குரு - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

 .



இன்று நாம் குருவின் பலன் பற்றிச் சற்றுச் சிந்திப்போம்.

குரு என்றதும் வியாழ பகவான் பற்றி ஏதோ பேசப்போவதாக நினைத்து விடாதீர்கள். கல்வி அறிவைப் புகட்டும் குருவைப்பற்றித் தான் கூற வருகிறேன்.

திறமையும் அறிவும் கருணையும் பொருந்திய குரு கிடைத்தவர் பாக்கிய சாலிகளே! இதை உணர்ந்து தான் போலும் மகா அலெக்‌ஷாண்டர் பிறந்த போது அவரது தந்தை அரிஸ்டோட்டலிடம், ’நீங்கள் வாழும் இந்தக் காலகட்டத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்றாராம். அரிஸ்டோட்டல் என்ற அந்த மேதை தனது சீஷ்யனை உலகம் வியக்கும் வண்ணம் உருவாக்கினார். மகா அலெஷ்சாண்டரின் சாதனை அவன் வாழ்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்பும் உலகை வியப்பில் ஆழ்த்துகிறது. அதற்கான  தார்ப்பரியங்கள் / பெருமைகள் யாவும் அவரை உருவாக்கிய குருவான அரிஸ்டோட்டிலையே சாரும்.

இந்தியப் பெருங் கண்டத்தில் சக்கரவர்த்தியாகவிருந்த சந்திரகுப்த மெளரியன் என்ற அரசனை வழிநடத்தியவர் கெளடில்யர் என்ற ராஜ குரு.மெளரிய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த உதவியது கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம். அர்த்த சாஸ்திரம் என்பது ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் முறைகளை எடுத்துக் கூறும் நூலாகும். அது இந்தியப் பண்பாட்டின் அறிவுத்திறனையும் ராஜ தந்திரத்தையும் பறைசாற்றும் நூலுமாகும்.

அரசியலைக் கற்கும் எந்த மாணவனும் அர்த்த சாஸ்திரத்தைப் படிக்கத் தவறுவதில்லை. இது ஜேர்மன் உட்பட பல மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை ஆக்கிய கெளடில்யரின் இன்னொரு பெயர் சாணக்கியன் என்பதாகும்.

இவ்வாறு சிறந்த குருவால் வழிநடத்தப்பட்டு வாழ்க்கையில் சித்தி கண்ட சீஷ்யர்கள் பலர். இனி, அன்றய சானக்கியன் காலத்தில் இருந்து இன்றய கால கட்டத்துக்கு வருவோம். குரு சீஷ்ய உறவைச் சற்றே பார்ப்போம்.


செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயர் அண்மையிலே காலமான ஒரு சிறந்த சங்கீத வித்துவான். இவரது சீஷ்யனாக இருந்தவர் மைசூர் மகாராஜாவின் மகனான இளவரசன். ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்த போது, யுவராஜா தொடர்ந்து ஒரே தப்பை செய்து கொண்டிருந்தாராம். செம்மாங்குடியாரும் மிகுந்த பிரயத்தனத்தோடு அதைத் திரும்பத் திரும்பத் திருத்தினாராம். பையன் சரியாகப் பாடவில்லை என்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த குரு, சீஷ்யனை ஓங்கி அறைந்து விட்டார்.

அதன் பின்னர் தான் மகாராஜாவின் பிள்ளை அல்லவா என்பதை உணர்ந்தார். அரச குமாரனை அறைந்து விட்டு அரண்மனையில் எவ்வாறு தங்க முடியும்? தவித்துப் போனார் பிள்ளைவாள். பெட்டியைக் கட்டிக் கொண்டு புகையிரத நிலையத்துக்குப் புறப்பட்டு விட்டார். இதனையறிந்த சீஷ்யரான யுவராஜா உடனடியாக புகையிரத நிலையத்துக்கு விரைந்தார். ‘இந்த சமஸ்தானத்தின் இளவரசன் கூறுகிறேன்; நீங்கள் உடனடியாக அரண்மனைக்குத் திரும்பவேண்டும்.’ என்றார். வேறு வழியின்றி யுவராஜாவின் கட்டளைக்குப் பணித்து அரண்மனை ஏகினார் குருவான பிள்ளைவாள்.

அரண்மனையில் என்ன நடந்தது தெரியுமா? சீஷ்யனான யுவராஜா குருவின் அறைக்கு வந்தான். சாஷ்ட்டாங்கமாக குருவின் காலில் விழுந்தான்; நமஸ்கரித்தான். ‘இப்பொழுது உங்கள் சீஷ்யன் உங்கள் முன் நிற்கிறேன். செய்த தறுகளுக்காக கொடுக்க வேண்டிய மிச்ச அறைகளையும் நீங்கள் இப்போது கொடுக்கலாம்’ என்றாராம் யுவராஜா.குருவும் தனது சீஷ்யனை அள்ளி அணைத்துக் கொண்டாராம்.

இந்த செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயருக்கு பெரிய சீஷ்ய பரம்பரையே உண்டு. இவர்களில் ஒருவர் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். சென்னையிலே நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை நடத்த வந்திருந்த சினிமா நடிகர் வை.ஜீ. மகேந்திரனிடம் செம்மாங்குடியாருக்குச் சமனாக தனக்கு ஆசனம் போட வேண்டாம் என்றும்; அவருக்கு பின் வரிசையில் தனக்கான ஆசனத்தைப் போடும் படி கேட்டுக் கொண்டாராம். இதனை மேடையில் வை.ஜீ. மகேந்திரன் கூறினார்.

அதற்குக் காரணம் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சினிமா விசிறிகள் தமது மதிப்பிற்குரிய பாடகருக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் பின்னால் இருத்தி விட்டார்களே என அவர்கள் விசனப்படாமல் இருக்கவே. பின்னர் பாடகர். ஜேசுதாஸ் பேசும் போது தான் செம்மாங்குடியாரிடம் படித்த காலத்தில் தான் ஒரு வேறு மதத்தவராக இருந்த போதும் கடுமையான ஆசாரங்களை அனுஷ்டிக்கும் ஐயர் அவர்கள் தன்னை எந்தப் பாகுபாடும் காட்டாது தனது சொந்தப் பிள்ளையைப் போல நடாத்தினார் என உணர்ச்சி ததும்பக் கூறினார்.

பதிலுக்கு ஐயர்வாள் தனது குருவான விஸ்வநாத ஐயர் தன்னை ஒரு பிள்ளையைப் போலவே நடாத்தினார். இது கற்றுக் கொடுக்கும் குருவுக்கு இருக்க வேண்டிய பண்பு என்பதை தனது குருவின் மூலம் தான் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

ஆமாம், தான் பெற்ற பிள்லளை என்பது தனக்குப் பிறந்தவன். ஆனால் சிறந்த சீஷ்யன் என்பது தான் உளமார நேசித்து தான் போஷிக்கும் கலையை சீஷ்யனோடு பகிர்ந்து கொண்டவர். தனது கலையானது சீஷ்யன் மூலம் பிரகாசிப்பதை குரு காண்கிறார். இது குருவின்; சீஷ்யனின் நெஞ்சிலே பசுமையான இடத்தைப் பிடிக்கிறது.

இவ்வாறாகக் குருவின் நெஞ்சிலே இடம் பிடித்த சீஷ்யனை புராணத்திலும் காண்கிறோம். அவன் தான் அர்ச்சுணன் என்ற வில் வீரன். இவனது குருவான துரோணாச்சாரியார் பஞ்ச பாண்டவருக்கும் துரியோதனனாதியருக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்தவர். அர்ச்சுணனிடம் இருந்த அபாரத் திறமையைக் கண்டார்.  அவனது திறமையில் கர்வம் கொண்டார். தனது சீஷ்யன் யாராலும் வெல்ல முடியாத வீரன் என்பதில் தான் அவருக்கு எத்தனை கர்வம்! பெருமை!! அளவிலா மகிழ்ச்சி!!!

எங்கோ காட்டு வாசியாக வாழ்ந்த ஏகலைவன் இவரிடம் வருகிறான்.’ஐயா உம்மிடம் நேரடியாக வில்வித்தை கற்றுக் கொள்ளும் தகுதி என்னிடத்திலில்லை. ஆனால் எனது மனதில் உம்மையே எனது குருவாக மதித்து வில் வித்தையைக் கற்றேன். இன்று உமக்கு என் மரியாதையை செலுத்தி குரு தட்சிணை கொடுக்க வந்தேன்’ என்கிறான் அப்பாவியான ஏகலைவன். அவனின் வில் வித்தையின் அத்தனை திறமைகளையும் கண்டார் துரோணாச்சாரியார். அவை யாவும் தனது தலைசிறந்த சீஷ்யனான அர்ச்சுணனின் திறமைக்கு ஈடாக விளங்குவதைக் கண்டார்.

அவரது உள்ளத்தால் அதனைப் பொறுக்க இயலவில்லை. தனது சீஷ்யனுக்கு நிகராக வேறொருவன் வருவதை சகிக்கவில்லை அவர் மனம். பாவியான துரோணாச்சாரியார் குரு தட்சிணையாக ஏகலைவனின் பெரு விரலைக் கேட்கிறார். பெருவிரலை இழந்தால் நாணில் வில்லேற்ற இயலாதே!.... இவ்வாறு தனது சீஷ்யனில் ஆறாக்காதல் கொண்ட குருவை மகாபாரதத்தில் நாம் காண்கிறோம்.

இனி குருவால் வஞ்சிக்கப்பட்ட ஒருவனைக் காண்போம். பரசுராமர் என்பவர் ஒரு சிறந்த குரு. போர்க் கலைகள் பலவற்றையும் அறிந்த மேதாவி. ஆனால் இவரோ பிராமணர் அல்லாத யாருக்கும் போர் நுணுக்கங்களை கற்றுத்தர மறுத்தவர். போர் வித்தைகளில் வித்தகர்களாக விளங்கிய ஷத்திரியர்களை வெறுத்து வாழ்ந்தவர்.

கர்னனுக்கோ இவரைக் குருவாகக் கொள்ள ஆசை. திட்டமிட்டு குருவுக்கு இசைவான பணிவிடைகளைச் செய்து, அவரது நன்மதிப்பைப் படிப்படியாகப் பெற்று வந்தான். பரசுராமரும் அவனது பணிவான, இங்கிதமான பணிவிடைகளில் மயங்கி உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அவனோ அவரிடம் இருந்த இரகசியமான பாசுபதம் என்ற அஸ்திர வித்தையை கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறான்.

ஒரு நாள் குரு இவனின் மடியிலே தலை வைத்து படுத்து கண்ணயர்ந்து விடுகிறார். கர்னனின் தொடையிலே வண்டு ஒன்று கடித்துத் துளைத்து விடுகிறது. எனினும் மிகுந்த சகிப்புத் தன்மையோடு குருவின் நித்திரை கலையாது பாதுகாக்கிறான்; கர்னன் அசையாது இருக்கிறான். கண் விழித்த குருஇரத்த வெள்ளத்தைக் காண்கிறார்; ‘ஒரு பிராமனனால் இத்தகைய வலியைப் பொறுத்துக் கொண்டு சகித்திருக்க முடியாது; நீ நிச்சயமாக ஒரு ஷத்திரியனாகத் தான் இருக்க வேண்டும்; நீ என்னை ஏமாற்றி விட்டாய்’ என்னிடம் கற்ற வித்தை உன் ஆபத்துக்கு ஒரு போதும் உதவாதிருக்கக் கடவதாக’ எனச் சாபமிடுகிறார்.

பாரத யுத்தத்தில் கார்னன் அர்ச்சுனனோடு போர் புரிந்து மாண்ட கதை நாமெல்லாம் அறிந்தது தானே! பரசுராமரிடம் கற்ற பாசுபதம் என்ற வில்வித்தை அவன் போர் புரியும் போது அவனுக்கு துணைநிற்க முடியாது போயிற்று.

கலையைக் கற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் குரு சீஷ்ய உறவென்பது ஒரு முக்கியமான விஷயமாகும். குரு மூலமாகவே கலையைக் கற்றுக் கொண்டவள் நான். எனது அனுபவத்தையும் இங்கு கூறாவிட்டால் இக்கட்டுரை முழுமை பெறாது.

எனது குருவான பத்மஸ்ரீ. வளுவூர். இராமையா பிள்ளை அவர்களிடம் குருகுலக் கல்வி மூலமாக நாட்டியம் கற்றுக் கொண்டவள் நான். எனது குரு நாட்டியம் கற்றுக் கொடுப்பதுடன் போதும் என இருந்து விடார். தான் செல்லும் நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் யாவற்றுக்கும் என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். அவைகள் முடிந்து காரில் திரும்பி வந்துகொண்டிருக்கும் போது அவற்றைப் பற்றிய விமர்சனங்களைச் செய்வதுண்டு. எனது திறமையைத் துலக்கும் வகையில் பல கேள்விகளை அவர் என்னிடம் கேட்பது வழக்கம்.

மேலும் அவரைத் தேடி பல கலைஞர்கள் அறிஞர்கள் வருவதும் அளவளாவுவதும் போவதுமாக இருப்பார்கள்.அப்போதெல்லாம் அவர் என்னை அருகில் வைத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறாக என் குருவிடம் நான் கற்றுக் கொண்டவை பல.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் என்னைத் தனது மகள் போலவே நடாத்தினார். இலங்கைப் பெண்ணான எனது உடல் நலத்திலும் உணவிலும் கூட மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். எனது மேடை கச்சேரி முடிந்ததும் கண்சிருஷ்டி பட்டுவிடுமோ என்று பயந்து சிருஷ்டி பரிகாரம் செய்தே என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

இவற்றை எல்லாம் எண்ணும் போது இப்படி ஒரு குரு அமைய என்ன புண்ணியம் நான் செய்திருக்கக் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

குருவே சரணம்!

No comments: