் தாயகத்தை விட்டு அந்நியநாடுகளுக்கு பல்வேறு காரணங்களின் நிமித்தம் சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.
கடந்த சிலவருடங்களாக படகுகளில் பசுபிப்பெருங்கடலை கடந்து உயிரைப்பணயம் வைத்து வந்து குடியேறிய மக்களையும் படகு மனிதர்கள் என்று  அதாவது Boat People என்று இந்நாட்டின் அரசாங்கம் அடையாளப்படுத்திவிட்டது.  அவர்களும் எதிர்காலக் கனவுகளைத்தான் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வுக்கோலங்களும் படைப்பு இலக்கியத்தில் இணைந்துவிட்டது.
இங்கு வந்துசேர்ந்த படகுமனிதர்களைப்பற்றி  - அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் வதியும் எழுத்தாளர் தாமரைச்செல்வி உயிர் வாசம்  என்ற 550  பக்கங்கள் கொண்ட பெரிய நாவலை கடந்த  2019 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.
இம்மக்களின் கடல் பயணம் முற்றுப்பெறாத தொடர் கதையாகிவிட்டது.
 பிரித்தானியரின் காலனிகளாகிய சில நாடுகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற இந்திய த்தமிழர்களின் இன்றைய சந்ததியினரின் நாவில் தமிழ் தவழவில்லையென்றாலும் பெயர்களில் தமிழ் இன்னமும் வாழ்கின்றது.
  பிஜி, தென்னாபிரிக்கா, மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இதற்குச் சிறந்த உதாரணம்.
வேர்களில் மாசிக்கருவாடு கிடைக்கும் எனச்சொன்னவர்களின் பேச்சை நம்பி இலங்கை வந்த இந்தியத் தமிழர்களின் வேர்களில் சுரந்த தமிழ், வற்றாத ஜீவநதியாகியிருப்பதனால் அவர்களின் சந்ததியிடம் இன்றும் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
   அவுஸ்திரேலியாவும் பிரித்தானியரினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடல்சூழ்ந்த கண்டம்.
இந்தக்குடியேற்ற நாட்டுக்கு பல தேசங்களிலிருந்தும் கனவுகளோடு வந்த மக்கள், தமது வேரை தத்தம் தாயகத்தில் விட்டுவிட்டுவந்து வாழ்வை மாத்திரம் இக்கண்டத்தில் படரவிட்டுள்ளனர்.
   பகல் உறக்கத்திலோ இரவுறக்கத்திலோ கனவு காண்பது மனித இயல்பு.
   ஆனால்,  உறக்கத்தில் வந்த கனவுகள் கண்விழிக்கும்போது நினைவுகளில் கானலாகிவிடும். பிரித்தானிய வெள்ளை இனம் இக்கண்டத்தை கடல்கடந்துவந்து கைப்பற்றியபொழுது, கனவுகளை வண்ணாத்திப்பூச்சிகளாக நம்பிக்கொண்டிருக்கும் அபோர்ஜனிஸ் என்ற ஆதிவாசி இனத்தவர்களின் பூர்வீக தேசமாகவே  இக்கண்டம் இருந்தது.
    பூமிப்பந்தின் நாலாதிக்கிலிருந்தும் பல்வேறினமக்களை, இக்கண்டத்தின் ஆட்சியாளர்கள் குடிபுகுவதற்கு அனுமதித்தமையால் பல்லின கலாசார நாடாகிவிட்டது.
    தாயகத்தில் பார்த்திராத வெண்ணிற இரவையும் White Nights (கோடைகாலம்) வெண்பனிப்பொழுதையும் (குளிர்காலம்) இந்தக்கண்டத்தில், வருடந்தோறும் தரிசிக்கும் தமிழ்மக்களும் கனவுகளுடன்தான் வந்தனர்.
    இவர்களில் உள்ளார்ந்த கலை,இலக்கிய ஆற்றல்மிக்கவர்கள் கற்பனைகலந்த கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பதனால், கற்பனைக்கும் கனவுக்கும் வடிவம் கொடுக்கவேண்டியவர்களாகிவிட்டனர்.
    அந்த வடிவங்கள், புனைகதை, கவிதை, நாவல், நாடகம், புனைவு சாராத பத்தி எழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாட்டுக்கூத்து, ஊடகம், ஓவியம், நடனம், இசை,  இணையம்  என்று வளர்ந்துகொண்டிருக்கின்றன.
    அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியம் செல்லும் திசைநோக்கியே இந்த  உரையை நகர்த்தவேண்டியிருப்பதனால், அகலக்கால் ஊன்றாமல் எழுத்து ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை மனசுக்குள் எண்ணிப்பார்க்கின்றேன்.
   அவர்கள் எண்ணிக்கையில்   ஐம்பது  அல்லது அறுபதைத் தாண்டுகிறார்கள்.
    ஆச்சரியமாக இருக்கிறதா…?
இக்கண்டத்திலிருந்து இலக்கியப்பிரதிகளை  எழுதிக்கொண்டிருப்பவர்கள்- சஞ்சிகை- பத்திரிகைகள் வெளியிட்டவர்கள்- தமது படைப்புகளை நூலாக்கியவர்கள்- படைப்புகளுக்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்கள்- இலக்கிய வளர்ச்சிக்காகவே அமைப்பு ரீதியாக இயங்கியவர்கள்- பதிப்பகங்களை உருவாக்கியவர்கள்- இலக்கிய சந்திப்புகளையும் எழுத்தாளர் விழாக்களையும் நடத்தியவர்கள்-அரசாங்க உயர்தரப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக்கி வினாக்களிலே இலக்கியத்தையும் இழையோடவிட்டவர்கள்-இனிவரும் தமிழ்த்தலைமுறையிடம் தமிழினிச்சாகாது, தமிழினித்துளிர்க்கும் என்று  நம்பிக்கை வளர்ப்பவர்கள்-ஊடகங்களிலே இலக்கியத்திற்கும் இடமளிப்பவர்கள்- மொழிபெயர்ப்பூடாகவும் தமிழை மேன்மைப்படுத்துபவர்கள்………  இப்படியாக, இந்தக்கண்டத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமாக வளர்கிறது.
   ஆதாரங்கள் வேண்டுமா…?
 பிரான்ஸிலிருந்து வெளியான அம்மா என்ற இதழ் 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது.
   ஐம்பது ஆண்டுகளை  நோக்கி தனது வயதை உயர்த்திக்கொண்டிருந்த ஈழத்தின் மூத்த இலக்கிய இதழ்  மல்லிகையின் அவுஸ்திரேலியா சிறப்பு மலர் 2000 ஆம் ஆண்டு வெளியானது.
   இருநூற்றி ஐம்பதாவது  இதழை நோக்கி வளர்ந்திருக்கிறதே ஈழத்தின் மற்றும் ஒரு  இலக்கிய இதழ்  ஞானம்-  தனது 45 ஆவது இதழை அவுஸ்திரேலியா எழுத்தாளர்விழா சிறப்பிதழாகத் தந்திருக்கிறது.
   தமிழ்நாட்டின் தரமான இலக்கியச்சிற்றேடு  என இன்றும் பேசப்படும்  கணையாழி  -  2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது.
இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதுவரையில்  138  இதழ்களை கிரமமாக வெளியிட்டுள்ளது.
இவ்விதழும் 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.
தமிழகம் -   சிங்கப்பூர் – மலேசியா – மற்றும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்த ஐந்து  சிறப்பிதழ்களும் முன்மாதிரியானவை  எனச்சொல்லி சிறு பெருமை பேசுவதல்ல எமது நோக்கம். அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அய்ரோப்பாவுக்கும் காற்றிலே பத்திரிகை அறிக்கைப்பாலமிடாமல் ஆக்கபூர்வமான இலக்கியப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டுவதுதான் இந்தப்பதிவு.
  வானொலி ஊடகவியலாளர்கள் சுந்தா. சுந்தரலிங்கம், சண்முகநாதன் வாசுதேவன் மற்றும்  எழுத்தாளர்கள் கி. இலக்ஷ்மண ஐயர், வேந்தனார் இளங்கோ,  பாக்கியநாதன், நித்திய கீர்த்தி,  எஸ். பொ. என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை, காவலூர் இராஜதுரை,  கலாநிதி ஆ. கந்தையா, அருண். விஜயராணி,  கலைவளன் சிசு. நாகேந்திரன் ,  பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் முதலான   இலக்கிய ஆளுமைகள்  இந்தக்கண்டத்திற்கு வந்து,  வாழ்ந்து மறைந்துவிட்டனர்.
 இவர்களின் வாழ்வும் பணிகளும் இதழ்களிலும் இணையத்தளங்கள்,  வானொலி ஊடகங்களில் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
  பேராசிரியர்கள் கா.இந்திரபாலா, ஆ.சி. கந்தராஜா, கலாநிதிகள் சந்திரலேகா வாமதேவா, சந்திரிகா சுப்பிரமணியன்,  மற்றும் கவிஞர் அம்பி,  நட்சத்திரன் செவ்விந்தியன், செல்லையா, பாஸ்கரன், சந்திரகாசன், மாத்தளை சோமு, களுவாஞ்சிக்குடி யோகன், சாயி சஸி, உஷா ஜவாகர்,  சுந்தரதாஸ், தேவகி கருணாகரன், சௌந்தரி கணேசன் , கானா.பிரபா, பாலம் லக்ஷ்மணன், பராசக்தி சுந்தரலிங்கம், ஜெயசக்தி பத்மநாதன், மனோ.ஜெகேந்திரன், நா.மகேசன், இளமுருகனார் பாரதி,  கார்த்திகா கணேசர், கீதா மதிவாணன், யசோதா பத்மநாதன், பிரவீணன், கருணாகரன்,  அன்பு ஜெயா,  திருநந்தகுமார், நந்திவர்மன், ரஞ்சகுமார் , எழில்வேந்தன்   ஆகியோர் அவுஸ்திரேலியா - நியுசவுத்வேல்ஸ் (சிட்னி) மாநிலத்திலிருந்தும்,
 முருகபூபதி,  ஜெயராம சர்மா, ஆவூரான் சந்திரன், கே. எஸ். சுதாகர், நடேசன், பாடும்மீன் ஸ்ரீகந்தராஜா, கிருஸ்ணமூர்த்தி, சங்கர சுப்பிரமணியன், ஜே.கே. ஜெயக்குமாரன்,  மாவை நித்தியானந்தன்,  புவனா ராஜரட்ணம், மெல்பன் மணி, ராணி தங்கராஜா, சாந்தினி புவனேந்திர ராஜா, உஷா சிவநாதன், புஸ்பா சிவபாலன், ரேணுகா தனஸ்கந்தா, கல்லோடைக்கரன், ரவீந்திரன், தெய்வீகன், அறவேந்தன், பொன்னரசு, மணிவண்ணன் ,  சுந்தரேசன், கருப்பையா ராஜா, நளிமுடீன்,  ஷகிம் மத்தாயஸ்,  ஶ்ரீகௌரி சங்கர், நூர் மஃரூப்,  நளிமுடீன்,  விஜி இராமச்சந்திரன், சாந்தி சிவக்குமார், அசோக், சாந்தா ஜெயராஜா,  மரியம் நளிமுடீன்,   நாகை சுகுமாறன்,  வெள்ளையன் தங்கையன்   ஆகியோர் விக்ரோரியா (மெல்பன்) மாநிலத்திலிருந்தும்,  கன்பரா மாநிலத்திலிருந்து ஆழியாள்  மதுபாஷினி, யோகன் ஆகியோரும்,
குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து தாமரைச்செல்வி, வாசுகி சித்திரசேனன், முகுந்தராஜ்  ஆகியோரும் கலை   இலக்கியப் பணிகளிலும்  எழுத்தூழியத்திலும்  ஈடுபடுகின்றனர். இவர்களில் சிலர் மொழிபெயர்ப்புத்துறையிலும் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் ( பேர்த் மாநகரத்தில் )  பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி அமீர் அலி இலக்கியப்பிரக்ஞை மிக்கவர். எனினும் தொடர்ச்சியாக அரசியல் – பொருளாதாரம்  – உலகமயமாதல் தொடர்பாக தொடர்ந்தும் அயராமல் எழுதிவருகிறார். இதே மாநிலத்தில் வதியும் கோபிநாத்  என்பவர், தமிழ் விக்கிபீடியா, மற்றும் தமிழ்நூலக ஆவணக்காப்பகத்தில் நீண்ட காலமாக அர்ப்பணிப்போடு கலை, இலக்கிய பதிவுகளையும் இலக்கிய ஆளுமைகளின் குரலையும் பதிவேற்றி ஆவணப்படுத்திவருகிறார்.
இவர்களில் பலரது நூல்கள் கவனிப்புக்குரியவை. ஏற்கனவே இவர்களது நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப்பகிர்வுகளும் இடம்பெற்று அவை குறித்த விமர்சனங்களும் ஊடகங்கள் வெளியாகியுள்ளன.
 விக்ரோரியா மாநிலத்தில் வதியும் அண்ணாவியார் இளையபத்மநாதன் – இவர் தமிழகத்திலும் அறியப்பட்டவர்.  நாட்டுக்கூத்து கலைவடிவங்களை எழுதியும் தயாரித்தும் அரங்கேற்றிவருகிறார். இவரது அயராத பணிக்கு சிட்னி நாடகப்பள்ளி பெரும் அனுசரணையாக விளங்குகிறது.
( தொடரும் )



No comments: