'வட இலங்கை செல்ல பாதுகாப்பு அனுமதி தேவை'

.
ஓமந்தை சோதனைச் சாவடி (ஆவணப்படம்)
ஓமந்தை சோதனைச் சாவடி (ஆவணப்படம்)
இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னிப்பிரதேசம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்களும் இந்த அனுமதியைப் பெற்று பிரயாணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனுமதி பெறாமல் வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
இந்த பாஸ் நடைமுறை முன்னறிவித்தலின்றி இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு வருகின்ற வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''இது ஒன்றும் புதியதல்ல ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு விடயமே, இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.


இதுபற்றி பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் விபரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களும் வடபகுதிக்குச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன், இலங்கைப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்துள்ள வெளிநாட்டுப் பிரஜை மற்றும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டு கடவுச் சீட்டைக் கொண்டிருப்பவர்களும் இந்த அனுமதியைப் பெற வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையதளத்தின் ஊடாக அறிவித்திருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், இலங்கையில் பிறந்து, வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றிருப்பவர்களும் வடபகுதிக்குச் செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
இந்த முன் அனுமதியைப் பெறுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் அதாவது 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் தொலைநகலில் பதிலைப் பெறுவதற்கான தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தல் வேண்டும் என்றும், அவ்வாறு தொலைநகலில் பதிலைப் பெற முடியாதவர்கள் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சின் அலவலகத்திற்குச் சென்று தமக்குரிய பதிலைப பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுகின்றது என்பதற்கான விளக்கம் பாதுகாப்பு அமைச்சினால் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nantri BBC

No comments: