கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!

.
13
சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி 'மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் திரும்பி என்னைப் பார்ப்பாள் என்று பார்த்தேன் அவள் பார்க்கவில்லை. எல்லாம் தயார் தானே என்றாள்.


அதற்குள் அங்கிருந்து ஏறிய ஒருவர் தன் கைப்பையினை மேலறையில் வைக்கவேண்டி எங்களின் அருகே வர அவன் அங்கிருந்து நகர்ந்து கழிவறை பக்கம் கண்காட்டிவிட்டுப் போனான். ஐந்து பத்து நிமிடத்திற்கு மேல் கதவு திறக்கப் படவேயில்லை. வேறொருவர் வந்து கதவு தட்ட அவன் தரை துடைத்துக் கொண்டே வெளியேறுவதுபோல் வந்தான்.

எதிரே வெளியிலிருந்து உள்வர நின்றிருந்த பயணி ஒருவனைக் கூட தடுத்து இதில் வேண்டாம் வேறு கழிவறையில் போ என்று சொல்லி வேறொன்றினை காட்டினான். இவள் விருட்டென எழுந்து அவனை நோக்கிப் போக அவன் கவனியாதது போல் வெளிச்சென்று, விமான வாசலில் நின்று எதிரே பார் என்று சைகை காட்டினான்.

எதிரே, வந்ததிலிருந்து எங்களுக்கு சேவை செய்த அந்த விமானப் பணிப்பெண் நின்றிருக்க, அவளிடத்தில் இவள் பார்வையால் ஏதோ சொல்லிவிட்டு வந்து என்னோடமர்ந்தாள். சற்று நேரத்தில் விமானம் புறப்பட்டு பறக்கத் துவங்கியது.

அந்த விமானப் பணிப்பெண் ஒரு குவளையினை கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு கழிவறைக்குள் போக, மாதங்கி அவள் கொடுத்த குவளையில் இருந்து தண்ணீர் அருந்துவதுபோல் அருந்திவிட்டு அடியில் இருந்த எதையினையோ தன் கைப் பை எடுத்து அதனுள் கொட்டிக் கொண்டாள்.

விமானம் தரையிறங்க இன்னும் ஒன்னரை மணிநேரமே மீதம் இருந்தது. எனக்கு எண்ண செய்வதென்று எந்தவொரு யோசனையும் வரவில்லை. இம்மூவருக்கும் ஒரு தொடர்பிருப்பது மட்டும் புரியவர, அமைதியாக அமர்திருந்தேன்.
 
அவளின் பார்வை அதாவது மாதங்கியின் பார்வை நடத்தை எல்லாம் பார்க்க ஒரு எந்திரத் தனமாக இருந்தது. எனை பார்க்கும் பார்வையிலேயே 'என் மீதான நம்பிக்கையினை அவள் தன் கண்களில் காட்டினாள். நானும் எனை மௌனப் படுத்திக் கொள்ள -


சற்று நேரத்தில் அவள் எழுந்து கழிப்பறைக்குள் போக, நான் வெகு வேகமாக என்னருகில் வைக்கப் பட்டிருந்த அவளின் கைப் பையினை எடுத்து ஆராய்ந்ததில் கடவுச் சீட்டு மற்றும் பயணச் சீட்டும் இரண்டும் உள்ளிருக்க, எடுத்துப் பார்த்ததில் மேலும் அதிர்சியானேன். அதில் அவள் பெயர் 'நாராயணி பிரேமதாச' என்றிருந்தது. பிறப்பு கண்டி என்றும், இனம் சிங்களம் என்றுமிருந்தது.

14
அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் பொருந்திய பாலித்தின் பையினை கையில் அவள் புதிதாக கொண்டுவருவதாயும் நான் கவனித்துக் கொண்டேன்.

என்னருகில் வந்து நின்றதும் என்னை வெளியே எழுந்து வா என்றாள், வந்தேன். அவள் உள் பக்கம் சென்று அமர்ந்து பைக்குள் இருந்து ஏதோ எடுத்து எதையோ போட்டு கடைசியில் சிறுசிறு துண்டுகளாக இருந்த சில எந்திர பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாட்டினாள்.

அவ்வப்பொழுது ஆட்கள் இங்குமங்குமாய் வரும்நேரம் பார்த்து அதை அப்படியே பையோடு கீழிட்டாள். சற்று நேரத்தில் மீண்டும் அந்த விமாணப் பணிப்பெண் அக் கழிவறைக்குள் புகுந்து என்னவோ செய்துவிட்டு வெளியே வர, சற்று நேரம் கழித்து மாதங்கியும் அங்கே சென்று வந்தாள். போகும்போதும் வரும்போதும் கையில் அந்த டியூட்டி ப்ரீ பிரிவைச் சார்ந்த பை இருந்தது.

"கடைசியாய் வந்தமர்ந்த போது. நீ சிங்களமா?" என்றேன்

"ஏன் பயமாக இருக்கிறதா?" என்றாள்

"ஹும்.. எனக்கென்ன பயம்?" என்றேன்

அவள் என்னையே கூர்ந்து நோக்கினாள்.

"என்ன ஒன்னு எதிரியிடமே என் வீட்டைப் பற்றி பேசிவிட்டேனே என்றொரு வருத்தம் வரும்" என்றேன்

"அப்போ இப்போது வருத்தமில்லையா?"

"ஏன்?"

"நான் சிங்களத்தியாக இருப்பேனோ" என்று

"இல்லை, அதலாம் விடு, நீயே சொல் யார் நீ?"

"முதலில் வந்த போதே சொன்னேனே 'போராளி என்று. மீண்டும் கேட்பீர்களேயானால் தமிழச்சி என்று சொல்லலாம்"

"அப்போ ஏன் கடவுச் சீட்டில் சிங்களம் என்றிருக்கிறதே"

"தமிழச்சிக்கு அத்தனை சுதந்திரமில்லை எங்கட நாட்டில், சிங்களத்தி என்றால் ஓடும் விமானம் கூட எனக்காக உடனே நின்று, 'எங்கு வேண்டுமோ அங்கு தரையிறங்கும்"

"ஆம், எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்றாலும் அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் கூட குடிக்க முடியாதவள் எப்படி இத்தனை சுலபமாக..... தன்னை சிங்களத்தி என்று சொல்லிக் கொள்ள முடிகிறது?"

"எங்கட கோபமெல்லாம் அப்பாவி ஜனங்க மீது கிடையாது, சிங்கள அரசிடம். அரசு சார் அமைப்புகளிடம். சிங்கள ஆர்மியிடம். அதற்காக சிங்களத்தி என்று என்னை சொல்லிக் கொள்வது ஒன்றும் அத்தனை சுலபமுமில்லை, அதற்குபதில் மரணத்தை பதிலாக வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன்"

"என்ன???!!!"

"எல்லாம் கடந்து நாங்கள் எங்களின் விருப்பிற்கு வாழ்பவர்கள் அல்ல, லட்சியத்திற்காக உயிரை விடவும் சம்மதித்துள்ளவர்கள். தலைமை 'போ என்றால் போகவேண்டும் அவ்வளவுதான்"

"அது புரிகிறது மாதங்கி"

"வேறென்ன புரியவேண்டும்"

"கள்ளக் கடவுசீட்டு தானே அது?"

"ஆம்"

"ஏன் அப்படி"

"கட்டளையின் படி வந்துள்ளேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை"

"தப்பித்துப் போவதாக சொன்னாயே?"

"தப்பித்து வருவதாக சொன்னேன், அதற்காக விட்டுவிட்டு ஓடுவதாக சொல்லவில்லையே"

"பிறகு கடவுச் சீட்டில்.... உன் பெயர் ............. கூட.... வேறாக பார்த்தேனே"

"பார்த்திருப்பாய் என்று தெரியும்"

"ஒருவேளை நான் யாருடமேனும் சொல்லி இருப்பின்"

"சொல்லமாட்டாய் என்றும் தெரியும்"

"அதெப்படி, இதலாம் கவனமின்மை"

"கற்பனை செய்துக் கொள்ளாதீர்கள், அதிகம் பேச எனக்கு நேரமில்லை, போராளி என்றாள் என்ன துப்பாக்கி சுடமட்டும் தெரிந்தவள் என்று எண்ணிவிட்டீர்களா?"

"சரி, நேரே விசயத்திற்குவா என்ன செய்யப் போகிறாய் இந்த விமானத்தை"

"அதலாம் சொல்ல எனக்கு அனுமதி கிடையாது. எனக்கு இட்ட கட்டளையை கூட உமக்காக தாமதப் படுத்திக் கொண்டுள்ளேன்"

"எனக்காகவா...................????!!!"

"ஆம். நீங்கள் யார் என்பதை நான் கொழும்பு விமான நிலையத்திலேயே அறிந்துக் கொண்டேன். உம்மை நாங்கள் மொத்த பேரும் நம்பி இருக்கிறோம்"

அவள் என்னென்னவோ சொன்னாள். ஒரு சிறிய நினைவடக்கியினை (மெமரி சிப் ஒன்றை) எடுத்து என் கைக்குள் திணித்தாள். இதில் நிறைய புகைப்படங்கள் உள்ளன. எல்லாம் சிங்களன் செய்த போற்குற்றத்தை நிரூபிக்கக் கூடியது. அதை உலக மக்களிடம் சேர்க்க வேண்டும் சேர்ப்பாயா என்றாள்.

கண்கள் கலங்கிப் போனது. இதை செய்யாத என் பிறப்பெல்லாம் பிறப்பா என்று தோன்றிற்று. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் "அதை நான் பார்த்துக் கொள்கிறேன் மாதங்கி 'எங்கே போகிறாய் நீ? என்ன செய்ய வந்துள்ளாய்?" என்றேன்

"போவதை பற்றி பிறகு தெரிந்துக் கொள்வாய். இருக்கும் வரை நடந்ததை சொல்கிறேன் கேள் -

'அன்றொரு மாலை நேரம், பூந்தோட்டம் போன்ற எங்கள் வீடு குழந்தைகளின் சிரிப்பில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவும் நானும் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக எண்ணி காற்றாட வெளியில் வந்து அமர்ந்தோம்.

அண்ணன் அப்போது தான் கடைத்தெரு வரை போகிறேன் என்று வெளிவந்து எங்களோடு பேசிக் கொண்டே நின்றார். அதற்குள் அவருடைய பெரிய குழந்தையொன்று ஓடிவந்து, அப்பா நானும் கடைக்கு வரேனென்டு அழ அவர் ஒரு அடிபோட்டு உள்ளே நின்றிருந்த அண்ணியிடம் விட்டுவிட்டு வந்தார்.

அதையெல்லாம் கேட்காமல் அக்குழந்தை மீண்டும் அழ, அண்ணி இரண்டாம் மகளை காட்டி பார்த்தியா உன்னிண்ட தங்கச்சியானாலும் எப்படி நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்கிறாள், நீ பெரியவனாக இருந்தும் இப்படி அடம் பிடிக்கலாமா என்று கேட்க அந்த சின்னக் குழந்தை பெரியவனை நோக்கி 'வா அண்ணா நாம் விளையாடலாம் என்று அழைத்துக் கொண்டு அவன் கை பிடித்து ஓட பின்னாலேயே இவனும் ஓட., இருவரும் -

ஹே... என்று கத்திக் கொண்டே, ஓடிச் சென்று வெளியே வாசலில் அமர்ந்திருந்த அப்பாவை தொட்டுவிட்டு இருவரும் வீட்டிற்குள் ஓடுகிறார்கள். பின் வீட்டிலுள்ள அண்ணியை தொட்டுவிட்டு வாசலுக்கு ஓடி வருகிறார்கள். வீடெல்லாம் அவர்களின் சிரிப்பு சப்தம் நிறைந்துப் போகிறது.

மீண்டும் அந்த சின்னக் குழந்தை ஓடி வாசலுக்கு ஓடி வந்து யே... அப்பா' என்று அண்ணனைத் தொட்டுவிட்டு வீட்டிற்குள் ஓட அண்ணா அவர்களையே பார்த்து சிரித்துக் கொண்டு நிற்க;

நொடிப் பொழுதில் சீறி வருகிறதந்த விமானம், கண்ணிமைக்கும் பொழுதிற்கெல்லாம் இரண்டுமூன்று குண்டுகளை சரமாரியாக வீட்டின்மீதும் தோட்டத்துப் பக்கமும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பக்கமும் என வாரிவீச வீடும் குழந்தைகளும் சிதறிப் போகிறது.

திரும்பிப் பார்க்கும் வேளையில் குண்டுப் போட்டுக் கொண்டேப் போன அந்த விமானத்தின் சப்தம் காதிலிருந்து ஓயும் முன், சிதறி பஞ்சு பஞ்சாக பிய்ந்துப் போனார்கள் அண்ணியும் அந்த குழந்தைகளும்.

கை தனியே கால் தனியே சக்கை சக்கையாக பொறுக்கி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு மார்பில் அடித்து அழுதக் கதை கேட்டால் நெஞ்சை சுடவில்லையா?" கண்களில் நெருப்பு சிதறுவதைப் போல் கோபத்தை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள் மாதங்கி.

அந்த காட்சியை கண்ட இடத்திலேயே அப்பா மூர்ச்சையாகி பின் அன்றே இறந்தும் போனார். கையில் தன் மனைவியையும் இதுவரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூள் தூளாக எடுத்துப் பார்த்த பெரியண்ணனுக்கு அப்போதே மதி கேட்டுப் போனது. இன்று வரை அவருக்கு பைத்தியம் தெளிந்த பாடில்லை, தெருவெல்லாம் அண்ணியின் குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே சுற்றி அலைகிறாராம். ஆனால் பாருங்கள், அவர்மேல் இன்றுவரை ஒரு குண்டு விழாமல் நோக நோக உயிரோடு வைத்திருக்கிறது இந்த பாழாப்போன விதி கூட.

கடைசியில் எல்லாம் இழந்து எனக்கென மீதம் இருந்தது ஒரே ஒரு சின்னண்ணன் மட்டும் தான். அவரையும் 'புலி' என்று சந்தேகப் பட்டு அதற்கெல்லாம் முன்னாலேயே கொண்டு போய் எத்தனை சித்திரவதைகளை செய்தார்கள் தெரியுமா?' நாங்கள் கூட எங்கோ வேலை காரணமாக போயிருக்கிறார் என்று தான் முதலில் எண்ணியிருந்தோம்.

பிறகு யாருமற்று நானிருந்த இருட்டு நாளொன்றில் வந்தார் சின்னண்ணா. அடையாளமே மாறியிருந்தார். கேட்டதற்கு 'உடம்பெல்லாம் நெருப்பால் சுட்டான் சிங்களவன் என்று சட்டையை கழற்றிக் காட்டி அழுதார். நடந்த கதையெல்லாம் சொல்லிக் கதறினார். கைவிரல் நகத்தை மட்டும் ஒவ்வொன்றாக துண்டித்தார்களாம் பாவிகள்.

அதலாம் கூடத் தாங்கிக் கொள்வேன்; சிங்களன் பேண்டதை கையிட்டு வாரச் சொல்லி அடித்தார்களாம். ஒவ்வொன்றினையாய் வந்து சொல்லி கதறி கதறி அழுதார். இந்த கையை வெட்டிவிடுகிறேன் என்று சொல்லி சொல்லி துடித்தார். ஒரு கட்டத்தில் பெரியண்ணன் உள்ளே வர -

அவரை பைத்தியமாக கண்டபிறகு தான் வேறு வழியின்றி அண்ணியும் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது பற்றியும், அப்பா இறந்துவிட்ட விவரம் பற்றியும் சொல்லவேண்டி வந்தது. அன்று அதலாம் கேட்டுவிட்டு தாளமுடியாமல் 'இந்த மண்ணே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தெரு நோக்கி ஓடியவர் தான்; இன்றும் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இது என் ஒற்றை வீட்டின் கதை எனில், இன்னும் எத்தனை எத்தனை வீடுகள், எத்தனை எத்தனை மனிதர்கள் எல்லாமே இந்த சிங்களனின் சுயநல வெறியால் எப்படி மண்ணோடு மண்ணாகப் போனார்கள் தெரியுமா?????????

கண்ணீர் வந்தாலே தாங்காத உறவுகளை ரத்தசகதியாக பார்ப்பதென்பது எத்தனை கொடுமை? அதன் பின்னும் ஏனிந்த உயிர் வைத்து இத்தனை காலம் இருந்தேன் தெரியுமா???"

நான் ஏனென்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை, அவள் எது செய்தாலும் சரி என்று எண்ணியிருந்தேன்.

"இதோ பார்....."

எதையோ எடுத்துக் காண்பித்தாள். உற்றுப் பார்க்கையில் எலும்பென்று தெரிந்தது. கண்கலங்கி கண்ணீர் வர அதை; அழவொன்றும் அவசியமில்லை இனி என்பது போல் துடைத்துக் கொண்டு, அவளே 'இது யாரினுடியது தெரியுமா?' என்றாள்

அதற்குள் விமானம் தரை இறங்குவதற்கான அறிவிப்பு வந்தது. அந்த பணிப்பெண் ஓடிவந்து முன்னிருந்த இருக்கையில் எதிரே அமர்ந்துக் கொண்டாள். எல்லாம் தயார் என்பது போல் - கைகாட்டி கண்ணசைத்தாள்.

மாதங்கி அவசரமாக எழுந்து கழிவறைக்குள் போக' சும்மா தடுப்பது போல் அந்த பணிப்பெண் எழுந்து 'ஏய் என்கு போகிறாய் போய் அமர்ந்துகொள் என்று சொல்ல, அவள் அவசரம் என்று ஏதோ சொல்லிக் கெஞ்சுவதுபோல் பார்ப்போர்முன் நடித்துவிட்டு கழிவறைக்குள் போனவள் விமானம் தரை இறங்கும் வரை வெளியே வரவே இல்லை.

நான் பதற்றமுற்று உள்ளேப் பார்க்கப் போக, அந்தப் பணிப்பெண் எனை தடுத்து உள்ளே போகாதே என்று சப்தமாக சொல்லிவிட்டு 'அவள் இருக்கையில் போய் பார்' என்று மெல்லமாக கிசுகிசுத்தாள்.

நான் வேகமாக வந்து அவள் இருக்கையில் பார்த்தேன். அந்த பையும் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பையில் சில காணொளிகளின் குறுந்தட்டுகள் இருந்தன. அதை எடுத்து துரிதமாக என் பெட்டியில் வைத்துக் கொண்டேன். கடிதத்தை படித்து விவரம் தெரிந்துக் கொண்டேன். விமானம் நின்றதும் அவள் வருவாளா என்று பார்க்க கழிவறை பக்கம் நோக்கி எழுந்து போனேன். அந்த பணிப்பெண் வந்து விரைவாக இறங்கிவிடு என்றும், முதலாக இறங்கி ஓடிவிடு என்றும் மட்டும் சொன்னாள்.

ஏன் என்று கேட்டேன். இந்த விமானம் இன்னும் ஒருசில மணித் துளிகளில் வெடிக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு, என் மூலம் அந்த காணொளியும் புகைப்படங்களும் உலக மக்களுக்கு சேர வேண்டுமென்றும் ஒரு காகிதத்தில் எழுதி கையில் கொடுத்தாள்.

நான் மாதங்கி??? என்று கேட்கத் துணியவில்லை. அவளோடு அமர்ந்துப் பேசக் கிடைத்த மணித்துளிகளை எண்ணி பெருமிதம் கொண்டவனாய் ஏதோ செய்யப் போகிறார்கள், ஆனால் காரணமாகத் தான் செய்வார்கள் என்று கடிதத்தில் எழுதியிருந்தபடி எண்ணிக் கொண்டு அவர்களுக்கு ஒத்துழைக்கும் விதமாக, சற்று முன் நகந்து அவளிடம் புறப்படுவதாக சைகை காட்டிவிட்டு 'வேகமாக விமானம் விட்டிறங்க முன் சென்றவர்களை நகர்த்தித் தள்ளிக் கொண்டு 'வேறு விமானம் பிடிக்க வேண்டும் என்று பொய் சொல்லிவிட்டு முன்னோக்கி நடந்தேன்.

எனக்கு முன் ஒன்றிரண்டு பேர் அவசரமாக இறங்கிப் போகப் பார்த்தார்கள். அவர்களை முந்திக் கொண்டு நான் சற்று வேகமாக நடந்து அவர்களுக்கு முன் சென்று வெளியேறுவதில் மட்டும் குறியாக இருந்தேன். என்னோட லட்சியமெல்லாம் அவள் தந்தந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் கொண்டுப்போய் உலகத்தாரிடம் சேர்ப்பதில் மட்டுமே இருந்தது. நான் வெளியேறி விமான நிலையத்தில் நுழைந்ததும் -

மாதங்கி ஓடி வந்து விமானத்தின் வாசலின் முன் நின்றுக் கொண்டாள். சட்டையை கழற்றி தூர எறிந்துவிட்டு பாருங்கள் நான் பாம் கட்டியிருக்கிறேன் அழுத்தினால் வெடித்துவிடும் என்று காட்டினாள். எல்லோரும் அதிர்ச்சியுற்று அவளைப் பார்க்க, தாமதிக்கவேண்டாம் ஓடி தப்பிக்க முடிந்தவர்கள் ஓடுங்கள் என்று சொல்ல, கோர்ட் சூட் போட்டுக் கொண்டு முன்னாள் முதலிட இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடப் பார்க்க எட்டி அவனைப் பிடித்துக் கொண்டாள். அசைந்தால் அழுத்தி விடுவேன் என்று சிவப்பு நிற பொத்தானை காட்டினாள்.

எதிரே படாரென சுட ஓடிவந்த இரண்டு மூன்று காவலாளிகளை நோக்கி வேண்டாம் துப்பாக்கியை கீழே போடுங்கள் என்றுகத்திக் கொண்டே கையை மேலே தூக்கி சிவப்பு நிற பொத்தான் ஒன்றினை காட்டி 'இனி யார் அசைந்தாலும் அழுத்திவிடுவேன் என்றாள்.

அவர்கள் செய்வதறியாது நின்று பார்க்க மீண்டும் 'துப்பாக்கியை கீழே போடுங்கள் என்று மிரட்ட எல்லோரும் கீழே போட்டனர். என்றாலும், ஒருவன் மட்டும் சற்றும் தயங்காது சடாரென முன் ஓடிவந்து வீரசாகசம் செய்வதுபோல் சரமாரியாக மாதங்கியை நோக்கி சுட்டு சுட்டு சல்லடையாக்கினான்.

தமிழீழம் என் தாயகமென்று சுவாசித்த உயிர்மூச்சை மண்ணில் சரிந்தவாறே நிறுத்திக் கொண்டதந்த மாதங்கி என்னும் விடுதலைத் தீ. இதுவரை விடுதலைக்காக எறிந்த தீபமது அணைந்து ஜோதியற்று காற்றில் கலந்துப் போனது. மக்களெல்லாம் அலறி இங்கும் அங்கும் திண்டாடி ஓடினார்கள்.

அவள் அந்த சிவப்பு நிறப் பொத்தானை அழுத்துவதற்குள் உயிர்பிரிந்து சட்டென கீழே சரிய, நம்புவதற்கே இடமின்றி அதே கணம் அந்த விமானம் வெடித்து சுக்குநூறானது. அந்த கோர்ட் சூட் போட்டவனும் விமானத்தோடு வெடித்துச் சிதறினான்!!

15

விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார்? அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர்.

சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி, காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ சந்தேகப் படுவதற்குள் அலைபாய்ந்து ஓடிக் கொண்டிருந்த மக்களோடு மக்களாகக் கூடி தப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினான்.

வெகு வேகமாக ஒரு மகிழுந்து பேசி எடுத்துக் கொண்டு நேராக வங்கிக்கு சென்று, அங்கு அவன் முன்பு சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்து அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு லண்டனிலிருந்து விமானம் மூலம் வான்வழி போகாமல், வேறொரு மகிழுந்து பிடித்து தரைவழியே லண்டனைக் கடந்து வேறொரு ஐரோப்பா நாட்டிற்கு சென்று அங்கிருந்து மாதங்கி கொடுத்த அத்தனை புகைப்படங்கள் காணொளிகளை இணையம் மூலம் பதிவு செய்து சில முக்கிய நண்பர்களுக்கு அனுப்பினான்.

அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து இங்ஙனம் இங்ஙனம் நடந்ததென்றும் இனி அவசரத் திட்டமாக வேறு என்னசெய்யப் போகிறோம் என்ற தகவல்களையும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து இந்தியா ஏர்லைன் மூலம் சென்னை வந்து இறங்குகிறான்.

-------------------*-------------------*-------------------

மாதங்கி ஏன் அந்த விமானத்திற்கு வெடி வைத்து தகர்க்க வந்தாள், யார் அந்த விமானத்திற்குள் பயணித்தார்கள், அந்த கோர்ட் சூட் போட்டிருந்த ஆசாமி யார், ஏனவனைஅவள் கொள்ளவேண்டும், அவள் அந்த சிவப்பு நிற பொத்தானை இயக்கிடாத போதும் வேறு யார் அந்த விமானத்தை வெடிக்கச் செய்திருப்பார்கள்' என்ற எல்லா விவரமும் பின்னர் அந்த காணொளிகளை கண்டதும் சத்ய சீலனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் புரிய வந்தது.

நண்பர்கள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்தும் மற்ற இதர விடயங்களை கேள்வியுற்றும் திகைத்துப் போனார்கள். ரகசியமாய் ஓரிடத்தில் மொத்தப்பேரும் கூடினார்கள். காணொளி மற்றும் புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அலசிப் பார்த்து அவைகளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதை எல்லாம் தீர்மானித்துக் கொண்டார்கள்.

இடையே சில காட்சிகளை பார்க்க இயலாமல் கைவைத்து மறைத்தும் வாய்விட்டு அழவும் செய்தார்கள். இனி என் உயிரே போனாலும் போகட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீருவதென்று உறுதி ஏற்றார்கள்.

இனி வீடு உறவு உலகம் நியாயம் தர்மம் அத்தனையும் மறந்து புறப்பட்டார்கள். அவரவருக்கு பிரித்துக் கொள்ளப் பட்ட அவரவர் கடமைகளை ஆற்றுவதை தன் லட்சியமாகவும் ஈழம் ஒன்று மட்டுமே அவர்களின் இறுதி வெற்றி என்றும் தீர்மானங்கள் கொள்கின்றனர்.

அதன் முதல் படியாக, குழந்தைகள் சிதறி சக்கை சக்கையாக வாரிப் போட்டதிலிருந்து, மாதங்கியின் அண்ணன் பயித்தியமாய் திரிந்தது வரை, மலர்விழி வயிறு கிழித்து கர்ப்பத்திலிருந்து குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டது முதல், சின்ன வயசு பையன்களுக்கு சட்டி கழற்றிப் பார்த்து வெடி வைத்தது வரை, கணவனின் கண் முன்னாள் மனைவியையும், பிள்ளைகளின் கண் முன்னாள் பெற்றெடுத்தத் தாயையும் கர்ப்பழித்தது முதல் மாதங்கி வெடித்துச் சிதறி செத்தது வரை எல்லாமும் சாட்சிகளோடு கல்லூரி மாணவத் தலைவனுக்கு நண்பர்களால் காண்பிக்கப்படுகிறது.

பிறகு அவன் மூலம் இதர கல்லூரி நண்பர்களையும் அழைத்துப் பேசி சாட்சி விவரங்கள் காண்பித்து, மெல்ல அது தமிழகத்தின் மொத்த கல்லூரிக்கும் பரவி, தமிழக இளைஞர் அணிக்குத் தெரியப் படுத்தப் பட்டு, அவர்கள் ஒருபுறம் படை சூழ, மறுபுறம் மடை உடைத்து வரும் வெள்ளத்தினைப் போல் கல்லூரி மாணவர்கள் திரண்டு வர; எல்லா ஏற்பாட்டினையும் வெளியே யாரையும் அறியவிடாமல் செய்துக் கொண்டு திடீரென வெடித்த வெடிகுண்டுப் போல ஓர்தினம் நிர்ணயிக்கப் பட்டு, அன்று தமிழகம் முழுக்க வெடிக்கிறதொரு ஈழத்திற்கானப் புரட்சி.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் பஞ்சினில் பரவிய தீ போலப் பரவி, காட்சிகள் ஆங்காங்கே ஒட்டப் பட்டு காண்போர் மனதையெல்லாம் கண்ணீரால் சுட்டுக் கதற வைத்தனர் இளைஞர் படையினர்.

இதுவரை எங்கோ இலங்கையில் சண்டை என்று கேட்டிருந்த மக்களுக்கும் மாணவர்களுக்கும், சண்டை ஈழத்தில் என்றும் அது தன் மக்களுக்கான இழப்பு மட்டுமே என்றும் அறிவிக்கப் பட -

தான் உண்டு; தன் படிப்புண்டு என்றிருந்த மாணவர்களுக்கு, குழந்தைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், அக்காத் தங்கைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், தாய்மார்கள் வயோதிகர்கள் இப்படி வன்முறைக்கும் வன்புணர்சிக்கும் ஆளாக்கப் பட்டுள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அறியப் பட கோபத்தை அடக்கமுடியவில்லை அவர்களால்.

மொத்தக் கல்லூரி மாணவகளும் ஓரிடத்தில் தன் சுய சிந்தனையோடு யார் தலைமையும் இன்றி ஒன்றுகூடி ஈழத்திற்கென ஒட்டுமொத்தமாய் கொடி பிடித்தனர். தீர்பு இங்கே நிர்ணயிக்கும் வரை படிப்பு கிடையாது கல்லூரி கிடையாது ஒன்றும் கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்தனர். மீறி எங்களுக்கான கோரிக்கை நிறைவேறா விட்டால் சாகவும் துணிவோம், அவசியப் பட்டால் சாகடிக்கவும் துணிவோமென்று மிரட்டாமல் தன் துணிவினை ஒர்ருமையினால் காட்டினர்.

தமிழக மூளை முடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம், எங்கு காணினும் ஈழத்து புகைப்படங்களும், கையின்றி காலின்றி தலையின்றி நிர்வாணப் படுத்தப் பட்டு, உடல் சள்ளடையாக்கப் பட்டு, குழந்தையின் தலை கூட சிதறடிக்கப் பட்டு பார்ப்பதற்கே உடம்பு கூசும் படங்களும், அங்கு நடந்த அத்தனை போர்க்குற்றத்திற்கும் ஆதாரம் காட்டும் விதமாகவும் ஒவ்வொன்றினையும் செய்தனர்.

மக்கள் ஆங்காங்கே நடந்ததை கண்டுத் துடித்து வெறி பிடித்து எழும் விதமாக அத்தனை இளைஞர்களும் தன்னாலியன்றதை செய்தனர். அவரவருக்கு இட்ட கட்டளைப் படி அவரவர் செயலாற்றினர். ஆண் பெண் பெரியவர் சின்னவர் என்று எல்லோருமாய் ஒன்று சேர்ந்து ஈழம் என்னும், தமிழர் என்னும் ஒரேயொரு ஒற்றைக் குடைக்குள் நின்றனர்.

பாவாடைச் சட்டை போட்ட பெண்குழந்தைகள் கூட தனித்தனியாக நின்று கோஷமெழுப்பி, பெரியோர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும் முழு பலமாக நின்றனர். எந்த புள்ளியிலும் அடங்கி விடாமல், யார் சொல்வதையும் கெட்டுவிடாமல், எதற்கும் பயந்தோ விட்டுக் கொடுத்தோ சுயநலம் கொண்டோவிடாமல் மொத்த கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்க; விஷயம் தீ போல் பரவி, கல்லூரி மூலமாக மட்டுமின்றி ஊடகங்கள் வாயிலாகவும் அண்டை மாநிலத்திற்கெல்லாம் தகவல் சென்றடைந்து, இரக்கப் பட்ட மனமெல்லாம், மனிதம் நிறைந்த மனமெல்லாம் 'களத்தில் இறங்கி ஈழத்திற்கென பரிந்துப் பேசியது.

ஒரு கட்டத்தில் காவலாளிகள் அரசு சார்ந்தவர்கள் கூட மாணவர்களின் நியாயம் புரிந்து, மக்களின் எழுச்சி புரிந்து 'அங்கு நடத்தப் பட்ட கொடுமைகள் அத்தனையும் அறிந்து; அந்த துரோகத்திற்கு ஒரு முடிவு கட்ட இதுவே சமயமென்றெண்ணி தன் கோபக் கண்களை மூடிக் கொள்ள; நாடு முழுக்க வெடிக்கிறதொரு ஈழப் புரட்சி; ஸ்தம்பித்து போகிறது இந்திய அரசு!

மாணவர்கள் மொத்தபேரும் ஒன்று திரண்டனர். இளைஞர்கள் ஒருவரும் எக்காரணம் கொண்டும் அசர வில்லை. விடயம் கட்டுப் படுத்த இயலாமல் போக சென்ரல் போலிஸ் வந்து தமிழகத்தில் குவிய ஆரம்பிக்கிறது. மொத்தபேரும் சத்திய சீலன் இருக்கும் கல்லூரியை முற்றுகை இடுகிறார்கள். ஆங்காங்கே 144 சட்டம் போடப் போவதாக அறிவிக்கப் படுகிறது.

என்றாலும், யாரால் எது நடக்கிறது, யார் இதை முதல் ஆரம்பித்தார்கள், யார் யார் கூட்டு, யார் இதற்கெல்லாம் மூலக் காரணமென்று ஒன்றுமே தெரிய வாய்ப்பின்றி மொத்த மாணவர்களும் இளைஞர்களும் ஆண்பெண் சமுகமென மொத்தப் பேரும் தமிழராய் மட்டும் கிளர்த்தெழுந்து நிற்க; வானம் நோக்கி முதல் எச்சரிக்கையாய் துப்பாக்கிக் கொண்டு சுடுகிறது மத்தியக் காவல் துறை..

-------------------------------------------------------------------------------------------

தொடரும்...

தொடரும்..

No comments: