உலகச் செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னிக்கு சிறை தண்டனை 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக பேரணி

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; உலக நாடுகள் கண்டனம்

மியன்மார் மீது புதிய தடைகள்; ஜோ பைடன் எச்சரிக்கை

மியன்மார் சதிப்புரட்சி: பாதுகாப்பு சபை கண்டன தீர்மானத்தை தடுத்தது சீனா

சீனாவின் கடல்துறை சட்டத்தால் பதற்றம்


ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னிக்கு சிறை தண்டனை 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னிக்கு ஆதரவாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1,400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஸ்கோவில் கலகமடக்கும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்வது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 44 வயதான நவல்னிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிகளை மீறியதற்காக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்தது. இந்த வழக்கு சோடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் நஞ்சூட்டப்பட்ட நிலையில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவந்த நவல்னி கடந்த ஜனவரி மாதம் நாடு திரும்பியபோது விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நஞ்சுட்டும் உத்தரவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே பிறப்பித்ததாகக் கூறு நவல்னி, அவரை 'விசம் கொண்டவர்' என்று வர்ணித்தார். இந்தக் குற்றசாட்டை ரஷ்ய அரசு மறுத்தது.

நவல்னி மீது கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரை உடன் விடுவிக்கும்படி வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய மொஸ்கோவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதோடு பலரையும் கைது செய்தனர்.

இரண்டாவது மிகப்பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் சிறு நகரங்களிலும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.   நன்றி தினகரன் 




ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக பேரணி

ரஷ்யாவில் தடுப்புக்காவலில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னிக்கு ஆதரவாக பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து தலைநகர் மொஸ்கோவின் சுரங்க ரயில் சேவை மூடப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நகர மையத்தில் இருக்கும் பல உணவகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதோடு போக்குவரத்துகளும் திசைதிருப்பப்பட்டுள்ளன. ரஷ்யாவெங்கும் கடந்த வாரம் இடம்பெற்ற பேரணிகளில் 4,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விச இரசாயனம் செலுத்தப்பட்டு நவல்னியை படுகொலை செய்யும் முயற்சியில் இருந்து மீண்டு வந்த அவர் ரஷ்யா திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் நிபந்தனைகளை மீறியதற்காகவே கடந்த ஜனவரி 17 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். பெர்லினில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே அவர் நாடு திரும்பி இருந்தார். ஒன்றுகூடல்களுக்கு எதிராக பொலிஸார் விடுத்த எச்சரிக்கையையும் மீறி கிழக்கு ரஷ்யாவில் நவல்னிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.    நன்றி தினகரன் 





மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; உலக நாடுகள் கண்டனம்

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; உலக நாடுகள் கண்டனம்-Myanmar Military Coup

ஆங் சான் சூ கி உட்பட மியன்மாரின் ஆளும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அந்நாட்டு இராணுவம் நேற்று ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தல் மோசடி தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டிருக்கும் இராணுவம், இராணுவத் தளபதி மின் அவுங் ஹிலைங் இடம் அதிகாரம் கையளிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் நாட்டில் ஓர் ஆண்டு காலத்திற்கு அவசர நிலை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூ கியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதி செய்தும் இராணுவ சதிப்புரட்சியை எதிர்த்தும் எழுதப்பட்டுள்ளது. இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று சூ கி அழைப்பு விடுத்துள்ளார்.

பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியன்மாரில் மேற்குலக ஆதரவில் ஜனநாயகம் நிறுவப்பட்டு சில ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் அங்கு இராணுவச் சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அண்டை நாடான சீனாவும் மியன்மாரில் அதிக செல்வாக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் சூ கியின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்ற பின் முதல்முறை பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதற்கு சில மணி நேரம் இருக்கும் நிலையிலேயே இராணுவ ஜெனரல்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நவம்பர் தேர்தலில் சூ கியின் வெற்றி அவரது ஜனநாயக ஆதரவை வலுப்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

தலைநகர் நைபிடோவ் மற்றும் பிரதான வர்த்தக மையமாக உள்ள யங்கோனில் தொலைபேசி மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு ஆளும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூ கி, மியன்மார் ஜனாதிபதி வின் மயின்ட் மற்றும் ஏனைய ஆளும் கட்சித் தலைவர்கள் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக ஆளும் கட்சியின் பேச்சாளர் மியோ நியுன்ட் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மற்றொரு பிராந்திய சட்டசபை உறுப்பினரான பா பா ஹன் கைது செய்யப்படும் வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்த கைதின்போது அவரது கணவர் இராணுவத்திடம் மன்றாடுவதும், குழந்தை ஒன்று அவரது மார்பில் கட்டிக்கொண்டு அழுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

மியன்மார் நாட்டின் பல்வேறு பிராந்தியத்தின் முதலமைச்சர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்களின் குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள்.

தலைநகர் மற்றும் யங்கோன் வீதிகளில் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதோடு மக்கள் பொருட்களை வாங்குவதற்கும், ஏ.டி.எம் இயந்திரங்களில் பயணத்தை பெறுவதற்கும் முண்டியடிப்பதை காண முடிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இணையதள இணைப்பு இல்லாததால் வங்கிகள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

மியன்மாரில் தேர்தலுக்கு பின்னர் அந்நாட்டு இராணுவத்திற்கும் சிவில் அரசுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து இருந்தது.

2011 ஆம் ஆண்டு மின்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பகிர இணங்கியதை அடுத்து நடந்த இரண்டாவது தேர்தலிலேயே சூ கியின் கட்சி 83 வீத வாக்குகளை வென்றது.

எனினும் இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து இராணுவம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டி பதிவு செய்யப்பட்ட சூ கியின் உரை ஒன்று ஆளும் கட்சி பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ளது. அதில் இராணுவத்தின் இவ்வாறான செயல் மியன்மாரை மீண்டும் சர்வாதிகாரம் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்துள்ளார்.

“மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக முழு மனதுடன் எதிர்க்கவும் பதலளிப்பதற்கும் மக்களை நான் கேட்கிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராணுவ சதிப்புரட்சியை இராணுவ ஆதரவாளர்கள் சிலர் கொண்டாடி வருகின்றனர். யங்கோன் வீதிகளில் அவர்கள் வாகனங்களில் அணிவகுப்பாக சென்று தேசிய கொடியை அசைத்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். மறுபுறம் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“எமது நாடு ஒரு பறவையாக இருந்தது. அது பற்றப்பதற்கு கற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே இராணுவம் அதன் சிறகுகளை உடைத்துவிட்டது” என்று மாணவ செயற்பாட்டாளர் ஒருவரான சி து டுன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் கண்டனம்

அமெரிக்கா மியன்மாரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

“மியான்மாரின் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மியன்மார் மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, மேம்பாடு தொடர்பான விருப்பங்களுடன் அமெரிக்கா நிற்கிறது. அந்த நாட்டின் இராணுவம் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக பின் வாங்க வேண்டும்” என அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிலிங்கென் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், மக்களின் விருப்பை மதிக்கும்படி இராணுவத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மியன்மார் நிலைமை குறித்து கவலையை வெளியிட்டிருப்பதோடு மியன்மாருக்கான பிரதான நன்கொடை நாடாக இருக்கும் ஜப்பான் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 75 வயதான ஆங் சான் சூ கி பல தசாப்தங்களாக வீட்டுக் காவலில் இருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் மூலமே ஆட்சிக்கு வந்தார். இராணுவத்திற்கு எதிரான அவரது போராட்ட சர்வதேச அளவில் அவரது புகழுக்குக் காரணமானது.

எனினும் 2017 ஆம் ஆண்டு ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் காரணமாக சூ கியின் சர்வதேச புகழ் சீர்குலைந்தபோதும் உள்நாட்டில் அவர் அதிக செல்வாக்கு மிக்கவராக உள்ளார்.    நன்றி தினகரன் 




மியன்மார் மீது புதிய தடைகள்; ஜோ பைடன் எச்சரிக்கை

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் மீதான தடைகளை மீண்டும் கொண்டுவருவது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் பல தசாப்தங்கள் நீடித்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்து அந்நாடு வெளியேற ஆரம்பித்த பின் அண்மையிலேயே தடைகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மற்றும் மூத்த உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். சூச்சின் ஆளும் கட்சி அண்மைய தேர்தலில் அமோக வெற்றியீட்டிய நிலையில் அந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

1989 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையே சுமார் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சூச்சி, தாம் கைது செய்யப்படும் முன்னர் “இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக போராடும்படி” மக்களுக்கு அழைப்பு விடுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்திருக்கும் இராணுவம் நாட்டில் ஓர் ஆண்டு காலத்திற்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. ஏற்கனவே நிதி, சுகாதாரம், உள்துறை மற்றும் வெளியுறவு உட்பட 11 அமைச்சர்களை மாற்றியுள்ளது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பைடன் கூறியிருப்பதாவது, “மக்களின் விருப்பு அல்லது நம்பகமான தேர்தல் முடிவை அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபடக்கூடாது” என்றார்.

மியன்மார் கடந்த தசாப்தத்தில் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய நிலையில் அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் தடைகள் அகற்றப்பட்டன. இதனை மீளாய்வு செய்ய வலியுறுத்தி இருக்கும் பைடன், “எங்காவது நெருக்கடிக்கு முகம்கொடுக்கு ஜனநாயகத்தின் பக்கம் அமெரிக்கா நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பைடனின் இந்த எச்சரிக்கை மியன்மார் இராணுவத்தின் செயற்பாட்டில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகக் கூற முடியாதிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நாட்டில் ஓராண்டு காலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலையின்போது உண்மையான, ஒழுக்கமான, பல அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயக முறையை அமைக்க, மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லாயிங் உறுதியளித்துள்ளார்.

நியாயமான, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி, வெற்றி பெறும் கட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்கான கால வரம்பை அவர் குறிப்பிடவில்லை.

ஜெனரல் மின் ஆங் ஹ்லாயிங், மியன்மாரின் அரசுரிமை விவகாரங்களில் தலையிட, ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஆங் சான் சூச்சி மற்றும் அவரது கூட்டாளிகள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியாதுள்ளது.

சூச்சி மற்றும் ஜனாதிபதி வின் மியின்ட் இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது கட்சி தரப்புகள் தெரிவித்துள்ளன.

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக சூச்சி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோதும், வீதிகளில் நேற்றும் அமைதி நிலவியது. அனைத்து பிரதான நகரங்களிலும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு இரவு நேர ஊடரங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே தலைநகர் நேப்டாவ் உள்ளிட்ட நகரங்களை இராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. நகர வீதிகளில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, இராணுவ ஆயுத வண்டிகள் ரோந்து வந்த வண்ணம் உள்ளன.

முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதள, தொலைபேசி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், யங்கூன் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து மூடியே உள்ளது.

பிரபல புத்த துறவி ஷ்வே நியா வார் சதாயத்வா–வையும் இராணுவம் கைது செய்துள்ளதால், பெரும்பான்மையாக உள்ள புத்த மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   நன்றி தினகரன் 





மியன்மார் சதிப்புரட்சி: பாதுகாப்பு சபை கண்டன தீர்மானத்தை தடுத்தது சீனா

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை கண்டிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானத்தை சீனா தடுத்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சி மற்றும் நூற்றுக்கணக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இராணுவம் கடந்த திங்கட்கிழமை ஆட்சியை கைப்பற்றியது.

இந்த சதிப்புரட்சித் தலைவர்கள் அமைச்சரவைக்கு மேலான உச்ச கௌன்சில் ஒன்றை நிறுவியுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய நகரான யாங்கோனில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிர்ப்பு மற்றும் ஒத்துழையாமை போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோதும், சீனா ஆதரவு அளிக்காததால் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போனது.

பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றிருக்கும் சீனா, வீட்டோ அதிகாரத்தை கொண்டிருப்பதால் கூட்டு அறிக்கை ஒன்றுக்கு அதன் ஆதரவது அவசிமாக உள்ளது.

பாதுகாப்புச் சபை கூட்டத்தின் ஆரம்பத்தில் மின்மாருக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் கிறிஸ்டின் ஸ்கெரனர், இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டித்துப் பேசினார். கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூச்சியின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றதை இராணுவம் ஏற்க மறுத்த நிலையிலேயே இந்த இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது.

“அண்மைய தேர்தல் முடிவில் சூச்சியின் கட்சிக்கு பெருவெற்றி கிடைத்திருப்பது தெளிவான ஒன்று” என்று ஸ்கெரனர் தெரிவித்தார்.

இதேவேளை, மியன்மார் இராணுவம் நாட்டை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அமெரிக்கா அதிகாரபூர்வமாக ஆட்சிக்கவிழ்ப்பு என்று அறிவித்துள்ளது.

மியன்மாருக்கான வெளிநாட்டு உதவியைப் பரிசீலனை செய்வதோடு அந்நாட்டு இராணுவத் தலைவர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது.

வலுக்கட்டாயமாக நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இராணுவம், மீண்டும் அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கவில்லை என்றால், புதிய தடைகளை விதிக்கத் தயங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.   

அமெரிக்கச் சட்டப்படி அமெரிக்கா, மியன்மார் அரசாங்கத்துக்கு இப்போது உதவிகளை நேரடியாக வழங்கமுடியாது. அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் மூலமாக 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா மியன்மாருக்குச் சுமார் ஒன்றரை பில்லியன் டொலர் கொடுத்துள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஜனநாயக முறைக்கு மாறுவதற்குமான திட்டங்களுக்கு அந்த நிதி உதவியது.

ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக நம்ப ப்படும் தலைவர்களுடன் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது.  நன்றி தினகரன் 




சீனாவின் கடல்துறை சட்டத்தால் பதற்றம்

சீனாவின் புதிய கடல்துறைச் சட்டம் குறித்து ஜப்பானும், பிரிட்டனும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. அந்தச் சட்டம் இருநாட்களுக்கு முன் நடப்புக்கு வந்தது.

அதன் கீழ், வெளிநாட்டுக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த, கடலோரக் காவல் படையினர் ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்.

கடல் பயணம் மேற்கொள்வதற்கான சுதந்திரம்,தென் சீனக் கடலுக்கு மேலுள்ள பகுதிகளில் பறப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு அது தடையாக இருப்பதாக ஜப்பானும், பிரிட்டனும் கூறின.

இரு நாடுகளும் அது குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டன.

பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று அனைத்துத் தரப்பிடமும் அவை கேட்டுக்கொண்டன.

கிழக்குச் சீனக் கடல்பகுதியில் ஜப்பான், சீனா இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் தீவுகள் உள்ளன. அந்த வட்டாரத்தில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் அதிகமாகக் கவலை அடைந்துள்ளது.

பிராந்தியத்தின் கடல் பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனாவின் நடவடிக்கைகளில் அந்நாட்டு கடலோரக் காவல்படை கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 


No comments: