யாழ்ப்பாணம் - ஒஸ்ரேலியா மெல்போர்ன் நியூ விக்ரேர்ஸ் குணம் அண்ணா விடைபெற்றார்.

 .


யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில் எழும். அவை பாரம்பரியத்திற்குரியவையாகவும் நவீனத்துவமானவையாகவும் அமைந்துள்ளன.
1970கள் யாழ்ப்பாணம் பல்வேறு விதமான நவீன தொழில் நுட்பங்களை தம்மகத்தே உள்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம்.
இசைப்பிரியர்களை மகிழ்வித்துவந்த இசைக்களஞ்சியமாக யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது நியூ விக்ரேர்ஸ்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில், யாழ்.பொது மருத்துவமனைக்குப் பின்புறமாக அமைந்திருந்தது.
அந்தக்காலகட்டத்தில் திரைப்படப்பாடல்கள் கேட்பதென்றால் இலங்கை வானொலி ஒன்றே வழியாக இருந்தது.
வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்கும் இசைப் பிரியர்கள் மீண்டும் அப்பாடல்களைக் கேட்பதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது நியூ விக்ரேர்ஸ் நிறுவனம்.
தென்னிந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களின் பாடல்கள் 45RPM இசைத்தட்டுக்கள், LP இசைத்தட்டுக்கள் என்பவற்றில் வெளியாகும்.
அந்த இசைத்தட்டுக்களை யாழ்ப்பாண மக்கள் பார்க்கக்கூடியதாகவும், அதிலிருந்து பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து கொள்வதற்கும் வழி வகுத்தவர்கள், முன்னோடிகள்.
இசைப்பிரியர்களின் இசைத்தாகத்தைத் தீர்ப்பதில் பெரும்பணியாற்றியவர்கள்.
தினமும் மாலை வேளையில் ஒரு இசை இரசிகர் கூட்டம் நியூ விக்ரேர்ஸ் முன்பாகக் கூடி நிற்பார்கள்.


பாடல்கள்,நாதஸ்வரக்கச்சேரிகள்,வயலின், வீணை இசைக்கோலங்கள் எனப்பலவற்றை ஸ் ரீரியோ தொழில் நுட்பத்தில் இசைப்பிரியர்கள் தினமும் கேட்டு மகிழ்வார்கள்.
ஈழத்துப் பொப்பிசைப்பாடல்களையும் ஒலிபரப்பி மக்களை மகிழ்வித்தார்கள்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் அவர்கள் நியூ விக்ரேர்ஸ் நிறுவனத்துக்கு நேரடியாக விஜயம் செய்வது வழக்கம்.
இதுபோல பொப்பிசைப்பிதா நித்தி கனகரட்ணம் அவர்கள், ‘அண்ண ரைற்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள், எம்.பி.பரமேஸ் அவர்கள் எனப் பல கலைஞர்களின் அபிமானத்துக்குரிய நிறுவனம் நியூ விக்ரேஸ்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அத்தனை கலை நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவுக்கரம் கொடுக்கும் நிறுவனம்.
தொலைக்காட்சி இலங்கையில் அறிமுகமான வேளையில் அதனை முதன் முதலில் யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மாத்திரமல்ல, பாமரமக்களும் தொலைக்காட்சியைப் பார்த்துமகிழ உதவியவர்கள்.
சனசமூக நிலையங்கள், பொது அமைப்புகள் பலவற்றுக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியவர்கள்.
வீடியோ டெக், வீடியோ கமெரா என்பனவற்றை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியவர்கள்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கே.ஜே.ஜேசுதாஸ் - சுஜாதா(சிறுமி), ரி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை இவர்களது வீடியோ கமெரா தான் படம்பிடித்தது.
யாழ்ப்பாணம் பி.எம்.சி ஒழுங்கையில் நான்கு மாடிகள் கொண்ட நியூ விக்ரேர்ஸ் ஒலி-ஒளிப்பதிவுக்கூடம் ஒன்று மிகவும் பிரமாண்டமாக அமைந்தது.
நியூ விக்ரேர்ஸ் யாழ் நகரில் அமைந்தமை யாழ்ப்பாணத்துக்குப் பெருமை சேர்த்தது.
மேல்மாடியில் திறந்த கலையரங்கமும் அமைந்திருந்தது.
இதன் ஆரம்ப விழாவில் பரமேஸ்-கோணேஸ் இசைத்தென்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டின் அசாதாரண சூழலால் புலம் பெயர்ந்து ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் மெல்போர்னிலும் நியூ விக்ரேர்ஸை நிறுவியிருந்தவர்.
இவை மாத்திரமல்ல இன்னும் பல செயற்பாடுகளை யாழ் மண்ணில் மேற்கொண்ட வரலாற்றுக்குரியவர். நான்கு மாடியில் ஒலி-ஒளி கலைக்கூடத்தை அமைப்பதற்கு முன்னர் எம்மைப் போன்றோருடன் கலந்துரையாடினார். கலைஞர்களுக்கு என்ன தேவை என்பதைப்பற்றி ஆராய்ந்த வேளையில், ஓர் உயர் தர ஒலி-ஒளிப்பதிவுக்கூடத்தின் தேவையை அடியேனும் வலியுறுத்தியிருந்தேன்.
அனைத்தையும் கருத்தில் எடுத்துச் செயற்படுத்தியவர் எமது அன்புக்கும் அபிமானத்துக்கும் மரியாதைக்கும் உரிய குணம் அண்ணா என நாம் அழைத்து மகிழ்ந்த தேவசகாயம் ஆசிர்வாதம் அவர்கள் ஒஸ்ரேலியா மெல்போர்னில் ஏப்ரில் 2ம் திகதி காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

- எஸ்.கே.ராஜென் ( முகப்புத்தகம்)

No comments: