இந்து சமுத்திரத்தாயின் அலையோசையையும் அந்த கடலின் மாந்தரையும் அவர்களது அன்றாட வாழ்வையும் சித்திரித்து நான் எழுதிய ஆரம்ப காலச்சிறுகதைகளுக்கு களம் வழங்கி என்னையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய உலகில் எனது பெயரும் நிலைத்திருக்கச்செய்த மல்லிகை ஜீவா அவர்கள் பற்றிய நினைவுப்பதிவுகளும் வெளியாகி , நினைவேந்தல் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்த 27 ஆம் அங்கத்தை எழுதுகின்றேன்.
கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால், உலகெங்கும் வாழும்
தமிழ் முஸ்லிம் சிங்கள கலை இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் ஆழமாக நேசித்த அதேசமயம், உள்நாட்டில் அவர்களின் இன்ப – துன்ப நிகழ்வுகளிலும் குறிப்பாக மரணச்சடங்குகளிலும் பங்கேற்று, தனது சகோதர வாஞ்சையை காண்பித்த ஜீவாவின் பூதவுடல் கொழும்பு கனத்தை மின் மயானத்தில் தகனமாகும்போது அவரது அருமை ஏகபுதல்வன் திலீபனைத்தவிர வேறு நண்பர்கள், உறவினர்கள் எனச்சொல்லிக்கொள்ளத்தக்கதாக எவரும் இல்லை என்பதை அறிந்தபோது, “ …….காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ..? “ என்ற பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
கொழும்பில் நண்பர் மேமன்கவி ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூவினத்தவர்களும் நினைவுபடுத்திய மல்லிகை ஜீவாவின் இயல்புகள் அனைத்தும் கலை, இலக்கியவாதிகளுக்கு முன்மாதிரியானவை.
அதனால் அவர் வரலாறாகியிருக்கிறார். அந்த வரலாறு எமது எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கும் சமகால இதழாசிரியர்களுக்கும் பாடமாகவும் திகழும்.
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகையை முதலில் வெளியிட்ட ஜீவா, நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்தும் புதிய இளம் தலைமுறையினரை அன்றே – அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே இனம்கண்டு வளர்த்துவிட்டார்.
தென்னிலங்கையிலிருந்து திக்குவல்லை கமால், மேற்கிலங்கையிலிருந்து முருகபூபதி, மேமன்கவி, அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவஹர்ஷா, புத்தளத்திலிருந்து ஜவாத் மரைக்கார், கெக்கிராவையிலிருந்து சஹானா ஆகியோரையும் கிழக்கிலங்கையிலிருந்தும் மலையகத்திலிருந்தும் பல கவிஞர்களையும் அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் சிங்கள இலக்கியங்களுக்கும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஊடாக மல்லிகையில் சிறந்த களம் வழங்கினார்.
இந்தச் செய்திகள் யாவும் ஜீவா நினைவேந்தல் அரங்கில் பகிரப்பட்டன.
அவரால் அன்று ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர்
அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அந்த அரங்கில் கூடியிருந்து அவருக்கு நன்றிதெரிவித்தனர். ஆனால், எத்தனையோ மேடைகளில் இத்தகைய நன்றி தெரிவிப்புகளை கேட்டபோதெல்லாம் அவர் தமது ஏற்புரையில் “ எனக்கு எல்லாம் போதுமப்பா… போதுமப்பா…. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்… எழுதுங்கள் “ என்றுதான் சொன்னார்.
ஆனால், இறுதியாக நடந்த நினைவேந்தலில் நிகழ்த்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் பாங்கில் பேசப்பட்ட இரங்கலுரைகளை அவர் கேட்கும் சக்தியிழந்து அக்கினியுடன் சங்கமமாகிவிட்டார்.
இந்தப்பதிவில் அவரும் நானும் கலந்துகொண்ட சில முக்கிய நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றேன்.
1972 முதல் 1987 ஜனவரி வரையில் அவருடன் இலங்கையில் பல பிரதேசங்களுக்கு இலக்கியப்பயணம் மேற்கொண்டிருந்தாலும், அச்சமயங்களில் படங்கள் எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டவில்லை.
எனினும் நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மூத்த படைப்பாளி சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா ஜீவாவின் மல்லிகைப்பந்தலின் கீழ் நடைபெற்றபோது உரையாற்றிய படம் எனது சேமிப்பிலிருக்கிறது.
அந்த நிகழ்வுக்கு எழுத்தாளரும் மருத்துவப்பேராசிரியருமான நந்தி சிவஞானசுந்தரம் தலைமை தாங்கினார். கவிஞர் முருகையன், பேராசிரியர்கள் மௌனகுரு, சுப்பிரமணிய
அய்யர், பிரேம்ஜி ஞானசுந்தரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவுக்கு நான் வருகை தந்த 1987 காலப்பகுதியில் இலங்கையில் மூன்று இலக்கிய ஆளுமைகளின் மணிவிழாக்காலம்.
அவர்கள் இளங்கீரன், எஸ். அகஸ்தியர், மல்லிகை ஜீவா. அச்சமயம் ஜீவா பற்றிய கட்டுரையை வீரகேசரி வாரவெளியீட்டிலும் எழுதியதுடன், மெல்பன் 3 E A வானொலியில் அவர்கள் மூவரினதும் வாழ்வும் பணிகளும் பற்றி விரிவாக உரையாற்றினேன்.
அந்த வானொலி நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கட் கிழமையிலும் பேராசிரியர் இலியேஸர் தொகுத்து வழங்கினார். அந்த ஒலிக்கீற்றை பதிவுசெய்த கெஸட்டை பின்னர் அம்மூவருக்கும் சேர்ப்பித்தேன்.
1990 ஆம் ஆண்டு மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியானது. அந்த ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில்
அதன் வெளியீட்டு அரங்கிற்கு கொழும்பிலிருந்து நண்பர் ராஜஶ்ரீகாந்தன் செல்லும்போது, ஏப்ரில் மாதம் சென்னைக்கு வருவதற்கு ஜீவாவை தயாராக இருக்குமாறும் அதற்கு இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்குமாறும் தகவல் சொல்லி அனுப்பியிருந்தேன்.
அவ்வாறே அவரும் எனது அம்மாவும் குடும்பத்தினரும் இலங்கையிலிருந்தும் நான் மெல்பனிலிருந்தும் சென்னைக்குப் புறப்பட்டோம்.
எனது குழந்தைகளை மூன்றரை வருடங்களுக்குப்பிறகு சென்னையில் பார்க்கின்றேன். ஜீவா அவர்களுக்கு துணையாக வந்தார்.
சென்னையில் அவர் அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல்லத்திலும் நானும் எனது குடும்பத்தினரும் கோடம்பாக்கத்தில் உமா லொட்ஜிலும் தங்கினோம். சென்னையில் கலை இலக்கியப்பெருமன்றம் நடத்திய விழாவில் ஜீவா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அன்றைய தினம் கவிஞர் வைரமுத்துவுக்கும் இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கும் விருது வழங்கினார்கள்.
என். சி. பி. எச். அம்பத்தூரில் ஏற்பாடு செய்திருந்த
மகாநாட்டுக்கும் ஜீவா சென்று வந்தார். கவியரசு கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாவின் மறைவும் அவ்வேளையில் நிகழ்ந்தமையால் அன்னாரின் இறுதி நிகழ்வுக்கும் இருவரும் சென்றோம்.
அடையாறில் ரங்கநாதன் இல்லத்தின் மேல் மாடி கீற்றுக்கொட்டகையில் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக அரங்கு நடந்தது.
அதற்கு கவிஞர்கள் மேத்தா, அக்கினிபுத்திரன், எழுத்தாளர்கள் சு. சமுத்திரம், சிவகாமி, சிட்டி சுந்தரராஜன், சுந்தா சுந்தரலிங்கம், செ. யோகநாதன், தி.க. சிவசங்கரன் ஆகியோரும் வருகை தந்து உரையாற்றினர்.
சுமார் ஒரு மாத காலம் ஜீவா எம்முடன் தினமும் தொடர்பிலிருந்தவாறே தமது இலக்கிய நண்பர்களையெல்லாம் சென்று சந்தித்தார். ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, திலகவதி, ராஜம் கிருஷ்ணன், பாலகுமாரன், அசோகமித்திரன், ஓவியர் மணியம் செல்வன், மேத்தா தாசன் , கண. முத்தையா, அகிலன் கண்ணன் உட்பட பலரை இந்தப்பயணத்தில் சந்தித்தேன்.
இந்தப்பயணம் குறித்து தினகரன் வாரமஞ்சரியிலும் ஒரு தொடர் எழுதியிருக்கின்றேன்.
1997 ஆம் ஆண்டு எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை மெல்பனில் நடத்தியபோது ஜீவாவின் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த எனது பாட்டி சொன்ன கதைகள் நூலை வெளியிட்டு வைத்தேன். அதனை வெறுமனே எனது விழாவாக நடத்தாமல் மூத்த கலை இலக்கிய ஆளுமைகளை பாராட்டி கௌரவித்தேன்.
அண்ணாவியார் இளையபத்மநாதன், ஓவியர் செல்வத்துரை, எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, கவிஞர் அம்பி. ஆகியோர் நம்மவர் சிறப்பு மலர் வெளியீட்டுடன் பாராட்டப்பட்டனர்.
அதே ஆண்டு இலங்கை சென்று என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜீவா அவர்களுக்கும் எங்கள் ஊரில் பெரு விழா எடுத்து பாராட்டி கௌரவித்து விருதும் வழங்கினேன்.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் 1972 இல் ஜீவாவுக்கும் மல்லிகைக்கும் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை. காலம் மாறியது. 1997 ஆம் ஆண்டு அதே இந்து இளைஞர் மன்றத்தின் புதுப்பிக்கப்பட்ட மண்டபத்தில் ஊர் மக்களும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களும் இலக்கிய வாசகர்களும் நிறைந்திருக்க அந்த விழா, என்னை 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்விப்பதற்கு தூக்கிச்சென்ற எமது மாமனாரும் அண்ணி மாத இதழை முன்னர் நடத்தியவரும், இந்து இளைஞர் மன்றத்தலைவருமான அ. மயில்வகனன் தலைமையில் நடந்தது.
அவ்விழாவுக்கு தினக்குரல் சார்பில் அதன் அப்போதைய ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன், செய்தி ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், தினகரன் ஆசிரியர் ராஜஶ்ரீகாந்தன், இலங்கை வானொலி சார்பில் இளையதம்பி தயானந்தா, ரூபவாகினி தொலைக்காட்சி சார்பில் சி. வன்னியகுலம், வீரகேசரி சார்பில் சூரியகுமாரி, நவமணி பத்திரிகை சார்பில் சிவலிங்கம், மற்றும் எழுத்தாளர்கள் மேமன்கவி, தெளிவத்தை ஜோசப், பிரேம்ஜி ஞானசுந்தரன், துரை விஸ்வநாதன், மு. பஷீர், டானியலின் நண்பர் தங்கவடிவேல் மாஸ்டர் அவரது மகன் ஓவியர் செளந்தர், மாணிக்கவாசகர் மாஸ்டர், த. மணி, உட்பட பலரும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்து பத்து ஆண்டுகளின் பின்னர் சென்று அங்கே இத்தனைபேரையும் அழைத்து ஜீவாவுக்கு பெருவிழா எடுத்ததை தற்போது திரும்பிப்பார்க்கும்போது, பேராச்சரியமாக இருக்கிறது.
தொடர்பாடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியம்தான் ! அன்றைய நிகழ்வில் எனது பாட்டி சொன்ன கதைகளின் முதல் பிரதியை எனது அம்மா ஜீவாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
1970 களில் ஜீவாவுடன் என்னை நட்புறவுகொள்ளவேண்டாம் என்று எச்சரித்து அவரை சாதீயக்கண்கொண்டு பார்த்த எனது தாய் மாமனார் சுப்பையாதான் அன்றைய தினம் ஜீவாவிற்கான விழாவுக்கு மங்கள விளக்கேற்றினார்.
நான் ஒரு Silent Killer என்று எனது குடும்பத்தில் பேசிக்கொண்டார்கள் !
காலம் எப்படி எல்லாம் பதில் சொல்கிறது பாருங்கள். நானே எழுத்துலகில் பிரவேசித்த காலத்தில் இப்படி விலை கொடுத்திருந்தால், ஜீவா எவ்வளவு பெரிய விலைகளை கொடுத்திருப்பார்…!
நாம் கடந்துவந்த பாதையை மறக்காமல் இருந்தமையால்தான், செல்லும் பாதை வெளிச்சமாக இருந்தது.
----------
வீரகேசரியில் நான் ஒப்புநோக்காளர் பணியிலிருந்தபோது பல வழக்குகள் பிரபல்யமாகியிருந்தன.
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று எனது தாத்தா நான் சிறுவனாக இருந்தபோது சொல்வதை கேட்டிருக்கின்றேன். ஆனால், அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.
வீரகேசரியை பாடசாலைப்பருவத்தில் படிக்கத்தொடங்கிய பின்னர்தான் புரிந்தது.
சேர். பொன். இராமநாதனின் பேரனும் கிரிக்கட் ஆட்டக்காரருமான சதாசிவம் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட அவளது கணவன் ஐயரின் கொலை வழக்கு, காலி பத்மினி குலரத்தினா கொலை வழக்கு , வில்பத்து காட்டில் இடம்பெற்ற நான்கு இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பான கொலை வழக்கு ( இக்கொலைச்சம்பவம் ஹாரலக்க்ஷ என்ற சிங்களத்திரைப்படமாகவும் வெளியானது) மங்கள எலிய என்ற இடத்தில் ஒரு அழகிய இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு அவளது சடலம் கற்களினால் கட்டப்பட்டு காட்டுப்பகுதியில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, பர்மிய தூதுவரின் மனைவி திருமதி. பூண்வார்ட்டின் கொலை, தெஹிவளை பொலின் டீ குரூஸ் என்ற இளம் யுவதி சம்பந்தப்பட்ட ஒரு சிறுவனின் கொலை, முதலான நீதிமன்ற விசாரணைச்செய்திகளை ஆர்வமுடன் படித்திருந்தமையால், அன்று சிறுவயதில் எனது பொலிஸ் தாத்தா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.
அனைத்து வழக்குமே பெண்கள் சம்பந்தப்பட்டதுதான்.
நான் வீரகேசரியில் முதலில் பிரதேச நிருபராக இணைந்தபோது நடந்த ஹக்மண இரட்டைக்கொலை வழக்கும் பெண் சம்பந்தப்பட்டதுதான்.
இந்த வழக்கு விசாரணை செய்தியை வீரகேசரியில் தொடர்ந்து படித்தவர் மல்லிகை ஜீவா. அவ்வேளையில் அவர் மல்லிகையில் நான்குவித நாக்குகள் ஒரு காவியத்தின் திருப்பம் என்ற தலைப்பில் ஒரு சிறிய குறிப்பும் எழுதியிருந்தார்.
அதற்கு அவர் இராமாயணம் காவியத்திலிருந்துதான் மேற்கோள் காண்பித்தார்.
அரண்மனையிலிருந்த கைகேயியின் தோழி மந்தரை ( கூனி ) வாய் திறந்து பழைய சத்தியத்தை அவளுக்கு நினைவூட்டியதால், மன்னர் தசரதன் மகன் இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு, நெஞ்சைப்பிடித்துக்கொண்டு மாண்டார். கைகேயி மஞ்சள் குங்குமத்தையும் இழக்கநேர்ந்தது. காவியம் இவ்வாறு முதலில் திரும்பியது. சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் காட்டுக்குசென்ற இராமனிடம் அந்த சீதை மானை பிடித்துவருமாறு கேட்டாள். இங்கும் காவியம் மறுபடியும் திரும்பியது.
சூர்ப்பனகை தனது மூக்கை இலக்குவனனால் இழந்து வந்து அண்ணன் இராவணனை தூண்டியதால், அவன் சீதையை சிறைப்பிடித்தான். மீண்டும் இந்தக்காவியம் போருக்குத்திரும்பியது.
இங்கு மந்தரை, கைகேயி, சூர்ப்பனகை, சீதை ஆகிய நான்குபெண்களும்தான் இராம காவியத்தை திசை திருப்பியவர்கள் என்று மல்லிகை ஜீவா எழுதியிருந்தார்.
வீரகேசரியில் வெளியான பல நீதிமன்ற விசாரணைகளை செய்தியில் ஒப்புநோக்கநேர்ந்த சந்தர்ப்பங்களில் எனது பொலிஸ் தாத்தா சொன்னதும், மல்லிகை ஜீவா எழுதிய அந்த நான்குவித நாக்குகள் ஒரு காவியத்தின் திருப்பம் குறிப்பும்தான் அடிக்கடி நினைவுக்கு வரும்.
ஒப்புநோக்காளர் பணியேற்ற காலத்தில் பிதா மத்தியூ பீரிஸ் சம்பந்தப்பட்ட அவரது மனைவி மற்றும் இங்ராம் என்பவர் தொடர்பான கொலைகள், சுண்டுக்குளி மாலினி தற்கொலை பொலிகண்டி கமலம் இராமச்சந்திரன் கொலை முதலானவை வாசகர் மத்தியில் பேசுபொருளாகியிருந்தன.
தற்போதும் பொலிகண்டி ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழ்த்தேசிய அரசியல் பேசும் கட்சிகள், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் அறப்போராட்டம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்னும் சிறிது காலத்தில் களுவாஞ்சிக்குடி முதல் கரவெட்டி வரையிலும், அதற்குப்பின்னர், கொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புத்துறை வரையிலும், அதற்கு சிறிது காலத்தின் பிறகு திருக்கோயிலிலிருந்து திருக்கேதீஸ்வரம் வரையிலும் எதுகை மோனை உச்சரிப்புடன் நடத்துவார்கள்.
பாடசாலை பருவத்தில் பார்த்த சிங்கள ஶ்ரீ தார்ப்பூச்சு போராட்டத்திலிருந்து இந்த போராட்டங்களை ஊடகங்களில் பார்த்துவருவதனால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என நிதானிக்க முடிகிறது !
எழுத்துலகத்தில் பிரவேசித்த காலம் முதல் எமது அகிம்சைப்போரையும், அதன்பின்னர் ஆயுதப்போரையும் 2009 இற்குப்பின்னர் மதியாபரணம் சுமந்திரன் அவர்கள் சொல்லத்தொடங்கியுள்ள இராஜதந்திரப்போரையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
இதனைப்படிக்கும் வாசகர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment