நான் ரசித்த திரைப்படம் " ஒரு குப்பை கதை" செ .பாஸ்கரன்

.


இந்த வாரம் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது தமிழ் திரைப்படங்களில் இப்படியான படங்கள் இடையிடையே வந்து போவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இந்தவாரம்தான் பார்த்தேன். ஒரு குப்பை கதை இதுதான் அந்தப் படத்தினுடைய தலைப்பு. தலைப்பை பார்த்துவிட்டு படத்தை பார்க்காமலேயே விட்டுவிடுவோம் என்று கூட எனக்கு எண்ணத் தோன்றியது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் எப்படி என் கண்ணில் இருந்து தப்பி போனது என்பது தெரியவில்லை. ஆனால் இம்முறை இந்த குப்பை கதையைத்தான் பார்ப்போமே என்று பார்க்க தொடங்கினேன்.

இந்த திரைப்படத்தை காளி ரங்கசாமி தனது முதலாவது திரைப்படமாக இயக்கியிருக்கிறார். இதனுடைய கதாநாயகனாக தினேஷ். தினேஷ் நாங்கள் டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பார்த்திருக்கிறோம் அவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வருகின்றார். உண்மையிலேயே அந்த கதைக்கு நாயகனாக தான் அவர் இருக்கின்றார். அதேபோல் மனிஷா யாதவ் அற்புதமான நடிப்பு மிக அருமையாக தன்னுடைய பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு செல்கின்றார். ஒரு இளம்பெண் தன்னுடைய எதிர்காலத்தை பற்றி, தன்னுடைய கணவனை பற்றி எப்படி எப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டிருப்பார். அவளுக்கு கணவன் எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு கற்பனை இருந்துகொண்டிருக்கும். அதே போல் கதாநாயகனாக வருகின்ற இவனோ சேறும் சகதியும் உள்ள ஒரு இடத்திலே ஒரு குடிசையிலே வாழ்கின்றார், அவனுடைய மனக்கவலை எல்லாம் அவருக்கு யாரும் பெண் கொடுக்கின்றார்கள் இல்லை என்பதுதான். அவன் செய்கின்ற வேலை நகர சபையிலே குப்பை அள்ளுதல் , இதனால் அவருக்கு பெண் கிடைக்கவில்லை திருமணம் நடைபெறாமல் கவலையாக இருக்கின்றது. பின்பு தூரத்திலிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் பெண்ணை பார்க்கின்றார்கள் பெண்ணுக்கும் அவனை பிடித்து விடுகின்றது திருமணத்திற்கு சம்மதிக்கிறார் தன்னுடைய வேலை என்னவென்று அவர் கூறவில்லை அவர்கள் கேட்கவில்லை ஆனால் திருமணத்திற்கு முன்பாக தனது மாமனாரிடம் அவன் கூறுகின்றான் தான் குப்பை அள்ழுகின்ற வேலையை செய்வதாக. அவரும் தன்னுடைய மகளிடம் இப்போது கூற வேண்டாம் தான் பக்குவமாக எடுத்து கூறுகின்றேன் என்று குறிப்பிடுகின்றார். திருமணம் நடைபெறுகின்றது.


வீட்டுக்கு வருகின்ற ஒரு இளம்பெண் எத்தனை கனவுகளோடு வருவாளோ அப்படியே வருகிறாள் . இந்திய ஏழை மக்கள் எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டியிருக்கின்றார் நெறியாளர். அந்த இளம்பெண் நாற்றமடிக்கும் வீட்டுக்குள் நுழையும் போது மூக்கை கைகளால் பொத்திக்கொண்டு குடிசைக்குள் காலடி எடுத்து வைக்கும்  காட்சி மிக அற்புதமாக அமைகின்றது.

வாழ்க்கையில் விரத்தி ஏற்படுகின்றது, மனதில் சஞ்சலங்கள், எதிர் வீட்டில் அழகான இளைஞன் இருக்கின்றான் விதவிதமான உடை அலங்காரம், கவரும் பேச்சு, தன்னுடைய கைக்குழந்தையோடு அவனோடு ஓடி விடுகின்றாள். அவள் வாழ்க்கை மீண்டும் பிரச்சினை ஏற்படுகின்றது. இளைஞர் சமுதாயம் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு எவ்வளவு அநாகரீகமாக வாழ்கின்றார்கள் என்பதை மிக அருமையாக உயர்குடி மக்களை வைத்து காட்டியிருக்கின்றார். அவளுக்கு மீண்டும் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அதனால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் இவை எல்லாம் அழகாக காடடப படுகின்றது.

ஏழைக் கணவன் அவள் மீது வைத்திருக்கும் காதல், அந்த அன்பு மீண்டும் அவளை காப்பாற்றுகின்ற விதம், இப்படியே ஒரு நல்ல கதையை குப்பை கதை என்ற பெயரிலேயே துணிந்து படமாக்கியிருக்கின்றார் இந்த இயக்குனர். இயக்குனர் காளி ரங்கசாமி இன்னும் இப்படியான படங்களை தரவேண்டும் , தமிழ்நாட்டுக்கு இப்படியான படங்கள் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. ஒரு குப்பை கதை என்று இவ்வளவு துணிவாக இந்த திரைப்படத்திற்கு அவர் பெயர் வைத்திருக்கின்றார் என்று பார்க்கின்ற போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கின்றது. அவ்வளவு அற்புதமான ஒரு கதை அதை காட்டிய விதம் ஆனால் அந்தப் பெயரை பார்க்கின்றபோது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தினேஷின் அம்மாவாக வருகிறார் நடிகை ஆதிரா உண்மையிலேயே ஒரு அற்புதமான ஏழை தாயாக மிக அருமையாக நடித்துவிட்டு செல்கிறார். இப்படி ஒரு தாய் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணக்கூடிய வகையிலே அந்தத்தாய் எல்லாவற்றையுமே தாங்கிக்கொண்டு வாழ்வின் நல்லவற்றை மட்டும் பேசிக் கொண்டு இருக்கின்ற ஒரு தாயாக வாழ்ந்து விட்டு செல்கின்றார் . நிச்சயமாக இந்த படங்களை பலர் பார்த்திருப்பீர்கள் இது என்னுடைய பார்வையிலே நான் ரசித்த ஒரு நல்ல திரைப்படம் என்பதை கூறிக்கொள்கின்றேன் இந்த திரைப்படத்தின் இசை அமைத்திருக்கின்றார் ஜோஸ்வா ஸ்ரீதர் அருமையான இசையமைப்பு பின்னணி இசை மனதை கொள்ளை கொள்கிறது.

நாற்றமடிக்கும் கூவத்திற்குள் இப்படி நல்ல உள்ளங்களா என்று கண்கள் விரிகின்றது .No comments: