கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 21 மாணவர் - ஆசான் நல்லுறவு காலம் தந்திருக்கும் பெருங்கொடை ! மலையகத்தின் வீரம்மா அவுஸ்திரேலியாவிலும் ஒலித்தாள் !!



எனது ஆசிரியப்பணியில் கூடுதலான காலம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்தான் கழிந்தது. என்னிடம் கற்ற ஏராளமான மாணவர்கள் எமது தாயகத்திலும் புகலிட நாடுகளிலும் பரந்து வாழ்கின்றனர்.
அவர்களின் பெயர்கள் அனைத்தையும், எனது முதுமை காரணமாக  நான் மறந்திருக்கலாம். ஆனால், அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
ஒவ்வொரு பிள்ளையும் தமது பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட தத்தமது ஆசிரியரிடம் செலவிடும் நேரம்தான் அதிகம். ஒரு பிள்ளை தனது பெற்றோரின் பெயரை எவ்வாறு மறக்காதிருக்குமோ, அவ்வாறே தனது ஆசிரியரின் பெயரையும் மறந்துவிடாது என்பதையும் அறிவீர்கள்.
அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று எமது முன்னோர்கள்  நால்வரைக்குறித்து விதந்துரைத்திருக்கின்றனர். ஆனால், பாருங்கள் தெய்வத்தை இறுதியாகத்தான் சொல்கிறார்கள்.
அம்மாவிடம் அன்பையும், அப்பாவிடம் அறிவையும், ஆசிரியரிடம் கல்வியுடன் உலக அனுபவங்களையும்தான் ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்கிறது.
நான் ஆசிரியனாக பணியாற்றிய காலத்திலேயே இலக்கியத்திலும் ஈடுபாடுகாண்பித்தவன். சிறுகதையில் தொடங்கி, கவிதைக்கு வந்து ஆய்வுத்துறையிலும்  எனது கவனத்தை செலுத்தினேன்.
தமிழர் அரசியல் என்னை கவிஞனாக்கிப் பார்த்தது.  இரசிகமணி கனகசெந்திநாதனின் தூண்டுதலால்  மருத்துவத்தமிழ் முன்னோடி கிறீன் பற்றிய ஆய்வுக்குள் பிரவேசித்து, அமெரிக்கா வரையும் செல்ல வைத்து, பாப்புவா நியூகினி, மொரீசியஸ், கனடா, அவுஸ்திரேலியா என்று அலைந்துழன்று உலகலாவிய தமிழரும்,  யாதும் ஊரே, World Wide Tamils என்றெல்லாம் எழுதத் தூண்டி, ஆய்வாளன் என்ற  அடையாளத்தையும் தமிழ் சமூகம் வழங்கியது.
இதிலெல்லாம் எனக்கு பெருமை இருப்பதாகப்படவில்லை.  ஏராளமானவர்களை நன்மாணாக்கராக்கி, சமுதாயத்தில் அவர்கள் நல்லதோர் நிலைக்கு உயர்வதற்கு காரணமாகியிருக்கின்றேன் என்பதுதான் பெருமை என்றும் கருதுகின்றேன்.
இன்றும் பல மாணவர்கள் என்னுடன் தொடர்பிலிருக்கின்றனர். எங்கு காணநேரிட்டாலும்  “ சேர் , சேர் … “   என்று அன்பொழுக அவர்கள் பேசும்போதும், தொலைபேசியில் உரையாடும்போதும் எனது மனம் பூரிப்படைகிறது.
உங்களில் பலருக்கு நன்கு தெரிந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், சிறுவர்களுக்கென்றே பிரத்தியேகமாக நாடகங்கள் எழுதுவதில் வல்லவர், அத்துடன் கல்வி, சமூக விழிப்புணர்வு, இயற்கை விவசாயம் முதலான பல பணிகளில்  ஈடுபாடு மிக்கவரான  மாவை நித்தியானந்தனும் எனது அபிமான மாணவர்தான்.

அவர் கடந்த ஆண்டு எனது  90 அகவை காலத்தில் எழுதிய ஆக்கம் அன்றைய விழா மலரில் இடம்பெறத்தவறிவிட்டது. எனினும், அவரது பார்வையில் நான் எப்படி இருந்திருக்கின்றேன் என்பதை நீங்களும் பார்க்கவேண்டும் என்பதற்காக,  இங்கு அதனை முழுமையாக சமர்ப்பிக்கின்றேன்.
ஆசான் அம்பியுடன் 60 வருடங்கள் -   மாவை நித்தியானந்தன்

அம்பிகைபாகன் மாஸ்ரர் வந்தாரென்றால், எல்லாக் குளப்படிகளும் அடங்கிவிடும். பயமோ பக்தியோ என்று சொல்ல முடியவில்லை.  ஆனால்,  யூனியன் கல்லூரியில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதில் பெயர் பெற்றிருந்த ஒருவர் “அம்பிகைபாகன் மாஸ்ரர்”. ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் புகழ் பெற்ற அதிபரான ஐ.பி. துரைரத்தினம் அவரை,  Discipline Master ஆக நியமித்திருந்தார்.
அம்பியின் மேல் மாணவர்கள் மிக்க அன்பு வைத்திருந்தார்கள். எனக்கு விருப்பமான ஆசிரியராக அவர் இருந்தார். மத்தியான உணவு இடைவேளையின்போது வகுப்பில் வைத்து நிறைய எழுதிக் கொண்டிருப்பார். இந்தியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கலைக்கதிர்  விஞ்ஞான சஞ்சிகைக்குக் கட்டுரைகள் எழுதுகிறார் என்று கண்டுபிடித்தோம். அவரது கவிதைகளும் நிறைய வெளிவந்து கொண்டிருந்தன.
மேல் வகுப்புகளுக்கு வந்த பின் அம்பி மாஸ்டருக்கும்  எனக்குமிடையே நெருக்கமான உறவு வளரலாயிற்று. எனது கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்ததைத் தெரிந்து கொண்ட அம்பி,  “என்னை வந்து சந்தியும்” என்றார். புதுக் கொப்பி வாங்கி, பாடநேரத்துக்கு வெளியே யாப்பிலக்கண வகுப்பு ஆரம்பமாயிற்று. கவிதைகளைப் பார்த்து அபிப்பிராயம் சொல்வார். பச்சை மைப் பேனாவினால் குறிப்புகள் எழுதித் தந்தமை கண்முன் இன்றும் நிற்கிறது.
இதன்பின் இன்றுவரை அவர் என்னுடன் ஒரு “ஆசிரியராகவோ” அல்லது “முன்னாள் ஆசிரியராகவோ” அன்றி ஒரு நண்பனாகவே பழகி வந்திருப்பது அவரது குணாம்சத்தின் சிறப்பாகும். தெல்லிப்பளைக் காலம் முடிந்து, பின்னர் கொழும்பிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் இந்த உறவு தொடர்ந்தது.
அம்பியின் யூனியன் கல்லூரிக் காலம் 1950 இல் இருந்து 1969 வரையாகும். அறுபதுகளின் ஆரம்பத்தில் பாடசாலைகள் யாவும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டபோது, கிறிஸ்தவ பாடசாலையாக இருந்த யூனியன் கல்லூரியிலும் பல மாற்றங்கள் இடம் பெற்றன. புதிதாக வந்த அதிபர் பாடசாலைக் கீதத்தை மாற்ற விரும்பி,  அப் பொறுப்பை அம்பியிடமும், சங்கீத ஆசிரியராக இருந்த தொம்மைக்குட்டி மாஸ்ரரிடமும் ஒப்படைத்தார். இதன் பெறுபேறே “வாழ்த்தி வணங்கி மகிழ்வோம்” எனத் தொடங்கும் இன்றைய பாடசாலைக் கீதமாகும்.
சிறுகதை எழுத்தாளராக ஆரம்பித்து, கவிஞராகப் பரிணாமம் பெற்ற அம்பி, இடைக்காலத்தில் மாணவர் நலன் கருதி ஈழகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக விஞ்ஞான பாடங்களையும் எழுதினார். தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டியதோடு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் பங்குபற்றிப் பங்களிப்புச் செய்தார்.
வைத்தியரான சாமுவேல் கிறீனின் மேல் அம்பி பேரபிமானம் கொண்டவர். வைத்தியர் கிறீன், இரு நூற்றாண்டுகளின் முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து, தமிழ் மொழி மூலம் மருத்துவம் கற்பித்தலில் பெரும் பங்களிப்புச் செய்தவர். முதலாவது ஆங்கில வைத்தியசாலையை நிறுவி, தமிழில் மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். அம்பி, கிறீன் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு 1967 ஆம் ஆண்டில் “கிறீனின் அடிச்சுவடு” என்னும் அருமையான புத்தகத்தை வெளியிட்டார். இதன் பெருமையை உணர்ந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அதிபரான முத்துக்குமாரசாமி அவர்களின் ஊக்குவிப்பினால் இந்நூல் மறுசீரமைக்கப்பட்டு, “மருத்துவ தமிழ் முன்னோடி” என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.
அம்பியின் கடும் முயற்சியால், இலங்கை அரசாங்கம் வைத்தியர் கிறீனின் படத்துடன் முத்திரையொன்றை 1998 நவம்பர் 11 ஆம் திகதி வெளியிட்டது. இதனால் வைத்தியர் கிறீன் கொளரவிக்கப்பட்டார் என்று சொல்வதைவிட, தமிழ்மொழி மூலம் வைத்தியக் கலையைப் பரப்பிய அவரது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பணியை நாடறிந்து வியந்தது என்பதே பொருத்தமானதாகும்.
1969  ஆம் ஆண்டில் அம்பி,  யூனியன் கல்லூரியிலிருந்து விலகி, பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். அக் காலப்பகுதியில் நான் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால் அம்பியுடன் மீண்டும் நெருக்கமான உறவைப் பேணும் வாய்ப்புக் கிட்டியது.
முருகையன், சிவானந்தன், சுந்தரலிங்கம், தாசீசியஸ், கந்தசாமி போன்றவர்களும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணி புரிந்ததால், அது எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்திக்க வசதியான ஒரு இடமாகவும் இருந்தது.
அக்காலம் கொழும்பில் கவியரங்கங்கள் கொடிகட்டிப் பறந்த காலம். மகாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், அம்பி, நுஃமான் முதலான மூத்த கவிஞர்கள் முதல், அப்பொழுது மாணவர்களாக இருந்த என்னைப் போன்ற இளையவர்கள் வரை பங்கு கொண்ட மரபுக் கவியரங்கங்கள் அடிக்கடி நடந்ததோடு, பிரபல்யமும் பெற்றிருந்தன.
இதன் பிரதிபலிப்பாக, இலங்கை வானொலியிலும் மாதமொரு கவியரங்கம், பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைக் காலக் கவியரங்கங்கள் என அடிக்கடி கவிமழை பொழிந்து கொண்டிருந்தது. இவை எல்லாவற்றிலும் அம்பி வகித்து வந்த பங்கு முக்கியமானது. இலங்கை வானொலியில் “கலைக் கோலம்”, “அறிவியல் அரங்கம்” போன்ற வாராந்த நிகழ்ச்சிகளையும் அம்பி சிறப்பாக நடத்தி வந்தார்.
பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்து தொழில் தொடங்கியபோது, நான் கொழும்பை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.  1981 இல் அம்பியும் இலங்கையை விட்டு பப்புவா நியூகினி சென்றார். மீண்டும் அவரது தொடர்பு ஆஸ்திரேலியாவில் கிடைத்தது.
இறுதியாக நான் குறிப்பிட விரும்புவது அம்பியின் நட்புப் பேணும் குணாம்சம் பற்றியாகும். அம்பியுடன் நட்பை வளர்த்துக் கொண்ட எவரும் இதை உணர்வர். மென்மையும், இனிமையும் கொண்ட பேச்சினாலும், தொடர்புகளைப் பேணிக்கொள்ளும் வல்லமையினாலும், அன்புடன் பழகும் பண்பினாலும், அவர் ஏராளமான உள்ளங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல.
---------------    
எனது மற்றும் ஒரு மாணவி, பெயர் அபிராமி. பரதநாட்டியமும் பயின்றவர். தற்போது பல்மருத்துவராக – திருமணமாகி அபிராமி யோகநாதன் ஆகியிருக்கிறார்.
அவருக்கும் எனது கவிதைகள் பிடிக்கும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து பிரித்தானிய வெள்ளையரால்  இலங்கைக்கு  அழைத்துவரப்பட்டு,  அட்டைக்கடிகளுக்கு மத்தியில் காடுகளை செழிக்கச்செய்து கோப்பியும், தேயிலையும் கொக்கோவும் பயிரிட்டு, இலங்கையின் பொருளாதாரத்திற்கு வளமூட்டிய மக்கள் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளேன்.
அதில் ஒன்று வீரம்மா.
இக்கவிதைக்கு அபிநயம் காண்பித்து நடனமாடியவர்தான் அபிராமி.
காலைக் கதிர் அடிவானில் முளைக்குது
  வீரம்மா – எடி வீரம்மா
 காற்றிலே சங்கொலி தாவி அழைக்குது
   கேளம்மா – ஒலி கேளம்மா
பாலைப் பருகுமப் பாலனைப் பாயிலே
 போடம்மா – அடி வீரம்மா
பச்சைக்கொழுந்துகள் பார்த்துக் கிடக்குது
      சேரம்மா – அணி சேரம்மா
எனத்தொடங்கும் அக்கவிதை,  இசைப்பாடலாகி நடனமுமாகியது.
எனது அபிமானத்துக்குரிய மாணவி அபிராமி இலங்கையில் ஆடிய இந்த வீரம்மா நடனத்தை மீண்டும் நான் எதிர்பாராதவகையில் அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் மேடையேற்றினார். இங்குதான் அவர் தனது குடும்பத்துடன் தனது பல்மருத்துவப்பணியை தொடருகின்றார்.
எனது 75 வயது பவளவிழாவை அவுஸ்திரேலியா வாழ் தமிழ் கலை, இலக்கியவாதிகள்  ஒன்றுகூடி 2004 ஆம் ஆண்டு தங்கள் நான்காவது தமிழ் எழுத்தாளர்  ஒன்றுகூடலை  கன்பராவில் நடத்தியபோது, அபிராமி யோகநாதன் தனது மாணவிகளை பயிற்றுவித்து வீரம்மாவை மேடையேற்றி என்னை இன்ப அதிர்ச்சியில் மூழ்கவைத்தார்.
அபிராமி , கொழும்பில் Holy family convent  இல் படிக்கும் காலத்திலேயே நன்கு அறிவேன்.  தமிழ்ப்பேச்சுப்போட்டிக்கு தயார்படுத்தும்போது என்னிடம் ஆலோசனை கேட்கவருவார். அத்துடன் பிரபல நடன நர்த்தகி ஶ்ரீமதி ஜெயலக்‌ஷ்மி கந்தையாவின் மாணவியுமாவார்.
ஜெயலக்‌ஷ்மி எனது வீரம்மா கவிதைக்கு இசைவடிவம் வழங்கி, அபிராமியை பயிற்றுவித்தவர். கொழும்பில் அரங்கேரிய வீரம்மா, மீண்டும் அவுஸ்திரேலியாவிலும் மேடையேறியது.
மழையிலும் பனிக்குளிரிலும் வாடி, எங்கள் தாயகத்தின் பொருளாதாரத்தை வளம்படுத்திய அம்மக்கள், இன்றும் தங்களது கூலியை உயர்த்தித்தருமாறு போராடிக்கொண்டிருக்கின்றனர்.
காலைக் கதிர் அடிவானில் முளைக்கும் வேளையில் துயில் களைந்து எழுந்து,   காற்றிலே எழுந்து தவழ்ந்துவரும் தேயிலைத் தொழிற்சாலையின் சங்கொலியை கேட்டவாறு இடுப்பிலே படங்கு சாக்கினை கட்டிக்கொண்டு, தான் வயிற்றில் சுமந்து பெற்ற பாலகியை அல்லது பாலகனை தரையில் பாயில் கிடத்திவிட்டு, தனக்காக காத்திருக்கும் பச்சைக்கொழுந்துகளை பறித்து தோளில் தொங்கும் கூடையிலே சேர்ப்பதற்காக ஏனைய பெண்களுடன் அணிசேரும் காட்சியை  இந்த வீரம்மா கவிதையின் தொடக்கத்தில் சித்திரித்திருந்தேன்.
இறுதியில், இவ்வாறு நிறைவுசெய்திருந்தேன்.
கொய்யும் கொழுந்துகள் செல்வக் குழந்தைகள்
     வீரம்மா – எடி வீரம்மா
கொட்டி நிறுக்கையில் கோடி இன்பந்தரும்
              பாரம்மா – அம்மா வீரம்மா
   செய்யுந் தொழில் எங்கள் தெய்வம் என்றே பணி
               செய்யம்மா – எடி வீரம்மா
தெய்வம் என்றோ அருட் கண்ணைத் திறந்திடும்
              மெய்யம்மா – அம்மா வீரம்மா.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்போம். அம்மக்கள் இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.   காலைக்கதிரவன் கண்விழிக்க, அவர்களும் கண்விழித்தார்கள்.
இரவில் கண்மூடித்தூங்கும்போது அருகில் அணைந்து படுத்திருக்கும் அவர்களின் பாலகர் பாலகிகளின் எதிர்காலத்திலாவது சுபீட்சம் தோன்றவேண்டும்.
இக்கவிஞனின் கனவும்  அத்தகையதே…!
மேற்குறிப்பிட்ட 2004 ஆம் ஆண்டு,  எனது பவளவிழாக்காலத்தில் மெல்பனில் வதியும் எனது முன்னாள் மாணாக்கர்கள் மனோகரன், சந்திரகுப்தா, மற்றும் மாவை நித்தியானந்தன் ஆகியோரும்,  யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கிருஷ்ணபிள்ளையின் மகன் சபேசனும்  எனக்கொரு விழாவை நடத்தினார்கள்.  
இவர்கள் என்னையும் நான் அவர்களையும் மறக்காமல் இருப்பதும் காலம் எனக்குத்தந்திருக்கும் கொடையாகும்.
( தொடரும் )








No comments: