இதழ் அறிமுகம் ஞானம் 249 ஆவது இதழில் மல்லிகைஜீவாவுக்கு அஞ்சலி ! ரஸஞானி


ஈழத்தின் மூத்த இலக்கியவாதியும் மல்லிகை இதழியலாளருமான  டொமினிக்ஜீவா அவர்கள்  கடந்த ஜனவரி 28 ஆம் திகதி அமரத்துவம் எய்தியதையடுத்த,      வாழ்நாள் இதழியல் சாதனையாளர் டொமினிக்ஜீவா என்ற தலைப்பில்,  அஞ்சலி செலுத்தும்வகையில்  நீண்ட ஆசிரியத்தலையங்கத்துடன் கொழும்பிலிருந்து  ஞானம் 249 ஆவது இதழ் வெளியாகியுள்ளது.

மல்லிகை ஜீவா மறைந்து மூன்று நாட்களில்  இம்மாதம் 01 ஆம் திகதி வெளியாகியிருக்கும்  ஞானம் இதழ்  அந்த அமரருக்குரிய உயர் கௌரவத்தை இவ்வாறு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.

மல்லிகை இதழை 1966 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் எத்தனையோ  நெருக்கடிகளுக்கு மத்தியில் நடத்தி  நானூறுக்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்டும்


மல்லிகைப்பந்தல் வெளியீடாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப்பதிப்பித்தவருமான  டொமினிக்ஜீவா கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் மறைந்ததையடுத்து இலங்கையிலும் புகலிட நாடுகளிலும்  வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகள்  வானொலி  தொலக்காட்சி  ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும்  பலரது வலைப்பூக்களிலும் முகநூல்களிலும் பேசுபொருளாகியிருப்பவர் டொமினிக்ஜீவா.

இலங்கையில் சிங்கள ஊடகங்களும்  ஜீவாவுக்கு அஞ்சலிக்குறிப்புகளை வெளியிட்டுள்ளன.

ஜீவாவுடன் கருத்தியல் ரீதியில் முரண்பட்டவர்களும்கூட ஈழத்து இலக்கியத்திற்காக அவர் அர்ப்பணித்த வாழ்வை என்றும் கனம்பண்ணியவாறே  அவரது இழப்பினை அவரது வயது மூப்பின் காரணத்தால் ஏற்றாலும்,  அவரது வாழ்வை தத்தமது கண்ணோட்டத்தில் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

ஜீவாவின் மறைவுக்குப்பின்னர்  வெளியாகும்  நினைவுப்பதிகைகளிலும்  இணைய வழி காணொளி  நினைவேந்தல் அரங்குகளிலும்  இந்த  ஒருமித்த அஞ்சலியில் இழையோடும்  ஆழ்ந்த இரங்கலை அவதானிக்கமுடிகிறது.

இவ்வாறு உலகெங்கும்   ஜீவா  நினைவுகூறப்படும் வேளையில், கொழும்பில் தோன்றியிருக்கும் கொவிட் 19 இரண்டாவது அலை நெருக்குவாரத்திற்கும் மத்தியில் ஞானம் 249 ஆவது இதழை  மல்லிகைஜீவாவின் உருவப்படத்துடன்  வெளியிட்டு நீண்ட ஆசிரியத்தலையங்கத்தில் ஜீவாவின் வாழ்வையும் பணிகளையும் முடிந்தவரையில் சுருக்கமாக பதிவுசெய்துள்ளார் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்.

சக இதழாசிரியர் மறைந்தால்,  உடனடியாக இவ்வாறு நீண்ட ஆசிரியத்தலையங்கம் எழுதி அஞ்சலி செலுத்தும் மரபை  தமிழக இலக்கிய சூழலிலும் காணமுடியாது.

ஜீவா, தொடர்ந்தும் தமது மல்லிகை இதழ்களில் கலை, இலக்கிய ஆளுமைகளையும் சமூகப்பணியாளர்களையும்  அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவித்து வந்தவர்.

மாற்றுக்கருத்தியல்கொண்டவர்களையும் ஜீவா தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் உளமாற நேசித்தவர். அந்த இயல்பினால்தான் இலக்கிய ரீதியில் அவரால் விமர்சிக்கப்பட்டவர்களும் மல்லிகையில்  அதிதியாக பாராட்டப்பட்டனர்.

அத்தகைய ஓர் மரபை தோற்றுவித்த ஜீவா, குறிப்பிட்ட அட்டைப்பட அதிதிகள் பற்றிய கட்டுரைகளையே தொகுத்து நான்கு நூல்களையும் வெளியிட்டவர்.

இவ்வாறு ஏனையோரை   அவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவித்து பார்த்து மகிழ்ந்தார். மன நிறைவுகொண்டார்.   அவரது இலக்கிய சகோதரன் தி. ஞானசேகரன் வெளியிடும் ஞானம் இதழின் அட்டைப்படத்தில்  அவர் தோன்றியிருக்கும் வேளையில்  அவரது  ஆன்மா அதனை பார்க்கக்கூடும் என்ற குருட்டு நம்பிக்கையுடன்  ஞானம் இதழின்   பக்கங்களை நாம் புரட்டுகின்றோம்.

ஜீவா தமது மல்லிகை இதழில் தன்னிடம் நீண்டகாலம் பணியாற்றிய அச்சுகோப்பாளர் சந்திரசேகரம் அவர்களின் படத்தையும் இரண்டு தடவைகள் மல்லிகை அட்டையில் பிரசுரித்து கௌரவித்தவர்.

இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்தில் கூட இத்தகைய அதிசயங்கள்  இலக்கியப்பரப்பில்   அதற்கு முன்பும் பின்பும்  நிகழவில்லை.

அட்டைப்பட அதிதி மரபு மல்லிகைக்குப்பின்னர்  ஈழத்து இலக்கிய இதழ்களிலும்,    பின்னாளில் ஞானம் இதழிலும் தொடர்ந்தது.

மல்லிகை இதழில் எந்தவொரு சிறுகதையும் எழுதியிராத ஞானசேகரனின் கதைகளையும்  -- அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்  ( 1998 ) தொகுத்து  மல்லிகைப்பந்தல் வெளியிட்டிருந்ததை அறிவோம்.

இதுபற்றி  ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்  முன்னரும் விதந்து குறிப்பிட்டுள்ளார்.  ஜீவாவின் மறைவின் பின்னரும்,   நிகழ்ந்த நினைவேந்தல் நிகழ்விலும் நினைவுபடுத்தினார்.

2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில்  முதலாவது தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றபோது வெளியான மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்பிதழின் வௌியீட்டுரையை நிகழ்த்தியவரும் ஞானசேகரன்தான்.

2011 ஆம் ஆண்டு கொழும்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு வித்தூன்றியவர் மல்லிகைஜீவா.  அந்த மாநாட்டின் இணைப்பாளராக இயங்கியவர் ஞானசேகரன். இத்தகைய   ஆரோக்கியமான இலக்கிய உறவும்  முன்மாதிரியானதே !

மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசாங்கம் நினைவு முத்திரை வெளியிடவேண்டும் எனவும் ஞானம் 249 இதழின் ஆசிரியத்தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரதிகளுக்கு:  editor@gnanam.info

                            editor@gnanam.lk                     

3 B – 46th  LANE, COLOMBO, SRILANKA

No comments: