மங்கையரில் மஹாராணியான திருமதி புவனேஸ்வரி அருணாச்சலம் அவர்களுக்கு ஓர் அஞ்சலி - உஷாஜவகர் (அவுஸ்திரேலியா)


திருமதி புவனேஸ்வரி அருணாச்சலம் 
(23/04/1937---- 08/02/2020)

புவனேஸ்வரி அம்மாள்  சின்னத்தங்கம் ராமச்சந்திரா தம்பதிகளுக்கு கடைசி மகளாக 23/04/1937 அன்று இலங்கையில் நுகேகொடை என்னும் இடத்தில்  பிறந்தார். இவர் நான்கு அண்ணன்மாருக்கும் இரண்டு அக்காமாருக்கும் பாசமிகு தங்கையாக வளர்ந்தார்.
சிறுவயதில் கொள்ளுப்பிட்டியில் உள்ள செயின்ட் அந்தோணி பாடசாலையில் கல்வி கற்று பின் அங்கு இரண்டு வருடங்கள் கற்பித்தார். 1960ஆம் ஆண்டு London A /L படித்த பின் 1964ஆம் ஆண்டு Jaffna College இல் BA London பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்தார்.
 அவரது தகப்பனார் அமரர் இராமச்சந்திரா அவர்களின் வழியில் சிறுவயதிலிருந்தே தமிழ்,இந்துசமயம்,இசை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.சிறுவயது முதல் இவரும் இவரது சகோதரி தனலக்ஷ்மியும் இராமச்சந்திரா சகோதரிகளாக பல இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தி உள்ளனர். தங்களது தாயாரின் நினைவாக 1992 ஆண்டில் 'சிவாஞ்சலி ' எனும் இசைப்பதிவை இருவரும் பாடி வெளியிட்டனர்.அப்பதிவு இப்பொழுதும் பல நாடுகளில், வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
 1965ஆம் ஆண்டு திரு அருணாச்சலம் அவர்களைக் காதல் திருமணம் செய்து,இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். பின்னர் நான்கு பெண் குழந்தைகளுக்கு பாசமிகு அம்மம்மாவானார்.
 இவர் தனது வாழ்நாளில் தமிழில் பல உரைசித்திரங்கள், நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் எழுதி உள்ளார். கொழும்பில் பல பாடசாலைகளுக்கு முக்கியமாக திருக்குடும்ப கன்னியர் மட  கலைவிழாக்களுக்கு நாடகங்கள்  எழுதி இயக்கினார்.                                                                                             
இவர் நயினை பிள்ளை தமிழை வைத்து எழுதிய நாட்டிய நாடகம் கொழும்பிலும் அவுஸ்திரேலிய பிரிசபன் நகரிலும் மேடையேற்றப்பட்டது.  
புவனேஸ்வரி அம்மாள் இலங்கையில் Official Language Department இல் Assistant Research Officer ஆக பணி புரிந்தார்.இவரது மொழி ஆற்றல் English to Tamil glossary உருவாக்க உதவியது.
 அவுஸ்திரேலியாவுக்கு குடி புகுந்த பின்னரும் ஹோம்புஷ் பாடசாலையில் புதன் கிழமைகளில் பாடசாலை நேரம் ஆங்கிலத்தில் இந்து சமயத்தைக் கற்பித்து வந்தார். ஹோம்புஷ் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சைவப்பாடசாலையிலும் சைவசமயத்தைக் கற்பித்து வந்தார்.

 இவர் பல நாட்டிய நாடகங்களை எழுதி நடன ஆசிரியைகள் அவற்றை அரங்கேற்ற உதவியுள்ளார். இசை வல்லமை உள்ளவர் ஆதலால் இசை நிகழ்ச்சிகளுக்கு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.
 முன்பு குறிப்பிட்டதைத் தவிர உலர்ந்த மலர்களைக் கொண்டு மிக அழகிய வாழ்த்து மடல்களையும் தயாரிக்கும் திறமையையும் பெற்றிரு ந்தார்.
உலர்ந்த மலர்களை கொண்டு தயாரித்த வாழ்த்து மடல்களைப் பிறந்தநாள் விழாக்கள், அரங்கேற்றங்கள், வீடு குடி புகும் விழாக்கள், திருமண வைபவங்கள்பூப்புனித நீராட்டு விழாக்கள், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்களின் போது தனது வாழ்த்துடன் பரிசளித்தார்.
.வெஸ்ட் இண்டிஸ் (West Indies) நாட்டில் சில காலம் தன்  கணவருடன் வாழ்ந்து வந்தார். அப்போது உலர்ந்த மலர்களைக் கொண்டு எப்படி வாழ்த்து மடல்களைத் தயாரிப்பது என அங்கிருந்த சில பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தார்.
அப்படி தயாரித்த வாழ்த்து மடல்களை அங்கிருந்த மக்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறார். பின் அந்த மக்கள் அவற்றை அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு விற்று பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்.
புவனேஸ்வரி அம்மாள் எப்போதும் பிறருக்கு உதவும் நற்குணத்தைக் கொண்டிருந்தார்.
தான் வாழ்த்து மடல் தயாரிப்பது பற்றி பின்வருமாறு கவிதை ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

மலரோடு இணைந்த
வாழ்த்து மடல் மலர்ந்த கதை

சின்னஞ் சிறு மலர் தளிர்
சீராகப் பதித்து வைத்து
என்னுள் மலர் இதமான
கற்பனையோடு இணைத்துப்
பண்ணிய இப் பத்திரம்
ஏந்தி வரும் வாழ்த்துக்கள்
எண்ண மதில் நிலைத்திட்ட
இனிய அன்பில் ஊறியவை

அக்கம் பக்கத்தில் அழகாகத் தோன்றிடும்
மலர்கள் தளிர்கள் உளத்தை
எக்கணமும் ஈர்த்திடும் ; உகந்தவற்றை
தக்க வேளை பறித்து - ஆவலுடன்
பக்குவமாய் பதித்து வைத்துப்
பல வர்ண மடலாக்கிப் பழகு தமிழ்
வாழ்த்தெழுதிப் பத்திரமாய் அனுப்புவதில்
பரவசம் ஒன்றுண்டு

வாச மலர் உவந்தளித்து
  வாழ்த்த வேண்டிய நன்னாள் வர  
ஆசையுடன் பறித்த சிறு
  பூவையும் தளிர்களையும்
நேசமுடன் பேணி வைத்து
  நேர்த்தியாக   வடிவமைத்துப்
பாசமுள்ள உளத்தினற்குப்
  பாங்காக அனுப்புவதில்
மாசில்லாத ஆசையம்மா
  வாஞ்சையுடன் ஏற்றிடுவீர்!


பூமித்தாயை விட்டு விலகிச் சென்றாரே 
பூலோகத்தை விரைவில் சென்றடைந்தாரே

அவர் பூதவுடல் அழிந்தாலும் அவர் புகழுடம்பு அழியாது.அவரது ஆத்மா  சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.அவர் இறந்த பிறகே இந்தக் கவிதையை அவர் கணவர் கண்டெடுத்திருந்தார்.

இது அவர் தயாரித்த வாழ்த்து மடல் ஒன்று

புவனேஸ்வரி அம்மாள் சிறிது காலம் சுகவீனமுற்றிந்தார்.

பெப்ரவரி மாதம் 2020ஆம் ஆண்டில் சில நாட்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட திருமதி புவனேஸ்வரி அருணாச்சலம் அவர்கள் 8/02/2020 அன்று தைப்பூச நாளில்  இறைவனடி சேர்ந்தார்.
பூப் போல மென்மையான உள்ளம் கொண்டாரே

பூக்களை உயிருக்குயிராய் நேசித்தாரே


No comments: