இயக்குநர் வசந்தபாலன் பிறந்த நாள் ஸ்பெஷல்: யதார்த்தத்தையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் படைப்பாளி

.

தமிழ் சினிமாவில் புத்தாயிரத்துக்குப் பின் வந்த இயக்குநர்களில் மிகக் குறைவான படங்களின் மூலம் பெருமதிப்புக்குரிய இடத்தைப் பெற்றிருப்பவரான இயக்குநர் வசந்தபாலனின் பிறந்த நாள் ஜூலை 12
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் அவர் இயக்கிய முதல் நான்கு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வசந்தபாலன் 2002-ல் வெளியான 'ஆல்பம்' படம் மூலம் இயக்குநரானார். இப்போது ஜி.வி.பிரகாஷை வைத்து 'ஜெயில்' என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஆறாவது படம் 'ஜெயில்'.
விருதுநகர் மக்களின் வாழ்வியல் பதிவு
வசந்தபாலன் இயக்கிய முதல் படமான 'ஆல்பம்' ஒரு அழகான காதல் கதை. அடுத்ததாக இயக்கிய 'வெயில்' தமிழ் சினிமா அதுவரை கண்டிராத வெப்ப பூமியான விருதுநகரில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பதிவாக அமைந்தது. 'வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே' என்ற பாடல் தொடங்கி படம் முழுவதும் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்களை விருதுநகரின் வெயிலின் தகிப்பை உணரவைத்தது. 

குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற நாயகன் பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணையும்போது ஏற்படும் சிக்கல்களை முன்வைத்து கைவிடப்பட்ட மனிதர்களின் கனவுகளையும் தோல்வியும் விரக்தியும் கொடுக்கும் கசப்புகளையும் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருந்தார் வசந்தபாலன். அதனாலேயே சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது 'வெயில்'.

தொழிலாளிகளுக்குத் துணை நின்ற படைப்பு
அவர் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அறியப்படும் 'அங்காடித் தெரு' தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னையின் வணிக நிறுவனங்களில் வேலைக்கு வரும் ஏழை இளைஞர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் அவற்றைத் தாண்டி அவர்களைப் பிணைக்கும் அன்பையும் நட்பையும் பரிவையும் காண்பித்த படம். இன்றளவும் தமிழ் சினிமாவில் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைக் காத்திரமாகப் பேசிய படைப்புகளில் ஒன்றெனக் கொண்டாடப்படும் படம். இந்தப் படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார் வசந்தபாலன்

சரித்திர மாந்தர்களின் கதைகள்
'பொன்னியின் செல்வன்' என்ற தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடப்படும் சரித்திர நாவலைத் திரைப்படமாக்கப் பல பெரும் சாதனையாளர்கள் முயன்று கைவிட்டார்கள். ஆனால் சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' என்னும் பிரம்மாண்ட சரித்திர நாவல் வெளியான சில ஆண்டுகளுக்குள்ளாகவே அதை அடிப்படையாகக் கொண்டு 'அரவான்' என்ற திரைப்படத்தை இயக்கினார் வசந்தபாலன். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரை வட்டாரப் பகுதிகளில் நிலவிய வாழ்க்கைச் சூழலை கண் முன் நிறுத்திய படமாக அமைந்தது 'அரவான்'. அதோடு மரண தண்டனை நீங்க வேண்டும் என்ற உயரிய கருத்தையும் முன்வைத்தது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெற்றிகரமாகத் திகழ்ந்த நாடகக் குழுக்களின் இயக்கத்தையும் வெற்றியையும் வீழ்ச்சியையும் நாடகக் கலைஞர்களுக்கிடையிலான பிணைப்பையும் போட்டியையும் பொறாமையையும் தாங்கிய திரைப்படைப்பு 'காவியத் தலைவன்'. ஜெயமோகன் வசனம்இ ஏ.ஆர்.ரஹ்மான் இசை என நிரவ் ஷா ஒளிப்பதிவு என இந்தப் படம் முற்றிலும் வேறொரு நிறத்தில் தரமான சரித்திரப் படைப்பாக அமைந்தது.

ஐந்து படங்கள் ஐந்து வகைமைகள்
இதுவரை வசந்தபாலன் இயக்கியுள்ள ஐந்து படங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. வகைமைஇ கதைக் களம். சமூகப் பின்புலம்இ கதையின் காலகட்டம்இ எடுத்தாளப்படும் விஷயம் என ஒவ்வொன்றிலும் வேற்றுமை காட்டியிருப்பார். கதைத் தேர்விலும் கருப்பொருள்களின் விஸ்தாரத்திலும் காட்சிகளின் தீவிரத்திலும் ஷங்கரிடம் பயின்ற பிரம்மாண்டத்தைப் புகுத்தி புகழ்பெற்றார் வசந்தபாலன்.
சம காலத்தில் வாழ்ந்த எளிய மனிதர்களானாலும் சரித்திர ஆளுமைகளானாலும் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் கதையானாலும் கதைமாந்தர்கள் அனைவரும் வசந்தபாலன் படங்களில் யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும் அதே நேரம் வசந்தபாலனுக்கேயுரிய தனித்தன்மையோடும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். நடிப்புஇ இசைஇ ஒளிப்பதிவு போன்ற அம்சங்களில் சிறப்பானவற்றைப் பெறுவதில் அவருடைய அசாத்திய திறமையும் அவர் இன்று அடைந்திருக்கும் மரியாதைக்குரிய இடத்துக்குப் பங்களித்தது.

இயக்குநர் வசந்தபாலன் இன்னும் பல நல்ல தரமான படங்களை இயக்கி திரைவானில் மென்மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

No comments: