அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 20 – துத்திரி/துத்தேரி - சரவண பிரபு ராமமூர்த்தி


துத்திரி/துத்தேரி - ஊதுகருவி
துத்திரி ட்ரம்பட்டை ஒத்த வடிவம் கொண்ட பழந்தமிழர் இசைக்கருவி ஆகும். முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போலநீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது துத்திரி. வாய்வைத்து ஊதும் பகுதி முதல் புனல் வடிவ முடிவு பகுதி வரை சிறிது சிறிதாக சுற்றளவில் பெருகிக்கொண்டே செல்கிறது துத்திரி. ஊதுவதற்கு ஒற்றைத் துளையுள்ளது.

துத்திரியை சில பகுதிகளில் துத்தேரி என்று அழைக்கிறார்கள். துத்திரி பற்றிய குறிப்புகள் திருமுறைகளில் காணப்படுகிறது. நாம் ஏற்கனவே பார்த்த பூரிகை மற்றும் வாங்காவின் வடிவமைப்பை ஒத்தது துத்திரி. சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. இக்கருவியில் இருந்தே நவீன இசைக்கருவிகளான் ட்ரம்பட் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது கோசை நகரான் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு சிவகுமார் அவர்களின் கருத்து. இந்த இசைக்கருவியின் ஒசை தனித்துவமாக இருப்பதாலும் மற்ற இசைக்கருவிகளுடன் சேர்ந்து இயைந்து போகாத தன்மையினாலும் துத்தேரி தமிழ்நாட்டில் ஒரு வசைச் சொல்லாக மாறிப்  போனது. இக்கருவியை பற்றிப் விசாரிக்க முற்பட்ட சேலத்து நண்பர் பெயரைக்  கேட்டவுடன் பதில் கூறாமலே தொலைபேசியை துண்டித்துவிட்டார். ஆனால் துத்திரி அப்படி ஒன்றும் தவறான சொல் அல்ல, பழம்பெருமையும் இனிமையான ஒசையுமுடைய ஒரு தொல் தமிழர் இசைக்கருவியாகும்.

துத்திரி இசை கருவியானது நாள்தோறும் கரூர் அருள்மிகு பசுபதீச்சரர் கோயிலில் இரவு பூசையின் பொழுது இசைக்கப்படுகிறது. இந்த மரபு இன்றும் தொடர்கிறது. காரைக்குடி, சேலம் பகுதிகளில் துத்திரி மிகுதியாக நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் இசைக்கப்படுகிறது. காரைக்குடியில் தை மாதம் நடைபெறும்  நகரத்தார் பழனி தைப்பூச காவடி ஊர்வலத்திற்கு முன்பாக துத்திரி இசைக்கப்பட்டு செல்கிறது. இந்த துத்திரி இசைக்கருவிகள் மிகப்பழமையானவை. பழனி ஆயக்குடி சமிந்தார்கள் செட்டியார்களின் காவடி ஊர்வலத்திற்காக சுமார் 400 ஆண்டுகள் முன்பு செய்து கொடுத்தது என்கிறார்கள் நகரத்தார் சமூக மக்கள்.


புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், விருத்தாசலம் , சிதம்பரம் போன்ற வட மாவட்டங்களில் வாழும் வன்னிய சமுதாய மக்களின் இல்லங்கள் தோறும் அறுவடை காலங்களில் சென்று அவர்களை வாழ்த்திப்பாடி சன்மானம் பெற்று வாழ்பவர்கள் நோக்கர் அல்லது வன்னிய சாதிப்பிள்ளை என்னும் சமூகத்தினர். இவர்கள் வன்னிய சமுக மக்களை வாழ்த்திப்பாடும் பொழுது துத்திரி அல்லது வாங்கா மற்றும் வெண்டையம் எனப்படும் பெரிய வகை சிலம்பு இசைக் கருவிகளைக்கொண்டு பாடல்களை இசைத்து பாடி பணம், தானியம், அரிசி, உடை ஆகிய பொருட்களை பெற்றுச் செல்கிறார்கள். இவர்களின் பாடுபொருள் உருத்திர வன்னியன் என்னும் இம்மக்களின் மூதாதையர் பற்றியதாக இருக்கின்றது. இச்சமூக மக்களுக்காகவே அமைந்த இந்த இசைப்பாணர்களின் இன்றைய நிலை மிகவும் அவலமாக உள்ளது. இவர்களை இரவலர்கள் என்று எண்ணி விடுகிறார்கள். இவர்கள் இச்சமூக மக்களிடம் மட்டுமே சென்று பரிசுப் பொருட்களைப் பெறுவதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். பிறர் இல்லங்களில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்களாம். ஏழ்மையிலும் துயரத்திலும் உழலும் இப்பாணர்களைப் போற்றுவது, இவர்கள் நம்பி இருக்கும் வன்னிய சமூக மக்களின் கடமையாகும். சில இடங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவர்களை இவர்கள் பாட அழைத்துச் செல்வது தவறான செயலாகவும் அவர்களின் கல்வி வாய்ப்புகளை பாதிப்பதாகவும் உள்ளது.

தமிழகத்தில் வாழும் தாதர்/தாசர் சமூக மக்கள் சேமக்கலம்,சங்கு, தாசரி தப்பட்டை , துத்திரி ஆகிய கருவிகளை இசைத்து அழகு தமிழில் தெய்வங்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். ஒரு தாதர் கூட்டத்தில் 10 பேர் இருந்தால் 8 பேர் சேமக்கலம்/சங்கும், ஒருவர் சேமக்கலம்/தாசரி தப்பட்டையும், ஒருவர் துத்திரி ஆகிய கருவிகளை வைத்து இசைக்கிறார்கள். கால்நடையாக சேலத்தில் இருந்து பழனி செல்லும் 400 ஆண்டு பழைமையான இடைப்பாடி பருவதராஜகுலம், வன்னியகுல சத்திரியர் காவடிகளில் தாதர்களும் உடன் செல்கிறார்கள். காவடி பூசையில் சேமக்கலம், சங்கு, தாசரி தப்பட்டை, துத்திரி ஆகியவற்றை இசைக்கிறார்கள். இப்பகுதி காவடிகள் இந்த இசைக்கருவிகள் இல்லாமல் பயணிப்பது இல்லை.

தற்காலத்தில் திருப்பூர் பக்கத்தில் பாத்திர தயாரிப்புக்கு பிரபலமான அனுப்பர்பாளையம் கிராமத்தில் துத்திரி , கொம்பு போன்ற இசைக்கருவிகள் வெண்கலம் அல்லது பித்தளை போன்ற உலோகங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இக்கருவிகள் தேவையுள்ளோர் திரு மணிகண்டன்(பறை பயிற்றுனர், +919865614511) அவர்களை தொடர்புக்கொள்ளலாம்.

புழக்கத்தில் உள்ள இடங்கள்:
கரூர் அருள்மிகு பசுபதீச்சரர் கோயில்
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் வைகாசித் திருவிழாவின் நான்காம் நாள், கடலூர்
காரைக்குடி நகரத்தார் பழனி காவடி பயண்ம்
சேலம் இடைப்பாடி பருவதராஜகுலம்/வன்னியகுல சத்திரியர் பழனி காவடி பயண்ம்
தாதர் சமூக மக்களிடம்
நோக்கர் என்னப்படும் வன்னிய சாதிப்பிள்ளை சமூக மக்களிடம்

பாடல்:
கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
-       திருமுறை 3, சம்பந்தர்

காணொளி
வன்னிய சாதிப்பிள்ளை:
-சரவண பிரபு ராமமூர்த்தி

No comments: