உலகச் செய்திகள்


கொரோனா சோதனையை குறைக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி: ஜாக்சனின் சிலையை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமெரிக்க விசா தடை நீடிப்பு

உலக கொரோனா தொற்று 9 மில்லியனைத் தாண்டியது

கொவிட்–19: புதிய தடுப்பு மருந்து பிரிட்டனில் சோதனை

நிர்க்கதியான ரொஹிங்கியர்களை மீட்டுவந்த இந்தோனேசிய மீனவர்கள்

சீன அதிகாரிகளுக்கு தடை: அமெரிக்க செனட் ஒப்புதல்

 ‘சருமத்தை வெண்மையாக்கும்’ பொருட்களுக்கு கடும் அழுத்தம்



கொரோனா சோதனையை குறைக்க டிரம்ப் உத்தரவு



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சோதனைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், தாம் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“சோதனை என்பது இருபுறமும் கூர்மையான கத்தி” என்றார் அவர். அமெரிக்காவில் இதுவரை 25 மில்லியன் பேரிடம் வைரஸ் தொற்றுச் சோதனை நடத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வளவு அதிகமான சோதனைகள் நடத்தப்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
கோவிட் –19 நோய்க்குப் பல்வேறு பெயர்கள் இருப்பதாகக் கூறிய அவர், தாம் அதற்கு ‘குங் ப்லுௗ’ எனப் பெயரிடுவதாக கூறினார்.
ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள துல்ஸா நகரில் நடைபெற்ற, முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் இதனைத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.     நன்றி தினகரன் 





அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி: ஜாக்சனின் சிலையை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி





வெள்ளை மாளிகை அருகே உள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சனின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அகற்ற முயன்றனர். அவர் அமெரிக்காவின் 7ஆவது ஜனாதிபதி ஆவர்.
லபாயட் பூங்காவில் உள்ள ஜாக்சனின் சிலையைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கயிறு வீசியதாக அதிகாரிகள் கூறினர். சுமார் 100 பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோரைக் கலைக்க முயன்றனர். எரிச்சலை ஏற்படுத்தும் ரசாயனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவர்கள் தெளித்தனர்.
46 வயதான கறுப்பினத்தவர் ஜோர்ஜ் ப்ளொயிட் மரணத்துக்கு நீதி கோரி மே 25 முதல் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடுதலான பாதுகாப்பு அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்துமாறு உள்ளூர்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலை தொடர்ந்தால் அரிதாகப் பயன்படுத்தப்படும் கிளர்ச்சிக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இராணுவத் துருப்பினரைக் கலவரக் கட்டுப்பாட்டில் ஈடுபடுத்த அந்தச் சட்டம் வகைசெய்யும்.    நன்றி தினகரன் 










வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமெரிக்க விசா தடை நீடிப்பு





வெளியாட்டு ஊழியர்களுக்கான கிரீன் கார்ட் மற்றும் விசாக்கள் வழங்குவதற்கான தடையை 2020 இறுதி வரை நீடிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
உயர் திறன் கொண்ட தொழில்நுட்ப ஊழியர்கள், வேளாண்மை சாராத பருவகால ஊழியர்கள் உள்ளிட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த நடவடிக்கை உதவும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
எனினும் வெள்ளை மாளிகை இந்த வைரஸ் தொற்றை பயன்படுத்தி குடிவரவுச் சட்டங்களை இறுக்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏப்ரல் மாதமே இந்தத் தடையை அறிவித்த வெள்ளை மாளிகை, கடந்த திங்கட்கிழமையுடன் தடை முடியும் சூழலில் இப்போது இதனை நீட்டித்துள்ளது. ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகமாட்டார்கள்.
ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த இந்த உத்தரவின் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை அமெரிக்காவுக்குள் வேலைக்காக வர வேண்டிய 5.25 இலட்சம் வெளிநாட்டினர் வருகை தடுக்கப்பட்டுள்ளது. அந்த வேலைவாய்ப்புகள் உள்நாட்டைச் சேர்ந்த அமெரிக்க மக்களுக்கு போய்ச்சேரும் என்று ட்ரம்ப் நம்புகிறார்
குறிப்பாக எச்–1பி விசா, எல்1 விசாக்கள் போன்றவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலிகன் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கு தான் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.    நன்றி தினகரன் 













உலக கொரோனா தொற்று 9 மில்லியனைத் தாண்டியது





உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் கடந்த திங்கட்கிழமை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி ஆரம்பத்தில் சீனாவில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி மே நடுப்பகுதியாகும்போது அது 4.5 மில்லியனைத் தொட்டது. இந்த நோய்த் தொற்றுச் சம்பவங்கள் இரட்டிப்பாவதற்கு வெறும் ஐந்து வாரங்களை சென்றுள்ளது.
உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் சுமார் 2.2 மில்லியன் பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு அது உலகின் மொத்த எண்ணிக்கையில் 25 வீதமாகும்.
லத்தீன் அமெரிக்காவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதோடு அந்தப் பிராந்தியத்தில் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கையில் 23 வீதம் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் இருப்பதோடு மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை இந்தியா வேகமாக நெருங்கி வருகிறது.   நன்றி தினகரன் 










கொவிட்–19: புதிய தடுப்பு மருந்து பிரிட்டனில் சோதனை




பிரிட்டன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்தைத் தொண்டூழியர்களிடம் சோதித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளது. வரும் வாரங்களில் தொண்டூழியர்கள் சுமார் 300 பேர் பரிசோதனையில் பங்கேற்பர்.
லண்டன் இம்பீரியல் கல்லுௗரிப் பேராசிரியர் ரொபின் ஷாட்டாக்கும் அவருடைய குழுவினரும் பரிசோதனையை வழிநடத்துகின்றனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஏற்கனவே பரிசோதனையை ஆரம்பித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 120 தடுப்பு மருந்துகள் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. பிரிட்டனுக்கும், உலக நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தடுப்பு மருந்தை விநியோகிக்க முடியும் என்று இம்பீரியல் ஆய்வுக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 









நிர்க்கதியான ரொஹிங்கியர்களை மீட்டுவந்த இந்தோனேசிய மீனவர்கள்




இந்தோனேசிய கடற்பகுதியில் நிர்க்கதியாக இருந்த சுமார் 100 ரொஹிங்கிய அகதிகளை உள்ளூர் மீனவர்கள் தமது படகுகளில் கரைசேர்த்துள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிர்வாகத்தினர் இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துள்ளனர்.
30 சிறுவர்கள் உட்பட பாகுபாட்டுக்கு முகம்கொடுக்கும் மியன்மார் சிறுபான்மையினரான ரொஹிங்கியர்கள் கடலில் நிர்க்கதியாக இருந்துள்ளனர். இந்தோனேசிய மாகாணமான அசேவில் லொக்சியுமாவே அதிகாரிகள் வைரஸ் அச்சுறுத்தலால் இந்த அகதிகள் தரைக்கு வருவதை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் கோபமடைந்த உள்ளூர் மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை தமது படகுகளை எடுத்துச் சென்று இந்த அகதிகளை கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கடற்கரையில் கூடிய உள்ளூர் மக்கள் அவர்களை கரகோசமிட்டு வரவேற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் கடலில் நிர்க்கதியாக இருப்பது எமக்கு கவலையாக இருந்தது” என்று உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் இந்த ரொஹிங்கிய அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு பதில் அவர்களை கடலுக்கு திருப்பி அனுப்பப்போவதாக உள்ளூர் பொலிஸ் பிரதானியான எகோ ஹர்டான்டோ தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 












சீன அதிகாரிகளுக்கு தடை: அமெரிக்க செனட் ஒப்புதல்




ஹோங்கொங்கின் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சீன அதிகாரிகள், வர்த்தகங்கள் மீது தடை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹோங்கொங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த பீஜிங் முடிவெடுத்ததையடுத்து, அத்தகைய சட்டமூலம் மீதான வாக்களிப்பு இடம்பெற்றது. தடைவிதிப்பதற்கான சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஹோங்கொங்கில் மனித உரிமைகளைக் காப்பதும், அதன் சிறப்புத் தகுதியைக் காப்பாற்றும்படி சீனாவிற்கு நெருக்குதல் அளிப்பதும் இதன் நோக்கமாகும். மிக விரைவில் ஹோங்கொங்கில் அந்தச் சட்டத்தைச் சீனா அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கையொப்பம் பெறப்படல் வேண்டும்   நன்றி தினகரன் 











 ‘சருமத்தை வெண்மையாக்கும்’ பொருட்களுக்கு கடும் அழுத்தம்



சருமத்தை வெண்மையாக்கும் என்று கூறப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் முறையை மாற்றி அமைப்பது பற்றி யுனிலிவர் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இது போன்ற பொருட்களுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகவலை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தெற்காசியாவில் வெண்மையான சருமத்தின் மீதுள்ள மோகத்தால், அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுக்கு அங்கு பெரிய சந்தை உள்ளது. பல ஆண்டுகளாக விற்பனைக்கு உள்ள ‘பெயார் அன்ட் லவ்லி’ யுனிலிவர் நிறுவனத்தைச் சேர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ‘பெயார் அன்ட் லவ்லி’ சுமார் 500 மில்லியன் டொலருக்கு விற்பனையானது.
பல வாரங்களாக நடந்துவரும் ‘பிளக் லைவ் மெட்டர்’ ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்யும் ல்ஓரியல், ப்ரொக்டர் அன்ட் கெம்ப்ல் ஆகிய நிறுவனங்களும் குறைகூறப்பட்டன. அவை தோலின் நிறம் சார்ந்த பாகுபாட்டை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டன.
அதையடுத்து, 'சருமத்தை வெண்மைப்படுத்தும்' என்பதுக்கு மாறாக 'சருமப் புத்துணர்ச்சி', 'சருமப் பராமரிப்பு' ஆகிய வார்த்தைகள் பரிசீலிக்கப்படுகின்றன.
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் சருமத்தை வெண்மையாக்கும் என்று கூறும் பொருள்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக கடந்த மாதம் கூறியது.   நன்றி தினகரன் 






No comments: