மானுடத்தைத் தரிசித்து வாழும் தெய்வமாக வாழ்பவர் பாபா

.

இந்த யுகத்தின் அவதார புருஷர் பகவான் சத்திய சாயி பாபா. 1926 நவம்பர் 23 ஆம் திகதி பிறந்த பாபா, தனது 85 வருடகால வாழ்வின் பெரும் பகுதியை மனிதகுல மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.

அடிமட்ட மக்களிலிருந்து சமுதாயத்தின் அனைத்து மட்டங்களைச் சார்ந்தவர்களின் அமைதியைத் தேடி வந்தவர்களுக்கு அமைதியையும் அன்பையும் வழங்கியதுடன் தன்னை நாடி வந்தவர்களுக்கு தனது இதயத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கை இன, மத, மொழி, பேதங்களுக்கு அப்பால் வறுமை, செல்வம் என்ற வரையறைகளைக் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர வைப்பதிலேயே கழிந்துள்ளது.

மானுடப் பிறப்பின் பயனை மனிதத்துக்குள் நின்று மண்ணுயிர்களுக்கு காணிக்கையாக்கியவர் இவர். பகவான்கள் மலிந்துள்ள இந்த உலகில் மானுடத்தை நேசித்தவர் சாயி பகவான். மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து காட்டினார். தன்னைத் தரிசிக்க வந்தோரை அன்பு என்ற உணர்வோடு அரவணைத்தாரே தவிர பணம், பொருள் பண்டத்துக்காக அல்ல. எனவே தான் எந்த மக்களும் அவரை அணுகக்கூடியதாக இருந்தது. உண்மையில் அவர் அன்பு என்ற வல்லமையின் ஊடாக பெரியதொரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினார். இதன் விளைவு பணம், பொருள்கள் வந்து குவிந்தன. இவ்வாறு வந்த பணமும், பொருளும், செல்வமும் அவரை விலைக்கு வாங்குவதற்கானவை அல்ல. அநாதை மக்களை அரவணைத்து வாழ் வளிப்பதற்கு அவர் இவற்றைப் பயன்படுத்தினார்.

இதன்மூலம் நூற்றுக்கு மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை வழி நடத்தி வந்தார். இப்பணிகள் உலகிலுள்ள 173 நாடுகளில் இன்று செயலுருவம் பெற்று இயங்கி வருகின்றன. கல்வி, மருத்துவம், குடி தண்ணீர் உள்ளிட்டபல துறைகளில் இப்பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன இதற்கு அவர் நிறுவிய அமைப்புகள் பெரும்பங்களிப்பு செய்து வந்துள்ளன.

1956 இல் நிறுவப்பட்ட பிரசாந்தி நிலையம், 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய பிரசாந்தி வித்வன் மகாசபா, 1964 இல் உருவாக்கப்பட்ட அகில இந்திய சத்ய சாய் சேவை அமைப்பு, 1970 இல் அகில இந்திய பால் விகாஸ் அமைப்பும், 1972 இல் சத்ய சாய் பொது அறக்கட்டளையும் முக்கியமானவை யாகும்.

இந்த அமைப்புகளின் மூலமாக உலகளாவிய ரீதியில் ஆன்மிகத்தின் ஊடான தனது சமூக சேவைகளை முன்னெடுத்தார். ஸ்ரீ சத்திய சாய் கலை அறிவியல் பெண்கள் கல்லூரி, ஆண்கள் கல்லூரி, ஸ்ரீ சத்திய சாய் நிகர் நிலைப் பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்பட்டன. அவை இதுவரை சிறப்பாக நடத்தி வரப்படுகின்றன.

இவை மட்டுமின்றி, முதியோருக்கான "விருந்தாஸ்ரமம்' என்ற ஆசிரம வசதியும் இவரால் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் குடி தண்ணீர், வசதியற்ற மக்களுக்காக தண்ணீர் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இன்று சென்னை மாநகர மக்கள் குடி தண்ணீரைச் சிரமமின்றிப் பெறுகின்றனர் என்றால் அது சாயிபகவான் மேற்கொண்ட அரும்பெரும் தொண்டால் கிடைத்த வரப்பிரசாதமாகும். அரசு செய்ய வேண்டிய நிர்மாணப் பணிகளை பகவானின் சாயி அறக்கட்டளை செய்து கொடுத்தது என்பது ஒரு வரலாற்று மைல்கல்.

இவை மட்டுமன்றி, அனந்தப்பூர் மாவட்டத்தில் 731 கிராமங்களுக்கும் மெகபூப்நகர் மாவட்டத்தில் 320 கிராமங்களுக்கும் குடி தண்ணீரைப் பெற வழி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவரது பணிகள் 1954 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.


ஸ்ரீ சத்ய சாய் பொது மருத்துவமனை இதன் ஆரம்பமாகும். இதுவே இன்று சுப்பர் ஸ்பெஸலிட்டி மருத்துவமனையாகவும் உயர்ந்து நிற்கின்றது. அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்கி தமது பக்த கோடிகளுக்கு மட்டுமன்றி, இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பயனுள்ள பணிகளைச் செய்த பெருமை இவரையே சாரும். பல்வேறு பகுதிகளில் கல்விக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி ஆன்மிக வாழ்வின் ஊடாக சமுதாயப் பணிகளின் உச்சங்களைத் தொட்டு தமது இரண்டாவது அவதாரத்தின் அருமைகளையும் பெருமைகளையும் உலக மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டியவர் சத்திய சாயி பாபா.

இத்தகைய வாழ்வியல் நெறிகளின் ஊடாக மனித நேயத்தை எடுத்தியம்பிய அவரது வாழ்க்கை இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் எமக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. பாபா மானுடத்தை ஆன்மிகத்தின் மூலம் தரிசித்ததனாலேயே பாபா சராசரி மனிதனுக்கு அப்பால் தெய்வமாக உயர்ந்து நிற்கிறார். பாபாவின் இந்தப் பணிகள் எந்தவித இடையூறுமின்றித் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நன்றி வீரகேசரி இணையம்

No comments: