நான் படித்து மனதில் பதிந்த கவிதாயினி ஆழியாளுடைய கவிதை - செ .பாஸ்கரன்

கவிதாயினி  ஆழியாளை  அறியாதவர்கள் இருக்க முடியாது.  ஆழமான கவிதைவரிகள் அவர் கவிதைகள். தான்  பார்க்கின்ற விடயங்களை எல்லாம் அழகியலோடு எடுத்துவருபவர்.  கொடூரமான விடயங்களை, பேர்  அநியாயங்களை  கூட அழகியலோடு தந்துவிடுகிறார். இங்கே அவரது கருநாவு என்ற தொகுதியில் இருந்து  செவ்வரத்தம் பூ என்ற கவிதையை கையில் எடுக்கிறேன்  ஆயிரமாயிரம் அர்த்தங்கள், உலக வரலாறு ஒருமுறை கண்முன்னே வந்து போகிறது. படிப்பவர் மனங்களில் தோன்றும் பல விஷயங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது. ஒவ்வொருவரம்  தாங்கள் நினைப்பதற்கு கற்பனை வடிவம் கொடுக்க பார்க்க முடிகிறது. அவர் என்ன எண்ணுகின்றார்  அல்லது அவர் என்ன சொல்லுகிறார் என்பது வேறாக இருக்கும் . ஆனால்  வாசிப்பவர்கள் தங்களுடைய கவிதை அனுபவத்திற்கும் பார்வைக்கும் இடையே ரயில் தண்டவாளங்கள் ஓடுவது போல் கற்பனைகள் விரிந்து கொண்டு செல்லும்.குறுக்காக வெட்டி விடாத அளவிற்கு கற்பனைகள் விரிந்துகொண்டே செல்லும்.

 அந்த வகையிலே நான் படித்து சுவைத்த இந்த கவிதை முப்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய வாழ்க்கையிலே, நம்முடைய வாழ்க்கையிலே  நம்முடைய சமூகத்திலே  நடந்த பலவற்றையும் கொண்டு வருகின்றது.  இது கவிஞருக்கு அவுஸ்திரேலிய நாட்டு பூர்வீக குடிமக்களை, அல்லது பிரெஞ்சு புரட்சியை ஏன் பாலஸ்தீன நிலைகளைக்  கூட கற்பனையில் பிடித்திருக்கலாம் நான் கூறியதுபோல் படிப்பவர்களுக்கு  எழுகின்ற கற்பனைகளுக்கு ஏற்ப இந்த கவிதை விரிந்து செல்கிறது. என் வாழ்வில் பல  நிகழ்வுகளில் நாம் பார்த்தவர்கள் அல்லது நினைத்துப்பி பார்க்கக்கூடாது என்று பலரும் நினைப்பது  விரிந்து கிடக்கின்றன. மென்மையான அந்த செவ்வரத்தம் பூவுக்கு கடுமையான சிவப்பு நிறம் அது வீதியில் விழுந்து கிடந்தால்  எப்படி இருக்கும். இது தான் அந்தக் கவிதை .செவ்வரத்தம் பூ. 

விரல்களால் 
குறித்துச் சொல்ல முடியாத 
தருணம் ஒன்றறில் 
 சிவப்பு 
அவனுக்கு பிடிக்காமல் போனது 
ஆனால் சிவப்பபோ  
அவனை  மிகவும் விரும்பியது 

எப்போதும்  அவனைச் 
சுற்றி சுற்றியே வந்தது 
எல்லா இடமும் 
சிவந்த காய்ந்த  ரத்தம் 
எல்லாஇடமும் 
வீங்கிச் சிவந்த மெலிந்த  உடல்கள் 
எல்லா உடலிலும் 
சிவப்பு கீறல் காயங்கள் 
இப்படியாக 
சிவப்போ  அவனை  மிக விரும்பியது 

அவனுக்கோ சிவப்பே  பிடிக்கவில்லை 
சிவப்பை விட்டு  
தூரப்போவதாக 
அவன் முடிவெடுத்துகேக்  கேட்டபோது 
அவர்கள் 
அவனை விடவில்லை 

வாழக் கிடைத்த நாளெல்லாம் 
அவனும் சிவப்பை வெறுத்த படியே இருந்தான்  
ஆனால் அவர்களோ 
அவனை போக விடவில்லை 

காளியாச்சி என்ன செய்வாய் 
அவள் செவ்வரிக் கண்களை மூடிக்கொண்டு 
அவனை கைவிட்டாள்  

ஒரு சாதாரண நாளில் 
செம்மண் புழுதி தினமும் பிரண்டெழும் குச்சு 
ஒழுங்கையில் 
துவண்டு  
ஊர் நாய்கள் எட்டிக் குரைக்க 

மிகச் சாதாரணமாய் 
சிவப்பில் 
ஊறித் தோய்ந்து  கிடந்தான்  
ஒரு செவ்வரத்தம் பூ போல


No comments: