ஸஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் TID கைது
ஜேர்மன், சுவிஸிலிருந்து 24 இலங்கையர் நாடு கடத்தல்
உலக நீதி அரங்கில் தமிழரின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப்
வடமாகாண சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க உறுதி
ஸஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் TID கைது
சமூக வலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குவாத மற்றும் ஸஹ்ரான் ஹாஷிமின் கொள்கைகளை பரப்பியமை தொடர்பில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரும், திஹாரியைச் சேர்ந்த 32 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் பணி புரிந்த குறித்த இருவரும், இலங்கையர்களை உள்ளடக்கிய 'வன் உம்மாஹ்' எனும் வட்ஸ்அப் குழுமம் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஸஹ்ரானின் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு கடும்போக்குவாத மற்றும் வஹாபிஸ கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கையிலிருந்து உரிய அதிகாரிகளால், கட்டார் அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து TID யினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் நேற்றையதினம் (31) கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்களில் ஒருவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து ஒரு சில மணித்தியாலங்களுக்கு பின்னர், ஸஹ்ரான் ஹாஷிம் தனது குழுவினருடன் 'பைய்யத்' (சத்தியப்பிரமாணம்) செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், அது தவிர பல்வேறு கடும்போக்குவாத கருத்துகளைக் கொண்ட வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளதாகவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, குறித்த சந்தேகநபர்கள், பயங்கராவாத தடுப்பு சட்டத்தின் கீழ் TIDயில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
அது தவிர, நேற்றையதினம் (31) மூதூர் பிரதேசத்தில் வைத்து மேலும் இரு சந்தேகநபர்கள் TID இனால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூரைச் சேர்ந்த 37, 38 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்த அஜித் ரோஹண, கடந்த 2018 இல் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவர்களுக்கு, ஸஹ்ரானை பின்பற்றும் இருவருக்கு பல்வேறு வகுப்புகளை நடாத்த வசதிகளை வழங்கியதாக குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பிலுள்ள TID அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நன்றி தினகரன்
ஜேர்மன், சுவிஸிலிருந்து 24 இலங்கையர் நாடு கடத்தல்
நேற்று கட்டுநாயக்க வந்தடைந்தனர்
தனிமைப்படுத்தலின் பின் CID யிடம் ஒப்படைப்பு
சுவிற்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக நேற்றுக் காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனிலிருந்து 20 பேரும், சுவிற்சர்லாந்திலிருந்து நான்கு பேருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு சட்டங்களை மீறியதற்காக அவர்கள் 2012 மற்றும் 2013 முதல் அந்த நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், மேலும் அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.
இந்தக் குழு நேற்றுக் காலை 10.37 மணிக்கு ஜேர்மனின் டஸ்ஸெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வாமோஸ் ஏயர்லைன்ஸின் ஈபி -308 என்ற சிறப்பு விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையினரால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
சுப்பிரமணியம் நிஷாந்தன் - நன்றி தினகரன்
உலக நீதி அரங்கில் தமிழரின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப்
- அதற்குள் மறைந்துவிட்டார் என மனோ கவலை
உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும் முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைதான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.
2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள் இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது,
ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்பின் நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐ.நா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.
அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐ.நாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐ.நா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.
நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப், நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.
ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன் என்றும் அவர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
வடமாகாண சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க உறுதி
- ஜனாதிபதி உறுதி
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றி நிரந்தர நியமனமின்றி நடுத்தெருவில் நிற்கும் சுகாதாரத் தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்ளீர்த்து அவர்களுக்கான நியமனத்தை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடனான சந்திப்பின் போதே வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்போது, யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன், வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் பலர் யுத்த, இடர் காலங்களில் கூட அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளனர். அவர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நியமனம் வழங்கப்பட்டு பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் நியமனம் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களுடைய சேவை மற்றும் குடும்ப நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்ளீர்த்து நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
சாவகச்சேரி விசேட நிருபர் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment