இயேசுபிரான் கீர்த்தனைகள்


இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்


1)

அவதாரம் செய்தார் அம்மா - இயேசுபிரான்


அவதாரம் செய்தார் அம்மா

தவமான பெத்லகாமில் இதமான சுபநேரம்

அவதாரம் செய்தார் அம்மா

                                    (அவதாரம்)

 

புவனம் உய்ய அன்னை மேரி பூரிப்பில்

இன்பங் கொள்ள

பவவினையை அவித்தெமக்குப் பாவமன்னிப்(பு)

அருளிக் காக்க

                                    (அவதாரம்)

பரிசுத்த ஆவிவந்து கரிசனையோ(டு) ஆசி நல்க மரியாளும் மகிழச் சூசை மைந்தன்முகம் ஒளியிற் கால புரியாத புதிராய் விண்மீன் வழிகாட்ட மாந்தர் நாடித் தரிசித்தே வணங்கி நிற்கச் சங்கைமிகு பாலனாக

                                         அவதாரம்)

 

 

 

2)

செந்தாமரைப் பாதங்;கள் கன்றியதோ? அந்தோ திருத்தோள்கள் செங்குருதி சிந்தியதோ?

                          (செந்தாமரைப்)

நந்தா விளக்கான நாயகமாம் இயேசு பிரான் நொந்து நொந்து மெத்த உள்ளம் வெந்துநின்று சிலுவை தூக்க

                             (செந்தாமரைப்)

சிந்தாமணி அன்னதோர் திருக்குமரன் மேரி பெற்ற சுந்தரமதி முகத்தோன் தூயஆவி சுகஞ்சேர்ப்போன் வந்தாதரித் தேஎம்மை எந்தாய்எனக் காப்போன் சந்ததமும் பாவந்தீர மன்னித்தருள் தேவதூதன்

                             (செந்தாமரைப்)

 

3)

மலைப்பிர சங்கம் செய்த மாமுதலே -- எம்மை நிலைப்படுத்தி நெறிப்படுத்தும் நிரந்தரனே இயேசு பாலா

                               (மலைப்பிர)

தலைப்படுத்திப் பாரில் உள்ளோர்

தவறிழைத்தால் நல்வழியைப்

புலபடுத்திப் பாவமெலாம்

போக்கியே மன்னித் தருளும்

                               (மலைப்பிர)

 

தேடிநீயும் ஆவினங்கள் தொழுவமதை நாடி ஆயர் பாடிமகிழ்ந்(து) ஆர்ப்பரிக்கப் பரமலோகத் தேவர் ஆட கூடிடுநல் ஓரைதனில் கூசும்ஒளி யோடு வானம் சூடிடவோர் நட்சத்திரம் தோன்றிநிற்க உதித்த தேவா!

                               (மலைப்பிர)


No comments: