மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 44 முருகபூபதி


பிதா, தனது ஓரே ஒரு உடைமையான பேக்கைத் திறந்து மணிபேர்ஸை பார்த்தாள்.  ஐந்தாயிரம் ரூபா நாணயத்தாள் இரண்டும்,  மூன்று  ஆயிரம் ரூபா தாள்களும், நூறு ரூபா, ஐம்பது ரூபா தாள்கள் சிலவும்  இருந்தன.
அவளுக்கென்று பிரத்தியேகமான செலவுகள் இல்லை. வங்கிப்புத்தகத்தை எடுத்துப்பார்த்தாள். அதில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் இருப்பில் இருக்கிறது.
எதற்காக  இதனையெல்லாம் எடுத்துப்பார்க்கின்றேன்…..?  ஜீவிகாவின் காதலன் ஜெயசீலனின் எதிர்பாராத திடீர் வருகை, மஞ்சுளாவின் தாய் மகளைத்  தேடி எந்தநேரத்திலும் வரப்போகும் செய்தி, கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் ஊரோடு இடமாற்றம் பெற்றுப்போகவிருக்கும் கற்பம் ரீச்சரின் யோசனை,  நுவரேலியாவில் சுபாஷினியின் அம்மாவும் தம்பியும் பார்த்துவைத்திருக்கும் இடத்தில் சுபாஷினிக்கும் திருமணம் நடந்துவிட்டால், நோயுற்றிருக்கும் தாயுடனேயே அவளும் எஞ்சிய  காலத்தை கடக்கவிருப்பதாக சொன்ன தகவல்…. இறுதியில் தனக்கு என்ன நேரப்போகிறது…?
அந்த வீட்டில் அடுத்தடுத்து நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களையடுத்துத்தான், அபிதா தனது எதிர்காலம் பற்றி கடுமையாக யோசிக்கத் தொடங்கினாள்.
இந்த வீட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை வந்தால், என்னோடு வரப்போவது இந்த பேக்கும், லண்டன்காரர் வாங்கித்தந்த மடிக்கணினியும்தான். 
எதற்காக வேண்டாத கற்பனைகள் எல்லாம் வருகின்றன…? வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை நம்பினால், அதற்கேற்ப வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளமுடியும்.
மஞ்சுளாவும், ஜீவிகாவும் வேலைக்குப்போய்விட்டார்கள். அன்று காலையும் ஜீவிகாவை அழைத்துச்செல்ல அவள் பணியாற்றும் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வாகனம் வந்தது. மஞ்சுளாவும் அதில் தொற்றிக்கொண்டு வங்கிக்கு போய்விட்டாள்.
முதல் நாள் இரவு நெடுநேரம் மஞ்சுளாவுடன் உரையாடியது மீண்டும் மீண்டும் நினைவில் வந்து தொல்லைப்படுத்தியது.

எதற்காக மற்றவர்களின் விவகாரங்களினுள்ளே நுழைந்து ஆராய்ந்து பார்க்கவேண்டும்..? அவரவர் பிரச்சினைகளுக்கு அவரவரே தீர்வுகளையும் கண்டடையவேண்டும்.  தன்னைச்சூழ்ந்துள்ள தனிமையிலிருந்து தப்பிக்கத்தானா, மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கின்றேன்.
எனது இன்ப துன்பங்களில் மற்றவர்களை உள்நுழைக்காமலிருப்பதனால், எனக்கென்று அவை இல்லையென்றாகிவிடுமா…? அல்லது, வீட்டு வேலை… வேலையே
வாழ்க்கையென்று இந்த வீட்டுப்பணிகளுக்குள் மூழ்கிவிட்டேனா..?
இனிமேல் எனக்கென்று இன்ப – துன்பங்கள் எதுவும் இல்லை என்றுதான் இந்த வீட்டிலிருக்கும் இந்த நான்கு பெண்களும் கருதுகிறார்களோ…?
இருந்தாலும் நான்தானே அவர்களிடம் எதுவும் சொல்வதில்லை.  அவர்களாக ஏதும் கேட்டால், பதிலுக்கு முன்னர் கண்ணிலிருந்துதானே சொட்டுக்கள் உதிர்ந்துவிடுகின்றன.  ஏமாற்றங்களை, உணர்ச்சிகளை, மனதிற்குள் கட்டிவைத்திருப்பதனால்தான், எவரும் மெதுவாக தட்டிப்பார்த்ததும் கண்களிலிருந்து பொலபொலவென  வடிகிறது.
அதனாலும், இவர்கள் எனது கடந்த காலம், எதிர்காலம் பற்றி எதுவும் கேட்கமாட்டார்கள். 
அபிதா, தனக்குள்பேசி கழிவிரக்கம் கொண்டாள்.
சாப்பாட்டு மேசையிலிருந்த அபிதாவின் கைத்தொலைபேசி சிணுங்கியது.   நேரத்தைப்பார்த்தாள். முற்பகல் 11 மணியும் கடந்துவிட்டிருந்தது.
இந்த நேரத்தில் யார் எடுப்பார்கள்…?
அபிதா,  தனது அறையிலிருந்து வெளிப்பட்டு வந்து எடுத்துப்பேசினாள்.
மறுமுனையில் மஞ்சுளாவின் தாய் சிவகாமசுந்தரி.
 “ எப்படி அம்மா… இருக்கிறீங்க… என்னவிசயம்…? சொல்லுங்க “
 “ அபிதா, நான் நிகும்பலைக்கு வந்திட்டேன். நான் வந்த வாகனம் உங்கட வீடு இருக்கும் வீதியில் செபஸ்தியார் தேவாலய சந்தியில் நிற்கிறது.  வீட்டு இலக்கங்கள் தெரியவில்லை.  ஒரு சிறிய பாலத்தை கடந்து வந்து தேவாலயத்திற்கு முன்னால் நிற்கிறோம்.   இது ஒரு முச்சந்தி. முன்னால் இருப்பது தேவாலயம்.  வலப்பக்கமா,  இடப்பக்கமா திரும்பவேண்டும் என்று டிரைவர் கேட்கிறார்.   “
அபிதா திடுக்கிட்டாள்.  இன்று இந்த வீட்டில் வெடிக்கப்போகும் பூகம்பம் எப்படி இருக்கப்போகிறதோ…? எப்படி சமாளிக்கப்போகின்றேன்…? நல்லவேளை தற்போது மஞ்சுளா வீட்டில் இல்லை.
 “ என்னம்மா, முன்பின் அறிவித்தல் இல்லாமல் திடீரென்று புறப்பட்டு வந்திட்டீங்க. மஞ்சுளாவும் வீட்டில் இல்லை. ஜீவிகாவும் இல்லை.  “
 “ எல்லாம் நேரில் பேசுவோம் அபிதா.  முதலில் பாதையைச்சொல்லு “
 “ அம்மா, இடப்பக்கமாக திரும்பி நேராக  வரச்சொல்லுங்கள்.  முதலில் ஒரு முச்சந்தி வரும். அதனையும் கடந்து வரச்சொல்லுங்கள். வலதுபக்கத்தில் ஒரு காளிகோயில் வரும். அதனைக்கடந்தால், அதே வலப்பக்கத்தில் பிள்ளையார் கோயில் வரும். அதற்கு முன்னால் நிறுத்தச்சொல்லுங்க. நான் வாரன். வந்து கூட்டிக்கொண்டு வாரன். பக்கத்தில்தான் நிற்கிறீங்க… வாங்க…  “
அபிதா, அவசர அவசரமாக வீட்டை சீர்படுத்தினாள். கூடத்தில் ஜீவிகா போட்டுவிட்டுச்சென்ற துணிமணிகளை எடுத்து அவளது அறையிலிருக்கும் கட்டிலில் போட்டாள். மஞ்சுளாவின் அறையை எட்டிப்பார்த்து, அதன்கோலத்தையும் துரிதமாக மாற்றி சீர்படுத்தினாள்.
இரண்டு ஊதுவத்திகளை பற்றவைத்து,   ஊதுவத்தி பொருத்தும் பலகையில் நிறுத்தினாள்.  மனுஷி கண்டியிலிருந்து வருவதால் அதிகாலையே புறப்பட்டிருக்கும்.  இன்னமும் பகல் சமையல் தொடங்கவில்லை. காலையில் வேலைக்குச்சென்ற இருவருக்கும் செய்து கொடுத்த சான்ட் விச்சில் மேலும் இரண்டு துண்டு இருக்கிறது. சமாளிக்கலாம்.
அபிதா, வீட்டுச்சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு, கைத்தொலைபேசியையும் எடுத்தவாறு வாசல் கதவை பூட்டாமல் சாத்திவிட்டு, கேட்டருகில் வந்தாள். மீண்டும் கைத்தொலைபேசி சிணுங்கியது.
 “ அபிதா வந்திட்டோம். கோயிலடிதானே…. “
 “ வாங்க அம்மா.  இதோ கேட்டைத்திறக்கிறேன்  “
அபிதா வெளியே வந்து பார்த்தாள்.  கோயிலுக்கு முன்பாக    வெளிர் நீல நிற வேன் நின்றது. கையசைத்து அழைத்தாள். வாகனம் மெதுவாக நகர்ந்து அபிதாவுக்கு முன்னால் வந்து நின்றது.
சாரதி வெளியே வந்து பின்கதவைத்திறந்துவிட்டான்.
சற்று பருத்த சரீரத்துடன் மஞ்சுளாவின் சாயலில் அதே எலுமிச்சை பழ நிறத்துடன் இறங்கி,  “ அபிதா தானே…?  “ என்றாள்  சிவகாமசுந்தரி. அபிதா அருகே சென்றதும், அவளது தோளை பற்றிப்பிடித்து இறங்கினாள்.   
 “ அம்மா… பார்த்து… மெதுவாக இறங்குங்க…. “
 “ கால் இரண்டும் விறைச்சுப்போச்சுது அபிதா, இதுதான் வீடா..? அழகாக இருக்கிறதே.  “ சிவகாமசுந்தரியின் பெருமூச்சு அபிதாவின் செவிப்பறையில் மோதியது.
 “ என்ர முழங்காலில் வலி இருக்கிறது. அபிதா, கணநேரம் இருந்து வரமுடியாது…. எப்படி இருக்கிறாய்..? தம்பி, பின்பக்கம் திறந்து பேக்கையும் மரக்கறி பேக்குகளையும் எடுத்துக்கொண்டு வாங்க… அடே, இந்த வீட்டில் வாகனம் நிறுத்தக்கூடியளவுக்கு முற்றத்தில் இடம் இருக்கிறது தம்பி.   “  என்றாள்.
 “ அம்மா, இரண்டு கேட்டையும் திறந்துவிடட்டுமா. வேனை உள்ளே எடுக்கலாம்.  “ அபிதா, சிவகாமசுந்தரியை கைத்தாங்கலாக அழைத்தாள்.
 “ வேண்டாம்.   அவருக்கு கொழும்பில் வேலை இருக்கிறது. போகும் வழியில் இங்கே என்னை விட்டுவிட்டுப்போகத்தான் வந்தார்.  இது எங்கட வாகனம்தான் அபிதா. இந்தத்தம்பி எங்கட  டிரைவர்.  வாரும் ஏதும் குடித்துவிட்டு போகலாம்.  “ சிவகாமசுந்தரி, வீட்டு வாசலில்  பூத்திருந்த மல்லிகையில் இரண்டு மலர்களை எடுத்து முகர்ந்தாள்.
 “  நீ வளர்த்த கொடியா…?  நல்ல வாசம்.  “
 “ இல்லையம்மா…. முன்பே இருந்தது.  நான் பந்தல்தான் போட்டேன்.  “
 “ முல்லைக்கு ஒரு பாரி. மல்லிகைக்கு ஒரு அபிதா என்று வைத்துக்கொள்ளுவோம்.  “ என்று சொன்னவாறு வீட்டு விறாந்தாவில் தனது பாதணிகளை கழற்றினாள் சிவகாமசுந்தரி.
இந்த அழகான மனுஷியிடமிருந்து அழகான வார்த்தைகள். இளமையில் நல்ல அழகோடு  இருந்திருக்கவேண்டும்.  அழகிருந்த இடத்தில்தான் ஆபத்தும் இருந்ததோ..? தோற்றத்தில் நன்கு படித்த பெண்ணாக இருக்கிறாள்.  செல்வச்செழிப்பு உடலின் வனப்பில் தெரிகிறது.  நெற்றியில் புரளும் கேசத்தில் வெள்ளியும்  ஆங்காங்கே முளைத்திருக்கிறது.
வீட்டுக்குள் பிரவேசித்ததும் அந்தச்  சாரதி இளைஞன்,                              “  வோஷ் ரூம்… .எங்கே ..? எனக்கேட்டான்.  “
அபிதா காண்பித்தாள்.
 “ கெதியா வாரும் தம்பி. நானும் போகவேணும்  “ என்றாள் சிவகாமசுந்தரி.
 “ இருங்க அம்மா…ஏதும் குடிக்கிறீங்களா… காலையில் என்ன சாப்பிட்டீங்க….? ஏதும் செய்து தரட்டுமா…?  “
கூடத்திலிருந்து ஷோபாவில் அமர்ந்து காலை நீட்டிய சிவகாமசுந்தரி, மறுகணம் எழுந்தாள். சுவரில் மாட்டியிருக்கும் ஜீவிகாவின் பெரியம்மாவின் படத்தை காண்பித்து யார்…?  எனக்கேட்டாள்.
அந்தப்படத்திலிருந்த ராஜேஸ்வரி சண்முகநாதனின் கதையை அபிதா சொன்னாள்.
ஒவ்வொரு அறையாகப்பார்த்துக்கேட்டாள்.
கற்பகம் ரீச்சர், ஜீவிகா, சுபாஷினி, மஞ்சுளா பற்றி சொன்னாள்.
 “ உன்னுடைய அறை… எங்கே..?  “
அபிதா தான் படுத்துறங்கும் களஞ்சிய அறையை காண்பித்தாள்.
குளியலறைக்குச்சென்று திரும்பிய சாரதி,  “ அம்மா… நான் புறப்படுறன்.  ஏதும் என்றால் போன் பண்ணுங்க…. “ என்றான்.
 “ ஏதும் குடித்துவிட்டுப்போகலாமே.   “ அபிதா கேத்திலில் தண்ணீர் நிரப்பினாள்.
 “ வேண்டாம், நிட்டம்புவையில் நின்று குடித்துவிட்டுத்தான் புறப்பட்டோம்.  அம்மாவை கவனியுங்க. சரி… அம்மா… நான் வாரன்…. “ அந்தச்  சாரதி புறப்படும்போது,   “ நெவில்… கவனமாப்போக வேணும்… .இடையில் கொழும்பு ரோட்டில் ஸ்பீட் செக்பண்ணுவாங்கள்…  “ சிவகாமசுந்தரி அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு,   வீட்டின் கூடத்தில் மெதுவாக முன்னும் பின்னும் நடந்தாள்.
 “ காலையில் ஐந்து மணிக்குப்புறப்பட்ட பயணம் அபிதா… இந்த பேக்குகளில் காய் கறிகள் பழங்கள் இருக்கிறது எடுத்துவை.  நானும் வோஷ் எடுத்திட்டு வாரன்  “  மஞ்சுளாவின் அம்மா குளியலறைக்குள் நுழைந்ததும், அவளது திடீர் வருகையை முதலில் யாரிடம் சொல்வது..? என்று தயங்கிக்கொண்டு நின்றாள் அபிதா.
நேற்று இரவுதான் இந்த மனுஷியின் ஏக புத்திரி மஞ்சுளாவுடன் இவளுக்காக ஒரு போராட்டமே நடத்திவிட்டேன்.  இப்படி திடுதிப்பென வந்து இறங்கியிருப்பதால், இன்றும் நேற்றைய போராட்டம் மீண்டும் தொடரப்போகிறதே…? எவ்வாறு சமாளிக்கப்போகிறேன்.
எனக்கென்ன… எக்கேடும் கெட்டுப்போகட்டும். நானென்ன இவளுகளுக்கு சொந்தமா…?  பந்தமா…?  பஞ்சாயத்து நடத்துவதற்கு…? சம்பளத்துக்கு வந்த சாதாரண  வேலைக்காரி, சமையல்காரி. 
அபிதா மஞ்சுளாவின் அம்மாவுக்காக தேநீர் தயாரித்தாள்.
முகம் கழுவிக்கொண்டு வந்த சிவகாமசுந்தரி, தனக்கு சீனி வேண்டாம் என்றாள்.  பேக்கிலிருந்து வெண்மஞ்சள நிற துவாயை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு, பின்வளவை எட்டிப்பார்த்து,  “ அடடே இங்கேயும் மரக்கறி தோட்டம் இருக்கிறது… இதெல்லாம் உன்கைவண்ணமா…?  “ எனக்கேட்டாள்.
அபிதா மென்மையான புன்னகையுடன் தலையாட்டினாள்.
“  உன்ர அறையில் லப்டொப் எல்லாம் இருக்கிறதே.  உனக்கு டைப்பிங் தெரியுமா…? ஈமெயில்,  ஃபேஸ் புக்கெல்லாம் இருக்கிறதா…?   “  தனது கதைக்கு வரும் சிவகாமசுந்தரியிடத்தில் தான் இங்கே வந்து சேர்ந்த கதையை சுருக்கமாகச்சொன்னாள்.
 “ நீ தொடர்ந்து படித்திருக்கலாமே… ரீச்சராகக் கூட வந்திருக்கமுடியும். பெண் பிள்ளைகள் படிக்கவேணும்…. “ என்று சொன்னதும், அபிதாவுக்கு சற்று எரிச்சல் வந்தது.
 ‘ மகள் மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த வேளையில் வீட்டுப்போட்டு ஓடிப்போயிருக்கும் நீயா  மெடம்…, பெண்பிள்ளைகளின் படிப்பைப்பற்றி பேசுகிறாய்…?  ‘ என்று மனதில் வந்த வார்த்தைகளை விழுங்கினாள் அபிதா.
அபிதா தேநீரை நீட்டியதும், சிவகாமசுந்தரி,  பேக்கைத் திறந்து,  சிறிய டப்பாவிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு ஒரு மிடறு அருந்தினாள்.
 “ எதற்கு அம்மா..?  “
 “ எனக்கு பிரஷர் இருக்கிறது.  ஆர்த்ரைட்டீஸ்,   சுகர்… ஏன் பணமும் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது.   இருந்தும் என்ன… எதுவும் இல்லாமல் இருக்கின்றேன்.  விதி செய்தவேலைதான். அது சரி அபிதா… நேற்று இரவு நீயும் மஞ்சுவும் எத்தனை மணிவரையும் பேசிக்கொண்டிருந்தீங்க… சொல்லு…. “
அந்தக்கேள்வியை அபிதா எதிர்பார்க்கவேயில்லை. ஏன் கேட்கிறா…?
 “  ம்…. இராத்திரி பன்னிரண்டு மணிநேரம் வரையும் பேசிக்கொண்டிருந்திருப்போம். எனக்கு கண்ணைச்சுழற்றியதும், வந்து படுத்துவிட்டேன். காலையில் ஐந்து மணிக்கு எழும்பவேண்டுமே அம்மா. ஏன் கேட்கிறீங்க….? “
 “ உனக்கு ஒரு தேங்ஸ்  சொல்வதற்குத்தான்.    அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா..? மஞ்சுளா ஏதும் சொன்னாளா…? சொல்லியிருக்கமாட்டாள். நீ  வந்து படுத்திட்டாய். அதுக்குப்பிறகு மஞ்சு,  என்னோடு இரவு இரண்டு மணிவரையும் பேசிக்கொண்டிருந்தாள்.  அதன் பலன்தான் இப்போது நான் உனக்கு முன்னாலே வந்து நிற்பதன் பின்னணிக்கதை.  “ என்று சிவகாமசுந்தரி சொன்னதும்,                        “ அம்மா…  “  என்று கத்திக்கொண்டு நெருங்கி வந்து  பரவசத்துடன் அணைக்கத்துடித்தாள் அபிதா.  
வேலைக்காரி  வாழ்வு  இடைமறித்தது.
அவள் நெருங்கியதும், அவளது தலையை வருடினாள் சிவகாமசுந்தரி.
அபிதாவுக்கு கண்கள் கலங்கின.
( தொடரும் )








No comments: