'வடிவினை முடியக் கண்டார்?' பகுதி 03: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-லகளந்த இறைவனை, அளந்து அறிதல்,

எவர்க்கும் இயலாத காரியம் எனக் கண்டோம்.
இராமனின் தோள், தாள், தடக்கை எனும் பகுதிகளைத் தனிதனி கண்ட,
மிதிலைப் பெண்கள் தாம் இராமனைக் கண்டுவிட்டதாய் நினைந்தாற்போலவே,
தத்தம் சமயங்களினூடு இறைவனைக் காண்போர்,
இறையின் ஒவ்வோர் பகுதிகளை மட்டும் கண்டுவிட்டு,
தாம் இறையைக் கண்டுவிட்டதாய் உரைப்பதனைச் சொல்லி,
அங்கும் ஒரு கேள்வி பிறப்பதாய்க் கூறி சென்ற அத்தியாயத்தை நிறைவு செய்திருந்தேன்.
இனி அவ்வினா என்ன? என்பதைக் காண்பாம்.
🏹 🏹 🏹
சிற்றறிவுடைய ஆன்மாக்களின் அறிவால்,
பேரறிவுடைய இறையின் ஒரு கூறினைத்தானும்,
முழுமையாய்க் காணுதல் கூடுமா?
அங்ஙனம் காணின்,
ஆன்மாக்களின் சிற்றறிவுக்கு அகப்பட்ட குற்றம்,
இறைக்கு ஆகுமன்றோ!
அங்ஙனம் இருக்க,
தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

எனக் கம்பன் உரைத்தது எங்ஙனம் பொருந்தும்?
இதுவே அவ்வினா.
🏹 🏹 🏹
இக்கேள்விக்காம் விடையையும்,
உரையாசிரியர் வை.மு.கோ அவர்கள் அற்புதமாய் நமக்கு அளிக்கின்றார்.
தமிழ் எழுத்துக்களில்,
ஏகாரம் வினாப்பொருளையும் தரும் என்பது இலக்கணம்.
மேல் அடிகளில் வரும் ஏகாரங்களிற்கு,
வினாப்பொருளைத் தந்து பொருள் காண வேண்டும் என்கிறார் அவர்.
அவரின் கருத்துப்படி தோள் கண்டார் தோளே கண்டார் எனும் முற்றுத்தொடரினை,
தோள் கண்டார் தோளே கண்டார்? என வினாவாக்கி, 
இராமனின் தோளைக்கண்டவர்கள்,
அதனைத்தானும் முழுமையாய்க் கண்டார்களோ? என,
பொருள் உரைத்தல் வேண்டுமாம்.
அங்ஙனம் உரைக்க,
இறையின் பகுதியாய் குறித்த ஒரு வடிவினைக் கண்ட சமயத்தவர்கள்,
அவ்வடிவினைத் தானும் முழுமையாய் அறிந்தார்கள் இல்லை எனும் பொருள்வர,
உண்மைக் கருத்தோடு இப்பாடற்பொருள் இயைந்து போவதை அறிந்து மகிழ்கிறோம் நாம். 
🏹 🏹 🏹
இப்பாடற்கு ஒரு சிறப்புண்டு.
பொதுவாக விளங்காத ஒரு பொருளை விளங்கச் செய்யவே,
புலவர்கள் உவமையைக் கையாள்வர்.
பொருளை உவமேயம் எனவும்,
அதனை விளங்கச் செய்யும் உத்தியை உவமானம் எனவும் சொல்வது வழக்கம்.
இப்பாடலில் இராமனைக் கண்ட பெண்கள்,
அவனது ஒவ்வோர் உறுப்புக்களை மட்டும் கண்டது உவமேயம்.
அவர்களது அவ் இயல்பை விளக்க,
சமயத்தார் இறையினது வடிவைக் கண்டதாய்க் கம்பன் சொன்னது உவமானம்.
🏹 🏹 🏹
பொதுவாக விளங்காத உவமேயத்தை.
விளங்கும் உவமானம் கொண்டு விளக்குவதே மரபு.
இப்பாடலிலோ உவமேயம் நமக்கு விளங்குகிறது.
உவமானமோ  நம்மை மயக்குகிறது.
உவமானம் கொண்டு உவமேயத்தை விளங்குவதற்குப் பதிலாக,
உவமேயம் கொண்டே இப்பாடலில் உவமானத்தை விளங்கவேண்டியிருக்கிறது.
இம்முரண்பாட்டைக் கம்பன் பதிவு செய்வதன் காரணம் என்ன?
🏹 🏹 🏹
பொதுவாகக் காரணத்தை வைத்தே காரியத்தை அறிவது மரபு.
இறை விடயத்தில் உலகமாகிய காரியத்தை வைத்தே,
இறையாகிய காரணத்தை அறியவேண்டியிருக்கிறது.
இம்முரண்பாட்டையே நுட்பமாகக் கம்பன்,
உவமேயம் கொண்டு உவமானத்தை விளங்கும்,
இவ் உத்தியிலும் பதிவு செய்தான் போலும்.
🏹 🏹 🏹
முதற்பாடலில்,
ஒரே பொருளே சமயங்களால் பலதாக்கப்பட்டது என்று சொன்ன கம்பன்,
அடுத்த பாடலில்,
தத்தமதாய்ப் பிரித்துக் கொண்ட இறை வடிவினைக் கூட,
சமயங்கள் முழுமையாய்க் காணவில்லையென வலியுறுத்தி,
வேறோர் இடத்தில், 
இங்ஙனமாய் இறையை முற்றும் உணரா சமயிகளால் விளைந்த,
சமயப் பூசல்களின் விரிவைச் சுட்டுகிறான்.
அதனையும் காண்பாம்.
🏹 🏹 🏹
கிஷ்கிந்தா காண்டம்.
வாலிவதை முடிந்து ஆட்சிப்பொறுப்பேற்கிறான் சுக்கிரீவன்.
மாரி காலம் முடியச் சீதையைத் தேடுவோம் என்ற சுக்கிரீவன்,
தனது வாக்கினை மறந்து மாரி முடியவும் மயங்கிக் கிடக்கிறான்.
அவன் செயலால் கோபம் கொண்ட இராமன் இலக்குவனை அனுப்ப,
கொதிப்புடன் வந்த இலக்குவனை,
வாலி மனைவி தாரை இடைபுகுந்து சீற்றந் தணிவிக்கிறாள்.
பின் இராமஇலக்குவரை சமாதானம் செய்யும் சுக்கிரீவன்,
அனுமனை விட்டுத் தன் படைகளைத் திரட்டுகிறான். 
வந்த வானரப்படையைக் கண்டு வியக்கும் இராமன், 
இலக்குவனனுடன் அதுபற்றி உரையாடுகிறான்.
இவ்விடத்தில்த்தான் கம்பன்,
சமயப்பிணக்குகளின் விரிவு பற்றிய,
தனது கருத்தைப் பதிவு செய்கிறான்.
🏹 🏹 🏹
வானரச் சேனையின் அளவிலா விரிவை,
இலக்குவனுக்கு உரைக்கத்தலைப்படும் இராமன்.
இச் சேனையின் முடிவினை எண்ண முடியாது என்பதற்காய்,
சில உவமானங்களை அடுக்குகிறான்.
ஈசனது மேனியை,
ஈர் ஐந்து திசைகளை,
ஐம்பெரும் பூதத்தை,
அறிவினை,
பேசும்பேச்சினை என,
முடிவுகாண முடியாத பல விடயங்களை உவமையாய் அடுக்கிய இராமன்.
அவற்றுள் ஒன்றாய் சமயப்பிணக்கினையும் இணைத்துக்கொள்வதாய்,
பதிவு செய்கிறான் கம்பன்.
ஈசன் மேனியை, ஈர்-ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
ஆசு இல் சேனையை, ஐம் பெரும் பூதத்தை, அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை,-
வாச மாலையாய்! -யாவரே முடிவு எண்ண வல்லார்?
இப்பாடலில்,
ஈசனின் மேனியின் முடிவினையும், 
ஈர் ஐந்து திசைகளின்  முடிவினையும், 
ஐம்பெரும் பூதங்களின முடிவினையயும்,
அறிவின் முடிவினையும்,
பேசும் பேச்சின் முடிவினையும்,
எங்ஙனம் எவராலும் எண்ணி உணர முடியாதோ,
அங்ஙனமே,
சமயங்களுக்கிடையே விளையும் பிணக்குகளின் அளவின் முடிவினையும்,
எவராலும் எண்ணி உணர முடியாது எனச் சுட்டி,
அதுபோலவே,
சுக்கிரீவனது படையையும் எண்ணி அளவிட முடியாது என,
இராமனின் கூற்றாய் உரைக்கும் கம்பன்,
பலவாய் விரிந்த சமயங்களின் இடையே விளையும்,
பிணக்குகளின் வரைவற்ற தன்மையினை,
எள்ளல் சுவையோடு இங்கு பதிவுசெய்கிறான்.
🏹 🏹 🏹
இக் கட்டுரையில் வரும் முதற்பாடலில்,
ஒன்றேயான இறைப்பொருளையே சமயங்கள் பலவாக்கின என்றும்,
இரண்டாவது பாடலில்,
எல்லாச் சமயங்களும் இறையின் ஒரு பகுதியினை மட்டுமே கண்டு,
தாம் இறையைக் கண்டுவிட்டதாய் மகிழ்ந்தன என்றும்,
அவை, தாம் கண்ட இறையின் ஒரு கூறினைத்தானும்,
முழுமையாய்க் காணவில்லை என்றும் கூறி,
பின்னர் மூன்றாவது பாடலில்,
தாமே முழுமையாய் அறியா இறைபற்றி,
மற்றவரோடு பிணக்குறும் சமயத்தார் இயல்பை எள்ளி,
சமயப் பிணக்குகளின் விரிவினை உரைக்கிறான் கம்பன்.
🏹 🏹 🏹
கம்பனை வைஷ்ணவன் என்றும், சைவன் என்றும்,
முரண்பட்டு நிற்பார் பலர் உளர்.
தத்தம் சமயக் கொள்கையினை கம்பனுள் இனம் காட்டி,
அவனைத் தம் சமயத்தோடு இணைத்துக் கொள்ள,
அவர் படும்பாடு பெரும்பாடாம்!
இறையைத் தம் சமயத்திற்கே உரிய பொருளாய்க் காட்டும் முயற்சிபோல,
கம்பனையும் காட்டித் தாமும் மயக்கமுற்று,
மற்றவரையும் சிலர் மயக்கமுறச் செய்து வருகின்றார்.
அவர்தம் வாதங்கள் பொய்மையானவை என்பதை,
கம்பனது மேற் சொன்ன பாடல்களின் கருத்துக்களால்,
நாம் தெளிவுற அறிந்து கொள்கிறோம்.
கடவுட்கொள்கையில் கம்பன் சமயியாய் அன்றி,
சமயங் கடந்த ஞானியாய் நிற்கும் நிலை உணர,
எல்லா மதத்தார்க்கும் உரியனாய் கம்பன் விளங்குவதன் இரகசியம்,
தெளிவுறப் புரிகிறது.
🏹 🏹 🏹
நன்றி - உகரம் |இலக்கியக் களம்| கம்பவாரிதி. இலங்கை ஜெயராஜ் | www.uharam.com
No comments: