சுயஸ் கால்வாயில் மீண்டும் போக்குவரத்துகள் ஆரம்பம்
வான் தாக்குதலால் மியன்மாரில் 3,000 பேர் தாய்லாந்துக்கு ஓட்டம்
மியன்மாரில் பேரழிவை தவிர்க்க பாதுகாப்பு சபையில் மன்றாட்டம்
அஸ்ட்ராசெனகா பயன்பாட்டுக்கு ஜேர்மனி, கனடாவில் கட்டுப்பாடு
490 பேர் பயணித்த புகையிரதம் சுரங்கத்தில் தடம்புரள்வு; 48 பேர் பலி
சுயஸ் கால்வாயில் மீண்டும் போக்குவரத்துகள் ஆரம்பம்
சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 100 கப்பல்கள் கடல்வழிப் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளன.
அங்கு போக்குவரத்து தடைபட்டதால் சிக்கிக் கொண்ட கப்பல்களில், முதலில் ஹொங்கொங்கைச் சேர்ந்த கப்பல் ஒன்று விடுவிக்கப்பட்டது.
சுயஸ் கால்வாயைத் தாண்டிச் செல்லும் கப்பல்கள் பொதுவாக எகிப்துக்குக் கால்வாயைப் பயன்படுத்திக்கொள்வதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
எவர் கிவன் கொள்கலன் கப்பல் தரைதட்டியதால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட, கப்பல் உரிமையாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு, 12 மில்லியன் டொலருக்கும் 15 மில்லியன் டொலருக்கும் இடைப்பட்ட தொகையை இழப்பீடாகக் கோரவிருப்பதாக எகிப்து கூறியுள்ளது.
எவர் கிவன் கப்பல் மீண்டும் அதன் கடல் பயணத்தைத் தொடர முடியுமா என்பதை உறுதிசெய்ய சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கப்பல் உரிமையாளர் கூறினார். தற்போது அந்தக் கப்பல் சுயஸ் கால்வாயில் எங்கும் நகராமல், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் நிற்பதைத் செய்மதிப் படங்கள் காட்டுகின்றன.
கால்வாயில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீராக, மூன்றரை நாட்கள் வரை ஆகும் என்று கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற 422 கப்பல்களும் 3 அல்லது 4 நாட்களில் சுயஸ் கால்வாயை கடந்து செல்லும் என சுயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நன்றி தினகரன்
வான் தாக்குதலால் மியன்மாரில் 3,000 பேர் தாய்லாந்துக்கு ஓட்டம்
மியன்மாரின் தென்கிழக்கு கரேன் மாநிலத்தில் இன ரீதியான கிளர்ச்சிக் குழு ஒன்றின் மீது இராணுவம் நடத்திய குண்டு வீச்சை அடுத்து 3,000 பேர் வரை அண்டை நாடான தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
நாட்டின் கிழக்கு எல்லைக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் ஒரு முகாம் உட்பட முட்ரோ மாவட்டத்தில் ஐந்து இடங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
'அப்போது கிராம மக்கள் காடுகளில் ஒளிந்துகொண்டதோடு 3000 பேர் எல்லை கடந்து தாய்லாந்தில் அடைக்கலம் பெற்றனர்' என்று கரேன் பெண்கள் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் பதற்றம் அதிகரித்துள்ளது. நன்றி தினகரன்
மியன்மாரில் பேரழிவை தவிர்க்க பாதுகாப்பு சபையில் மன்றாட்டம்
சீனா, ரஷ்யா, இந்தியா, வியட்நாம் முட்டுக்கட்டை
மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அங்கு இரத்தம் சிந்தப்படும் நெருக்கடி குறித்து மியன்மாருக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் கிறிஸ்டின் ஸ்கெர்னர் பர்க்னர், பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் மூடிய அறையில் கடந்த புதனன்று உரையாற்றிய ஸ்கெர்னர் பர்க்னர், பெப்ரவரி 1 ஆம் திகதி அதிகாரத்தை கைப்பற்றிய இராணுவத்திற்கு நாட்டை கையாள முடியாதிருப்பதாகவும் களநிலவரம் மேலும் மோசமடைவதாகவும் எச்சரித்துள்ளார்.
“மியன்மார் மக்களுக்கு என்ன சரியோ அதனை செய்வது மற்றும் ஆசியாவின் மையப்பகுதியில் பேரழிவை தவிர்க்க கூட்டு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு இருக்கின்ற அனைத்து சாதகங்கள் பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரத்தம் சிந்தப்படும் நிகழ்வுகளின் போக்கை மாற்றுவதற்கு முக்கிய நடவடிக்கைகளை இந்தச் சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்கெர்னர் பர்க்னர் கேட்டுக்கொண்டார்.
மியன்மாரில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தை நடத்த பிரிட்டன் கோரிக்கை விடுத்திருந்தது. மியன்மாரில் இதுவரை குறைந்தது 521 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு கடந்த சனிக்கிழமை மாத்திரம் 141 பேர் கொல்லப்பட்டனர். மறுபுரம் முன்னரங்குப் பகுதிகளில் சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பாதுகாப்புத் தேடி மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
“இராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாது. சர்வதேச சமூகத்திடம் இருந்து கண்டிப்பான செய்தி வழக்கப்பட வேண்டும்” என்று ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதுவர் பார்பரா வூட்வேர்ட் பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சர்வதேசம் பதில் அளிக்கும் வகையில் பாதுகாப்புச் சபை பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புச் சபை இதுவரை மியன்மாரில் இடம்பெறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து இரு அறிக்கைகளை வெளியிட்டபோதும், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் வியட்நாமின் எதிர்ப்புக் காரணமாக இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டிக்கும் சொற்பதம் நீக்கப்பட்டதோடு அந்நாட்டின் மீது மேலும் நடவடிக்கை எடுப்பது தடுக்கப்பட்டது.
இதன்போது மியன்மார் இராணுவத் தலைவர்கள் மீதான தடை முயற்சியை சீனா நிராகரித்தது. இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நாவுக்கான சீனத் தூதுவர் இந்த அவசரக் கூட்டத்தில் தெரிவித்தார். நன்றி தினகரன்
அஸ்ட்ராசெனகா பயன்பாட்டுக்கு ஜேர்மனி, கனடாவில் கட்டுப்பாடு
இரத்த உறைவு அச்சம் காரணமாக 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்குவதை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட சுமார் 2.7 மில்லியன் பேரில் மிக அரிதாக 31 இரத்த உறைவுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக 55 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்குவதை கனடா இடைநிறுத்தியது.
எனினும் தமது தடுப்பூசியில் ஆபத்தை விடவும் மிக அதிக நன்மை இருப்பதை சர்வதேச மருந்து சீராக்க அமைப்புகள் கண்டுபிடித்திருப்பதாக அஸ்ட்ராசெனகா தெரிவித்துள்ளது.
எனினும் இது பற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது. கடந்த மாத ஆரம்பத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தை ஐரோப்பாவின் அதிக நாடுகள் இடைநிறுத்திய நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் மருந்து சீராக்க அமைப்புகள் அந்த மருந்துக்கு அதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்ட்ராசெனகா தடுப்பூசி ஐரோப்பாவில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு அந்த மருந்து இலாப நோக்கின்றி விநியோகிக்கப்படுகிறது. நன்றி தினகரன்
490 பேர் பயணித்த புகையிரதம் சுரங்கத்தில் தடம்புரள்வு; 48 பேர் பலி
- சுரங்கம் அருகில் நிறுத்தப்பட்ட வாகனமே காரணம் என தெரிவிப்பு
- நுழைவாயில் அடைத்துள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் நிலை
கிழக்கு தாய்வானின் ஹுவாலியன் வடக்குப் பகுதியில் 490 பயணிகளுடன் பயணித்த புகையிரதமொன்று, சுரங்கப்பாதையொன்றினுள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (02) காலை, 8 பெட்டிகளுடனான குறித்த புகையிரதம், டைடுங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் புகையிரதத்தின் சாரதி உள்ளிட்ட 48 பேரே உயிரிழந்துள்ளதுடன், சுமார் 66 பேர் காயமடைந்து ஹுவாலின் நகரிற்கு அருகிலுள்ள 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுரங்கப் பாதைக்கு அருகில் சாய்வான இடமொன்றில் தரித்து நிறுத்தப்பட்ட வாகனமொன்று, உரிய முறையில் தரித்து நிறுத்தப்படாத நிலையில், வேகமாக பயணித்த புகையிரதம் குறித்த லொறியின் மீது மோதியதில் தண்டவாளத்திலிருந்து விலகிய புகையிரதம் சுரங்கப் பாதை வழியே சென்று பக்கவாட்டு சுவரில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதோடு, சுரங்கப் பாதையில் புகையிரதப் பெட்டிகள் குறுக்கு மறுக்காக மோதியுள்ளதால், அதற்குள் செல்வதற்கான வழிகள் அடைக்கப்பட்டு மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் சரியாக கணக்கிட்டு கூற முடியாத அளவிலான பயணிகள் சிலர் இன்னும் புகையிரத பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளதோடு, அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment