பாலிவுட் வெஜ்ஜி - அப்துல் காதர் ஷாநவாஸ்

.

நாம் உண்ணும் உணவை நம்மால் தீர்மானிக்க முடியுமா? அது கிட்டத்தட்ட இயலாத காரியம். நம் உணவைத் தீர்மானிப்பவர்களை இப்படி வேண்டுமானால் வரிசைப் படுத்தலாம்.

விவசாயிகள், உணவு பொருள் விற்பனையாளர், மருத்துவர்கள், சமையல்காரர் நம்முடைய தேர்வின் விருப்பம் மிகக்குறைந்த சதவீதமாகத்தான் இருக்கமுடியும்.

அனைவரும் விரும்பக்கூடிய உணவுப் பொருட்கள் கடந்துவரும் பாதைகள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தற்காலத்தில் உயிர்ப்புள்ள (Organic foods) உணவுகளை உண்ணவேண்டும் என்ற இயக்கம் உலகில் வெகு வேகமாகப் பரவிவருகின்றது Organic food என்ற வார்த்தையை Lord North burne எழுதிய Look to the land என்ற நாவலில் பிரபலமடைந்தது. உயிர்ப்பு உணவுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு 1990-ல் ஐரோப்பிய நாடுகள் கூடி Organic Food Product Act (OFPA) கொண்டு வந்தன. முறையான Organic Food உற்பத்தியாளர்கள் அதற்குரிய சான்றிதழ் பெறவேண்டும்.

கோழிகளிடமிருந்து உயிர்ப்புள்ள முட்டையை பெறவேண்டுமெனில் அவைகளுக்கு உயிர்ப்புள்ள தீவணத்தைக் கொடுக்கவேண்டும். கூண்டில் அடைத்து மின்சார சாதனத்தின் வழி முட்டையை எடுக்காமல் சுதந்திரமாக உலவவிட்டு வைட்டமின் A, omaga 3 அதிகமுள்ள முட்டைகளை பெற முயலவேண்டும்.

ஆண்டி பயாடிக், ஹார்மோன்கள் செலுத்தி பாலைக் கறந்தால் அந்தப் பாலைக் குடிக்கும் பெண்குழந்தைகள் ஏழு வயதிலேயே ‘ருது’வாவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. கால்நடைகளை புல் தின்ன வைத்து பாலைக் கறந்தால் அது சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் ஒமேகா - 3 யும், தொற்று நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலுள்ள ஊட்டச்சத்தும் கிடைக்கும். செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி விளைவிக்கப்படும் பழங்களும் காய்கறிகளும் நமக்கும் சுற்றுச் சூழலுக்கும் நன்மை தரும் விஷயங்களல்ல.

சிங்கப்பூரில் NTUC பேரங்காடி, கேர்ஃபோர் கோல்டு ஸ்டோரேஜ், விவோசிட்டி ஆகிய விற்பனை நிலையங்களில் Organic உணவுகள் வசதிபடைத்த ஊழியரணியைக் குறிவைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

உடல் பருமன் பிரச்னையை Organic Food வகைகளால் கட்டுப்படுத்தமுடியும் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உடல்பருமன் சதவீதம் 27 ஐ நெருங்கிவிட்டது. அமெரிக்கர்கள் மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 36 மில்லியன் கிலோ இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆசியாவில் எல்லா நாடுகளுக்கும் சேர்த்து 103 மில்லியன் கிலோ இறைச்சி தேவைப்படுகிறது. இதனால் இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகள் துரித கதியில் வளர்க்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து கூடிக் கொண்டே போகிறது.

விலங்குகளுக்கு முன்னால் கத்தியைக் கொண்டு செல்வதற்கு முன்பு அவைகளை நாம் வாழ அனுமதித்த காலத்தில் அவைகள் சரிவர பராமரிக்கப்பட்டனவா என்று ஒவ்வொருவரும் தன் மனசாட்சியை எழுப்பி கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டும் என்று ஒரு சுற்று சூழல் ஆர்வலர் கூறுகிறார்.

Organic இறைச்சிக்கு உலகத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது இப்போதைக்கு நடக்காத காரியம். மொத்தமே Organic உணவுகள் உற்பத்தி 3 சதவீதம் மட்டுமே. அதனால் மீன் சாப்பிடுங்கள் என்பது இக்காலத்திற்கு பொருத்தமான அறிவுரையாக இருக்கும். ஆனால் மீன் குஞ்சுகளைக் கூட விட்டு வைக்காமல் வலையில் போட்டு காசு பார்க்கும் நாடுகள் கூடிக் கொண்டு போகின்றன.


இது ஒருபுறமிருக்க துரித உணவுகள் Organic Food க்கு வில்லனாக பயமுறுத்துகிறது. உப்பும் Fructose corn Syrypம் சேர்க்கப்படாவிட்டால் துரித உணவுகள் வெறும் சக்கை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Organic Food தேவைகளை அறிவுறுத்துவதில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா சோளம் உற்பத்திக்கு அதிக சலுகைகள் வழங்குவதோடு சுற்றுச் சூழலை பாழ்படுத்தும், மில்லியன் டன் உரத்தை சோள உற்பத்திக்கு நிலத்தில் கொட்டுகிறது. அதேபோல் சீனா தன் பங்கிற்கு ஒட்டு மொத்த விவசாயத்திற்கு 47 மில்லியன் டன் உரங்கள் உபயோகிக்கிறது.

ரசாயன உரங்கள் பயன்பாட்டை எதிர்த்து புனர் ஜென்ம வேளாண்மை (Rebirth Agriculture) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் கலாநிதி அனில் குப்தாவின் ‘‘நம் வழி வேளாண்மை" என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இதன் கிளைகள் தமிழ்நாட்டின் மதுரை, ஓரிஸ்ஸாவின் புவணேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு - உத்தரபிரதேசத்தின் சஹான்பூர் - கிரனூரில் நம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa), உடுமலைப் பேட்டையில் C.R.ராமநாதனின், விவசாயக் காட்டியல் (Agro farm), Mr. VR. சுவாமிநாதன் நடத்தும் சில பண்ணைகள் இந்தியாவின் இயற்கை வேளாண் முறைகளை முன்னெடுப்போருக்கு வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.

கோவையிலிருந்து நண்பர் திரு.சேகரன் சிங்கப்பூர் வந்திருந்தார். ஒரு வாரம் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து முடித்துவிட்டு என்னுடன் ஒரு சனிக்கிழமை வெளியில் செல்ல கிளம்பி வந்தார்.

ரூமிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ‘‘ஷாநவாஸ் நாம் எங்கே போகிறோம்’’ என்றார்.

"பாலிவுட் வெஜ்ஜி" என்றேன்.

டிப்டாப்பான சூட்டில் டாக்ஸியிலிருந்து இறங்கினார்.பாலிவுட் வெஜ்ஜி என்றவுடன் அவருக்கு கரினாகபூர், மல்லிகா செராவாத் நினைப்பு வந்தது. அவர்கள் பெயரிலுள்ள ‘‘கரவோக்கே" இடத்திற்கு அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டார். அல்ஜினைட் எம்.ஆர்.டியில் ஏறி கிரான்ஜியில் இறங்கி பஸ்ஸில் பாலிவுட் வெஜ்ஜி (சிங்கப்பூர் இயற்கை வேளாண்மை பண்மைக்கு) அழைத்துச் சென்றேன்.

10 ஏக்கர் பரப்பளவில் வாழையும், பப்பாளி மரங்களும் பூத்துக் குலுங்கும் பாலிவுட் வெஜ்ஜியை திருமதி ஐவி சிங்லிம் (56 வயது) நடத்தி வருகிறார். அவருடைய கணவர் NTUC CEO வாக இருந்து ஓய்வு பெற்ற ‘‘லொம் ஹோ செங்" உதவியுடன் பண்ணையும், Poison - Ivy என்ற இயற்கை உணவு உணவகமும் நடத்தி வருகிறார்.

நண்பர் சேகரன் கோவையில் விவசாயப் பண்ணையில் இருப்பது போல் உணர்வதாகச் சொன்னார்.

IVY - SING LIM ‘‘நான் பாதி இந்தியா, மீதி சீனா" என்று அடிக்கடி தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வார். அவருடைய தந்தை ஒரு இந்தியர்.

"மனிதர்கள் பணத்தை சாப்பிடமுடியாது என்பதை உணர்வதற்குள் அவர்களுக்கு வயதாகி விடுகிறது" என்கிறார். இந்த லாப நோக்கமற்ற பண்ணையை நடத்திவரும் IVY.SING-LIM

சிங்கப்பூர் வரும்போது தவறாமல் Bolly wood veggie சென்று பாருங்கள்.

2050ல் உருவாகக் கூடிய மக்கள் தொகை பெருக்கத்திற்கு Organic Food இயக்கமும் எந்த விதத்திலும் தீர்வாக இருக்கமுடியாது என்கிற வாதமும் - American journal of Clinical nutrition 2007ல் சாதாரண உணவுப் பொருட்களுக்கும் Organic Foodக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் தெரியவில்லை என்று வெளியிட்ட திடுக்கிடும் செய்தியும் ஆரோக்கியமான சத்துள்ள உணவுகள் தயாரிக்கக்கூடிய தொழில் அமைப்புக்களை அடையாளம் கண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலை குறைத்து வாங்கி கூடவே ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிலரது வாதமாக உள்ளது.

மரபணு மாற்ற உணவுகள் பற்றி நான் சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தபோது Mr.Manny Haward எழுதிய "My empire of dirt" என்ற புத்தகத்தில் இந்த மாதிரி Organic உணவு இயக்கங்கள் பலமான உணவு தொழிலுக்கு உலகை இட்டுச் செல்லும் என்று சொல்கிறார்

நன்றி உயிரோசை

No comments: