பன்முக ஆற்றல் மிகுந்த கலைஞர் நடராஜசிவம்
எனது சிறுவயதில் அமரர் நடராஜசிவத்தின் விளம்பர அறிவிப்பைக் கேட்டு நாங்கள் எல்லாம் பிரமித்த நாட்களில்தான் எனக்கு அவர் முதன் முதல் அறிமுகம் ஆனார். அக்காலத்தில் எமது வகுப்பிலும் மாணவர்கள் அவர் சொல்வதைப் போல விளம்பரங்களைக் கூறி மகிழ்வார்கள். வர்த்தக அறிவித்தலுடன் மாத்திரமன்றி ‘செய்திகள் வாசிப்பவர் நடராஜசிவம்’ என்ற செய்திக்குரிய குரல் வசீகரமானது.
அவரிடம் பயின்ற பலர் இன்று சிறந்த அறிவிப்பாளர்களாக உள்ளனர். அவரது நடை என் நெஞ்சில் நின்றாடுகிறது. அந்தப் பார்வைகள் கண்களில் வந்து திரிகின்றன. நான் அவருடன் பணியாற்றியதில்லை. ஆனால் ரூபவாஹினியில் பணியாற்றிய காலங்களில் வானொலி நிலையத்துக்கு அலுவலாகப் போனால் குசலம் விசாரித்துக் கதைப்பார்.
என்னை அவருக்கு அறிமுகம் செய்தவர் அமரர் கே எஸ் பாலச்சந்திரன். வானொலி, ரூபவாஹினி இடைவளவில் வைத்து புதிதாக ரூபவாஹினிக்கு வந்துள்ளார் என அறிமுகம் செய்தார். அதற்குப் பின் என்னைக் காணும்போது தலையாட்டலும் சிலவேளை ஒரு பார்வையுமாகக் கடந்து செல்வார்.
அவரது முதற் சந்திப்பே என்னை அவருடன் இணைய வைத்தது.
ரூபவாஹினிக்கு நான் போன போது நான் தயாரித்த முதலாவது நிகழச்சிக்கு அப்துல் ஹமீத் குரல் வழங்கியிருந்தார். அச்சியல் தொடர்பான அந்த விவரண நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ரூபவாஹினி வாசலுக்கு வந்து என்னை அழைத்துப் பாராட்டினார். அதற்கான பின்னணி இசை வி.நரசிம்மனுடையது. ‘அதனை எங்கு எடுத்தீர் ? ‘ என்று கேட்டார். அது குரல் பதிவு செய்ய முன் ஒத்திகை பார்த்த நேரம் ஹமீத் தாம் கொண்டுவருவதாகச் சொல்லிக் கொண்டு வந்தார் என்றேன்.
இசை அழகாக இருப்பது பற்றியும் பாராட்டி ஊக்குவித்தமையும்தான் அவரோடு ஏற்பட்ட முதல் அறிமுகம். அதற்குப் பிறகு காணும் போது ‘என்ன புதிய புரொடக்சன்’ என்று இடையிடையே கேட்பது மட்டுமே.

அமரர் எஸ். கே பரராஜசிங்கம் அவர்களது சேவையைப் பாராட்டி ஒரு விழா இடம்பெற்றது. அவரது விழா மலருடைய அட்டைப் படத்தில் பரா அண்ணரின் படத்தில் இருப்பது போலவே மேடையில் இருந்த பரா அண்ணருடைய முகம் வரும்வரை ஒளிப்பதிவாளரைக் கொண்டு கமராவை அசைத்து இயக்கி எடுத்த படத்தை விழா பற்றிச் செய்த விவரணத்தில் விழா மலரின் அட்டைப் படத்துடன் ‘மிக்ஸ்’ பண்ணி அதனை ஆரம்பித்ததுடன் இடையிலும் இட்டிருந்தேன்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மறுநாள் காலையில் ரூபவாஹினி வாசலுக்கு வந்து என்னை செக்கியூரிற்றி மூலம் அழைத்து எனக்குக் கை தந்து ‘நல்ல கிளாசிக்காகச் செய்திருக்கிறீர். பராவை இதற்கென்று இருத்தி வைத்து எடுத்தீரா' என்று கேட்டார். இல்லை அண்ணர், கமராமேனுக்குப் புத்தகத்திலுள்ள படத்தைக் காட்டி அதே முகம் போல அதே அளவில் வரும்படி எடுக்கச் சொல்லி எடுப்பித்தேன் எனச் சொன்னேன். இன்றைய தொழினுட்ப வசதிகள் இல்லாத காலமது.
‘விழா மலரையும் நிகழ்ச்சியில் பாவிக்க ஒரு அழகியல் உணர்வு வேண்டும் ஐசே ‘ எனப் பாராட்டிச் சென்றார்.
வானொலியில் பணியாற்றுபவர்களில் இத்தகைய ஒளியூடக அழகியல் உணர்வுள்ளவரகள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
நடா அண்ணரின் மகத்தான பண்பு ஒன்றைப் பற்றி இன்று இங்கு சொல்வதே அவசியம்.
தொண்ணூறுகளில் அவர் நடித்த இனநல்லுறவுக்கான தொலைக்காட்சி நாடகம் பற்றி நான் சரிநிகர் இதழில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன்.
இனநல்லுறவு என்பது ஆக இவை மட்டும் என்றுதான் இவற்றைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நினைக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல அவற்றில் பாத்திரமேற்று நடிக்கும் நம்மவர்களும் என்று அர்த்தப்பட எழுதி விட்டேன்.
இது சரிநிகரில் வெளிவந்த சில நாட்களில் இராமகிருஷ்ண மிசனில் இடம்பெற்ற ஒரு ஒளிப்பதிவு நிகழ்வுக்குச் சென்ற போது, நடா என்னிடம் அக்கட்டுரை பற்றிக் கேட்டார் . நான் அவரிடம் 'உங்கள் கருத்தை எழுதுங்கள் அண்ணர்’ என்றேன். அவருக்குப் பிடிக்காமல் என்னைத் தாக்க நெருங்கினார்.
அங்கு நின்றவர்கள் அவரைப் பிடித்து என்னை விலக்கியதால் அந்தவிவகாரம் அத்துடன் நின்றது. இருந்தபோதிலும், நான் ஐ.ரி.என் இல் பணியாற்றும்போது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு நிகழ்ச்சிக்கு வாரத்தில் வருவார். அப்போது கதைப்பார். நான் சுயாதீனத் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது சுயவிபரம் தொடர்பான விசாரணைக்கு தொலைக்காட்சி, ஊடகம், பொதுவாழ்வு தொடர்பான இருவரைஇட்டிருந்தேன்.
நான் பதவிக்கான நேர்முகத்தேர்வுக்குப் போய்ப் பதவியிலும் இணைந்த பிறகு ஐ.ரி.என் பொது முகாமையாளரான பேர்ட்டி கலஹிற்றியாவ ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, நீர் வர முன்னர் நான் நடராஜசிவத்திடம் உம்மைப் பற்றிக் கேட்டேன். 'நல்ல கலைஞர், நல்ல தோழன், உடன் எடுங்கள்' என்று சொன்னார்- என்றார்.
சிங்கள- திரை, ஒளி ஊடகத்துறையில் நடா ஓர் ஊடகர் என்பதை விட நல்லதொரு கலைஞராக அறிமுகமானதாலும் பேர்டிக்கு வானொலிக் காலத்திலிருந்து அறிமுகமானதாலும் அவரிடம் என்னைப் பற்றிக் கேட்டிருக்கலாம்.
ஆனால், நடா அண்ணர் ‘பேர்ட்டி’ தம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டதைச் சொல்லவில்லை!
அன்னாரின் பிரிவுத் துயரில் இதனைப் பகிர வேண்டியது எனது கடனாகும்!    நன்றி தினகரன் 

No comments: