தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன்.
 தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவரை, இராம.நாராயணன் தலைமையில் செயல்பட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. உள்ளிட்டோர் அடங்கிய போட்டிக் குழு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.

இராம. நாராயணன் ராஜிநாமா: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை இராம.நாராயணன் ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சொந்த அலுவல்கள் காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, கே.ஆர்.ஜி. தலைமையிலான குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. முறையாக தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
திடீர் தலைவர்: இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, முதல்வராக பொறுப்பேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயும், சந்திரசேகரனும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, மாலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவராக சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.No comments: