பக்குவம் பேணி பருகுவோம் சுகத்தை !மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் ... அவுஸ்திரேலியா உடல்நலம் ஓம்பினால் உளநலன் பெறலாம்
உடல்நலம் ஓம்பினால் உவப்புடன் வாழலாம்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் இருப்பதால்
உடம்பினை ஓம்புதல் உயர்வினை அளிக்கும்  !

உள்ளம் இருப்பதால் உடல்நலம் பேணு
உன்னை இயக்க உடல்நலம் தேவை
நம்மைப் படைத்தவன் உள்ளம் இருப்பான்
நலமாய் உடம்பை பார்த்திடல் பொறுப்பே !

சுத்தம் என்பதை நித்தம் பேணு
தொற்று வியாதி கிட்டவும் வாரா
கையைக் கழுவு மெய்யைக் கழுவு
காலம் முழுவது காத்திடு நலனை  !

மனதைக் காத்தால் மருந்தும் வேண்டா
மருத்துவம் என்பது வாழ்வின் துணையே
விருந்தாய் மருந்தை கொண்டுமே இருந்தால்
விட்டுமே அகலும்  விரட்டிடும் வியாதி  !

மனநலம் என்பது மனிதர்க்கு முக்கியம்
கணநேர ஆசை கஷ்டத்தைக் கொடுக்கும்
மனமதை அடக்கினால் மார்க்கம் கிடைக்கும்
உடல்நலம் பேண மனமதை அடக்கு  !

பேயாய் நோய்கள் பெருகியே இருக்கு
வாயைக் கட்டு வயிற்றைக் கட்டு
பயிற்சியால் உடம்பை பக்குவப் படுத்து
யோகம் கற்றால் யோகம் கிடைக்கும் !

நோயற்ற வாழ்வு சீருடை வாழ்வு
நோயற்ற வாழ்வு சிறப்புடை வாழ்வு
பாயிலே படுக்க புறப்பட வேண்டாம்
பக்குவம் பேணி பருகுவோம் சுகத்தை !

No comments: