மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் வாராந்த காணோளி ஒன்றுகூடலில்


(அமரர் ) பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப்பகிர்வு
                                                                             ரஸஞானி
மெல்பன் கேசி தமிழ்  மன்றத்தின்  மூத்த பிரஜைகள்  அமைப்பினர் நடத்தும் வாராந்த காணோளி ஒன்றுகூடல் மற்றும் வானொலி நிகழ்ச்சி இன்று 12 ஆம் திகதி  ஞாயிறு மாலை  நடைபெற்றது.
இன்றைய ஒன்றுகூடல்,  இக்காலப்பகுதியில் பிறந்த தினத்தை கொண்டாடுபவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.   கடந்த வாரம்  பிறந்த தினத்தை கொண்டாடிய திருமதி சரோஜினி தேவி ஆசீர்வாதம் அவர்கள்,  இலங்கையில் தாம்  வாழ்ந்த காலப்பகுதியில் குழந்தைப்பருவத்தில் இலங்கை வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய 1953 வெளிவந்த ராஜ்கஃபூர் நடித்த அவன் திரைப்படத்தில் ஜிக்கி பாடிய பாடலை விரும்பிக்கேட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

நாளையதினம் பிறந்த தினத்தை சந்திக்கும்  எழுத்தாளர் முருகபூபதிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 06 ஆம் திகதியன்று  நினைவு தினத்திற்குரியவரான              ( அமரர் ) பேராசிரியர் கா. சிவத்தம்பி பற்றிய நினைவுகளை அவர் தமது  வாழ்வும் பணிகளும் ஊடாக  கல்வி,  இலக்கிய ஆய்வு , சமூகம், வானொலி  முதலான துறைகளில் மேற்கொண்ட  மகத்தான பங்களிப்புகளை நினைவுபடுத்தி, எழுத்தாளர்கள் ஆவூரான் சந்திரன், முருகபூபதி ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இசையும் – பாடலும் என்ற நிகழ்ச்சியின் மூலம் அன்பர்களின் நினைவாற்றலையும் ரசனையையும் அறிந்துகொள்ளும் வகையிலும் வித்தியாசமான அரங்கும்  இடம்பெற்றது.
பாடலுக்கு முன்னர்  சில கணங்கள் ஒலிக்கும்  இசையிலிருந்து, அது எவ்வாறு தொடங்குகிறது என்பதை கண்டுபிடிக்கும் விநோதமான போட்டியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
எதிர்வரும் 25 ஆம் திகதி  சனிக்கிழமை கேசி தமிழ் மன்றம் காணொளி ஊடாக நடத்தவிருக்கும் ஆடிப்பிறப்பு மற்றும் ஆடிக்கூழ் தொடர்பாக  விளக்கம் தரும்  நிகழ்ச்சி பற்றிய அறிவித்தலை பல்மருத்துவர் மதியழகன் தெரிவித்தார்.
ஆவூரான் சந்திரன் எழுதிய தொடரும் நினைவுகள் என்ற இசையும் கதையும்,  இந்நிகழ்ச்சியில்  ஒலிபரப்பானது.
இனிவரும் வாரங்களில், மூத்தபிரஜைகளின் வாசிப்பு அனுபவங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சியையும் ஒருங்கிணைப்பது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
இக்காணோளி ஒன்றுகூடலில் பங்கு பற்றும் அன்பர்களும் கதை சொல்லும் வகையில் எதிர்வரும் வாரங்களில் நிகழ்ச்சிகளை தயாரிக்கவேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இன்று நடந்த நிகழ்ச்சியில் செல்வன் துவாரகன் சந்திரன் தொழில் நுட்ப உதவிகளில் இணைந்திருந்தார்.  அவருக்கும் மூத்த பிரஜைகள் நன்றி தெரிவித்தனர்.
--0--



No comments: