துணுக்காய் பிரதேச மருதங்குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்




முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட புத்துவெட்டுவான் விவசாயக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த நீர்த்தேக்கமான மருதங்குளம் எதிர்காலத்தில் பாரிய குளமாக புனரமைக்கப்பட வேண்டும். அதன் நீர்விநியோக வீச்சு அதிகரிக்கப்பட வேண்டும். அதில் போதிய தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட வருடத்தில் இரண்டு போகம் பயிர் செய்ய இடமளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள விவசாயிகளிடம் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக பின்தங்கியதும் போக்குவரத்து வசதிகளோ அடிப்படை வசதிகளோ இல்லாததுமான துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட புத்துவெட்டுவான் என்ற விவசாயக் கிராமமும் ஒன்றாகும்.
இங்குள்ள நீர்த்தேக்கமான மருதங்குளமே இவர்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. மேற்படி குளத்தின் கீழ் வருடத்தில் 300 ஏக்கர் காலபோகம் செய்கை பண்ணப்படுவதுடன் மீதமாக உள்ள நீரை வைத்து அண்ணளவாக 75 ஏக்கர் சிறுபோகம் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.
கடந்த வருட இறுதியில் பெய்த பெருமழையினால் குளத்தின் வான் பகுதியில் ஏற்பட்ட நீர்க்கசிவின் காரணமாக வானின் ஒரு பகுதி உடைப்பெடுத்து குளத்து நீர் வெளியேறியது. இருந்த போதும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகளின் அயராத முயற்சியினால் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு குறிப்பிட்டளவு சிறுபோக செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல் தருகையில் காலபோக பயிரச் செய்கையைக் காப்பாற்ற வேண்டிய தேவை காரணமாக 04 அடி அளவில் தண்ணீரை குளத்தில் தேக்கி வைப்பதை தீர்மானமாகக் கொண்டு தற்காலிக ஏற்பாடாக மண்மூடைகள் அடுக்கப்பட்டு நீர் மறிக்கப்பட்டு காலபோக செய்கை எவ்வித பாதிப்புமின்றி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்யபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரின் ஆலோசனைகளுக்கு அமைவாக அவரின் தலைமையில் 2020 மாசி மாதம் மருதங்குளம் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மருதங்குளத்தின் புனரமைப்பு வேலைகள் சம்பந்தமான தெளிவூட்டல் வழங்கப்பட்டது. இதன் போது உலக வங்கியின் கடன் உதவியின் கீழ் மருதங்குளத்திற்கான அணைக்கட்டு புனரமைக்கப்படுவதுடன் தற்போதுள்ள வானின் இடத்தை மாற்றி இரண்டு வான் கதவுகளை உள்ளடக்கியதாக 150 மில்லியன் ரூபா செலவில் அவை அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் 2020ம் ஆண்டு மருதங்குளத்தில் சிறுபோக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். கிராம மக்களும் அதனை ஆமோதித்து உடனடியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் அனைவரினதும் பங்களிப்புடனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உடைப்பெடுத்த வான்கட்டுக்குக் குறுக்காக 6 அடி நீர் கொள்ளக் கூடிய தற்காலிக தடுப்பணை வேலை துரிதமாக ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன. மே மாதம் 13ம் திகதி பெய்த மழையின் காரணமாக மருதங்குளத்திற்கு 5 அடி நீர் கிடைக்கப் பெற்றது. சிறுபோக பயிர்ச் செய்கை மேற் கொள்வதற்காக பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் மற்றும் திணைக்களத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக நன்றிகளையும் பாராட்டினையும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதன் மூலம் மருதன்குளத்தின் கீழான சிறுபோக விவசாய நடவடிக்கைக்காக 6 அடி நீர் தேக்கி வைக்கபட்டுள்ளது. பங்காளர் ஒவ்வொருவருக்கும் தலா அரை ஏக்கர்படி மொத்தம் 48 ஏக்கர் நெற்செய்கையும் 10 ஏக்கர் சிறுதானிய பயிர்ச் செய்கையும் மேற்கொள்ள முடியும்.இதன் மூலம் அம்மக்களின் வாழ்வாதாரத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருதங்குளம் அனர்த்தத்தைச் சந்தித்த போதும் இக்குளத்தின் கீழான சிறுபோகம், பெரும்போகம் என்பன பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தேசிய உணவு உற்பத்திக்கு வவுனிக்குளத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பணிமனைக்கு கீழான 12 குளங்களும் பங்களிப்பினை வழங்குகின்றன.
மேற்படி விவசாயக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த நீர்த்தேக்கமான மருதங்குளம் எதிர்காலத்தில் பாரிய குளமாக புனரமைக்கப்பட வேண்டும். அதன் நீர்விநியோக வீச்சு அதிகரிக்கப்பட வேண்டும்.இதுவே விவசாயிகளின் வேண்டுகோள் ஆகும்.   நன்றி தினகரன் 


No comments: