முருகபூபதியின் பறவைகள் நாவல்


 “ எல்லாவகையான மனிதர்களும் நிறைந்தது தான் நம் சமூகம். நாம் யாராக அதில் நிற்கப்போகிறோம் என்று நம்மை ஒரு படைப்பு சிந்திக்க வைப்பதுதான் ஒரு சிறந்த இலக்கியம் !  “

 

                  மதிப்பீடு  :  விஜிராம் – அவுஸ்திரேலியா

 


"எங்கெங்கோ வானத்தில் வட்டமிட்டாலும் பறவை இரை தேட தரையிறங்கி வந்துதான் ஆகவேண்டும்" என்று முன்னுரையில் ஒரு தத்துவார்த்த வாக்கியத்தோடு தன்னுடைய முதல் நாவலை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் ஆசிரியர் முருகபூபதி அவர்கள்.   பறவைகள்  2001 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல்.

உறவுகளிடையே உள்ள ஆத்மார்த்தமான பந்தத்தையும் உறவுகளின் சிக்கல்களையும் இந்த நாவல் அழகுற காட்சிப்படுத்தியுள்ளது. இனப்போராட்டம், யுத்தம், அதனால் இடப்பெயர்வு, வர்க்க அரசியல், ஜாதி மற்றும் தீண்டாமை போன்ற பிரச்சினைகளுக்கு இடையில் இலங்கை தமிழ் மக்களின் இரண்டு சகாப்தத்திற்கு முந்தைய வாழ்வை


படம்பிடிக்கிறது நாவல்.

 

யாழ்ப்பாணத் தமிழில் படைக்கப்பட்டுள்ளது சுவையாகவுள்ளது. நீர்கொழும்பை மையமாக வைத்து இயங்கும் இந்த நாவல், நம்மை நீர்கொழும்பில் ஒவ்வொரு வீதியிலும், கடற்கரையிலும், அங்குள்ள கோவில்களிலும் ஒரு மெய்யான தரிசனத்தைத் தருகிறது.

 

பெற்ற தாய் தந்தையையும், இயக்கத்தில் தம்பியையும் இழந்து, பாதியில் விடப்பட்ட  தாதிப்பயிற்சி, கருகிப்போன காதல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தடுக்கும் நரைமுடி என்று மாமாவிற்குப் பின் தன்னுடைய எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக தொக்கிநிற்கும் முதிர் கன்னி தேவகி நாவலின் நாயகி.

 

கலப்புத்திருமணம் செய்துகொண்ட பெற்றோரை தன் சொந்த தாய்மாமனான ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சிற்றம்பலத்தார் வெறுத்து ஒதுக்கியிருப்பார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்தவன் பாலன்,  திருமணமாகி குடியுரிமைக்காக சுவிஸ் தேசத்தில் காத்திருக்கிறான். இளையவன் குமார், தேவகியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குறுதியும், முத்தங்களும் தந்த பின், தந்தையின் சூதினால் மேல் படிப்பிற்காக ஆஸ்திரேலியா குடியுரிமை பெறவேண்டி தன்னலத்தினால் அங்கேயே புனிதா எனும் பெண்ணை மணந்து வாழ்கிறான்.

 

மகள் சுமதியோ அச்சுவேலி மாப்பிளை அரசனுக்கு சீதனமும் கொடுத்து பிள்ளையார் கோவிலில் தாலியும் அணிந்து கொண்டு "பார்சல் பெண்ணாக" ஜெர்மனிக்கு சென்று குடியேறுகிறாள்.

 

சாதியின் பெயரால் எந்த மாமனால் ஒதுக்கிவைக்கப்பட்டாளோ அதே மாமனுக்கு வயோதிப காலத்தில் ஒரு தாதியைப் போல,  அதற்கு மேலேயும் ஒரு தாயைப்போல சேவகம் செய்து பார்த்துக்கொண்டு அன்பே வடிவாக வாழும் அபலை தேவகி.

 

அவரின் மூன்று மக்களும் அயல்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தில் நோயாளி மாமா மற்றும் அவளது வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டு ஒவ்வொருவரிலும் சார்ந்து வாழும் அவமானகரமான புரட்டிப்போட்ட வாழ்க்கை  தேவகிக்கு.

 

கோவிலுக்குச் சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் இருந்த சுமதி, தற்சமயம் கணவனை பிரிந்து இரண்டு ஆண் குழந்தைகளுடன் தனியாகவும், சுதந்திரமாகவும்  ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். சமுதாயத்தால் கற்பிக்கப்பட்ட,  திணிக்கப்பட்ட  சாதிய அடக்குமுறைகள், திருமண வாழ்க்கை, ஆண் ஆதிக்கம் பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை கேள்வியெழுப்பும் விதமாக பரிணமிக்கும் சுமதி.மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை” பற்றிய ஒரு ஆய்வறிக்கையை ஒரு பத்திரிகைக்கு தயார்படுத்தும் அளவுக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் போல் பொலிவுற்று திகழ்கிறாள். அவளது திருமணவாழ்வு, கணவனின் குறுகிய மனம், சூழலும், நாடும் அவளை இப்படியான சிந்திக்கும் அறிவு தளத்தில் உயர்த்தியிருக்கிறது.

 

"கொதி வாத்தி" யாக இருந்த சிற்றம்பலத்ததார் இன்று முதுமை கண்டு, பெற்ற பிள்ளைகளோடு வாழும் கொடுப்பினை இன்றி நோய்வாய்ப்பட்டு செய்த பிழைக்கு பிராயச்சித்தம் தேடும் பாவனையில் எல்லாவற்றிலும் அந்நியப்பட்டு மௌனமே உருவாக காட்சி அளிக்கிறார்.

 

"பக்தியால் யானுனைப் பல காலும்

பற்றியே மாதிருப் புகழ் பாடி

முத்தனா மாறெனப் பெருவாழ்வின்

முத்தியே சேர்வதற் கருள்வாயே" என்று இறைவனிடம் புலம்புகிறார்.

 

வாஞ்சையோடு பழகும் செல்லம் ஆச்சி, உதவி என்றால் மறுக்காது செய்யும் முஸம்மில் எனும் முஸ்லீம் இளைஞன், சிறந்த நண்பர் லோரன்ஸ் மாஸ்டர், முதலாளித்துவ மனோபாவத்தில் வாடகை வீ ட்டு சொந்தகாரி மரியம்மா, பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் ஊதாரியாய் வம்புபேசித் திரியும் சுந்தரம் என அன்றாடம் நம்மை சுற்றி இருக்கும் நபர்களையே நாவல் முழுக்க பார்க்கமுடிகிறது.

 

யதார்த்த வாழ்க்கைக்கு மிக அருகில் இருப்பதால் நம்மை அந்த ஒவ்வொரு பாத்திரத்தினூடாகவும் நின்று சிந்திக்க வைக்கிறது. கதை எவ்விடத்திலும் தேக்கமடையாமல் விறுவிறுப்பாக நகர்ந்துபோகிறது.

 

வெளிநாட்டவர்கள் கண்ணோட்டத்தில் இலங்கைத்  தமிழர் என்றாலே "புலிகள்" என்று பார்க்கப்பட்ட நிலை, முருங்கை மரத்து மசுக்குட்டிகள் தீயில் இட்டு பொசுக்கப்பட்டாலும் அவை மறுநாள் மீண்டும் ஊர்ந்து செல்வதைக் காண்கையில் "எங்கட இனம் மாதிரி" என்று சொல்லும் இடம், ரத்தம் சிந்தாத தேர்தல் எங்க நாட்டில் நடைபெற வாய்ப்பே இல்லையா…?  என்று ஆதங்கத்துடன் கேட்கும் கேள்வி,

 

ராஜனுக்குத் தொலைந்தது அடையாள அட்டை தான்.  ஆனால்நானோ அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறேன்” எனும் போதும்,   தலையணை ஒன்றுதான்,  அதற்குப் போடப்படும் உறைகள் தான் மாறும், மக்கள் உறங்கிப் பழகிவிட்டார்கள் என்று தேர்தல் முடிவைப் பற்றி கூறும் போதும்,    மனம் எண்ணி எண்ணிச் சுகம் காணும் உலகத்திற்கும், எதார்த்தத்தில் அதற்கு ஏற்படும் காயங்களுக்கும் இடையிலான முரண்களைப் பேசுகிறது.

 

நாவலினூடே முஸ்லிம்களை வெளியேற்றிய அரசியல், மொழி அரசியல்,தேர்தல் அரசியல் என்று அன்றைய அரசியல் சூழலை ஆசிரியர் சொல்லத் தவறவில்லை.

 

கதையின் ஓட்டத்தில், அயல்நாடுகளில் குடியேறிய நம் மக்கள் (கோவில் கட்டுவது பின்னர் அதனால் எழும் அரசியல், தமிழ் பேசத் தெரியாத பேரன்களிடம் உரையாடவோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ தவிக்கும் தாத்தா பாட்டிகள்) என்று தமிழ் சமூகத்தின் மீது அவர் எடுத்து வைக்கும் விமர்சனங்கள் இக்காலத்திலும் தவிர்க்க இயலாதவை.

 

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவதில்லை என்னும்படி, ஒரு நாள் சிற்றம்பலத்தார் மாண்டுவிடுவதும், தேவகியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி போனதும் தான் முடிவு.

 

"உறவு தண்ணீர் போல, பிரிக்க முடியாது பிள்ளை" என்று செல்லம் ஆச்சி சொல்லும் இடத்தில் எல்லா நவீன வாழ்கைக்குப் பிறகும் அடிப்படை உறவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் நிதர்சனம். மனித மனங்கள்,  உறவுகளுக்காக ஏங்கிக்கொண்டுதான் இந்த விஞ்ஞான யுகத்திலும் இருக்கிறது.

 

அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரையின் ஓரிடத்தில் கண்ணதாசன் சொல்வது போல் "இரத்தத்தின் அடர்த்தி நீரை விடக் குறைவு, அதனால்தான் அது உறவு என்று வரும்போது அவ்வளவு இளகி விடுகிறது போலும்" என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.

 

ஒரு எழுத்து நம் வாழ்வை பிரதிபலிக்கும்போது அதனோடு மனம் ஒன்றிவிடுகிறது. எல்லாவகையான மனிதர்களும் நிறைந்தது தான் நம் சமூகம். நாம் யாராக அதில் நிற்கப்போகிறோம் என்று நம்மை ஒரு படைப்பு சிந்திக்க வைப்பதுதான் ஒரு சிறந்த இலக்கியம் ஆகும்.

 

அந்தப் பாதிப்பை பறவைகள் எனக்கு கொடுத்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.  

 

இந்த நாவலுக்காக சாகித்திய விருது வென்ற முருகபூபதி அய்யாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

 

sammukeshav@gmail.com

 

( நன்றி: இலங்கை ஜீவநதி நாவல் சிறப்பிதழ் )

 

---0---

 

 

   

No comments: