படித்தோம் சொல்கின்றோம்: வி.எஸ். கணநாதன் எழுதிய சத்தியம் மீறியபோது செய்தி ஊடகவாழ்வின் ஊடாக வாசிப்பு அனுபவம் ! முருகபூபதி


நே
ற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும்.


செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில்,  தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில்  தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும்.

மெல்பனில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர் வி. எஸ். கணநாதன், இலங்கையில் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரும், குறிப்பிடத்தகுந்த குத்துவிளக்கு ஈழத்து திரைப்படத்தின் தயாரிப்பாளருமான  வி. எஸ். துரைராஜாவின் சகோதரர்.  இவரது மற்றும் ஒரு சகோதரர் பல் மருத்துவர் கருணாகரனின் துணைவியார் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எழுத்தாளர் தேவகியின் கணவர்.

கணநாதனின் மனைவி சகுந்தலா ஆங்கிலத்தில் கதைகளும்


நாவல்களும் எழுதியிருப்பவர்.

இவ்வாறு  கலை, இலக்கிய குடும்பப்பின்னணியில் வந்திருக்கும் கணநாதன், தீவிர வாசகர்.  அவர் இலங்கையில் வாழ்ந்த காலத்திலும், பின்னாளில் அங்கு போர்மேகங்கள் சூழ்ந்ததையடுத்து சென்னைக்கு குடும்பத்தினருடன் குடியேறியபின்னரும், அங்கிருந்து அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்து  இங்கு நிரந்தரமாகியதையடுத்தும் வாசிப்பு ஆர்வத்தை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள், வாசிப்பு அனுபவப்பகிர்வு  முதலான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கலை, இலக்கிய ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டவர்.

அருகிலிருக்கும் அன்புத்துணைவியோ, ஆங்கிலத்திலும் எழுதி கவனிக்கப்பட்ட படைப்பாளியாகியிருக்கும் சூழலில், தானும் இலக்கியப்பிரதிகள் எழுதிப்பார்க்கலாம் என்று முயன்றவர்தான்  திரு. கணநாதன்.

தமிழ் சமூகத்தில்  மாமன் -- மாமியார்   மருமகள் – மருமகன் உறவு நெருடல்களையும் ஊடல், கூடல், உரசலையும் கொண்டது. மாமியார் – மாமனார் மெச்சும் மருமகன் -  மருமகள்  பாக்கியசாலிகள்தான்.

தமிழ் சமூகத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையில் அவ்வாறு பாக்கியம் பெற்றவர்களின் கதைகள் ஏராளம்.

மனைவியின் தாயாரை மாமியாராக மாத்திரம் பார்க்காமல், தாயாக பார்த்து நேசித்தவர் கணநாதன். அதனால், மாமியார்


சந்தித்த  ஈழப்போர்க்கால அவலங்களையும் படகுமூலம் ஆழ்கடல் கடந்து  இந்தியக்கரைக்குச்சென்று, சென்னைக்கு வந்து சேர்ந்த கதையையும் கணநாதன், சத்தியம் மீறியபோது என்ற நெடுங்கதையின் வாயிலாக சொல்கிறார்.

உலகெங்கும் நிகழ்ந்த போரின் கொடுமைகளும், அகதியாக அலைந்துழன்றுகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளும் படைப்பு  இலக்கியமாகிக்கொண்டிருக்கின்றன.


கணநாதன் அவர்களது இந்தக்  கதைத்தொகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது, எனது ஊடக வாழ்வில் நான் எழுதிய போர்க்காலச்செய்திகள்தான் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டிருந்தன.

ஈழப்போர்க்காலம் குறித்து நேரடி அனுபவம் இல்லாத எனக்கு,


தென்னிலங்கை கலவர காலத்து அனுபவங்கள் நிறையவிருந்தன.  1983 இல் தென்னிலங்கை கலவரத்துக்கு தூபமிட்ட யாழ். திருநெல்வேலி தாக்குதல் சம்பவத்துடன்  தொடங்கிய ஈழப்போர், தமிழ் ஆயுதக்குழுக்களின் வளர்ச்சிக்கும்  அவை பேரியக்கங்களாக வளர்வதற்கும்,
 பின்னாளில் சகோதரப்படுகொலைகளுடனும், வடபுலத்திலிருந்து இஸ்லாமிய மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டது முதல், தென்மராட்சியை நோக்கிய பாரிய இடப்பெயர்வு, பதுங்கு குழி வாழ்வு, போரும் சமாதனமும் என்ற சடுகுடு விளையாட்டுடன் முற்றுப்பெறாமல்,  இந்தியா மற்றும் மேற்குலகத்தின் தலையீட்டுடன்
2009 மே மாதம்  முடிவுக்கு வந்த வரலாற்றை செய்திகளாக  எழுதியும்,  படித்தும் வந்திருக்கின்றமையால், கணநாதனின் கதைத்தொகுதி எனது வாசிப்பு அனுபவத்திற்கு  நெருக்கமாகியது.

முதலில் வரும்  கதையில் அவரது மாமியாரே கதைசொல்லியாக விளங்குவதையும் அவரது வாய்மொழிக்கூற்றாக கதை நகர்த்தப்படுவதையும் காணமுடிகிறது.


அந்த அம்மா, போர்ச்சூழலில் சிக்கியபின்னர், அங்கிருந்து தப்பி கடல் மார்க்கத்தை தேர்ந்தெடுத்து, குனிந்து பார்த்தால் ஆழ்கடல் நிமிர்ந்து பார்த்தால் பரந்துவிரியும் இந்து சமுத்திரம். தலையை உயர்த்திப்பார்த்தால் வானில் மின்னும் நட்சத்திரக்குடும்பங்கள்.  அவர் ஏனையோருடன் பயணித்த படகு முதலில் அனைலைதீவு  சில மணிநேர Transit ஆகிவிடுகிறது.

அங்கே கடல்நீரில் முகம் கழுவும் தருணத்தில் கைவசம் வைத்திருந்த சொற்ப பணத்தையும் தொலைத்துவிட்டு பரிதவித்து நின்றவேளையில் உதவமுன்வரும் கத்தோலிக்க பாதிரியார், சென்னை வந்தபின்னர்  தி. நகரில் மகளிடம் போய்ச்சேருவதற்கு வழிகாண்பித்த ஆட்டோ சாரதி, இவர்களுடன், கடல்மார்க்கமாக அழைத்துவந்து சேர்த்த படகோட்டி…  இவர்களில் யார் உங்களுக்கு பெரிய உதவி செய்தவர்….? என்று கேட்கும் பேத்திமாரிடம் அந்த அம்மம்மா சொல்லும் பதில் கதையில் ஒரு முத்தாய்ப்பு.

படகில் ஏறுமுன்னர் தனக்கு குளிர்தாங்கும் அங்கியை                             ( Combat Fatigue ) த்தந்த ஒரு பெயர் தெரியாத போராளிதான் என்று சொல்கிறார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள இதர ஐந்து கதைகளும் தமிழ்மக்கள்  போர்க்காலங்களிலும் இடப்பெயர்வு – புலப்பெயர்வு வாழ்வுக்கோலங்களிலும் கற்றதையும்


பெற்றதையும் பேசுகின்றன.

நெருக்கடியின் நிமித்தம் தப்பிச்சென்றவர்களின் கதைகள் மட்டுமல்ல,  உஞ்சு என்ற செல்லப்பிராணிக்காகவே நாட்டை விட்டு வெளியேறாமல் ஊரோடு தங்கிவிடும் மாந்தரைப்பற்றியும் பேசுகிறது.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற மூதுரைக்கு வாழ்வியலில் அர்த்தம் சொல்கிறது.

இந்நூலில்  கணநாதனின் படைப்புகள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை தேர்ந்த வாசகி திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்  பதிவுசெய்துள்ளார்.

அவரது மதிப்பீடு நூலுக்கு அணிந்துரையாகவே அமைந்துள்ளது.

இம்மாதம்  கடந்த 03 ஆம் திகதி  மாலை  இந்நூலின் வெளியீட்டு அரங்கு மெல்பனில் Glen Waverley சமூகமண்டபத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.


மண்டபம் திரண்ட மக்கள் மத்தியில் கணநாதன் – சகுந்தலா தம்பதியர் பேச்சாளர்களுக்கு மலர்க்கொத்து வழங்கியும் இலக்கிய ஆர்வலர்களை அன்பு கனிந்த முகத்துடனும் வரவேற்றனர்.

கலாநிதி மணிவண்ணன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் கலாநிதி  துரை.


விநாயகலிங்கம், திருமதி புஷ்பா சிவபாலன் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன்.

கணநாதனிடம் மேலும் சிறந்த கதைகளை வெளிப்படுத்தத்தக்க வாழ்வியல் அனுபவங்கள் இருக்கலாம். அவர் அவற்றையும் படைப்பிலக்கியமாக்குவார் என நம்புகின்றோம்.

எழுத்தாளர்கள் கணநாதன் – சகுந்தலா  தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

---0---

letchumananm@gmail.com

 

No comments: