சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தபோதுதான் 1972 ஆம் ஆண்டு வீரகேசரியில் நீர்கொழும்பு பிரதேச நிருபர் வேலை கிடைத்தது.
அதனால், அவ்வப்போது கொழும்பு கிராண்ட்பாஸில் அமைந்த வீரகேசரி பணிமனைக்குச்செல்வேன். பின்னாட்களில் முதலில் ஒப்புநோக்காளராகவும் , துணை ஆசிரியராகவும் பணியாற்றி, 1987 இல் விடைபெற்றிருந்தாலும், அந்த ஆசிரிய பீடம் இன்னமும் எனது மனக்கண்களில் அழியாத காட்சிதான்.
பிரதான வாயில், அங்கிருந்த கண்ணாடி யன்னல்கள், மேலே சுழன்றுகொண்டிருக்கும் மின்விசிறிகள், இடதுபுறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த வானொலிப்பெட்டி, அச்சுக்கோப்பாளர் பிரிவுக்குச்செல்லும் திசையில் இடது பக்க மூலையிலிருந்த தண்ணீர் குடுவை. ஆசிரியபீடத்தில் செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூவின் மேசைக்கு இருமருங்கும் இருந்த துணை செய்தி
ஆசிரியர்களின் மேசைகள், அவற்றுக்குப்பின்னாலிருந்து, வெளியூர் நிருபர்கள் எழுதிய செய்திகளை அடிமட்டம் வைத்து அளந்து பார்த்து அதற்கான சன்மானத்தை கணக்குப்பார்க்கும் செல்வி நிர்மலா மேனன் அமர்ந்திருக்கும் மேசை, வலதுபுறம் சிரேஷ்ட துணை ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அமர்ந்து செய்திகளை செம்மைப்படுத்தும் மேசை, ஓவியர்கள் மொராயஸ், சந்திரா, ஜெயா, ஶ்ரீகாந்த் ஆகியோர் அமர்ந்து படங்கள் வரையும் மேசைகள், ஆசிரியபீடத்தின் நடுவே வட்ட வடிவில் துணை ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் வட்ட மேசை என்பனவெல்லாம் மனக்கண்ணில் இன்றும் அழியாத சித்திரம்தான்.
எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் சிலரைப்பற்றி சொல்லாமல், கடந்துசெல்ல இயலாது.
க. சிவப்பிரகாசம்
1977 -1983 காலப்பகுதியில் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு அருகாமையிலிருந்து பணியாற்றிய என்போன்றவர்களுக்கு அவரது பொறுமை, நிதானம் வியப்பானதுதான். அச்சமயம் அவருக்கு ஆசிரிய பீடத்தில் பக்க பலமாக இருந்தவர்களின் பணியும் விதந்து போற்றுதலுக்குரியதுதான்.
செய்தி ஆசிரியராக பணியாற்றிய டேவிட்ராஜூ, சிரேஷ்ட துணை ஆசிரியர்களாகவிருந்த நடராஜா, கார்மேகம், வாரவெளியீட்டுக்கு பொறுப்பாகவிருந்த பொன். ராஜகோபால், மற்றும் அன்னலட்சுமி இராஜதுரை, கண. சுபாஷ் சந்திரபோஸ், வீ. ஆர். வரதராஜா, சேதுபதி, அஸ்ஹர், கே. நித்தியானந்தன், சனூன், சொலமன்ராஜ், தவராஜா, எஸ். என். பிள்ளை, பாலவிவேகானந்தா, ஸி.எஸ். காந்தி, ஜோன் ரெஜீஸ், பற்றீஷியா ஆரோக்கிய நாதர், இ.தம்பையா, ஜி.நேசன், சூரியகுமாரன், கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கும் ஆ. சிவநேசச்செல்வன், செல்லத்துரை மூர்த்தி, டீ.பி.எஸ்.ஜெயராஜ், சோமசுந்தரம் ராமேஸ்வரன், முத்தையா பாலச்சந்திரன் , லண்டனுக்குச்சென்ற ஶ்ரீகாந்தலிங்கம் ஆகியோருடன், இன்றும் அங்கே பணியிலிருக்கும் வீ. தனபாலசிங்கம் உட்பட பலர் இச்சந்தர்ப்பத்தில் எனது நினைவுக்கு வருகிறார்கள்.
க. சிவப்பிரகாசம் பயண இலக்கியம் எழுதுவதிலும் ஆற்றல்
மிக்கவர் என்பதற்கு அவரது சோவியத் பயணக்கதை நூல் சிரித்தன செம்மலர்கள் ஒரு உதாரணம். 1975 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் நாட்டுக்குச்சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய சிவப்பிரகாசம், தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்துகொண்டார். இந்தப்பயணக்கதை பின்னர் வீரகேசரி பிரசுரமாக வெளியானது.
சோவியத் நாட்டில் செம்மலர்கள் காதலைக்குறிப்பதனால் தமது பயண இலக்கியத்தொடருக்கும் அவர் சிரித்தன செம்மலர்கள் என்று பெயர் சூட்டினார். இக்காலப்பகுதியில் இலங்கையின் வடபுலத்திற்கு தென்னிலங்கையிலிருந்து முதல் தடவையாகச்சென்ற சில கவிஞர்கள், தாமும் " சிரித்தன பனைமரங்கள் " என்ற தலைப்பில் எழுதுவதற்கு ஆசையாகவிருப்பதாக குறிப்பிட்டனர்.
அந்தளவுக்கு க. சிவப்பிரகாசம் அக்காலப்பகுதியில் வாசகர்
மத்தியில் சிறு சலனத்தை தமது எழுத்துக்களின் ஊடாக ஏற்படுத்தியிருந்தார். சிரித்தன செம்மலர்கள் நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் பாரதியின் கவிதை வரிகளுடன்தான் தொடங்கியிருந்தன. சிவப்பிரகாசம் 2017 ஆம் ஆண்டு கனடாவில் மறைந்தார். அதற்கு முன்னர் அவரையும் விநியோக – விளம்பர முகாமையாளர் து. சிவப்பிரகாசம், மூர்த்தி ஆகியோரையும் கனடாவில் கனக. அரசரத்தினத்தின் செந்தாமரை பத்திரிகை விழாவில் சந்தித்தேன்.
பொன். இராஜகோபால்
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜகோபால் , வீரகேசரியின் 50 ஆவது ஆண்டு நிறைவு விசேட மலரை வெளியிட்டபோதும் குறிப்பிட்ட பொன்விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியின் காலகட்டத்திலும் மேற்கொண்ட சிரத்தையான பணியும் குறிப்பிடத்தக்கது.
50 ஆவது ஆண்டு நிறைவு மலரின் உள்ளடக்கச்சிறப்பின் முக்கியத்துவம் கருதி, இதழியல் ஆய்வுகளை சாதாரண வாசகனும் புரிந்துகொள்ளத்தக்கதாக தெரிவுசெய்து பிரசுரித்தார்.
இலங்கை செய்தி ஏடுகளின் தோற்றத்தின் அரசியல் சமூக
பின்னணிகளை விரிவாக பதிவுசெய்த ஆய்வுகளும் அம்மலரில் வெளியாகின.
மலரை விளம்பரங்களினால் நிரப்பாமல் தரமான படைப்புகளையும் பிரசுரித்து வாசகர்கள் பத்திரப்படுத்தி பாதுகாக்குமளவுக்கு அதன் தரத்தை உயர்த்தினார்.
பொன்விழா நாவல் போட்டிக்கு வந்து குவிந்த நாவல்களைத் தேர்வுசெய்யும் பணியில் பல தரப்பு வாசகர்களையும் அவர் ஈடுபடுத்திக்கொண்டமை தனிச்சிறப்பு.
பல்கலைக்கழக மாணவர்கள், குடும்பத்தலைவர்கள், தலைவிகள், பத்திரிகாலய ஊழியர்கள்… இப்படி பலரையும் அணுகி முதல்கட்ட, இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட தேர்வுகளை அவர் நடத்தினார்.
இப்போட்டியில் எழுத்தாளர் செம்பியன் செல்வனின் நெருப்பு மல்லிகை முதல் பரிசினைப்பெற்றது.
அன்றைய சில நிருவாகப்பிரச்சினைகளினால்
பரிசளிப்பு நிகழ்வு மிகவும் எளிமையாக வீரகேசரி அலுவலகத்திலேயே நடைபெற்றது. முடிந்தவரையில் நாவல் தேர்வில் ஈடுபட்டவர்களையும் நிர்வாகத்திடம் சொல்லி அழைத்திருந்தார். அந்த பரிசளிப்பு நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரை ஆழமும் விரிவும் கொண்டது. அதைக்கேட்டு வியந்துபோனேன்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்காக நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற விரிவுரைவகுப்புகளை நடத்திய அனுபவம் அவருக்கு ஏற்கனவே இருந்தமையால், அன்று அவரால் நாவல் இலக்கியப்போட்டி தொடர்பான உரையை சிறப்பாக நிகழ்த்த முடிந்திருக்கிறது.
அன்றைய நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவரிடம் எனது பாராட்டைத்தெரிவித்தேன். “ நீங்கள் இப்படியெல்லாம் பேசுவீர்கள் என்பது எனக்குத்தெரியாது.” – என்று எனது வியப்பை தெரிவித்தேன்.
அந்த வியப்புக்கு முக்கிய காரணம். அவர் உரையாற்றும்பொழுது எந்தக்குறிப்புகளையும் கையில் வைத்துக்கொண்டு பேசவில்லை. கொழும்பில் நடந்த பல
இலக்கியக்கூட்டங்களில் அவரைக்காணமுடியாது. அழைப்பு அனுப்பினாலும் வரமாட்டார். பேசக்கேட்டாலும் மறுத்துவிடுவார்.
“ நீங்கள் நன்றாக இலக்கியவுரை நிகழ்த்துகிறீர்கள். ஏன் வரும் அழைப்புகளைத் தட்டிக்கழிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “ ஐஸே… நான் பத்திரிகை ஆசிரியன். பேச்சாளன் அல்ல. இந்தக் கூட்டங்களுக்குச்சென்றால் சில எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பிரசுரிப்பதற்கு சிபாரிசுக்கு வந்துவிடுவார்கள். பல சங்கடங்களை எதிர்நோக்கவேண்டி வரும். இன்னுமொரு தனிப்பட்ட காரணமும் எனக்குண்டு. எனது குடும்பம் சிலாபத்தில் இருக்கிறது. நான் இங்கே வத்தளையில் அறை எடுத்து தங்கியிருக்கிறேன். பெரும்பாலும் இலக்கிய கூட்டங்கள் சனி – ஞாயிறு தினங்களில்தான் நடக்கும். ஞாயிறு வீரகேசரி வாரவெளியீட்டுக்காக சனிக்கிழமை வேலை செய்துவிட்டு, அன்று மாலையே சிலாபத்துக்கு பஸ் அல்லது ரயில் ஏறிவிடுவேன். மீண்டும் திங்கள் நண்பகல்தான் கொழும்பு வந்து அலுவலகம் வருவேன். இப்படி வார இறுதியில் சிலாபத்துக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்னால் எப்படி ஐஸே கூட்டங்களுக்குச் செல்ல முடியும்.”
இந்த உரையாடலின்போதுதான் தனது காதல்
திருமணத்தையும் சொன்னார். நாவலர் மண்டபத்தில் விரிவுரையாற்றிய சமயத்தில்தான் அங்கு ஆன்மேரி லுமினா என்ற பெண்ணையும் சந்தித்தார். அவரையே காதலித்து மணம்முடித்தார்.
ராஜகோபாலுக்கு சாதி-மத நம்பிக்கைகள் இல்லை என்பதையும் அறிந்துகொண்டேன். அதனால்தான் வடமாகாணம் வட்டுக்கோட்டையில் ஒரு சைவக்குடும்பத்தில் பிறந்த அவரால் ஒரு கத்தோலிக்க குடும்பத்துப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளமுடிந்தது.
(திருமதி ஆன்மேரி லுமினா ராஜகோபல் இங்கிலாந்தில் காலமானார். அவருக்காக அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்துகொண்டேன். அவர்களது மூத்த புதல்வன் நாவலன், நான் வதியும் மெல்பனில் குடும்பத்துடன் வசிக்கிறார். )
ராஜகோபல், இலக்கியக்கூட்டங்களை எப்படித்தவிர்த்தாரோ அதே போன்று தனது புகைப்படங்களையும் எவருக்கும் கொடுக்கமாட்டார். ஒரு
பத்திரிகை ஆசிரியராக வாழ்ந்துகொண்டே தனது படங்கள் எதுவும் எந்தப்பத்திரிகையிலும் இதழ்களிலும் பிரசுரமாகிவிடக்கூடாது என்பதிலும் மிகுந்த எச்சரிக்கையாக இருந்த விந்தையான மனிதர்தான் அவர். பின்னாளில் அவர் தினக்குரல் பிரதம ஆசிரியராக பணியாற்றிவிட்டு, 1997 இல் மறைந்தார்.
டேவிட்ராஜூ
நான் சந்தித்த பல மனிதர்களில் செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ மிகவும் வித்தியாசமானவர். அவருக்குள் மட்டுமல்ல அவரைச்சுற்றியும் சோகங்கள் நிரம்பியிருந்தன. மனைவியை இழந்தார். மகன் கடலில் நீந்தச்சென்று மறைந்தான். ஒரு மகள் எதிர்பாராத விதமாக இறந்தார். இப்படியாக வாழ்நாளில் இழப்புகளை அவருக்குத்தந்த இறைவன், அவரது மறைவின்போதும் அவரை விட்டு வைக்கவில்லை. அவர் இலங்கையில் மரணித்த வேளையில் சிங்கப்பூரில் அவரது மருமகன் - (மற்றுமொரு மகளின் கணவர்) திடீரென்று இறந்தார்.
துயரங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும்
அவரது மனவலிமையை நாம் முன்னுதாரணமாகக்கொள்ளலாம்.
வீரகேசரியின் நீர்கொழும்பு நிருபராக நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் டேவிட் ராஜூ செய்தி ஆசிரியராக பணியிலிருந்தார். 1977 இல் அங்கு ஒப்புநோக்காளராக பிரவேசித்தபோதும் அதே பணியிலிருந்தார்.
வீரகேசரியின் பிரதம ஆசிரியராக வருவதற்குரிய அனைத்து தகுதிகளும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் 1983 இனச்சங்காரத்தின் பின்பு அக்காலப்பகுதியில் பிரதம ஆசிரியராகவிருந்த க. சிவப்பிரகாசம் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் அந்தப்பதவிக்கு வந்திருக்கவேண்டியவர் டேவிட் ராஜூ.
ஆசிரிய பீடத்தில் சிவப்பிரகாசம் அவர்களுக்கு அனைத்து ஊழியர்கள் சார்பிலான பிரிவுபசாரம் டேவிட் ராஜூ தலைமையில் நடந்தது. அந்நிகழ்வில் ஒப்புநோக்காளர் தரப்பில் பேசியதுடன் அங்கு பணியிலிருந்த சிங்கள ஊழியர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சிங்களத்திலும் சில வார்த்தைகள் பேசினேன்.
1983 அமளி வீரகேசரியையும் சற்று பாதித்தது. பிரதம
ஆசிரியரின் வெள்ளவத்தை வீடும் காரும் சேதமடைந்தது. ஊழியர்கள் சிலரும் அகதிகளாக பம்பலப்பிட்டியில் தஞ்சமடைந்தனர். நிலைமை சீரடைந்து பிரதம ஆசிரியர் விடைபெறும்போது படிப்படியாக பலரும் நாட்டின் நிலை கருதி வெளியேறக்கூடும் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட பிரிவுபசார நிகழ்வில் பேசிய ஒரு ஊழியர் வீரகேசரியின் எதிர்காலம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
உடனே அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த டேவிட் ராஜூ, அங்கிருந்த நிருவாக இயக்குநர் வென்ஸஸ் லாஸ் அவர்களின் மனதை குளிர்விக்கும்வகையில், “ வீரகேசரி என்ற கப்பல் சூறாவளியினால் தத்தளித்தாலும் எம்மிடமிருக்கும் மாலுமி அதனை சாதுரியமாக செலுத்துவார். ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், சில மாதங்களில் நம்பிக்கை வழங்கிய டேவிட் ராஜூ நிருவாகத்தில் நம்பிக்கையற்று வேலையை விட்டு விலகி மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தொழிலைத்தேடிச்சென்றார்.
அவருக்குக்கிட்டவிருந்த பிரதம ஆசிரியர் பதவிக்காக நிருவாகம் விளம்பரம் வெளியிட்டு , ஆ. சிவநேசச்செல்வனை தெரிவுசெய்து நியமித்தது.
டேவிட் ராஜூ , தினமும் வீரகேசரிக்கும் மித்திரனுக்கும் எளியநடையில் வாசகர்கள் புரிந்துகொள்ளத்தக்கவாறு ஆசிரியத்தலையங்கம் எழுதுவார். அத்துடன் உள்ளதைச்
சொல்வேன் என்ற பத்தியையும் எழுதிவந்தார். அன்றாடச்சம்பவங்களை இரத்தினச்சுருக்கமாக சுவாரசியம் குன்றாமல் எழுதுவார். அந்தப்பத்தி எழுத்துக்கு அவ்வப்போது தகவல் சொல்வேன். ஆர்வத்துடன் குறித்துவைத்து இரண்டொருநாளில் எழுதிவிடுவார். இப்படி பலரிடமிருந்தும் தகவல்சேகரித்துக்கொள்ளும் அவரது இயல்பு என்னைப்பெரிதும் கவர்ந்தது.
இவ்வாறு தகவல்சேகரித்தே விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள். டேவிட்ராஜூ ஆய்வுகள் எழுதியவர் அல்ல. ஒரு செய்தியை எவ்வாறு எழுதவேண்டும் அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நிருபர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்.
இவர் 2010 இல் மறைந்தபோது நான் கொழும்பில் நின்றமையால், இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.
எஸ். எம். கார்மேகம்
சிரேஷ்ட துணை செய்தி ஆசிரியராக பணியாற்றிய கார்மேகம் பெரும்பாலும் இரவுநேரத்தில் கடமைசெய்பவர். மறுநாள் காலையில் வெளியாகும் நகரப்பதிப்பிற்காக வருவார்.
இரவுச்சாப்பாட்டுவேளையில் ஆமர்வீதி சந்திக்கடைகளுக்கு நான் செல்லும்போது, அவர் கேட்கும் உணவும், சிகரட்டும் வாங்கி வந்து கொடுப்பேன்.
அப்படியொரு இரவு நேரக்கடமையின் போதுதான் கென்யா நாட்டின் அதிபர் கென்யாட்டா இறந்தார் என்ற செய்தி வந்தது.
ஆங்கிலத்தில் வந்த செய்தியை மிகவும் சிறப்பாக மொழிபெயர்ந்து மறுநாள் நகரப்பதிப்பில் வீரகேசரியில் தலைப்புச் செய்தியாக கார்மேகம் எழுதினார்.
கறுப்பின மக்களின் தலைவரான கென்யாட்டா ஒரு கவிஞர். அவரது பிரபலமான கவிதை வரிகளையும் அச்செய்தியில் இடம் பெறச் செய்தார் கார்மேகம்.
“அவர்கள் வரும் போது எங்களிடம்
நிலங்களும் அவர்களிடம் வேதாகமும் இருந்தன.
சிறிது காலத்தில் அவர்களிடம் எங்கள்
நிலங்களும், எங்களிடம் அவர்களின்
வேதாகமமும் இருந்தன.
வெள்ளையர் இனம் எவ்வாறு கறுப்பின மக்களின் வாழ்வை நயவஞ்சகமாக சூறையாடியது என்பதை துல்லியமாக உணர்த்தும் அக்கவிதை வரிகளை இலக்கிய நயத்துடன் எழுதியிருந்தார் கார்மேகம்
அவர் கடமைக்கு வரும் வேளையில், நான் பகல் கடமை முடிந்து வீடு திரும்பும் போது, அருகே சென்று “நீங்கள் இன்றைய தலைப்புச் செய்தியை மிகுந்த இலக்கிய நயத்துடன் எழுதியிருக்கிறீர்கள். என்னால் மறக்க முடியாத எழுத்து. வாழ்த்துக்கள்” என்றேன்.
“அப்படியா… நன்றி” என்று மட்டும் தன்னடக்கத்துடன் சொன்னார்.
எந்தவொரு முக்கியமான செய்தியையும் ஆய்வறிவுடன் எழுதும் பழக்கம் இவரிடம் இயல்பாகக் குடியிருந்தமையால்தான், பின்னாளில் மூன்று அருமையான அரிய நூல்களை இவரால் எழுத முடிந்திருக்கிறது.
ஈழத்தமிழர் எழுச்சி – ஒரு சமகால வரலாறு , ஒரு நாளிதழின் நெடும் பயணம் - வீரகேசரியின் வரலாறு , கண்டி மன்னர்கள் ஈழத்தமிழர் எழுச்சி வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும், அரசியல் ஆய்வாளர்களுக்கும் சிறந்த உசாத்துணை நூலாக விளங்குகிறது.
இதனை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என்று சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்ட செய்தியையும் பின்னாளில் அவுஸ்திரேலியாவிலிருந்து பத்திரிகைகளில் படித்தேன்.
நடராஜா
கொழும்பில் அரசகரும மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யவந்த நடராஜாவை 1956 இல் வீரகேசரி விளம்பரப்பிரிவு உள்வாங்கியிருந்தது. அதன்பின்னர் ஆசிரியபீடத்தில் துணைஆசிரியராக சிரேஷ்ட துணை ஆசிரியராக செய்தி ஆசிரியராக படிப்படியாக உயர்ந்து பிரதம ஆசிரியராகி ஓய்வு பெற்றார்.
சுருக்கமாகச்சொன்னால் அன்று நாம் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம். பிரச்சினைகள் மழைமேகங்கள் போன்று வந்துபோயிருக்கலாம். மழைவிட்டும் தூரல் நில்லாமல் தொடர்ந்திருக்கலாம். எனினும் அந்த ஈரலிப்பில் சகோதரவாஞ்சைதான் துளிர்த்தது.
அடுத்த அங்கத்தில் மேலும் தொடருவேன். வீரகேசரி வாழ்க்கைபற்றி எழுதித்தீராத பக்கங்கள் நிறையவுள்ளன.
( தொடரும் )
No comments:
Post a Comment