.
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், கவிப் பேரரசு வைரமுத்து தமது தமிழாற்றுப் படையில் இன்று உணர்ச்சிகர கவிதையை வாசித்து சிறப்பு செய்தார். அதில், கவிதை மட்டுமின்றி, கண்ணதாசனின் அரசியல் குறித்தும் பல விஷயங்களை பாசத்தோடு பகிர்ந்து கொண்டார் வைரமுத்து.
இதோ நீங்களும், கவியரசர் பற்றிய கவிப் பேரரசின் வார்த்தைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு. இனி வைரமுத்துவின் வார்த்தைகள்: கவியரசர் கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. காலத்தின் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான், அது மொத்தம் விளங்கும். இந்த கட்டுரை அதன் ஒரு விரலையேனும் விலக்குமா பார்ப்போம்!
அறம் சார்ந்த சட்டங்களுக்குள் அவர் ஆணியடித்துக் கொண்டவர் அல்லர். அவர் பள்ளி இறுதியை தாண்டாதவரே. ஆனால் கல்லூரிகளெல்லாம், அவரை ஓடி ஓடி உரையாற்ற அழைத்தன. இந்தியாவின் சராசரி ஆயுளைவிட குறைவாக வாழ்ந்து 54 வயதில் உடல் மரணமுற்றவர்தான்.
ஆனால் 50 ஆண்டுகளாக ஆண்டவர் போன்ற பெரும் பிம்பம் அவருக்கு வாய்த்தது. எப்படி இது? மொழியே முதல் காரணம். தமிழில் இடையறாத மரபில் கவிஞனின் கற்பனை இழையோடிக் கிடக்கும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில், 4 சொற்களில் காவிரியின் 800 கி.மீ பயணத்தை எளிமையாக சொல்வார். இதே உத்தியை, பாசமலர் படத்தில் கண்ணதாசன் கையாளுகிறார்.
தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளை பெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள், பால் மணம் கண்டாள்.. என்று எழுதி 10 மாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார். 1960களில் தமிழக கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. எனவே இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே என்று ஐயமுற்ற பாவலன், "பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்" என்று விளக்க உரை கொடுக்கிறார்.
கவிதை இலக்கியத்தில் பாரதிதாசன் உயரத்தில் கண்ணதாசன் இல்லை என்று கருதினாலும், பாடல் உலகில் பாரதிதாசனை விட பெரிதும் வென்றெடுத்தவர் கண்ணதாசன்தான். இரவின் கண்ணீர் பனித்துளி என்பார், முகிலின் கண்ணீர் மழையென சொல்வார், இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்.., மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.., என்று, 'கவலை இல்லாத மனிதன்' என்ற தனது சொந்தப் படத்தில் சந்தப்படுத்தியவர் கண்ணதாசன்.
கண்ணதாசனின் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலும், இலக்கியத்தின் தங்க ரேகைகள் ஊடும், பாவுமாய் ஊடுருவி இருக்கிறது. கவிஞர்களுக்கு கட்சி அரசியல் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. காரணம், கலையின் தேவைகள் வேறு.. அரசியலின் தேவைகள் வேறு.. கலை என்பது புலப்படுத்துவது, அரசியல் என்பது மறைப்பது. வட்ட நிலாவையும் வானத்தையும் கடக்க முடிந்த ஒரு கவிஞன் வட்ட செயலாளரை கடப்பது கடிது.
அவர் கட்சி மாறினார் என்று, கரைச்சேறு பூசுகிற சமூகம், ஏற்றுக் கொண்ட எந்தத் தலைவனுக்கும், அவர் கற்போடு இருந்தார் என்பதை மறந்து பேசுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்த கற்புநிலை, ஒருவனோ ஒருத்தியோ.. யாரோடு வாழ நேர்கிறதோ அவரோடு வாழும் காலம் வரை அவருக்கு உண்மையாக இருத்தல் என்று மாறியுள்ளது. கண்ணதாசன் அரசியலுக்கும் இது பொருந்தும். எந்த கட்சியில் இருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாக இயங்கி உள்ளார். காமராஜர், நேரு ஆகியோரை கண்ணதாசன் போல நேசித்த தொண்டன் கிடையாது. கட்சியில் இருக்கும் போது ஒரு தொண்டனை, மலையளவு தூக்குவதும், வெளியேறிய பிறகு வலிக்கும் வரை தாக்குவதும் எனது வாடிக்கையான பதிகம் என்று சொல்வதில் அவர் சுகம் கண்டார்.
அண்ணாவை புகழ்ந்து பூமாலை சூடியவர், திமுகவைவிட்டு புழுக்கத்தோடு வெளியேறினார். திராவிடநாடு உடன்பாடு இல்லை என்று 1961ஆம் ஆண்டு அவர் கட்சியை துறக்கிறார். 1964-ஆம் ஆண்டு திராவிட நாடு கொள்கை அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. திராவிட நாட்டுக்கு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடு செய்தார். ஈரோட்டில் பிறந்து காஞ்சியிலே நோயாகி சென்னையிலே மாண்டாயே செல்வமே என் அருமை தோழர்களே எழுந்து சில நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு தலை தாழ்ந்து நின்றிருப்பீர். பாவி மகள் போனாள். பச்சை இளம் பூங்கொடி அமைதி கொள்ளட்டும் என்று எழுதுகிறார்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்று எழுதியவரும் அவரே. எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே என்று எழுதியவரும் அவரே. திராவிட நாடு என்ற கருதுகோளுக்கு எழுச்சி பாடலும் இரங்கல் பாடல் எழுதிய ஒரே திராவிட கவிஞன் கண்ணதாசன் மட்டும் தான். இது கண்ணதாசனின் காட்சி பிழையா, காலத்தின் தோற்றப்பிழையா என்பதை அவரது சமகாலத்தவர்கள் முடிந்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்.
தெனாலிராமன் படத்தில் சிவாஜியுடன் கண்ணதாசனுக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்சியை விட்டு விலகிய பிறகு, எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரு சிகரங்களுக்கு மாறி மாறி பாடல்களை எழுதினார். அவரது அரசியலை நேசிக்க முடியாதவர்களும், அவரது தமிழை வாங்கி வைத்துக்கொள்ள வரிசையில் நின்றார்கள். "மாறாதிருக்க நான் மரமா கல்லா? மாற்றம் எனது மானிடத் தத்துவம்" என்று தனது மாறுதல்களுக்கு கவியில் நியாயம் கண்டவர் கண்ணதாசன்.
கடவுள் மறுப்பிலும் இரண்டு நிலை கண்டிருந்தார். அவரது அவசரமான கடவுள் மறுப்பு காற்றாட்டு வெள்ளம் போல வந்த வேகத்தில் வற்றிவிட்டது. நான் ஒரு சுயமரியாதை காரன் என்று சொல்லிக்கொண்டார். ஆண்டவனை கேலி செய்ய ஆரம்பித்தார். இதை வனவாசத்தில் எழுதியுள்ளார். நம்பாத ஆத்திகத்தை ஒரு கள்ளக்காதலை போல பாதுகாத்தும் வைத்துள்ளார். எளிமையாக நுழைகிற எதுவும் எளிமையாக வெளியேறிவிடும். ஆண்டவர்மீது நம்பிக்கை அதிகரித்தபோதும், நாத்திகர்கள் மீது நம்பிக்கை குறைந்த போதும் அவர் நாத்திகத்தில் இருந்து வெளியேறி விட்டார்.
திராவிட இயக்கம் கட்டியெழுப்பிய கடவுள் மறுப்பு வென்றது எவ்விடம்? தோற்றது எவ்விடம்? என்பதை ஒரு மீள்பார்வை செய்வது நல்லது. புதிதாக பிறந்ததுதான் பூமியை ஆட்சி செய்யும். மனிதனுக்கு பிறகு பிறந்ததுதான் கடவுள். புதிதாக பிறந்த கடவுள், மனிதனை ஆட்சி செய்யுமாறு படைக்கப்பட்டான். கண்ணதாசன் போன்றவர்களால் அதிலிருந்து முழுமையாக வெளியேற முடியவில்லை. எனவே கண்ணதாசனை பாரதிதாசனின் நீட்சி என்று சொல்ல முடியாமல், சமய வகையில் பாரதியாரின் எச்சம் என்று சொல்ல தோன்றுகின்றது.
பிற்காலத்தில் எம்ஜிஆர் பிம்பத்தை பாடல்களால் கட்டியெழுப்பிய கண்ணதாசன் தனது வலிமையான வசன வரிகளால், நாற்காலியிலிருந்த எம்ஜிஆரை சிம்மாசனத்துக்கு இடம் மாற்றினார். 1956 மதுரைவீரன், அதேபோன்று மகாதேவி, நாடோடி மன்னன் என்று கண்ணதாசன் வசனம் எழுதி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த இந்த மூன்று பெரும் படங்களும், மூட்டை தூக்குவோர், விறகு தூக்கி உழைக்கும் மக்களிடம், எம்ஜிஆரை ஒரு தேவ தூதனாக கொண்டு சென்றன.
"வானகமே வையகமே, வளர்ந்து வரும் தாயகமே" இது மதுரை வீரன், "அத்தான்.. அந்த சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்" இது மகாதேவி. "சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்"- இது நாடோடி மன்னன். எதுகை மோனைகளின் இந்த இயல்பான ஆட்சி, வசனம் எழுதியவர் கவிஞன் என்பதை கண்ணடித்து கண்ணடித்து காட்டிக் கொடுக்கின்றன. திமுகவில் இருந்து வெளியேறியவர்களில், வென்று, நின்று காட்டியவர்கள் மூவர் மட்டுமே. கலை, அரசியல் இரண்டிலும் வென்றவர் எம்ஜிஆர். கலையில் மட்டும் வென்றவர்கள் சிவாஜியும், கண்ணதாசனும். 1972இல் கண்ணதாசன் வீட்டு தொலைபேசி அடிக்கிறது கண்ணதாசன் எடுக்கிறார். மறுமுனையில் பேசியது கலைஞர். எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கி விடலாம் என்று பலரும் சொல்கிறார்கள், உங்களது யோசனை என்ன என்று கேட்கிறார். அதற்கு, எம்ஜிஆரை உள்ளேயே வைத்து அடி.. வெளியே அனுப்பி விடாதே என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.
ஆனால் காலத்தின் கணக்கு வேறு. பிறகு தனது அரசவை கவிஞராக்கி, கண்ணதாசனையே, உள்ளே வைத்து அடித்தவர் எம்ஜிஆர்.
எந்த சித்தாந்தத்திற்கும் சிக்காமல், வேதாந்தியாக்க துடித்த கதைதான் கண்ணதாசன் கதை. தமிழ் கவிதை சமூகத்தில் யாருடனும் ஒப்பிட முடியாத தனி ஒரு தமிழ் கவிஞன் கண்ணதாசன். என்னை பொறுத்த அளவில், திரை உலகின் என் வீரிய விளைச்சலுக்கு பலர் பொறுப்பு.. என் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு. இவ்வாறு வைரமுத்து உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment