தமிழ் சினிமா

.   
பட விமர்சனம் சட்டப்படி குற்றம்


காட்டில் பதுங்கி சமூக அவலங்களை சாடும் போராளிகள் கதை... நேர்மையான போலீஸ் அதிகாரி சத்தியராஜுக்கும் தீய அரசியல்வாதி ஏ.வெங்கடேஜுக்கும் மோதல் இதில் சத்யராஜ் குடும்பம் அழிகிறது.



வெகுண்டெழும் சத்யராஜ் சமூகத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களை திரட்டுகிறார். அவர்களுக்கு காட்டில் யுத்த பயிற்சி அளிக்கிறார். புரட்சி படை நாட்டுக்குள் புகுந்து நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள், பத்திரிகையாளர்களை கடத்தி வருகின்றனர். அரசியல் மற்றும் அதிகார நெருக்கடியில் இருந்து விடுபட்டு நேர்மையாக பணி செய்யும் படி அவர்களை நிர்ப்பந்திக்கிறார்.

சத்யராஜ் கொள்கையில் ஈர்ப்பாகி அனைவரும் உடன்படுகின்றனர். சத்யராஜிடம் பாடம் கற்ற போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளை சுட்டு துவம்சம் செய்கின்றனர். நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரட்சி படை பாதுகாப்பு அளிக்கிறது. அரசியல்வாதிகள் கறுப்பு பணத்தை கலெக்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இறுதி கெடு வைக்கிறார் சத்யராஜ்.

பயந்து போய் கறுப்பு பணத்தை கட்டி மூட்டையாக ஒப்படைக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் மட்டும் பணிய மறுத்து சத்யராஜை தீர்த்து கட்ட காட்டுக்குள் நுழைகிறார். வெல்வது யார் என்பது கிளைமாக்ஸ்... எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் வந்துள்ள படம். வித்யாசமான கதை களத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார்.

சத்யராஜின் சேகுவாரா கெட்டப்பும் சுருட்டு பிடித்த படி புரட்சி படைக்கு பயிற்சி அளிக்கும் மிடுக்கும் பரபரக்கவைக்கிறது. பணத்துக்கு விலை போன அரசியல்வாதியை விக்ராந்த் தீர்த்து கட்டுவது... மகளை காதலித்த ஹரீஸ் கல்யாணை போலீஸ் அதிகாரி போதை ஊசிக்கு அடிமையாக்குவது... பானுவை போலிசாமியார் கற்பழிப்பது அழுத்தமான கிளைக் கதைகள்

இவர்களை மீட்டு புரட்சி ராணுவத்தை சத்யராஜ் தயார் செய்து சமூக விரோதிகளுடன் மோத துவங்கியதும் காட்சிகள் வேகம் பிடிக்கின்றன. ஊழல்வாதிக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி ராதா ரவியை போட்டுத்தள்ள வில்லன்கள் ரவுண்ட் கட்டுவதும் போராளிகள் உயிரை கொடுத்து பாதுகாப்பதும் திகில் ரகம்...

சத்யராஜ் புரட்சியாளர் கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகிறார். வசனத்தில் பொறி. விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், பானு, கோமல் சர்மா படைத் தளபதிகளாக பளிச்சிடுகின்றனர். வக்கீலாக வரும் சீமான் கோர்ட்டில் வாதாடும் போது அரசியல் சாடல் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குரூர அரசியல் வில்லன். கிளைமாக்சில் சத்யராஜை காப்பாற்றும் சிறுவன் சபாஷ் போட வைக்கிறான். விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. வி.பிரபாகர் வசனம், ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு பலம். போராளி முகாமில் கூத்து கும்மாளம் மிகை பட்டு கதையின் சீரியஸ் அடிபடுவதை தவிர்த்து இருக்கலாம்.

நன்றி தினக்குரல்

No comments: