உலகச் செய்திகள்


ரஷ்யாவுடன் மோதலுக்கு தயாராகும் சீனா

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம்

ஐவரிகோஸ்ட் பிரதமர் மரணம்

சர்வதேச சட்டத்தை மீறியதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

உலகில் கொரோனா தொற்று 12 மில்லியனாக அதிகரிப்பு

வேகம் பெற்றுள்ள கொவிட்-19: சுகாதார அமைப்பு எச்சரிக்கை 

அமெரிக்க ஜனாதிபதியாக பைடனின் வெற்றியை எதிர்பார்க்கும் பலஸ்தீனர்

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா முறையாக விலக முடிவு

சிரிய மக்களுக்கான உதவி: பாதுகாப்பு சபை தீர்மானத்தில் ரஷ்யா, சீனா எதிர்த்து வாக்கு

 ‘கொவிட்–19’ காற்றில் பரவுவது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் ஆதாரம்

பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சனுக்கு கொரோனா தொற்று


ரஷ்யாவுடன் மோதலுக்கு தயாராகும் சீனா
ரஷ்யாவில் இருக்கும் நிலப்பரப்பு ஒன்றை சீனா தற்போது உரிமை கொண்டாட தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் உடன் சீனா மோதலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், இராணுவ எல்லை ரீதியாகவும் சீனா மோதி வருகிறது. சீனாவிற்கு இருக்கும் ஒரே நண்பன் ரஷ்யாதான் என்ற நிலைமை இருக்கிறது. ஆனால் தற்போது ரஷ்யாவுடனும் சீனா முன்டுக்கு போயுள்ளது.

ரஷ்யாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது. இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. அதன்பின் 1860ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை அதிகாரபூர்வமாக ரஷ்யா தன்வசப்படுத்தியது.
ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. அதோடு தற்போது விளாடிவோஸ்டோக் தங்களுக்குத்தான் சொந்தமென்று சீனா மோத தொடங்கி உள்ளது. சீனாவின் ஓநாய் வீரர்கள் இப்போதே ரஷ்யாவிற்கு எதிராக கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்கள். 160 வருடமாக ரஷ்யாவிடம் இந்த விளாடிவோஸ்டோக் சட்ட ரீதியாக இருக்கிறது. ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக் இணைந்ததற்கான ஆண்டு விழாவை அந்த நாடு சில நாட்கள் முன் கொண்டாடியது. இதனால்தான் தற்போது விளாடிவோஸ்டோக் மீது சீனா கண் வைக்க தொடங்கி உள்ளது. இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷ்யா இதையே அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷ்யா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா பிரசாரம் செய்து வருகிறது.
ஏற்கனவே சீனா தனது எல்லையில் 14 நாடுகள் உடன் மோதலை கடைபிடித்து வருகிறது. அதிலும் எல்லையை பகிராத நாடுகள் உடனும் கூட சீனா மோதி வருகிறது. மொத்தம் 21 நாடுகள் உடன் சீனா இப்படி மோதி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவையும் சீனா எதிர்த்து வருகிறது. இதனால் உலக அளவில் சீனா விரைவில் தனிமைப்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.  நன்றி தினகரன்


இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம்

இந்தியாவுக்கு ஆதரவாக தங்களது நாட்டின் இராணுவம் உறுதுணையாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தென்சீன கடற்பரப்புக்கு 2 போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. தென்சீன கடற்பரப்பின் பல பகுதிகளை சீனா தங்களுக்கு உரியது என உரிமை கோருகிறது.ஆனால் சீனாவின் இந்த அத்துமீறிய உரிமை கோரலை பல்வேறு நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. சீனாவின் இந்த செயலால் தென்சீன கடற்பரப்பு பதற்றத்துடனேயே இருந்து வருகிறது.
தென்சீன கடற்பரப்பில் தீவுகளை இராணுவ மயமாக்கும் போக்கை சீனா தொடருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்காவின் போர் விமானங்கள் தென்சீன கடற்பரப்பில் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க இராணுவ அதிகாரி, இந்தியாவுடனான சீனாவின் மோதலை சுட்டிக்காட்டி எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் இராணுவம் உறுதுணையாகவே இருக்கும் என்றார்.
இதேவேளை இந்தியா உட்பட  சீனாவை எங்கும் அதிகாரம் செய்ய விட மாட்டோம் என்று  வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் அதிரடியாக  தெரிவித்துள்ளார்.இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல், எந்த நாட்டு பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு, அமெரிக்க இராணுவம் துணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
தென் சீனக் கடலில் பல தீவுகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், தாய்வான், புருனே உள்ளிட்ட நாடுகள் இப்படியான குற்றச்சாட்டுகளை சீனா மீது தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. சீனாவுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அதிரடியாக அனுப்பி வைத்துள்ளது.    நன்றி தினகரன் 

ஐவரிகோஸ்ட் பிரதமர் மரணம்

அமைச்சரவைக் கூட்டத்தில் சுகவீனமுற்ற நிலையில் ஐவரிகோஸ்ட் பிரதமர் அமடு டொன் கவுலிபாலி மரணமடைந்துள்ளார்.
61 வயதான கவுலிபாலி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அலசன் அவுடாரா மூன்றாவது தவணைக்கு போட்டிடுவதில்லை என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கவுலிபாலி இதய நோய்க்காக பிரான்சில் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அண்மையிலேயே நாடு திரும்பி இருந்தார். அவர் 2012 ஆம் ஆண்டு இதய மாற்றுச் சிகிச்சை செய்திகொண்டமை குறிப்பிடத்தக்கது. நாடு சோகத்தில் இருப்பதாக ஜனாதிபதி அவுடாரா குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது சுகவீனமுற்ற கவுலிபாலி மாருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கவுலிபாலியின் மரணம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் அதிக வெற்றிவாய்ப்புக் கொண்டவராக அவர் இருந்தார்.   நன்றி தினகரன் சர்வதேச சட்டத்தை மீறியதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

ஈரானிய இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்கிக் கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ஐ.நா நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக் தலைநகர் பக்தாதின் விமானநிலையத்தில் வைத்து கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமானியுடன் மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
சட்டத்திற்கு புறம்பான கொலைகள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான அக்னெஸ் கல்லமார்ட், இந்த தாக்குதலை நியாயப்படுத்தும் அச்சுறுத்தல் பற்றி அமெரிக்கா போதுமான ஆதாரங்களை தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் தீவிரவாதிகளுக்கு அனுமதி அளிக்கிறார் என்று இது பற்றி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சாடியுள்ளது.
இந்த கொலை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மேலும் 35 பேருக்கு ஈரான் கடந்த வாரம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் உயர்மட்டத் தலைவருக்கு அடுத்து ஈரானின் செல்வாக்கு மிக்கவராக சுலைமானி கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் உலகில் கொரோனா தொற்று 12 மில்லியனாக அதிகரிப்பு
உலகில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பங்கள் கடந்த புதன்கிழமை 12 மில்லியனை எட்டியது. கடந்த ஏழு மாதங்களில் அந்த நோய்த் தொற்றினால் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் இந்த வைரஸ் காற்றின் ஊடாக பாரவுவதற்கான ஆதாரங்களும் வலுத்துள்ளன.
ஆண்டுதோறும் பதிவாகும் கடுமையான காய்ச்சல் நோயை விடவும் கொவிட்–19 நோய்த் தொற்று சம்பவங்கள் மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வைரஸ் பரவல் குறைந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பலதும் முடக்க நிலையை தளர்த்தி இருந்தபோதும் சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து முடக்க நிலை மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கிடைக்கப்பெறும் வரை பணிகள் மற்றும் சமூக வாழ்வில் மாற்றங்கள் நீடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதல் கொரோனா நோய்த் தொற்று சம்பவம் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் சீனாவில் பதிவான நிலையில் அது ஆறு மில்லியனை எட்டுவதற்கு 149 நாட்கள் எடுத்துக் கொண்டன. எனினும் அடுத்த 39 நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 மில்லியனைத் தொட்டுள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 546,000க்கும் அதிகமாகும். இது உலகெங்கும் ஆண்டுக்கு கடும் காய்ச்சலினால் உயிரிழக்கும் எண்ணிக்கைக்கு சமமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதியே முதல் உயிரிழப்பு பதிவானது. இதனை அடுத்து ஐரோப்பாவில் அதிகரித்த உயிரிழப்பு பின்னர் அமெரிக்காவில் உச்சம் பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 3 மில்லியன் நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு ஒன்றரை இலட்சத்தை நெருங்குகிறது.    நன்றி தினகரன் வேகம் பெற்றுள்ள கொவிட்-19: சுகாதார அமைப்பு எச்சரிக்கை 
கொவிட்–19 வைரஸ் தொற்று வேகமடைந்திருப்பதாகவும் உலகம் அதன் உச்சத்தை இன்னும் தொடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார்.
வார இறுதியில் சுமார் 400,000 புதிய கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் இந்தப் பெரும் தொற்று மெதுவடைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தானது என்று இந்த தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் இருந்து, நீண்ட காலமாக கூறி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே இதை நமது முதல் பொது எதிரி என்று கூறினோம்.
இது இரண்டு ஆபத்தான சேர்க்கைகளை கொண்டிருக்கிறது. ஒன்று வேகமாக பரவுகிறது. மற்றொன்று, இது ஆட்கொல்லி. எனவே தான் நாங்கள் கவலை கொண்டோம். உலகத்தை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் தொற்று மனித குலத்துக்கு எதிரி. இதில் மனிதகுலம் ஒற்றுமையாக நின்று போரிட்டு, தோற்கடிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட தொற்று நோய், நூற்றாண்டில் ஒரு முறை வருகிறது. இது ஆபத்தான வைரஸ். 1918ஆம் ஆண்டுக்கு பின்னர் (ஸ்பானிஷ் புளூ வெளிப்பட்ட பின்னர்) இது போன்று ஒரு வைரஸ் வெளிப்பட்டது இல்லை” என்று வீடியோ ஊடான ஊடகவியலாளர் சந்திப்பில் கெப்ரியெசுஸ் தெரிவித்தார்.     நன்றி தினகரன் 


அமெரிக்க ஜனாதிபதியாக பைடனின் வெற்றியை எதிர்பார்க்கும் பலஸ்தீனர்
ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கும் பலஸ்தீன பிரதமர் முஹமது சட்டய்யா, அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும்படி பலஸ்தீன பூர்வீகம் கொண்ட அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலஸ்தீனர்களுக்கு பாதகமாக இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரித்ததோடு அவர் கொண்டுவந்த அமைதித் திட்டத்தில் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலின் இறைமையை ஏற்றிருந்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்காவுடனான உறவுகளை பலஸ்தீன நீர்வாகம் முறித்துக் கொண்டது. இந்நிலையில் பலஸ்தீன அதிகாரசபைக்கான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது.
“நவம்பரில் பைடன் தேர்வு செய்யப்பட்டால் முழுமையான மாறுபட்ட நிலை ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என சட்டய்யா தெரிவித்தார்.
பைடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். கடந்த காலங்களில் இஸ்ரேலின் யூதக் குடியேற்றங்களை அவர் எதிர்த்து வந்துள்ளார். “இஸ்ரேலுடனான இணைப்பு உட்பட இரு நாட்டு தீர்வு ஒன்றுக்கான எதிர்பார்ப்பை குறைக்கும் இரு தரப்பினதும் எந்த ஒரு தன்னிச்சையான செயற்பாடுகளையும் எதிர்க்கும் பைடன், தற்போதும் அதனை எதிர்ப்பதோடு ஜனாதிபதியான பின்னரும் எதிர்ப்பார்” என்று அவரது பிரசாரக் குழுவின் பேச்சாளர் மைக்கல் க்வின் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 


உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா முறையாக விலக முடிவு
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  
அடுத்த ஆண்டு ஜூலை 6ஆம் திகதிக்குள் அந்த அமைப்பை விட்டு வெளியேறவிருப்பதாக அது குறிப்பிட்டது. இது பற்றி ஐ.நா மற்றும் அமெரிக்க கொங்கிரஸை அறிவுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனை ஐ.நா அமைப்பும் உறுதி செய்துள்ளது.  
டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை மீட்டுக்கொள்ளப்போவதாய்ச் சில மாதங்களாக மிரட்டல் விடுத்து வந்தார்.  
கொவிட்–19 சூழலை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் குறித்து வெகுவாகக் குறைகூறிய டிரம்ப், சீனாவை மையமாகக் கொண்டு அது செயல்படுவதாகவும் சீனாவின் தவறை மூடி மறைப்பதாகவும் சாடினார்.  
அமெரிக்காவின் முடிவு தீர ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்றும் அனைத்துலக ரீதியில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 400 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவருகிறது.  
எனினும் நவம்பர் மாத நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன், “நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா இணையும்” எனத் தெரிவித்துள்ளார்.  
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 131,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.       நன்றி தினகரன் 
சிரிய மக்களுக்கான உதவி: பாதுகாப்பு சபை தீர்மானத்தில் ரஷ்யா, சீனா எதிர்த்து வாக்கு
மில்லியன் கணக்கான உயிர்களை பாதுகாப்பதற்கு தீர்க்கமானது என ஐ.நா கூறும் சிரியாவுக்கு துருக்கியில் இருந்து உதவி விநியோகங்களை விரிவுபடுத்தும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றுக்கு எதிராக ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளன.
பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் கடந்த செவ்வாக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு எஞ்சிய 13 பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு உதவிகளை வழங்க துருக்கியின் ஒரு எல்லைக் கடவைக்கு அனுமதி அளிக்கும் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் மீது பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
2011இல் சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது இது 15 ஆவது முறையாகும்.
வடமேற்கு சிரியாவில் அந்தப் பிராந்தியத்தின் 70 வீத மக்களான 2.8 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் மார்க் லொவ்கொக் தெரிவித்துள்ளார்.      நன்றி தினகரன்
‘கொவிட்–19’ காற்றில் பரவுவது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் ஆதாரம்
கொரோனா வைரஸ் தொற்று காற்றின் வழியே பரவுவதற்கான ஆதாரங்கள் பெருகி வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று இது பற்றி அறிவுறுத்திய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“கொவிட்–19 காவும் முறைகளில் ஒன்றாக காற்றுவழி பரிமாற்றம் மற்றும் தூசுப்படல பரிமாற்றம் நிகழ்வதற்கான சாத்தியம் பற்றி நாம் அவதானித்து வருகிறோம்” என்று உலக சுகாதார அமைப்பின் கொவிட்–19 தொற்றுக்கான தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.
மூக்கு மற்றும் வாய்வழியாக உதிரும் நீர்த்துளிகளால் மட்டும் கொரோனா பரவுவதாக கடந்த காலத்தில் உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆதாரம் இல்லை என்றும் அந்த அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தொற்று நோய்ப் பரவல் குறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட திறந்த கடிதம் ஒன்றை உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில் கொரோனா காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர்.
இவர்கள் கோரியபடி உலக சுகாதார அமைப்பு காற்று வழியாகவும் கொரோனா பரவுகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தால் உலகம் முழுவதும் ஓரடி சமூக இடைவெளி என்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கங்களுக்கு ஏற்படும்.    நன்றி தினகரன் பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சனுக்கு கொரோனா தொற்றுபிரபல பொலிவூட்  நடிகர் அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக,  கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.  அங்கு இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைவரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிரபல பொலிவூட்  நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,  
“நான் கொரோனா பரிசோதனை செய்தேன். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 

No comments: