மல்லிகை ஜீவாவின் வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் --- அங்கம் 10 சிவன் - நக்கீரன் முதல் தொடரும் எழுத்தாளர் முரண்பாடு ! காடு வரை பிள்ளை , கடைசி வரை யாரோ…? முருகபூபதி


 

                                                                       ழுத்தாளர்களுக்கிடையில் 


நட்பும், பகைமையும், ஊடலும்- கூடலும் உரசலும் தவிர்க்கமுடியாத அம்சங்கள்.

கொள்கை , கருத்தியல்  ரீதியாக உருவாகும் முரண்பாடுகளுக்கும் காழ்ப்புணர்வின் நிமித்தம் தோன்றும் பகைமைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

 

எழுத்தாளர்களுக்கிடையே இந்த முரண்பாடுகளின் தோற்றுவாய் சிவபெருமானும், நக்கீரனுக்கிடையில் வந்த


வாதம்தான்.

 

பாண்டிய மன்னனின் மனைவியின்  கூந்தலின் மணம் இயற்கையா..? செயற்கையா..? என்பதில் தொடங்கி சிவனின் வன்முறையில் ( நெற்றிக்கண்ணால் ) முடிந்த கதை.

 

 “ பிறர்  மனைவியின் கூந்தலை முகர்ந்து பார்க்கும் பழக்கம் தனக்கில்லை   “ என்று புலவன் நக்கீரன்  திருப்பிக் கேட்டிருந்தால், கதையே வேறுவிதமாக மாறியிருக்கும் !

 

எங்கள் எழுத்தாளர்களின்  மத்தியில் தோன்றிய கருத்து முரண்பாடுகளுக்கு சித்தாந்தங்களும் கருத்தியல்களும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளுமே  பிரதான காரணமாக அமைந்தன !

 

மல்லிகை ஜீவா, சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தினுள்ளேயே  அவருக்கும் ஒரு சிலருக்கும் இடையில்  கோபதாபங்கள் நீடித்திருக்கிறது.

 

கொழும்பில் C. T. O. வில் பணியாற்றிய தோழர் பரராஜசிங்கம் நயினாதீவைச்சேர்ந்தவர்.  மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தவர். தோழர் வி. பொன்னம்பலம்,  பின்னாளில் தினகரன் ஆசிரியரான சிவா. சுப்பிரமணியம் ஆகியோரின் நெருங்கிய சகா.

 


பரராஜசிங்கமும்,  மகாவலி அபிவிருத்தி அமைச்சில் பணியாற்றிய சிவா. சுப்பிரமணியமும்  புறக்கோட்டையில் வடபுலத்து வர்த்தகரின்  மொத்த விற்பனை நிலையத்தின் மேல்மாடியில் தங்கியிருந்து கடமைக்கு சென்று வந்தவர்கள்.

 

பரராஜசிங்கத்தை, நாம் பரா என்றும் சிவாசுப்பிரமணியத்தை சிவா என்றும் அழைப்போம். தேழர் வி. பொன்னம்பலம் வி.பி. என அழைக்கப்படுவார்.

 

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வநாயகத்தைத எதிர்த்து போட்டியிட்ட  தோழர் வி.பி. க்கு ஆதரவாக நடந்த பிரசாரக்கூட்டங்களில் இவர்களுடன் மல்லிகை ஜீவாவும் தேர்தல் பிரசாரக்களத்தில் இறங்கினார்.

 

தமிழரசுக்கட்சியினர், அந்தத் தேர்தலில் தோழர் வி. பி. கட்டுப்பணம் இழக்கவேண்டும் என்பதற்காக தீவிரமாக பிரசாரம் செய்தனர்.

எனினும்,  வி. பி. கட்டுப்பணத்தை இழக்காமல் கணிசமான


வாக்குகளை அந்த இடைத்தேர்தலில் பெற்றார்.

 

பரராஜசிங்கம் எங்கள் ஊரில் நடந்த மல்லிகை பத்தாவது ஆண்டு மலர் அறிமுக நிகழ்விலும் கலந்துகொண்டவர்.  இவருடன் அன்றைய கூட்டத்தில் கவிஞர் முருகையனும் பேசினார்.

 

மல்லிகையில் வெளிவரும் ஜீவாவின் ஆசிரியத்தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளிவரவேண்டும் என்ற யோசனையை அன்றைய தினம் பரராஜசிங்கம் தெரிவித்தார்.

 

அதன்பின்னர்  சில ஆண்டுகள் கடந்து அந்த நூல் தலைப்பூக்கள் என்ற பெயரில் வெளிவந்தது.

 

1974 இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் உருவானபோது,  அதன் தலைவராக பேராசிரியர் கைலாசபதி நியமனமானது தீவிர தமிழ்த்தேசியவாதிகளுக்கு திருப்தி தரவில்லை.

 

யாழ்ப்பாணம் பரமேஸ்வராக்கல்லூரி, அவ்வாறு பல்கலைக்கழக வளாகமாக மாற்றப்பட்டதை கண்டிக்கும் தோரணையில் கோவை மகேசன் சுதந்திரன் ஏட்டிலும் விஷம் கக்கினார்.

 


வித்தியானந்தனின் ஆதரவாளர்கள்,   “ தலை இருக்க வால் ஆடிவிட்டது   “ என்றும் விமர்சித்தனர்.  வித்தியானந்தனின் மாணவரான கைலாசபதி அந்தப் பதவியைப்பெற்றதை அவர்களினால் பொறுக்கமுடியவில்லை.

 

ஆனால், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் வரவேண்டும் என்று தொடர்ந்து ஆசிரியத்தலையங்கம் வாயிலாக எழுதிய மல்லிகை ஜீவா, வந்த பின்னரும் வரவேற்று எழுதினார்.

 

அவரது சந்திப்பு மையமாகவும் பல்கலைக்கழகம் திகழ்ந்தது.

 

ஜீவா,  இரண்டு பேராசிரியர்களையும் நேசித்தார்.  அரசியல் அலைப்பறைகளுக்குள் சிக்காமல், அவர்கள் இருவரிடமும்


அன்பு பராட்டினார்.  1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைலாசபதி கொழும்பில் திடீரென மறைந்ததும் ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார்.

 

பின்னாளில் கைலாசபதியின் பன்முக ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் எங்கள் நினைவுகளில் கைலாசபதி என்ற தொகுப்பு நூலையும் மல்லிகைப்பந்தல் சார்பாக வெளியிட்டார்.

 

அதில் முதலாவது கட்டுரை பேராசிரியர் வித்தியானந்தனுடையது.

 

இது இவ்விதமிருக்க,  தனது அரசியல் அணியிலிருந்த தோழர்கள் வி. பி., பரராஜசிங்கம், சிவா. சுப்பிரமணியம் ஆகியோரிடத்தில் ஜீவா பிற்காலங்களில் முகம்கொடுத்தும் பேசுவதை முற்றாக தவிர்த்தார்.

 

ஶ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்த தோழர் பீட்டர்கெனமன், தமது அமைச்சிற்கு முன்பாக அமைந்த C. T. O. வில் பணியாற்றிய பரராஜசிங்கத்தை நேரில் அழைத்து, யாழ்ப்பாணம் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபன கிளைக்கு முகாமையாளராக்கும் நியமனம் கடிதம் வழங்கினார்.

 


பராவின் பணி ,  தபால், தந்தி அமைச்சர் செல்லையா


குமாரசூரியரின் கீழ் வருகிறது.  தனது அனுமதி இல்லாமல் பீட்டர்கெனமன் எவ்வாறு பராவுக்கு மற்றும் ஒரு புதிய நியமனம் கொடுக்கமுடியும் என்ற கோபத்தில் சூரியர் பராவை யாழ்ப்பாணம் செல்வதற்கு  அனுமதிக்கவில்லை.

 

இந்த இழுபறியினால், பரா மனமுடைந்திருந்தார்.  அவருக்கு ஊரோடு உத்தியோகம் கிடைக்கவிருந்தது. 

 

அதனால் பராவிடம் சில நாட்கள் குடியிருந்த விரக்தியை பார்த்த, மல்லிகை ஜீவாவுக்கு சற்று கோபமும் வந்தது.

 “பதவிச்சுகம் தேடியா நாம் இந்த அரசியலுக்கு வந்தோம். கிடைத்தால் கிடைக்கட்டும் கிடைக்காவிட்டால்,  தலையா முழுகிவிடும்  “ என்று பேசிவிட்டார். அத்துடன்  எங்கள் இடதுசாரி அரசியல் மக்கள் தொண்டில்தான் கலந்திருக்கிறது.  அரச பதவிகளில் அல்ல  “ என்றும் சொன்னார்.

 

பின்னர் எப்படியோ,  பராவுக்கு யாழ்ப்பாணத்தில் அவரும் விரும்பிய ( B. M. C. Manager ) முகாமையாளர் நியமனம் கிடைத்தது.

 

அக்காலப்பகுதியில்  சிறுபான்மை இனத்தைச்சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்  அரச நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகளில், அமைச்சர்கள் பீட்டர், சூரியர் , பதியூதீன் ஆகியோருக்கிடையில் கருத்தொற்றுமை இருக்கவில்லை என்பதை ஜீவா உட்பட  நாம் நன்கு அறிந்திருந்தோம்.

 

பீட்டர், சூரியர் ஆகியோரின் அரசியல் அணுகுமுறையினால் அதிருப்பதியடைந்த தோழர் வி. பொன்னம்பலம்  செந்தமிழர் இயக்கம் என்ற புதிய அமைப்பினை உருவாக்கினார்.  அதில் பராவும், சிவாவும் முக்கிய பேச்சாளர்களாக மாறினர்.

 

இதனால், கோபமுற்ற ஜீவா, இம்மூவருடனும் முகம்கொடுத்து பேசுவதையும் முற்றாக தவிர்த்தார். சிவா தவிர்ந்து ஏனைய இருவருடனும் ஜீவா இறுதிவரையில் பேசவேயில்லை.

 

காலம் மாறியது. வி.பி,   அமிர்தலிங்கத்துடன் நெருக்கமாகி தமிழர் விடுதலைக்கூட்டணியில் ஐக்கியமானார். பரராஜசிங்கம் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். காலப்போக்கில் வி.பி.யும் கனடா சென்றார்.

 

தீவிர இடதுசாரி அரசியல் பேசிய பரராஜசிங்கம் கனடாவில் துறவியாக  மாறி காவியுடுத்து ஆசிரமம் அமைத்து ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டு, சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது மறைந்தார்.

 

சிவா. சுப்பிரமணியம் அரசியல் பத்தி எழுத்துக்களை அந்திம காலத்தில் எழுதிக்கொண்டிருந்துவிட்டு, யாழ்ப்பாணம் கோண்டாவிலில் மறைந்தார்.

 

வி.பி,  கனடாவில் ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவரங்கில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு வந்து மேடையிலேயே உயிர் துறந்தார்.

 

எஸ்.பொ.வும் ஜீவாவும்

 

ஜீவா, மல்லிகை இதழை ஆரம்பிக்க முன்பிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர்.  இவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் கே. டானியலும் எழுதினார்.

 

இம்மூவரதும் கதைகள் அக்காலத்தில் சுதந்திரன் இதழில் வெளிவந்தன.  மூவரும் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டனர்.

 

இவர்கள் மூவரும் இடதுசாரிச்சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தமையால்,  எஸ். பொ.,  புரட்சிப்பித்தன் என்ற புனைபெயரிலும் டானியல்  புரட்சி தாசன் என்ற பெயரிலும் ஜீவா புரட்சி மோகன் என்ற பெயரிலும் அவரவர் எழுத்துப்பிரதிகளில் வலம் வந்தனர்.  சர்வதேச அரங்கில் இந்தப் புரட்சிக்கு வந்த சோதனையால் ( ?) , மூவரும் வெவ்வேறு அணிக்குள் ஐக்கியமானார்கள்.

 

இம்மூவரில் எஸ்.பொ. மாத்திரம் மெத்தப்படித்தவர். சென்னை சென்று தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்றுத் திரும்பி ஆசிரியராக அரச உத்தியோகம் பார்த்தவர்.

 

டானியல் பல சிறிய தொழில்களையெல்லாம்  செய்துவிட்டு, இறுதியில் யாழ். வெலிங்டன் தியேட்டருக்கு அருகில் ஸ்டார் கராஜ் என்ற நிறுவனத்தை சொந்தமாக நடத்தினார்.

 

ஜீவா, கஸ்தூரியார்வீதியில் தமது தந்தையாரின் ஜோசப் சிகையலங்கார நிலையத்தில்  தனது வேலையை கைவிட்டு, முழு நேர இதழாசிரியரானார்.

 

இம்மூவரும் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில், எஸ்.பொ. அதிகம் படித்திருந்தமையால்,  ஜீவா – டானியலின் கதைகளில் எழுத்துப்பிழைகளை திருத்துவதிலும் செம்மைப்படுத்துவதிலும் உதவியிருக்கிறார்.

 

எஸ்.பொ. வும் தனது படைப்புகளை அச்சில் பார்ப்பதற்கு முன்னர் இளம்பிறை ரஃமானிடம் காண்பிப்பது வழக்கம்.   பரஸ்பரம் நேசிக்கும் இலக்கிய நண்பர்கள் தமது படைப்புகள் வெளிவருமுன்னர் ஒருவருக்கொருவர் காண்பித்து கருத்துக்கேட்பதும்,  மேலும் செம்மைப்படுத்துவதும் இயல்பு.

 

அத்தகைய நம்பிக்கையுடன்தான் ஜீவாவும் டானியலும் தமது எழுத்துக்களை சக நண்பரான எஸ்.பொ.விடம் காண்பித்துள்ளனர்.

 

மனிதர்களுக்கு  அவரவர் இயல்புகள்தான் அடிப்படை அழகு.  அந்த அழகினை வெளிப்படுத்த நேர்ந்தமையால், இம்மூவருக்கும் மத்தியில் ஊடலும், கூடலும் உரசலும் நேர்ந்தது.

 

எஸ்.பொ. எப்பொழுதும் அதிரடியாக கருத்துச்சொல்பவர். பின்விளைவுகளைப்பற்றி யோசிக்கமாட்டார்.

 

சில நேர்காணல்களில், தான் பலருக்கும் எழுதிக்கொடுத்ததாகவும், அவர்களில் ஜீவாவும் டானியலும்  அடக்கம் என்றும், அத்துடன் தான் பல புனைபெயர்களில் எழுதியிருப்பதாகவும் அவற்றில் டொமினிக் ஜீவா, டானியல் முதலான பெயர்களும் அடக்கம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்.

 

இதனால் ஜீவா வெகுண்டு, அந்த நேர்காணல்களை எழுதிய ஊடகவியலாளர்களுடனும் கோபித்துக்கொண்டு சிறிது காலம் முகம்கொடுத்தும் பேசவில்லை.

 

ஆனால், டானியல்  கோபப்படாமல் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.

 

 “ தான் நீண்ட  காலமாக எஸ்.பொ. வை காணவேயில்லை. இன்றும் நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இப்பொழுதும் பொன்னுத்துரையா எனக்கு எழுதித்தருகிறார்..?  “ என டானியல் கேட்டார்.

 

பல இலக்கியவாதிகளினதும்  முகங்களும்  மல்லிகை முகப்பில் வெளிவந்தாலும், மிகவும் காலம் தாழ்த்தியே எஸ்.பொ. வின் படம் மல்லிகை அட்டையில் வந்தது.

 

எஸ்.பொ.வுக்கும் ஜீவாவுக்கும் மத்தியில் கூடல் வரும்போது, ஜீவா – எஸ்.பொ. வுக்கு தேநீரும் சிகரட்டும் வாங்கிக்கொடுப்பார்.

 

எஸ்.பொ.வின் மூத்த புதல்வன் ( மருத்துவர் ) அநுரா மீது ஜீவா மிகுந்த நேசம்கொண்டிருந்தவர்.

சென்னையில் அநுராவின் ஏற்பாட்டில் மித்ர பதிப்பகம் நடத்திய விழாவில் ஜீவா அழைக்கப்பட்டு, பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 

அதில் ஜீவா ஏற்புரை வழங்கும்போது,  “ எஸ். பொ. வின் மிகச்சிறந்த படைப்பு அநுராதான் என்றும்  சொன்னார்.

 

நான் இலங்கை செல்லும்வேளைகளில்  ஜீவா மறக்காமல் கேட்பவர்களில் ஒருவர் எஸ்.பொ.

 

எஸ்.பொ. அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்ததும், இலங்கையில் முதலில் இந்தத்தகவலை ஜீவாவுக்கே சொன்னேன்.

 

மறுமுனையில் ஜீவாவிடமிருந்து நீண்ட மௌனம் நிலவியது.

அதன்பிறகு ஜீவாவை கொழும்பில் சந்தித்தபோது,  “ எஸ். பொ. எப்படி இருக்கிறார்..? “  என்று கேட்டார்.  அக்காலப்பகுதிதான் ஜீவா படிப்படியாக நினைவுகளை மறக்கத்தொடங்கிய வேளை !

 

இந்தப்பத்தியில் சொல்லப்பட்ட  கைலாசபதி, வித்தியானந்தன்,  தோழர்கள் வி. பொன்னம்பலம் , பரராஜசிங்கம், சிவா. சுப்பிரமணியம், டானியல், எஸ்.பொ. ஆகியோர் ஜீவாவுக்கு முன்னரே மறைந்துவிட்டனர்.

 

ஜீவா,  நிதானமாக அவர்களைப்  பின்தொடர்ந்து கடந்த ஜனவரி 28 ஆம் திகதி அமைதியாக விடைபெற்றார். ஏனையோர் நிரந்தரமாக விடைபெறும்போது பலரும் திரளாகவும் குறைந்த எண்ணிக்கையிலும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

 

ஜீவா மற்றவர்களுக்கு அந்த அலைச்சல் வேலையையும் வைக்காமல்,  புறப்பட்டார்.

 

மகாகவி பாரதிமறைந்து சுடுகாடு செல்லும்போது விரல்விட்டு எண்ணத்தக்கதாக ஒரு சிலர்தான்  உடன் வந்தனர்.

 

இந்தக்கொரோனோ காலத்தில், ஜீவா - கொழும்பில் மின்மயானத்தில் தகனமாகும்போது ஒரே ஒரு ஜீவன்தான் அதனை பார்த்துக்கொண்டு நின்றது.

 

அதுதான் ஜீவாவின் ஏக புதல்வன் திலீபன்.

 

பட்டினத்தாரின் சிந்தனையின் அடிப்படையில் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன!

 

ஆடிய ஆட்டமென்ன…?
பேசிய வார்த்தை என்ன…?
தேடிய செல்வமென்ன? திறண்டதோர் சுற்றமென்ன…?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ…?

மல்லிகை ஜீவா எம்மத்தியில் நினைவுகளாக வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

 


( முற்றும் )

 

 

 

 

 

 

 

 

 

 

  

No comments: