இலங்கைச் செய்திகள்

யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இம் மாதம் 30 ஆம் திகதி மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தேர்தல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.


கடந்த காலத்தில் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றதாகவும் இதன்போது பல வழி முறைகள் பின்பற்றப்பட்டதாகவும் வாக்காளர்களாக பதிவதற்கு தவறியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் நிலைமையே காணப்படுகின்றது என்றும் குகநாதன் கூறினார்.

இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடைந்தால் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலைமையில் யாழ். மாவட்டத்திலிருந்து ஒன்பது பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரம் எம்.பி. க்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையினால் குறைவடையலாம் என்று கருதப்படுகின்றது.

எனினும் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்ட குகநாதன் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்கிடையில் பல தடவைகள் வாக்காளர் இடாப்பு புதுப்பிக்கப்படும். அந்த வகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த அளவில் குறைவடையும் என்று கூற முடியாது. இது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணையாளரே எடுப்பார் என்று கூறினார்.

நன்றி வீரகேசரி இணையம்

தாமதித்தேனும் ஐ.நா. நீதி வழங்க வேண்டும்


வன்னியில் இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற விவகாரங்களைக் கண்டறிவது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்கவென நியமித்த குழு தனது அறிக்கையினை கடந்த 12 ஆம் திகதி அவரிடம் கையளித்துள்ளது.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூகி தரூஸ்மன், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் சமாதானத்துக்கான முன்னாள் ஆளுநர் யஸ்மின் சூகா, அமெரிக்காவின் மெக்ஸிக்கன் சட்டக்கல்லூரி பேராசிரியர் ஸ்டீவன் ரெட்னர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை மாத்திரமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளையும் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது. இதற்கும் அப்பால் ஐ.நா.வையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் "நீயுமா புரூட்டஸ்'? என்ற பாணியில் நிபுணர் குழு குற்றவாளிக் கூட்டில் நிறுத்தியுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா. சர்வதேச அரசியல் தலைமைகள் என்பன பொதுமக்களைப் பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன என்றும் கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் கூறிய ""பயங்கரவாதத்திற்கு'' எதிரான ""மக்களை விடுவிக்கும் மனிதாபிமானப் போரின் போது'' அரசாங்கம் கூறிய பயங்கரவாதத்திற்கு அப்பால் பொதுமக்கள் பலியாகிவிடக் கூடாது என்பதில் வன்னியின் இறுதிக் கட்டப் போரின்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் தமது சகோதரர்கள் படுகொலையாவதை நினைத்து தமிழ் மக்கள் மனதுக்குள் குமுறிய போதும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலைமையிலும் தடுக்கும் சக்தியற்ற நிலையிலும் இருந்தனர். நாடெங்கும் எதிரொலித்த வெற்றிக் கோஷங்களும் அதனை ஆதரிக்காதோர் துரோகிகள் என்றும், நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அச்சத்தில் உறைந்து போய்க் கிடந்தனர்.

ஆனால், புலம்பெயர் வாழ் தமிழர்கள் உலகெங்கும் திரண்டு இந்த உயிர்களைக் காப்பாற்றக் கூக்குரல் இட்டனர். ஆனால், அந்தக் குரல்கள் வீதிகளில் அகோரமாகவும் ஆக்ரோஷமாகவும் ஒலித்தனவே தவிர சர்வதேச அரசியல் தலைமைகளின் மனங்களை அசைத்து விட முடியவில்லை.

கனடாவில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம் கரிஜியானிஸ் கனடா வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து போராட முன் வந்தார். ஆனால், லிபரல் கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிக் கடிதம் அனுப்பியிருந்தது.

அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் Stay Away From The Tamils "RALLY" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. கனடாவில் ஆட்சியதிகாரத்திலிருந்த லிபரல் கட்சி போன்று பெரும்பாலும் ஆட்சியதிகாரத்திலிருந்த கட்சிகள் தமது கொள்கையாக இதனைக் கடைப்பிடித்திருந்தன.

இத்தகைய கொள்கைகளுக்கு பல்லாயிரக்கணக்கான வன்னி மக்களின் அவலக் குரலும் மரண ஓலங்களும் கேட்காமல் போனமை ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஐ.நா.வும், அதன் செயலாளரும், சர்வதேச அரசியல் தலைமைகளும் நினைத்திருந்தால்; அக்கறையுடன் செயற்பட்டிருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்பதையே நிபுணர் குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டி நிற்கின்றது.

இதில் ஆச்சரியம் என்னவெனில், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழுவே அவருக்கு எதிராகவும், ஐ.நா. அமைப்புகளுக்கு எதிராகவும் சுட்டு விரலை நீட்டி நிற்பதுதான்.

சர்வதேச அரசியல் தலைமைகளாலும், ஐ.நா. அமைப்புகளாலும், செயலாளர் நாயகம் பான் கீ மூனினாலும் கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக நீதி கேட்டு அறிக்கை சமர்ப்பித்த மர்சூகி தரூஸ்மன், யஸ்மின் சூகா, ஸ்டீவன் ரெட்னர் ஆகியோருக்குத் தமிழ் மக்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளார்கள். எனினும், இந்த நிபுணர் குழுவின் அறிக்கையானது இறுதிப் போரின் இரத்தக் கறைகளை அழித்துவிடாது என்று "கூடஞு கூடிட்ஞு" சஞ்சிகை குறிப்பிட்டுள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

வன்னிப் போரில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படலாம் என, ஐ.நா. அதிகாரிகள் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாருக்கு தெரிவித்திருந்தனர் எனக் குறிப்பிடும் "கூடஞு கூடிட்ஞு", எனினும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த விஜய் நம்பியார் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

எது எப்படியிருந்த போதும், ஒன்றுமில்லாதிருந்த தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை ஏதோ ஒரு வகையில் கலங்கரை விளக்காக இருக்கின்றது. அதனை நிபுணர் குழுவின் பரிந்துரைகள் காட்டி நிற்கின்றன. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அதிகாரபூர்வமற்ற வகையில் வெளியாகியுள்ள அறிக்கையின் ஒரு சில பரிந்துரைகள் இதோ:

பரிந்துரை 1: விசாரணைகள் நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இலங்கை அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

இந்தக் குழு பின்வரும் செயற்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும்: இலங்கை அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும். ஆதாரங்களைச் சேகரித்து, அதனைப் பாதுகாத்து வழங்கவேண்டும்.

பரிந்துரை 2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் இலங்கை அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

1. இலங்கை அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணை இராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.

4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.

5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

7. காணாமல்போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நா. வின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.

8. அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும். தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர், விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும். அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

சுதந்திரமான நடமாட்டங்களைத் தடைசெய்யும் இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பரிந்துரை 3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள் போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 1. பொது அமைப்புகளுடன் இணைந்து சமூகப் பிரச்சினைகளை இலங்கை அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புகளுக்கு இலங்கை அரசு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

3. இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரை 4: ஐக்கிய நாடுகள் சபை:

வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.

2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

நிபுணர் குழுவின் அறிக்கையில் மேற் குறிப்பிட்டதை விட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். வெளிவந்துள்ள மேற்படி விடயங்களை, ஐ.நா. முறையாக செயற்படுத்த முனையுமானால் குருதி தோய்ந்த தனது கைகளைக் கழுவிட முடியா விட்டாலும் பிராயச்சித்தமாக தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வழி வகுத்ததாக அமையும்.

அதேவேளையில் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் பறக்கும் விசனங்களுக்கு மத்தியில் அறிக்கையை முழுமையாக வெளியிடப் போவதாக ஐ.நா. அறிவித்துள்ளது. அறிக்கையை இரகசியமாக வைத்திருக்குமாறு இலங்கை வலியுறுத்தியுள்ள நிலையிலேயே ஐ.நா. மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளது. அறிக்கை வெளியிடப்படும்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளையும் தெரிவிக்கப்போவதாக ஐ.நா. அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஐ.நா. தாமதித்தேனும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
 
நன்றி வீரகேசரி இணையம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மட்டக்களப்பில் சுட்டுக்கொலைமட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் சேர்ந்து செயற்பட்டவருமான மதி என்று அழைக்கப்படும் இராசமாணிக்கம் மதியழகன் என்ற நபர் இன்று நண்பகல் இலங்கை நேரப்படி 2 50 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இவர் உணவருந்திக் கொண்டிருந்தபோது பிஸ்டலால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆரம்பத்தில் ஈ.பி.டி.பி இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து செயற்பட்டுவந்த இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் கால்கள் மற்றும் முள்ளந்தண்டு செயலிழந்துள்ள நிலையில் சக்கர நாற்காலியிலேயே இவர் தனது கடமையினை செய்துவந்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெறும் ஆட்கடத்தல் கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இவர் செயற்பட்டு வந்ததாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட போது அங்கு சென்ற அவர் தன்னையே தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என நிர்வாகிகளை அச்சுறுத்தியதையடுத்து அவர்கள் மதி என்ற இந்நபரையே தலைவராக தெரிவு செய்திருந்தனர்.

தற்போது இவர் கருணா குழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருப்பதாகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு நகரப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு நகரில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை இவரே முன்னின்று ஏற்பாடு செய்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முதல் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய தீர்த்தோற்சவத்தில் வைத்து இவர் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்த வேளை காயங்களுடன் தப்பி இருந்தார்.

பான் கீமூனின் அறிக்கைக்கு எதிராக அரச ஆதரவுடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கும் இவரே திட்டமிட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி தமிழ்வின்

No comments: