இலங்கையில் தமிழர் சிங்களருக்கான இனச்சிக்கல் ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனாலும் பாராளுமன்ற அரசியலில் 1948ன் பின் அதிலும் பண்டாரநாயக்க எனும் ஒரு தனி மனிதனால் மொழி மூலம் இனச்சிக்கல் வலுப்படுத்தப்பட்ட ஒன்று எனலாம். சிங்களமொழி என்ற ஒன்றை மையமாக வைத்தே அவர் ஆட்சியை சுலபமாகப் பிடித்து தனது அரசுத்தலைமை (1956) ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். இலங்கையில் பாராளுமன்ற ஆட்சியைப் பிடிக்க சிறப்பான கருப்பொருள் சிங்களமொழி என்று தெளிவாகக் காட்டினார். அதன்பின் சிங்களர் அதனைக் கெட்டியாகப் பிடித்தார்கள். அடுத்து வந்த சிறிமாவோ பெளத்த மதத்தினையும் மொழியுடன் இணைத்தார் (1972). அரசுத்தலைவராக வெற்றியுடன் வலம் வந்தார். ஆனாலும் பண்டாரநாயக்க தனது ஒருதடவை ஆட்சி முடிவடைய முன்பு சிங்களராலேயே அதுவும் பெளத்த பிக்கு ஒருவரால் சுடப்பட்டதும் (26 செப்ரொம்பர் 1959), சிறிமாவோ 1977ன் பின் அதிகாரமுள்ள ஒரு தலைவராக வரமுடியவில்லை என்பதும், இன்று பண்டாரநாயக்க ஆரம்பித்த கட்சி அவரின் வாரிசுகளுக்கே உரித்தில்லா நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பதும் இங்கு அவதானிக்கக் கூடியது. தொடர்ந்து சிங்களத் தலைமைகள் பெளத்தம், சிங்களம் இரண்டையும் கருப்பொருளாக்கி, பின்னர் புலிகளையும் அதனுடன் இணைத்து இலங்கை தங்கள் நாடு என்ற சரியான இலக்கில் வெற்றியுடன் பயணிக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆரம்ப காலத்தில் இலங்கை என்ற ஒற்றை ஆட்சி நாடு இருக்கவில்லை. அது வேறுபட்ட இரு இனங்களின் நாடு. தமிழர் சிங்களர் என்ற இனங்கள் வாழ்ந்த நாடு. மாறுபட்ட இராச்சியங்கள் கொண்ட நாடு. தனிப்பட்ட மன்னர்கள் ஆண்ட நாடு. ஆனால் ஆட்சியாளர்களின் வலிமை அற்ற நிலை காரணமாக, வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் நாட்டைப்பிடித்தனர். அவர்களும் ஆட்சி நடத்தினர். இருப்பினும் போத்துக்கீசரும், ஒல்லாந்தரும் முழு நாட்டையும் பிடிக்கவுமில்லை. நாட்டின் கட்டமைப்பில் மாற்றங்களை செய்யவுமில்லை. உண்மையில் வன்னிப்பிரதேசம் (1803), கண்டிப்பிரதேசம் (1815) என்பன ஆங்கிலேயரிடமே வீழ்ச்சி கண்டுள்ளது. ஆயினும் 1799ல் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிய ஆங்கிலேயர் 1815ல் இலங்கையை முழுமையாக ஒன்றிணைத்ததாக ஜி. நடேசன் அவர்கள் இலங்கை இனமுரண்பாடுகளின் வரலாறு, எனும் நூலில் குறிப்பிடுகிறார். பின்னர் 1829 ல் கோல்புறூக்கும், 1830ல் கமரோனும் இலங்கை தொடர்பான அறிக்கைகளை பிரித்தானிய அரசுக்கு வழங்கியுள்ளனர் (பேராசிரியர் ப. புஷ்பரட்ணம், இலங்கைத்தமிழர் ஒரு சுருக்க வரலாறு). அதன்பின் பிரித்தானிய அரசு 1833ல் இலங்கையை ஒன்றாக்கி ஒற்றையாட்சி அமைப்பை திணித்தார்கள் என்று போரும் சமாதானமும் நூலில் அன்டன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார். எனினும் ஐரோப்பியர் வருகையின் முன்னர் இலங்கையில் மன்னர்கள் எண்ணங்களிலும் மகாவம்சத்தின் குறிப்பிலும் சிங்கள-தமிழ் வேறுபாடுகள் இருந்தாலும் 1910ன் பின்னரே இலங்கையில் இனமுறுகல் நிலை நேரடியாக வலுப்பட ஆரம்பித்தது எனலாம். இலங்கை மக்களுக்கிடையேயான மோதலாக வெடித்த முதல் அரசியல் சிக்கல் சிங்களருக்கும் முசுலிம்களுக்கும் (1915ம் ஆண்டு) இடையேதான் நிகழ்ந்தது. அதேபோன்று 1948 ன் பின் மக்களாட்சி பின்பற்றப்படும் இலங்கையில் வீரியத்துடன் தமிழருக்கு எதிராக செயல்பட்டது என உறுதியாக கூறலாம்.
முசுலிம்கள் தமிழ் பேசுபவர்கள் எனினும் தங்களை மதரீதியாக இனம்காட்டுபவர்கள். இவர்களை வைத்து அரசியல் செய்வோரும் பண்டாரநாயக்கவின் வழியையே பின்பற்றுவர். பொது நியதி என்பது தொடர்பாக கவலை கொள்ளாது தங்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். அது அரசுடன் சார்ந்தால் மட்டுமே பயன்படும் என்று முழுமையாக நம்புபவர்கள். எனவே சிங்களருக்கு சார்பாகவும் தமிழருக்கு எதிராகவுமே கூடுதலான முசுலீம் தலைவர்கள் தொழிற்பட விரும்புவார்கள். பிற்காலத்தில் அதற்கு சிறந்த கருப்பொருளாக விடுதலைப்புலிகள் துரத்தினார்கள். எங்களுக்கு துன்பத்தை விளைவித்தார்கள் என்கின்ற தூண்டல்களை மக்களுக்கு வழங்குவர். ஆனால் வடக்கிலிருந்து வெளியேறிய முசுலீம்கள் அரசியல் செய்வோர் மூலம் எவ்வளவு உதவி பெற்றார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்த உண்மை. இதேவேளை இந்த அரசியல் நாடகங்களுக்கு அப்பால், வடக்கிலிருந்து வெளியேறிய பல முசுலிம்கள் தங்களுடன் வாழ்ந்த வடக்கு மக்களுடன் நட்புடன் இருப்பதும், உறவு கொண்டாடுவதும் போர்க்காலத்திலும் நடைபெற்ற ஒன்றுதான். எனவே இனமுரண்பாடு என்பது பண்டாரநாயக்க வழிவந்த அரசியல் அறிவாளிகளால் தமிழர்களுக்கும், பெளத்த சிங்களவர்களுக்கும் இடையேதான் முடுக்கிவிடப்படும்.
பிரித்தானியர்களும் தமிழர்களை தமிழ் மொழியில் வலுவான பற்றுக் கொள்ளாத, தங்கள் நாட்டுக்கு முதலிடம் கொடுக்காத, அதேவேளை பிரித்தானிய ஆட்சிக்குத் துணைநிற்கக்கூடிய, நம்பிக்கைக்குரிய, கீழ்ப்படிவுள்ள, கைகட்டி சேவை செய்யும் மனப்பாங்கு கொண்ட, தமது தேசியத்துக்கு முன்னுரிமை கொடுக்காத, தமது இனத்தின் மீது ஆழமான பற்று இல்லாத, தாங்கள் நேர்மையாளர்கள் எனக்காட்ட துடிக்கின்ற, சிங்களரிலும் தாம் கெட்டிக்காரர் என்று நினைக்கின்ற மனிதக்கூட்டமாகவே இனம்கண்டுள்ளனர். ஏனெனில் பொதுவாக ஆங்கிலேயரின் பழக்கம் என்னவென்றால் புதிய மக்களை சந்திக்கும்போது அவர்களை தெளிவாக ஆராய்வது. அவர்களின் பழக்கவழக்கங்கள், இயல்புகள், பண்புகள், நடைமுறைகள் வாழ்க்கைமுறைகள், மனநிலைகள் என்பவற்றை முழுவதுமாக கற்றுக்கொள்வது. அதன்பின்பு தமது செயல்திட்டங்களை ஆரம்பிப்பது. இதற்கும் மேலாக வரலாற்றில் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்கள் என்று வரும்போது அவர்கள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர் என்றே பெரும்பாலும் காட்டப்படுகின்றது. உதாரணமாக துட்ட கைமுனு வெற்றி கொண்ட எல்லாள மன்னன். மேலும் வரலாற்று ஆதாரம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவரின் மகாவம்சம் என்றே கொள்ளப்படுகின்றது. பொதுவாகவே ஆங்கிலேயரைப் பொறுத்தவரை சான்றிதழ்களுக்கே முக்கியத்துவம் வழங்குவர். ஆனால் தமிழ் அரசியல் முன்னோடிகள் தமிழரை நாட்டின் உரிமையாளர்கள் என்று காட்டுவதிலும், தமது அறிவுத்திறமையை நிரூபித்துள்ளார்கள். இதன்விளைவு நாட்டைப் பெறத்தவறியது மட்டுமல்ல அடிமை இரத்தக்கலப்பு உள்ளவர்கள், காட்டு மிராண்டிகள் என்று சிங்களவர் சொல்லும் நிலையில் வாழ்ந்துள்ளார்கள். இது தனிப்பட்ட கருத்தல்ல, சிங்கள இனம் தொடர்பாக அநாகரீக தர்மபலா ‘ஒரு பண்டைய நாகரீகத்தின் வரலாறு’ எனும் நூலில் எழுதியுள்ளதை பேரும் சமாதானமும் நூலில் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
“சிங்களவர் ஒரு தனித்துவ இனம். வேறு இனக்கலப்பு அற்றவர்கள். அடிமைகளின் இரத்தம் கலக்காதவர்கள். மூன்று நூற்றாண்டுகளாக எமது தாயக மண்ணை சீரழித்து, தொன்மை வாய்ந்த எமது வணக்கத் தலங்களை இடித்தழித்து, வரலாற்று முக்கியத்துவம் மிக்க எமது இனத்தை பூண்டோடு அழிக்க முற்படும் காட்டு மிராண்டித் தமிழராலோ அல்லது ஐரோப்பியக் காடையராலோ என்றும் வெற்றி கொள்ள முடியாதவர்கள் என்பதையிட்டு சிங்கள மக்கள் பெருமை கொள்ளலாம். நாகரீகமற்ற காடையரால் சீரழிக்கப்படு முன்னர், ஒளிமயமான இந்த அழகிய தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சுவர்க்க பூமியாக உருவாக்கப்பட்டிருந்தது.”
எனவே சிங்களவர்கள் எப்போதும் தங்களை உயர்ந்த இடத்திலேயே வைத்துக் கொள்கின்றார்கள். இந்த அழகிய தீவு தங்களுடையது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட அநாகரீக தர்மபாலாவின் கருத்தை மறுக்கக்கூடிய நிலையில் தமிழர்கள் உள்ளார்களா என்பதும் சிந்தனைக்குரியதே. அதுமட்டுமல்ல சிங்களர் தங்கள் நாடு என்பதை உறுதிப்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்தபடி இருக்கின்றார்கள். அவை வளமான தமிழர் பிரதேசங்களில் சிங்களரை குடியேற்றுதல் (கல்லோயா, கந்தளாய், வெலிஓயா), தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் அவர்களின் செறிவினைக் குறைத்தல், தமிழரின் தொடர்ச்சியான இடங்களை ஊடறுத்து இடையிடையே சிங்கள மக்களை குடியேற்றி தனிப்பிரதேசம் (உதாரணம்: மணலாறு -வெலிஓயா) இல்லாது ஒழித்தல், தமிழர் பிரதேசங்களில் சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தமிழர் பிரதேசங்களில் சிங்கள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குதல். விடுதலையின் முன் (1948) குடியேற்றங்களில் ஆரம்பித்த சிங்கள ஆதிக்கம் பண்டாரநாயக்கா என்ற தனி மனிதனின் அரசுத்தலைமை ஆசையினால் மொழியினை மையப்படுத்தி பாரிய இனச்சிக்கலாக மாறியது. எது எப்படியோ முறுகல் நிலை தோன்றிய பின்னர் சிங்களர் தங்கள் பரம்பலை தமிழர் பிரதேசங்களுக்குள் அதிகரித்துக் கொண்டார்கள். காவல்துறை, இராணுவம் இதற்கு துணை நிற்கும். இதில் சோகமான செய்தியும் உண்டு. அதாவது தங்களின் பதவிகளை காப்பாற்ற தமிழரே தமிழர்களை கொலைசெய்வார்கள் துன்பப்படுத்துவார்கள். பல சிங்களர் தமிழருக்கு உதவிகள் செய்வார்கள் என்பதும் இங்கு மறுக்க முடியாத செய்தி. சிங்கள குடியேற்றங்கள், சிங்கள பிரதேச சபை உருவாக்கங்கள், தமிழ் பிரதேசங்களில் சிங்கள கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவம் என்பன இந்த மாற்றங்களுக்கு சான்று பகரும். இது சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுடன் அண்டிய பகுதிளை தாண்டி மட்டக்களப்பு, வவுனியா முல்லைத்தீவுவரை பரவியுள்ளது. இன்னும் பரவுகிறது.
அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. தமிழில் ஒன்றல்ல பல கட்சிகள் களமிறங்குகின்றன. தமிழரின் இருப்புக்கு ஆபத்து, விடக்கூடாது என்ற வீரமுழக்கங்கள் வானுயர எழுகின்றன. தேர்தலுக்கு அடுத்தநாள் இவை யாவும் அடங்கிவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் இதுவரை எந்தளவுக்கு தமிழர் இருப்பு பாதுகாக்கப்பட்டது என்பது முக்கியமான வினா. அத்துடன் சிங்களர் எப்படித் தமிழர்களை வென்று தங்களை நிலை நாட்டுகிறார்கள். இதற்கு யார் காரணம்?
No comments:
Post a Comment