'மறதி நோய்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-



🎯 🎯 🎯

செலக்டிவ் அம்னீசியா – தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களின் நினைவு இழப்பு.
இது ஒரு பாதிப்பில்லாத – ஆனால், பாரதூரமான நோய். என் நண்பனின் தாத்தாவுக்கு இருந்நது. 
விசித்திரமாக இருக்கும் அவர் நடவடிக்கை. என்னை எப்ப பார்த்தாலும், என் பெயர் சொல்லி அழைத்து, 'ரிசிட்டார் எப்படி?' என்று என் தாத்தாவை விசாரிப்பார். 'அவருக்கு என்ன இப்ப 81, 82 வயசிருக்குமே' என்று சரியாகச் சொல்லி அசத்துவார்.
ஆனால், எங்களது மற்றொரு நண்பனை அவருக்கு நினைவில் இருப்பதே இல்லை. ஒவ்வொரு முறையும், 'நீ யார் தம்பி? யாரிட்ட வந்தனீ?' என்று கேட்பார். காலையில் கண்டு கதைத்து பின் மாலையில் வந்தாலும் இதே நிலைமைதான். திரும்பவும் கேட்பார். அவனை அவரால் ஞாபகத்தில் வைத்திருக்கவே முடிந்ததில்லை. 
இம்மறதி நோய்தான் செலக்டிவ் அம்னீசியா. அனைத்தையும் மறப்பதில்லை. ஆனால், கடந்தவற்றுள் சிலவற்றை மட்டும் நினைவிற் கொள்ள முடியாது போய்விடுவது.
அதனால் அவர் கேள்விகளுக்கு யாரும் அதிகம் மினக்கெடுவதில்லை. அவருக்கு வயசால் வந்த மறதி என்று உறவுகள் இலகுவாகக் கடந்து போய்விடும். 
இவ் அனுபவத்தால், வயசானவர்களுக்கு மட்டும் வரும் நோய் இது என்றுதான் நான் நினைத்திருந்தேன் - இந்தத் தேர்தல் காலப் பரப்புரைகளைக் கேட்கும் வரைக்கும்.
என் நினைப்பை மாற்ற வேண்டியதாயிற்று, பின்வரும் காட்சிகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்,  தொலைக்காட்சியில் பார்த்தபோதும்.
🎯 🎯 🎯
காட்சி 1
'தமிழ் மக்கள் சுயமாக இயங்கும் அதிகாரம் வேண்டும். இத் தீர்வு தொடர்பில் கூட்டமைப்புடனேயே அமைக்கப்படவுள்ள அரசாங்கம் பேச வேண்டும் என்ற கருத்து மக்களிடமிருந்து தோன்ற வேண்டுமாதலால், மக்கள் எமக்குப் பலமான ஆணை தரவேண்டும்'  
என்கிறார் கடந்த வாரம் பத்திரிகைப் பேட்டியொன்றில் கூட்டமைப்பின் வேட்பாளர் மூத்தவர் சம்பந்தன்.
என்ன! இனி வரப்போகும் அரசாங்கத்துடனும் பேச வேண்டுமா! ஆனையோடு தந்த ஆணைக்கே ஒன்றும் வந்து சேரவில்லை. இனிமேல் வருமா?
'2018 தீபாவளிக்குத் தீர்வு வரும்' '2019 புத்தாண்டுக்குள் அதிகாரப் பகிர்வு வரும்' என்று சொன்னதையெல்லாம் அவர் மறந்து விட்டாரா?
அவர் மறந்து விட்டார். நாங்களும் மறந்து விட்டோமா? என, 'செக்' பண்ணுகிறார்.
அவ்வளவுதான். 
🎯 🎯 🎯
காட்சி 2
'தமிழ் மக்களின் தேசிய தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுவேன்' என்று மார் நிமிர்த்துகிறார் ஒரு வேட்பாளர். 
வேறுயாருமில்லை, நீதிமன்ற அழைப்பை ஏற்கவில்லை என்பதற்காக, அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்தான் அவர். 
தான் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துவெளியிடும்போது அவர் சொன்ன கூற்றுத்தான் முன்பு தரப்பட்டது.
தான் சார்ந்திருந்த டெலோ எப்படி எப்படி புலிகளால் விரட்டப்பட்டது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் லிங்கம். இன்றைக்கு தேர்தல் காலத்தில் அதனை மறந்து விட்டார். 
பாவம் மறதியில் அவர் சொல்லும் வார்த்தைகளை எப்படி மன்னிப்பார் சிறி சபாரத்தினம்?
🎯 🎯 🎯
காட்சி 3
'தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையூடு வானத்தைப் பார்க்கலாம். எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள்.' 
வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டரங்கில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றியபோது தேசிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்ததாக, பத்திரிகைகள் எடுத்துச் சொல்லுகின்றன.
மற்றவர்களுக்கு, பிறரைப் பற்றிய விடயங்கள்தாம் மறந்து விட்டன என்றால், சி.வி.க்கு தன்னைப் பற்றியே மறக்கத்தொடங்கி விட்டது. 
அவர் சொல்வது சரிதான், கூட்டமைப்பு என்ற வீடு குழிபறிப்புகளால் சிதையத் தொடங்கிவிட்டதுதான், அந்தக் குழிபறிப்புக்களுள் பாரிய குழிபறிப்பு யாருடையது? அவருடையதல்லவா? 
பழைய கூட்டமைப்புத் தலைவர்கள் பலர் இருக்கவும், அவர்களுடைய முதலமைச்சர் கனவுகளைப் புறந்தள்ளி எந்த அரசியல் அனுபவமும் அற்றிருந்த தன்னை, முதலமைச்சர் வேட்பாளராகச் சம்பந்தனார் அழைத்துவர, அந்த உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தது தான்தான் என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். 
இதைவிடப் பெரிய குழிபறிப்பு இருக்க முடியுமா? இது மறந்து விடக் கூடியதா?
🎯 🎯 🎯
காட்சி 4
'தலைவரோடு நான் எப்படியிருந்தேன், அவர் என்மீது எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதற்கு என்னோடும் அவரோடும் சமகாலத்தில் பழகியவர்கள்தான் சாட்சியம் பகிர முடியும்.
எனது திறமையில் செயல்பாட்டில் போர்த்திட்டங்களை வகுப்பதில் அவருக்கு எப்போதுமே என்மீது வலுவான நம்பிக்கையிருந்தது. நான் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.' என்கிறார், கிழக்கில் இதோ இந்தத் தேர்தல் காலத்தில் வேட்பாளராக நிற்கும் கருணா.
கொஞ்சக் காலம் முன்னதாகத்தான், 'நான் துரோகியில்லை, பிரபாகரன் கொல்ல நினைத்தபடியால்தான் நான் இயக்கத்தைக் கைவிட்டுத் தப்பி வந்தேன்.' என்ற அவர் கருத்துக்களைப் படித்த ஞாபகம்.
தான் சொன்னதே அவருக்கு மறந்து விட்டதா?
இல்லை, படிக்காததைப் படித்ததாய் நினைக்கும் எனக்குத்தான் மறதியா?

🎯 🎯 🎯

காட்சி 5

கடந்த ஞாயிறுக்கிழமை வீரகேசரிப் பேட்டியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பின்வருமாறு கூறுகின்றார்:

'எம்மீது உண்மையற்ற பழிகளைச் சுமத்தி மிகக் கீழ்த்தரமான அரசியலுக்குள் சி.வி.விக்னேஸ்வரன் காலடி எடுத்துவைத்து விட்டார். அப்பட்டமான பொய்களை எடுத்து வெளிப்படுத்தியதன் மூலம் அவர் தரப்பின் வங்குரோத்து நிலைமை அம்பலமாகியிருக்கிறது'

அடடா! என்ன இது! 
என என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். 
'கஜேந்திரகுமாரா இது?'
கூட்டமைப்பை உடைத்து, விக்னேஸ்வரனை வெளியே கொண்டுவரத் துடித்த இவருக்கும் மறதியா? 

'மாற்று அணியொன்று உருவானால் (ஈ.பி.ஆர்.எல்.எவ் தவிர்த்து) நிபந்தனையற்ற ஆதரவு தந்து, சி.வி.விக்னேஸ்வரனைத் தலைவராக ஏற்று, அவரின் கீழ் செயற்படத் தயார்' என்று  முன்பு தான் சொன்னவற்றை எல்லாம் அவர் மறந்து விட்டாரா? 

🎯 🎯 🎯
இப்பொழுது சொல்லுங்கள், செலக்டிவ் அம்னீசியா – தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களின் நினைவு மறதி நோய் வயதானவர்களுக்கு மட்டும் வரும் நோய்தானா?
இல்லை அல்லவா?
ஒன்றை இப்பொழுது உறுதியாகச் சொல்ல முடியும். 

தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைக் கேட்காதே என்று, கண், காதுகளைப் பொத்தும் குரங்குப் பொம்மைகள்பற்றிய கருத்து, எதிர்காலத் தேர்தல்களை நினைத்துத்தான் காந்தித் தாத்தாவுக்கு உருவாகியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

🎯 🎯 🎯
நன்றி - உகரம் |இந்தவாரச் சிந்தனை (08.07.20) | பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் | www.uharam.com






No comments: