ஒருவருடைய வாழ்வியல் சார்ந்த விழுமியங்களையும், அவரைப்பற்றியும் அறிய வேண்டுமானால் அவருடைய நேரடியான நடை, உடை, பழக்கவழக்கங்களைமட்டுமன்றி அவர் சார்ந்த குடும்பத் தலைமுறையையும் சரிவர அறிந்கொள்ள வேண்டும்.
அதற்காகஅந்தஒருவர் சார்ந்த குடும்பப் பின்னணியுடன் கணிப்பது மேலும் அவருடைய பெருமைக்கு அணிசேர்ப்பதாக அமையும். அமரர் செல்வத்துரை பேரின்பநாயகம் அவர்களின் வாழ்க்கையினையும் அவ்வாறு இணைத்துப் பார்ப்பதன்மூலம் அவருடைய வாழ்வின் சிறப்பம்சங்களை யும் அறிந்துகொள்ளலாம்.
சட்டத்தரணி செல்வத்துரை பேரின்பநாயகம் கடந்த மார்ச்
மாதம் 02 ஆம் திகதி வடபுலத்தில் வதிரியில் மறைந்தார்.
ஈழவளநாட்டின் தலையாக திகழ்வது வடமராட்சி. வடமராட்சியில் நீண்ட பாரம்பரியத்தையும் நயத்தக்க நாகரீகத்தையும் கொண்ட வதிரிக்கிராமத்தின் மிகவும் பிரபலமான சமூக சேவையாளரும் ஆசிரியருமான அமரர் ஆ. ம. செல்வத்துரை - மீனாட்சியம்மா தம்பதியருக்கு 1937 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 28 ஆம் திகதி பேரின்பநாயகம் அவர்கள் பிறந்தார்.
வதிரியில் பூவற்கரையில் அண்ணமார் வழிபாடு இருந்தது. அப்போது அந்த அண்ணமார் பிள்ளையாராக மாறுவார் என எழுதியவர் கவிஞர் ஆழ்வார். ஆழ்வாரின் மகன் மயிலு சிறந்த ஓவியர். மயிலுவின் மகன் செல்லத்துரையின் சமூக சேவையைப் பாராட்டி "சமூகஜோதி" எனும் கெளரவம் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் மகன் பேரின்பநாயகம் எமது சமூகத்தின் முதலாவது சட்டத்தரணி.
அமரர் பேரின்பநாயகம் சட்டப் புத்தகங்களை மட்டும் படிக்கவில்லை. கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம், சமூகம், அரசியல் போன்ற பல்வேறு புத்தகங்கள் அவரது வீட்டு வாசிகசாலையில் உள்ளன. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் அமரர் பேரின்பநாயகம் விட்டுவைக்கவில்லை.
யாழ்ப்பாணத்திலும்,கொழும்பிலும் நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொள்வார்.
தான் ரசித்தவற்றை மற்றவர்களும் ரசிக்க வேன்டும் என்ற விருப்பம் அவரிடம் மேலோங்கி இருந்தது. இன்று இலங்கையில் புகழ் பெற்ற சங்கீதபூசணங்களாக வலம் வந்து வரலாறு படைத்த ஏ.கே.கருணாகரன், பத்மலிங்கம், திலகநாயகம் போல் போன்றோரை தலைநகரில் அறிமுகம் செய்து அவர்களுடைய இசைப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.
இவரது தந்தையாரான அமரர் ஆ.ம.செல்வத்துரை அவர்கள் தான் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த பொழுது பல பிரமுகர்களை எல்லாம் சந்திக்கவேண்டி இருந்தது. அச்சமயம் அவருக்கு ஆங்கில அறிவு இல்லாமல் இருந்ததை அவர் ஒரு குறையாகவே கருதியிருந்தார். தனக்கு ஏற்பட்ட குறை தன் மகனுக்கும் ஏற்படக்கூடாதென்ற நோக்கத்தில் பேரின்பநாயகம் ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெறவேண்டுமென நினைத்தார்.
தேவரையாளி இந்துக் கல்லூரியில் முதலாம் வகுப்பு படித்த மகன் பேரின்பநாயகத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து , பின்னர் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும், யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் அங்கில மொழியிலேயே உயர் கல்வியைப் பெற வைத்தார்.
பின்னர் சிலகாலம் கொழும்பு அக்குவைனாஸ் உயர்கல்வி நிறுவனத்திலும் பேரின்பநாயம் கல்விபயின்றார்.
பேரின்பநாயகத்தின் சகோதரர் அமரர் ஆ.ம.வடிவேல் அவர்கள் எமது கிராமத்தில் பாதணி உற்பத்தியை உலகுக்கு அறிமுகம்
செய்தவர்.
பாதணி கூட்டுறவு தொழிற்சாலையை ஆரம்பித்து பருத்தித்திறைக்கு அருகே இருந்து பாதணியை காலிவரை கொண்டு சென்றவர். அவர் எழுதிய தங்கச்சுரங்கம் எனும் புத்தகம் வதிரி கிராமத்தில் பொருளாதார வளர்ச்சியை எடுத்தியம்பியது.
பாதணி கூட்டுறவுத் தொழிற்சாலையின் முகாமையாளராக அமரர் ஆ.ம. வடிவேல் கடமையாற்றியதால் "மனேச்சர்" என அவர் அழைக்கப்பட்டார். மிகச் சிறந்த பேச்சாளரான அமரர் வடிவேல் அன்றைய அரசியல் கூட்டங்களின் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்தார்.
அமரர் பேரின்நாயகம் சட்டத்தரணியாகி சமூகசேவை ஆற்வேண்டுமென்பதே அவரது தகப்பனாரின் குறிக்கோளாக இருந்தது. தகப்பனின் விருப்பத்தை அமரர் நிறைவேற்றினார் அமரர் அவர்கள் 1965 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1968 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக (அக்காலத்தில் Proctor S.C. andNotaryPublic) சத்தியப்பிரமாணம் செய்தார்.
இவர் சட்டக்கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில் இ.சிறீனிவாசன், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன், பரராஜசிங்கம், அமரதுங்க போன்ற பலர் நல்ல நண்பகளாகக் கிடைத்தார்கள். அவர்களின் நட்பு இறுதிவரை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தபின்னர் சிறிது காலம் கொழும்பில் பிரபல சட்டதரணிகளான திருவாளர்கள் சார்ள்ஸ் வேதக்கன், சம்பந்தன் ஆகியோருக்கு கனிஷ்ட (Junior) சட்டத்தரணியாக இணைந்து தொழிலிலுள்ள நெளிவு சுளிவுகளையெலல்லாம் கற்றுக்கொண்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலைக்காகவும் தமிழ் அரசியல் தலவர்கள் மீது தொடுக்கப்பட்ட அரசியல் வழக்குகளிலும் ஆஜராகினார். இலங்கை வரலாற்றில் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் ஆஜரான சட்டத்தரணிகளில் அமரரும் ஒருவர்.
இவர் கல்விகற்ற காலத்தில் இருந்தே ஒரு சிறந்த கர்நாடக சங்கீத ரசிகனாகவும்; இருந்தார். அவரால் பண்ணோடு பாடமுடியாவிட்டாலும் சங்கீதத்தில் உள்ள விடயங்களை நன்கு அறிந்து நல்ல விமர்சகராகவும், இருந்தார். இதன் காரணமாக அக்காலத்தில் கொழும்பில் மிகவும் பிரபலமான தியாகராஜ கான சமாஜத்தில் முக்கிய உறுப்பினாக இருந்து வருடாந்தம் தியாகராஜ உற்சவம் நடைபெறும் காலங்களில் பெரும் தொண்டாற்றினார்.
இதன் காரணமாக அக்காலத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த இசைக் கலைஞர்களான குருவாயூர் கே.கே. அச்சுதன் (கடம்), கணேச சர்மா (மிருதங்கம், கெஞ்சிரா) ஈழநல்லூர் ரி.வி. பிச்யைப்பா (வயலின்) போன்ற இசைக் கலைஞர்களின் நட்பும் கிடைத்தது.
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தனது இசைக்குழுவினருடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபொழுது யாழ்ப்பாணம் பழைய நகரசபை மண்டபத்தில் ஒரு பெரும் இசைக் கச்சேரியை தனியாளாக முன்னின்று நடத்திய பெருமை அமரர் அவர்களையே சாரும். மேலும் அக்காலத்தில் நா.சுந்தரலிங்கம் அவர்களின் நெறியாள்கையில் அமரர் அவர்களும் சிறீனிவாசன் அவர்களும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளனர். சட்டத்தரணிகள் கொழும்பில் நடத்தியஇசை நிகழ்ச்சியில் அமரர் தம்பூராக் கலைஞராகக் கலந்துகொண்டார்
கொழும்பில் இருந்து வதிரிக்கு வரும்போது இங்குள்ள இசை ஆர்வலர்களின் வீடுதேடிச்சென்று அளவளாவுவார். அமரர். டொக்டர் சபாநாயகம், அமரர் புவனேந்திரன், திரு சிவபாதராசா போன்றவர்களுடன் இசை பற்றி உரையாடுவார்.
கொழும்பில் நடைபெறும் இசை, நடன அரங்கேற்றங்கள் , விழாக்கள் போன்றவற்றை ரசித்து பேரின்பநாயகம் எழுதிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகின.
வதிரி, பூவற்கரைப் பிள்ளையார், பொலிகண்டி கந்தவன கோவில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆகியவற்றின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். சூரன், சித்திரத்தேருக்கான வடம், ஆளுயர குத்துவிளக்குகள் போன்றவற்றை பூவற்கரை பிள்ளையாருக்கு வழங்கியவர்.
குறும்படப் போட்டி, வதிரி ஒளிர்கிறது ஆகியவற்றை நடத்திய அட்சரம் அறக்கட்டளையின் பிரதம ஆலோசகர்.
1969 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29 ஆம் திகதி தனது சொந்த மாமியாரின் புதல்வி சந்திரலேகா அவர்களை திருமணம் செய்தார்.
சைவப்பெரியார் சூரனின் வழித்தடத்தில் காந்தீயத்தைக் கைக்கொண்டு இவர் தந்தை செல்லத்துரை புலால் உணவைத்தவிர்த்தார் அவர் மனைவி மீனாட்சியம்மாவும் அவருடைய வழியைப் பின்பற்றினார். அதனால் அவர்களின் வழியில் பேரின்பநாயகமும் அவரது மனைவி சந்திரலேகாவும் பிள்ளைகள் மீரா , மயூரன் , மதுரன் ஆகியோரும் சிவதீட்சை பெற்று சைவர்களாயினர்.
இம்மூவரும் இசைத்துறையில் பயின்றார்கள். மூத்த மகள் திருமதி மங்களேஸ்வரன் மீரா, பிரன்ஸ் நாட்டில் வசிக்கிறார். வட இலங்கை சங்கீத சபை பரீட்சையில் சித்தியடைந்து "பரதகலா" வித்தகர் பட்டம் பெற்றார். வீரமணி ஐயரின் மாணவி. இவர் எழுதிய "நிருத்தியம்" எனும் புத்தகம் வடமாகாண சாகித்திய விருது பெற்றது. பிரான்ஸில் "நிருத்தியாலயம்" எனும் கலைக்கல்லூரியை இயக்குகிறார்.
இரண்டாவது மகள் திருமதி முரளிபாரதி மதுரா, யாழ்.
பல்கலைக்கழகத்தில் பதவிநிலை முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றுகிறார். நடனத்தில் தரம் ஐந்தைப் பூர்த்தி செய்தவர்
மகன் மயூரன் திருகோணமலை தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.மிருதங்கம் தரம் மூன்று வரை பயின்றவர்
அமரர் பேரின்பநாயகம் சட்டத்தரணியாகவும், சமூக சேவையாளனாகவும், சங்கீத ரசிகனாகவும் பல சாதனைகளைச் செய்துள்ளார்
பேரின்பநாயகம் அவர்கள் தனது தந்தையாரின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் சமூகசேவையாளனாக வாழ்ந்து கடந்த பங்குனி மாதம் 2 ஆம் திகதி தனது 84 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்தார்.
---0---
No comments:
Post a Comment