ஈழத்தின் கலைக் காவலர் மரிய சேவியர் அடிகளார்

165874699_521891862135327_7665863695597949530_n.jpeg

  கானா பிரபா


சொந்த இனத்தில், மொழியில், மதத்தில் கலாசாரத்தில் பற்று வைக்க வேண்டும்; அப்பற்று, வெறியாக மாறிவிடக்கூடாது. ஒவ்வொருவருடையதும், ஒவ்வொன்றினதும் தனித்துவம் போற்றப் பட வேண்டும் . அத்தனித்துவம், பொதுநலனுடனும், பொது நோக்குடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. எந்த ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளும் நில்லாது, தற்பண்பு, தற்சிறப்பு, தன்னிறைவு பேணிக்காத்து வாழ்வை நெறிப்படுத்துவதே உயர்மானிடம்.” – மரிய சேவியர் அடிகளார் ( கலைமுகம் ஆடி – புரட்டாதி 1994)

ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகளை பத்திரிகை வழி அறிந்திருந்ததோடு சரி, அவ்வப்போது அவர்களது அரங்காற்றுகள் குறித்து கட்டுரைளும், செய்திகளுமாக வரும். ஒரு விதத்தில் தெளிவு இருந்தது. மதம் கடந்து ஒரு பொதுமையான கலை முயற்சிச் செயற்பாட்டில் இயங்குகின்ற இயக்கம் என்ற விளக்கம் மனதில் பதிந்திருந்தது.
இருபது வருடங்களுக்கு முன்னர் வானொலியில் “ஈழத்து முற்றம்” என்ற ஈழத்துக் கலை, இலக்கியப் பதிவுகள் சார்ந்த வானொலிச் சஞ்சிகையை நடத்திய போது ஒரு நேயர் இறுவட்டு ஒன்றைக் கொண்டு வந்து தந்தார். அருட் தந்தை மரிய சேவியர் அடிகளார் அவர்கள் நெறிப்படுத்திப் பல்வேறு நாட்டுக் கூத்துப் பாடல்களை அறிமுகப்படுத்திப் பாடிய அந்த இசைப் பெட்டகம் ஈழத்து முற்றம் நிகழ்ச்சியில் ஒரு புதுப் பரிமாணத்தை நேயர்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக இருந்தது. அன்றிலிருந்து மரிய சேவியர் அடிகளார் மீதான நன்மதிப்பைத் தூர இருந்தே மனதில் பதித்து வைத்துக் கொண்டேன்.
டான் தமிழ் தொலைக்காட்சி அவருக்கு “சாதனைத் தமிழன்” என்ற விருதை வழங்கிக் கெளரவித்த தருணம் அடிகளாரை ஒரு பேட்டி செய்ய ஆசைப்பட்ட வேளை அவர் உடல் நலம் குன்றிப் பேச முடியாத சூழலுக்குச் சென்று விட்டார்.

மரிய சேவியர் அடிகளார் நாடக எழுத்தளர் சக நெறியாளர், ஆய்வாளர், மெய்யியல் துறையில் பேராசியர், சஞ்சிகை ஆசிரியர் என்று பன்முகப்பட்ட இலக்கிய, கலை முகம் கொண்டவர்.
இறையியல், வரலாறு, சைவ சித்தாந்தம் போன்றவற்றில் பலகலைக் கழக மட்டத்தில் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். சிறு வயதிலேயே கூத்து மரபில் ஈடுபாடு கொண்டு அதனைக் கற்று அதன் வழி அரங்காடல்களைத் தன் இள வயதிலேயே செய்தவர், ஒரு கட்டத்தில் மாற்றங் காணும் உத்திகளைப் புகுத்தத் தலைப்படுகின்றார். அப்படியாக அமைந்தது தான் பொம்மைகளை வைத்து நடிக்கும் உடக்குப்பாஸ் என்ற திருப்பாடுகளின் காட்சிகளைத் தமிழில் தன் கைப்பிரதியாக எழுதி ஆட் கூட்டத்தோடு அரங்கேற்றினார், இதனைத் தொடர்ந்து எழுந்த தன் நாடக முயற்சிகளில் இசையமைப்பாளர் கண்ணன் தொட்டு சமய வேறுபாடின்றித் திருமறைக் கலா மன்றம் பலரை உள்ளிழுத்தது.

“ஒரு சமயத்தைச் சேர்ந்தவர் வேறோர் சமயத்தைப் பற்றி நாடகம் எழுதுவது சுலபமல்ல. நாடகாசிரியர் மற்றச் சமயத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் மட்டும் போதாது; நாடகப் படைப்புக்குள் தன்னுடைய சொந்த எண்ணங்கள், விளக்கங்களை புகுத்தாது, மற்றச் சமயத்தவர்கள் தமது கொள்கைகளைப் பற்றிக் கொண்டுள்ள அவர்களது கருத்துக்களை, வழுவின்றி எடுத்துரைக்க வேண்டும். (சைவப் புலவரின் கிறீஸ்த்தவக் கூத்து, மரிய சேவியர் அடிகளார், தமிழ்க் கலை விழா சிறப்பு மலர் 1994).

மேற் குறிப்பிட்டுள்ள தெளிவுடனேயே அவர் கிறீஸ்தவம் கடந்த படைப்புகளையும் அணுகினார். சைவசித்தாந்தத்தையும் சலனமின்றிக் கற்றார். சைவ சித்தாந்த ஆய்வு வட்டத்தைத் திருமறைக் கலாமன்றத்தின் 33 பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க முடிந்தது.

“சைவ சித்தாந்த மெய்யியல் தான் தமிழர்களுடைய மெய்யியல்” என்று துணிந்து கூறியிருக்கின்றார் (காலம் ஏப்ரல் 2016 பேட்டி கண்டவர் யோண்சன் ராஜ்குமார்)

55 ஆண்டுகள் திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்பை நிறுவிக் கொண்டு நடத்தியதோடு உலகெங்கும் அது கிளை விரிக்க ஏதுவாக இருந்தவர்.

கலை வழி சமயப் பணியும், சமூகப் பணியும் ஆற்றிய வகையில் அவருக்கு யாழ் பலகலைக் கழகம் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருக்கிறது.

கிறீஸ்தவ அன்பர்களின் புனித தவக்காலத்தில் ஆண்டகை இராயப்பு யோசோப்பு அவர்களை இழந்த துயர வேளை, மரிய சேவியர் அடிகளாரது இழப்பையும் ஒரே நாளில் ஏற்க வேண்டிய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் ஆட்பட்டிருக்கின்றது.

உசாத்துணை

கலைமுகம் ஆடி – புரட்டாதி 1994
தமிழ் கலை விழா சிறப்பு மலர் 1994
தொண்டன் நவம்பர் 2010
காலம் ஏப்ரல் 2016


No comments: