தேர்தல் என்பது திருவிழா
திரவியம் தேடும் பெருவிழா
வென்றால் பொக்கிஷம் நிச்சயம்
தோற்றால் பொக்கிஷம் அன்னியம் !
பொய்களே உண்மையாய் குவிந்திடும்
உண்மைகள் ஒதுங்கியே நின்றிடும்
கண்ணியம் காற்றிலே பறந்திடும்
கருத்துகள் மக்களை உலுக்கிடும் !
நல்லவர் தேர்தலில் வந்திடார்
வல்லவர் வாய்மையை கண்டிடார்
கள்ளமும் கபடமும் துள்ளிடும்
கயமைகள் கட்டிலில் அமர்ந்திடும் !
மக்களின் மனங்களில் மாயையை
இருத்திடும் வித்தையை அறிந்தவர்
மாநில முதல்வராய் வந்துமே
வாழ்ந்திடச் செல்வத்தை ஈட்டுவார் !
ஏழைகள் கண்களில் தென்படார்
வறுமையை மனமதில் கொண்டிடார்
வாழ்ந்திட வசதியைத் தேடுவார்
வரும்பொருள் மனமதில் எண்ணுவார் !
அதிகாரம் கைகளில் அமர்ந்திடும்
ஆணவம் சாமரை வீசிடும்
ஆதிக்கம் மட்டுமே பெருகிடும்
ஆட்சியில் அவர்சுகம் மலர்ந்திடும் !
தேர்தலால் நல்லன நடந்திட
நினைத்திடும் மக்களோ கலங்குவர்
தேர்தலில் வென்றவர் துள்ளுவார்
தினமுமே செல்வத்தை அள்ளுவார் !
No comments:
Post a Comment