இலங்கைச் செய்திகள்


சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுக்கள்; தேர்தல் வன்முறைகளை ஏற்படுத்த வழிவகுக்கும்

 கருணாவுடன் இணைந்த முன்னாள் எம்.பி சங்கர்

விசாரணைக்கு ஆஜராகாத சிவாஜிலிங்கம் கைதாகி பின் பிணையில் விடுதலை

கதிர்காம உற்சவ காலத்தில் அடியார்களுக்கு அனுமதியில்லை

ஆடிவேல் விழா; மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம்

இயக்கச்சி வெடிப்புச் சம்பம்; முன்னாள் போராளி பலி

பயணியுடன் விருந்தினர் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி

வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி, பிரதமர் முன்னுரிமை

டிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்ய வேண்டும்

அதிகாரம் கோருவோர் சொகுசு வாழ்வு; சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில்



சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுக்கள்; தேர்தல் வன்முறைகளை ஏற்படுத்த வழிவகுக்கும்





கவனம் செலுத்துமாறு கஃபே அமைப்பு அவசர வேண்டுகோள்
சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும். இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு,  அவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் நேற்று (06) வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது தொடர்பாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நிலைவரங்களை அவதானிக்கும்போது, திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. 
குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில், சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் கட்சி சார்பாக மற்றும் சுயேச்சையாக வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்காளர்களுக்கு தமது தேர்தல் நிலைவரங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இதனால் தேர்தல் வன் முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 
குறிப்பாக பொத்துவில், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இந்நிலை அதிகரித்து காணப்படுவதால், குறிப்பிட்ட இப்பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது அவசியமென, இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.     நன்றி தினகரன் 







கருணாவுடன் இணைந்த முன்னாள் எம்.பி சங்கர்





தமிழ் மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என புகழாரம்
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர்  கருணா அம்மானுடன் நேற்று இணைந்துக் கொண்டார்.  இவர் த.தே.கூட்டமைப்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவராவார்.   இது தொடர்பில் முன்னாள் எம்.பி. சங்கர் கருத்து  தெரிவித்தபோது,
இன்றைய சமகால அம்பாறை மாவட்ட சூழலில் அம்பாறைத் தமிழ் மக்களை மீட்கக்கூடிய ஒரே வல்லமை கருணா அம்மானுக்கு மட்டுமே உள்ளது.
மேலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய திராணியும் சக்தியும் அவரிடமே உள்ளது.
அதனால் தான் இன்னும் மின்னும் ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணா அம்மானுடன் இணைந்துள்ளேன்.
அம்பாறை மாவட்டத்தில் பிறந்த எனக்கு இங்குள்ள மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன்.
நானும் ஒரு போராளியாக இருந்தவன். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் படும் இன்னல்களை துன்பங்களை அறிவேன். பாரிய பாரபட்சங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்தவர்கள்.
காணி அபகரிப்புகள் நிலப்பறிப்புகளை இன்றும் சந்திக்கிறார்கள்.நான் எம்.பியாக இருந்த காலத்தில் என்ன செய்தேன் என்பதை மக்கள் அறிவார்கள் என்றார்.
காரைதீவுகுறூப் நிருபர் - நன்றி தினகரன் 

















விசாரணைக்கு ஆஜராகாத சிவாஜிலிங்கம் கைதாகி பின் பிணையில் விடுதலை






பிரபாகரனுக்கு பிறந்த நாள் கேக் வெட்டிய வழக்கு
நீதிமன்ற பிடியாணையின் கீழ் நேற்று (05) காலை கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில்  அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 
இதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம்  நேற்று  அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
எஸ்.தில்லைநாதன், யாழ்விசேட நிருபர்  நன்றி தினகரன் 










கதிர்காம உற்சவ காலத்தில் அடியார்களுக்கு அனுமதியில்லை





அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு
கதிர்காம உற்சவம் நடைபெறும் கால எல்லை முழுமையாக பொது மக்களுக்கு மத நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் கிட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை மூலம் அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,சிங்களம் , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பக்திக்குரிய வரலாற்று சிறப்புமிக்க தேசிய ரீதியில் மிகவும் முக்கிய விழாவாக கருதப்படும் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா ஜுலை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவ பைவத்துடன் நிறைவடையவுள்ளது.
கொவிட் தொற்று ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா 2020 ஐ நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஆடி வேல் விழாவை முன்னிட்ட பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லை முழுமையாக பொது மக்களுக்கு மத நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் கிட்டாது.
இதேபோன்று வடக்கு கிழக்கிலிருந்து உகந்தை குமண – யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாக செல்வோருக்கு தேவையான வசதிகள் செய்யப்படமாட்டாது என்றும் இதில் கலந்துகொள்வோருக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுகாதார பிரிவினரின் முழுமையான ஆலோசனையின் அடிப்படையில் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நடைபெறும் கால எல்லைக்குள் கதிர்காம புனித நகரத்திற்குள் பொது மக்கள் வருவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், மொனராகலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 











ஆடிவேல் விழா; மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம்





- பங்குபற்ற பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது
மூவின மக்களின் பக்திக்குரிய வரலாற்று சிறப்பு மிக்க தேசிய ரீதியில் மிகவும் முக்கிய விழாவாக கருதப்படும் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி அன்று மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவ வைபவத்துடன் நிறைவடையவுள்ளது.
கொவிட்-19 தொற்று ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா 2020 ஐ நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஆடிவேல் விழாவை முன்னிட்டு பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லையில் முழுமையாக பொதுமக்களுக்கு மத நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் கிட்டாது. இதேபோன்று வடக்கு, கிழக்கிலிருந்து உகந்தை குமண– யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாக செல்வோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட மாட்டாது என்றும் இதில் கலந்துகொள்வோருக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுகாதார பிரிவினரின் முழுமையான ஆலோசனையின் அடிப்படையில் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நடைபெறும் கால எல்லைக்குள் கதிர்காம புனித நகரத்திற்குள் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், மொணராகலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 











இயக்கச்சி வெடிப்புச் சம்பம்; முன்னாள் போராளி பலி





இயக்கச்சி வெடிப்புச் சம்பம்; முன்னாள் போராளி பலி-Iyakachchi Blast-Hospitalized 44 Yr Old Dead
நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (08) அதிகாலை உயிரிழந்தார் என, பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (44) எனும் முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், கடந்த 03ஆம் திகதி மீன் ரின்னுக்குள் C4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டது என்று பளை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வெடி விபத்தில் படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வெடிப்பு சம்பவத்தையடுத்து அவரது மனைவி உட்பட இருவர், பயங்கரவாத ஒழிப்பின் தற்காலிக விதிமுறைகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே வேளை, முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
இதன்போது குறித்த வீட்டிலிருந்து மேலும் 02 குண்டுகள் உள்ளிட்ட வெடிமருந்துகள் மற்றும் கரும்புலி நினைவுநாள் தொடர்பான குறிப்பொன்றையும் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.   நன்றி தினகரன் 











பயணியுடன் விருந்தினர் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி





பயணியுடன் விருந்தினர் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி-5 Visitors Allowed to Visit Airport From Today
கட்டுநாயக்க விமானநிலையயத்தின், பயணிகள் வெளியேறும் முனையத்திலுள்ள விருந்தினர்களுக்கான பகுதிக்குள், விருந்தினர்கள் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (06) முதல் இவ்வனுமதி வழங்கப்படுவதாக, விமானநிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடந்துகொள்வது கட்டாயமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முதல் பயணிகள், ஊழியர்கள் தவிர்ந்த விமான நிலையத்திற்குள் விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் பயணிகளுடன் 03 பேர் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஐவருக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 










வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி, பிரதமர் முன்னுரிமை





வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் தயாராகவுள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போதைப்பொருள் விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ சோதனைகளுடன் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பாடசாலைகள் மீளச்செயற்படத் ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின எதிர்காலத்தினை பாதுகாத்து நல்வழிப்படுத்த முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய அரசாங்கம் உள்ளிட்டோர் வட மாகாண வளரச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
எமது மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உரிய முறையில் இனங்கண்டு அவற்றை உரிய வழியில் பெற்றுத்தர மாகாண சபையும் அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பை வழங்க நானும் தயாராகவுள்ளேன் என்றார்.    நன்றி தினகரன் 











டிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்ய வேண்டும்




- சு.க. உறுப்பினர் ஜனாதிபதிக்கு கடிதம்
வடக்கு மாகாணத்தில் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு பகல் வேளையில் அனுமதி வழங்கப்படக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் பல, டிப்பர் வாகனப் போக்குவரத்தால் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டி புதிய நடமுறையைக் கொண்டு வருமாறு வலி.தெற்கு பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராசா துவாரகன், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை கனரக வாகனங்களால் இடம்பெறுகின்றன. குறிப்பாக டிப்பர் வாகனங்களால் விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
மணல் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய நிலையில் சட்டத்துக்குப் புறம்பான மணல் கடத்தல்கள் பகல் வேளையிலேயே இடம்பெறுகின்றன.

கனரக வாகனங்கள் வீதிகளில் பயணிக்க இரவு வேளையில் மட்டுமே முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையை மீளவும் நடைமுறைப்படுத்துவதனால் பொதுமக்களின் நடமாட்டமற்ற இரவு வேளைகளில் விபத்துக்களைக் குறைக்க முடியும்.
இதேவேளை, இளைஞர்கள் கூடி நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தினால் அவர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(யாழ்.விசேட நிருபர்-மயூரப்பிரியன்) - நன்றி தினகரன் 











அதிகாரம் கோருவோர் சொகுசு வாழ்வு; சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில்



மாற்றியமைக்க குரல் கொடுக்க தயார் - ஞானசார தேரர்
அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும்.
இதற்காக நாமும் குரல் எழுப்புவோம். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 
தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்காக எத்தனை வருடங்கள் பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன? இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.  
அன்று முதல் இன்றுவரை தேர்தல் காலங்களில் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிக் பேசுவது வழமையாகிவிட்டது.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை நாம் முன்மொழிகின்றோம். 
இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துள்ளனர்.
ஆனாலும், அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டு வந்தனர். எனவே இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும். 
அதேவேளை 13, 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து இதோ, இந்தத் தீர்வைதான் தம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.     நன்றி தினகரன் 








No comments: