ஸ்வீட் சிக்ஸ்டி 2- திருடாதே - ச சுந்தரதாஸ்

 .தமிழ் திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து படிப்படியாக முன்னேறி நட்சத்திர நடிகராக உயர்ந்தவர் புரட்சி நடிகர் எம்ஜிஆர். ஆரம்ப காலத்தில் இவர் கதாநாயகனாக நடித்த எல்லா படங்களும் சரித்திர கதைகளை அடிப்படையாக கொண்ட படங்களாகவே இருந்தன. இடையில் அவர் நடித்த சில சமூக கதைகளை கொண்ட படங்கள் வெற்றி பெறாத காரணத்தால் சமூகப் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்ஜிஆருக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சிவாஜியின் ரசிகர் மன்றத் தலைவராக பின்னர் உருவெடுத்த எழுத்தாளர் சின்ன அண்ணாமலை ஒரு சமூக கதையுடன் எம்ஜிஆரை அணுகினார் படத்தை தான் தயாரிப்பததாகவும் நடித்துத் தரும்படியும் கேட்டார். சமூக கதை அதிலும் திருடன் வேடம் என்று முதலில் பயந்த எம்ஜிஆர் பின்னர் உடன்பட்டார். 1957 ஆம் ஆண்டளவில் படப்பிடிப்பு தொடங்கியது. பல படங்களில் நடித்த சரோஜாதேவி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு தொடங்கி குறுகிய காலத்திலேயே நாடகத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் எம்ஜிஆரின் கால் முறிந்தது.

இதன் காரணமாக படப்பிடிப்பு ஆறு மாதங்கள் தள்ளிப் போனது. இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை சின்ன அண்ணாமலையால் தாங்க முடியாது என்பதால் எம்ஜிஆரின் ஆலோசனையின்படி படத்தின் தயாரிப்பு ஏ எல் எஸ் புரடக்க்ஷன்ஸ் அதிபர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. கண்ணதாசனின் அண்ணனான சீனிவாசன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். புதுமுக நடிகையாக வந்த சரோஜாதேவி இதற்குள் பிஸி நடிகை ஆகிவிடவே அவருடைய திகதிகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. சரோஜாதேவி என்று நடிக்க வருகிறாரோ அப்போது தான் எம்ஜிஆர் நடிக்கும் படியான சூழ்நிலை உருவானது.


சில ஆண்டுகள் கடந்து 1961இல் திருடாதே என்ற பெயரில் படம் வெளியானது இதில்தான் எம்ஜிஆர் முதன் முறையாக படம் முழுவதும் சேர்ட், பாண்ட் அணிந்து நடித்தார். சண்டை பயிற்சியாளராக ஷியாம் சுந்தர் இப்படத்தின் மூலம் எம்ஜிஆருடன் இணைந்தார். சண்டை காட்சியில் அடிக்கும்போது எழுப்பப்படும் டிஸ்யூம் என்ற ஒலி இப்படத்தில் தான் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது. காதல், வீரம், சோகம், போதனை என்று எல்லாம் கலந்த படமாக திருடாதே தயாரானது.

படத்திற்கான திரைக்கதை வசனத்தை கண்ணதாசன் எழுதினார். வசனங்கள் கருத்துடன் அமைந்தன. எம் என் ராஜம் ,நம்பியார், நாகையா, பி எஸ் தனம், சி எஸ் பாண்டியன் என்று பலர் நடித்த இப்படத்தில் எம்ஜிஆரின் தாயாக லட்சுமி பிரபா உருக்கமாக நடித்திருந்தார். அதேபோல் எம் கே முஸ்தபா, சகுந்தலாவின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. படத்திற்கு மேலும் சிறப்பு சேர்ந்தது தங்கவேலு சரோஜா இருவருடைய நகைச்சுவை காட்சிகளாகும். வில்லனாக வரும் நம்பியாருக்கு அழகிய முகம், அவலட்சணமான முகமுமாக இரு முகங்கள். மேக்கப் காரரின் திறமை இதில் பழிச்சிட்ட்து .

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய திருடாதே பாப்பா திருடாதே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அதேபோல் என்னருகில் நீ இருந்தால் பாடலும் ரசிகர்களை கவர்ந்தது.இந்தப் பாடலுக்கு மட்டும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்தனர். ஆனால் படத்திற்கு எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்

திருடுவதால் தன் குடும்பம் மட்டுமன்றி பிறர் குடும்பமும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தை நீலகண்டன் டைரக்ட் செய்தார் வெற்றிப்படமாக அமைந்த திருடாதே எம்ஜிஆர் சரோஜாதேவிக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.

No comments: