அப்புவிட அப்புவும்,பேரனும்..! - பசுவூர்க்கோபி


கந்தையா அண்ணரும்

காசிம் நானாவும்

றம்பண்டா மல்லியும்

ஒரு குடும்பமாய்

திரிந்த காலம்

அப்போது ..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

புத்த பெருமானுக்கும் 

நபிகள் நாயகத்துக்கும்

ஜேசு பிரானுக்கும் 

சித்தர் சிவனுக்கும்-மதம் 

பிடித்ததாய்..

அப்போது..

ஒருநாளும்

 நான் கண்டதில்லை 

சண்டையை..

 

கண்டியில பெரகராவும் 

திருக்கேதீச்சரத்தில் 

சிவராத்திரியும்

கொச்சிக்கடையில

பாலன் பிறப்பும்

மட்டக்களப்பில 

நோன்புப் பெருநாளும்

அன்பாக நடந்ததே தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை

சண்டையை..

 

ஒவ்வொரு இடத்தில 

ஒவ்வொரு ஆலயம் கட்டி

வழி பாட்டுத்தலமெல்லாம் 

அனைவரும்

வந்து வணங்கி வழிபட்டு

போனார்களே தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை

சண்டையை..

 

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

இப்படி எனக்கு-என்

அப்புவிட அப்பு 

கனவில வந்து

கதை சொல்லி போனார்.

 

அப்போது நினைத்தேன்

இப்போது நடப்பது

அரசியல் வாதிகளும்-சில

அரசடி வாதிகளும்

தாம் வாழ நினைத்து.

 

வல்லரசு சிலதோட

வறுமையை காட்டி

முக்குலத்தையும்

முட்டி மோதவிடும் 

முடிவால்தான்-இன்று

எங்களுக்குள்ளே

இத்தனை..

சண்டையோ?

 

எண்ணித் திகைத்து

இடையில.. 

எழுப்பி விட்டேன்.

“விடியவில்லை”

ஐயோ பக்கத்தில..

அழுகுரல்கள் கேட்கிறது.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

27.03.2021

நன்றி: யாழ் .கொம் 

No comments: