மூன்றாவது பொய்

                      



கன்பரா யோகன்


சாயங்காலமானதுமே குளிரடிக்கத் தொடங்கியிருந்தது.   பீட்டர்


மேலங்கிக்குள் கை விரல்களை சொருகிக் கொண்டான்.  ஜெருசலேம் மலையிலுள்ள நகரம், அதனால் அந்தக் காற்று எந்நேரமும் குளுமையாக வீசும்.  ஒலிவ மலை உச்சியைத் தொட்டுக் கொண்டு அது வருகிறது.

மாலையில் கெத்சமனே தோட்டத்தில் நிகழ்ந்தவை அவன் மனதை பிசைந்து கொண்டிருந்தது.

பஸ்கா உணவை முடித்த பின் ஒலிவ மலை அடிவாரத்துக்கு ரபாயைப் பின்தொடர்ந்து சகாக்களுடன் சென்றிருந்தான். குருநாதர் என்ற அர்த்தத்தில் அவர்களெல்லாரும் இயேசுவை ரபாய் என்றே அழைத்தார்கள்.  அவர் முகம் என்றுமில்லாத ஒரு வியாகுலத்திலிருந்தது.  தோட்டத்துக்கு போவோம் வாருங்கள் என்றார்.

இன்றாவது தூங்காகாமல் தன்னுடன் விழித்திருந்து ஜெபிக்கச் சொன்னாரே, அவர் சொல்லைக் கேட்டேனா?, தன்னைத்தானே நொந்து கொண்டான்.  நடந்து களைத்த கால்களும், உடலும் சோர  நித்திரை பசையாய் கண்களை ஒட்டிப் பிடித்தது.  பக்கத்தில் புற் தரையில் சகாக்கள் குறட்டை ஒலி இவன்   கண்களையும் சுழற்றி வீழ்த்தி விட்டது. 

பஸ்கா யூதர்கள் எகிப்தில் பேரோவிடமிருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் பண்டிகை. புளிப்பில்லாத அப்பத்தை சுட்டு உண்பது நீண்ட வரலாறு மரபு.  அப்பத்தை புளிக்க வைக்க நேரமில்லாமலே அவசர அவசரமாக   எகிப்தை விட்டு மோசேயுடன் வெளிறிய யூதர் வழியில் புளிக்காத அப்பத்தை சுட்டு உண்டதை நினைவு கூரும் வழக்கம்.

 

அயர்ந்து சில கண்கள்தான் தூங்கியிருப்பான் திடீரென ஆரவாரங்களும் வெளிச்சங்களும் நெருங்கிவரக் கனவுதானா என்று திடுக்கிட விழித்தெழுந்தான்.  அடுத்த கணம் யூதாஸ், ரபாயை நெருங்கி முத்தமிடதையும் பிறகு காய்பாஸின் காவலாளிகள் ரபாயை கைது செய்ததும் சில நிடங்களுக்குள் நிகழ்ந்து விட்டிருந்தது.

தலைக்கேறிய கோபத்தை எவரிடமும் காட்டிகொள்ளாமல் அதைப் பதுக்கி பதுக்கி வைத்தான்.  யூதாஸின் மேல் தனது அடக்கமுடியாக் கோபத்தை காட்ட முடியவில்லையே என்ற கையாலாகாத்தனத்தினால் வந்த கோபம். ஒரு கிறுக்குத்தனத்துடன் கைது செய்த கும்பலைப் பின் தொடர்ந்து காய்பாஸின் வீடு வரை வந்து விட்டான்.

மற்றைய சகாக்கள்- அதாவது ரபாயின் சீடர்கள் எல்லோருமே ஒளித்துக் கொண்டார்கள்.  ஒரு குருட்டுத் துணிச்சல்ளுடன் அவன் மட்டுமே அங்கே நிற்கிறான்.

ரபாயின் சீடன் என்று தன்னை அடையாளம் காணாதவாறு தன்னை ஒரு வயது வயதானவன் போல தலையை துப்பட்டியால் மூடிக்கொண்டிரு ந்ததால் குளிர் காதுள் செல்லாமல் தடுத்தது.

காய்பாஸின் வீடு சற்று தூரத்திலேயே தெரிந்து விட்டது அவனுக்கு.  ஜெக சோதியாய் விளக்குகள் வீட்டின் முகப்பில் கொழுத்தப்பட்டிருந்தன.  நீண்ட முற்றம், வாசலில் காவலாளி இருந்தான். ரபாயை அழைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே செல்லு மட்டும் காத்திருந்தான்.

இன்னொரு கூட்டம் உள்ளே நுழைவதற்காக காத்திருந்தான். நினைத்த படியே இன்னொரு கும்பல் உள்ளே நுழைய அவர்களுடன் இவனும் சேர்ந்து காவலாளியிடம் சிக்காமல் உள் சென்றான். 

 

உள்ளே மிகப் பெரிய முற்றம்.  ஒரு ஆயிரம் பேர் வரை உட்காரக்கூடிய தரை. நீள் வளையம் போன்ற முற்றத்தை வளைத்து நிற்கும் சுவர் ஓரமெங்கும் விளக்குத் தண்டுகள் நிறுத்தப் பட்டிருந்தன. அவற்றில் ஒலிவ் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

காய்பாஸின் வீட்டுக்குளேயும் வெளியேயும் சேர்த்து ஒரு அறுநூறு எழுநூறு பேராவது நிற்கிறார்கள்.

இரண்டு மூன்று இடங்களில் விறகுகளைக் குவித்து குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டியிருந்தார்கள்.

சுலபமாக தன்னை எவரும் கொண்டு கொள்ளாதவாறு வாசலிலிருந்தும், காய்பாஸின் வீட்டிலிருந்தும் சற்றுத் தொலைவில் குளிர் காய்ந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டான். தனியே நிற்பது அங்கே ஆபத்தானது.  

ஒரு கூட்டத்துக்கு கிட்டப் போக அவர்களில் ஒருவன் இவனைப் பார்த்து,

"பக்கத்தில் வா முதியவனே, உன்னையும், எங்களையும் சூடாக்கி கொள்ள உதவு" என்றான்.

பீட்டர் தயக்கத்துடன் வட்டமாக நிலத்தில் அமர்ந்திருந்தவர்களுடன் கீழே அமர்ந்தான்.

அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

"காய்பாஸ் ஏற்கனவே அந்த இயேசு மீது கடுங்கோபத்திலுள்ளார். எருசலேம் தேவாலயத்தையும், மத குருக்களையும் அவமதித்தவனல்லவா?" 

"பொன்டியஸ் பிளாடிஸ் என்ன சொல்கிறாரோ அதுதான் கடைசி முடிவு"  

தண்டிலிருந்த விளக்குகள் மங்கலாகி எரிய ஆரம்பித்ததைக் கண்ட காய்பாஸின் வேலைக்காரி ஒருத்தி விளக்குகளுக்கு எண்ணை விட வருகிறாள். அவள் கையில் ஒரு லாந்தர் இருந்தது.

பீட்டர் இருந்த கூட்டத்துக்கு அருகாமையிலும் ஒரு தண்டு விளக்கு இருந்தது.

அந்த நேரம் பார்த்துதான் பீட்டரின் தலையிலிருந்த துப்பட்டி காற்றுக்குப் பறந்த போய் அந்த விளக்குத் தண்டில் சுற்றிக் கொண்டது.

அதை எடுக்க எழுந்த விளக்கண்டை செல்லவும், அந்த வேலைக்காரி இவனைப் பார்த்து,

" ஐயோ நீ இயேசுவின் சீடர்களில் ஒருவனல்லவா? இங்கே எப்படி வந்தாய்?" என்றாள்.

" உனக்கு கண் பார்வை போய் விட்டதா பெண்ணே? நான் அவரின் சீடனல்ல. நான்அவரை கண்டதுமில்லை" 

எப்படித் துணிந்து பொய் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.  

ஐயோ! அவர் பஸ்கா விருந்தில் சொன்னதை மறந்திருந்தேனே? அது உண்மையாகப் போகிறதா?

பீட்டர் மனம் உடைந்திருந்தான்.  ஒவ்வொரு கணங்களும் எதோ நிகழப் போவதை சொல்லிக்கொண்டிருந்தன.

விருந்தில் ரபாய் குண்டைத் தூக்கிப் போட்டது போல இரண்டு விடயங்களை சொல்லியிருந்தார். என்னுடன் இருப்பவன் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார். 

உணர்ச்சி கொந்தளிப்புடன் பீட்டர் 

"நான் தங்களுக்காக சிறைக்கு செல்லவோ, ஏன் மரணத்தை ஏற்கவோ தயார்" என்றான்.

ரபாய் சற்று நேரம் பேசாதிருந்தார். பிறகு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். 

" நாளை விடிவதற்குள் நீ மூன்று முறை என்னை அறியேன் என்பாய். அப்போது சேவல் கூவியிருக்கும்" என்றார்.

பீட்டர் அதிர்ந்து போனான்.

 

இப்போது அவனுடன் குளிர் காய்ந்து கொண்டிருந்த சிலர் கைதட்டிப் பாடத் தொடங்கியிருந்தார்கள்.

ஒரு பருமனான பெண் கூட்டத்தை நோக்கி அவசரமாக வந்தாள். அவள் கையில் குப்பை வாரி இருந்தது. குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தை உற்றுப் பார்த்தாள். 

"அவனை வெளியே கொன்டு வர போகிறார்கள். எழுந்து மேலங்கியின்   தூசியை தட்டி விட்டு போய் விடாதீர்கள். போகு முன் இந்த விறகுகளையும் சாம்பலையும் அள்ளி அங்கே குப்பை மேட்டில் போட்டு விடுங்கள்"    

" ஏய் பெண்ணே, உனக்கு காய்பாஸ் சம்பளம் தருவது எதற்காக? இதெல்லாம் உன் வேலையல்லவா?"

" போடா போக்கற்றவனே, உன்னைப்போல சோம்பேறியா நான்?"

எல்லாரும் சிரிக்கிறார்கள்.

சிரிக்காமலிருந்த பீட்டரை பார்த்த அவள் முகம் மாறியது.

" இவனும் அந்த இயேசுவோடு கூடத்திரிந்தவனல்லவா? இவன் முகம் எனக்கு நினைவுக்கு வருகிறதே "

பீட்டர் பதட்டத்துடன்,

"இல்லை பெண்ணே நான் இயேசுவை ஒருபோதும் அறிந்திலேன்"

இப்படி பீ ட்டர் இயேசுவை மறுதலித்து தனது இரண்டாவது பொய்யை சொன்னான்.

 

உள்ளே கூட்டம் ஆரவாரிக்கும் சத்தம் கேட்டது.

" சிலுவைச் சாவுக்கு உத்தரவு பெற அவனை பிளாடிஸிடம் இழுத்துப் போகிறார்கள். தேசாதிபதியின் அனுமதி பெற்றாக வேண்டும்"

என்றான் ஒருவன். 

கைகள் கட்டப்பட்டு, குனிந்த தலையுடன் ரபாய் வெளி விறாந்தையில் தெரிகிறார்.   ஈட்டிகளுடனும், வாள்களுடனும், தடிகளுடனும் காவலாளிகள் அவரைச் சூழ வருகின்றனர்.

ரபாயை இழுத்து வந்த கூட்டம் வாசலுக்கு செல்லும் வரை எதுவும் பேசாமல் இருந்தான். மனம் என்றுமில்லாதவற்று அடித்துக்கொண்டது.  அவனையறியாமல் அடக்க முடியாத துயர் விம்மலாக வெடித்து வந்து தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்தான்.

 

நான்கு பேர் தடிகளுடன் இவர்களை நோக்கி வந்தார்கள்.

அவர்கள் பீட்டர் இருந்த கூட்டத்தைப் பார்த்து

“போவோம் எழுந்திருங்கள். பிளாடிசின் விசாரணைக் கூடத்திற்கு  அவனை அழைத்து போகிறார்கள்.  நாங்களும் அங்கு நின்றால்தான் எங்கள் குரலை ஒருமித்து உறுதியாய் சொல்லலாம். அவனை  சிலுவையில் தொங்க  விட்டுக் காட்டுவோம் . வாருங்கள்.”

கிட்ட வந்தவர்களில் ஒருவன் இவனிடம்,

" யார் நீ? உன்னைப்பார்த்தால் அவனுடைய சகாக்களில் ஒருவனின் முகச் சாயல் தெரிகிறதே? 

"சத்தியமாய் எனக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமில்லை".

பீட்டர் அவசரமாக மறுக்கிறான்.

பேசியவனைப் பார்த்தால் பீட்டருக்கு அவன் ஒரு சதுசீஸ் போல தெரிந்தது. அவர்கள் யூத மதத்தில் ஒரு பிரிவினர்.  சதுசீஸ்களுடன் காய்பாஸுக்கு நல்ல உறவு இருந்தது. அதை விட காய்பாஸ் உயர் குடியினரிடமும், ரோம ஆட்சியாளர்களிடமும் நப்புறவை எப்போதும் வைத்திருப்பவன். ரபாயை கொலை செய்ய காய்பாஸ் அவர்களுடன் சதியாலோசனை ஒன்றை செய்திருந்தான் என்ற பேச்சு நகரத்தில் இருந்தது.

இப்போது ரபாய் வாசலை அண்மித்திருந்தார். திரும்பிப் பார்க்கிறார். யாரையோ தேடி பார்ப்பது போலிருந்தது. துணுக்குற்றான். ஒருவேளை தன்னைத்தான் ரபாய் தேடுகிறாரா?  

இப்போது தூரத்தில் எங்கோ சேவல் கூவி ஓய்ந்தது.  

மூன்றாம் பொய்யையும் சொல்லி விட்டேனா? ரபாயின் கணக்கு சரியாகி விட்டதே? முகத்தைப் துப்பட்டியால் பொத்திக் கொண்டு  விம்மியழுதான் பீட்டர்.  இதெல்லாம் அவர் சொல்லியபடியே நிகழ்ந்து விட்டதே என்ற வேதனை.

அழுததில் மனம் தெளிந்தது.

 அந்த மூன்றாம் பொய்யுடன் இனி பொய் சொல்ல தேவையில்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பயம் கொஞ்சம் தணிந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான்.  ரபாய் சொன்னது சரியானால் இனி எவரும் தன்னை அடையாளம் காணப் போவதில்லை. கூட்டம் பெரும்பாலும் அந்த முற்றத்தை விட்டு நீங்கத் தொடங்கியிருந்தது.

அந்நேரத்தில் பயத்திலிருந்தும், பொய் சொல்வதிலிருந்தும் விடுதலையடைந்தான் பீட்டர். ஆனால் அந்தக் கணத்திலிருந்துதான் தனது மனச் சாட்சியின் கைதியானார் அப்போஸ்தலர் செயின்ட் பீட்டர். 

No comments: