ஆர்ப்பாட்ட கண்டன பேரணி களுவாஞ்சிக்குடியை சென்றடைவு
கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம்
காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம்
சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டது
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பு
தனியார் காணியில் விகாரை; நீதிமன்றம் செல்லுமாறு அங்கஜன் எம்.பி அறிவுரை
மணியுடன் இணைந்து செயற்பட்ட 9 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
காணாமல் போனோரது உறவினர்கள் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்
பொத்துவில் - பொலிகண்டி பேரணி அமைதியாக நிறைவடைந்தது
ஆர்ப்பாட்ட கண்டன பேரணி களுவாஞ்சிக்குடியை சென்றடைவு
தமிழ் கட்சிகளின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி நேற்று (3) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பித்து நேற்று இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் நிறைவடைந்துள்ளது.
பொலிஸார் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது தொடர்பில் சோதனை செய்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து இந் த மூன்று நாள் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதுடன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.(பாறுக் ஷிஹான்) நன்றி தினகரன்
கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம்
- தடைகளை தாண்டி உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
- ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு
வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில்-பொலிகண்டி பேரணி திட்டமிட்டபடி இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது.
பொத்துவில் தொடக்கம் இடையிடையே அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் தடைகள் மறிப்புகள் இருந்தன. அத்தனை தடைகளையும் தாண்டி இப்பேரணி நடைபெற்றுவருகிறது.
பொத்துவில் தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசத்தில் கனமழை பெய்த பொழுதிலும் அனைவரும் நனைந்தவண்ணம் பேரணியில் பங்கேற்றனர்.
த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் இரா. சாணக்கியன், த. கலையரசன் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி. ஜெயசிறில், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி. சிறிநேசன், சி.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் சமயத்தவைர்கள் சிவில் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் சாணக்கியனுக்கு தடை
இதேவேளை, இவ்வார்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், மட்டக்களப்பிற்குள் போராட்டங்களை நடத்த மட்டக்களப்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அத்துடன், இது தொடர்பான அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று (03) நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டம், வாகனத்தொடரணி என்பவற்றினை கொரோனா மற்றும் சட்டவிரோத கூட்டம் எனக் குற்றஞ்சாட்டி அந்தந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் பிரிவு 106(1) இன் கீழ் தடையுத்தரவுகள் பெறப்பட்டு வரும் நிலையில் கோப்பாய் பொலிஸாரும் வழக்கொன்றை யாழ் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.
ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்த் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த வகையில், தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், இன்று (03) தொடங்கி, 06ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
(காரைதீவு குறூப் நிருபர் - வி.ரி. சகாதேவராஜா, முல்லைத்தீவு குறூப் நிருபர் - என். கிருஷ்ணகுமார், சண்முகம் தவசீலன்)
காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம்
கிளிநொச்சி முருகன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பம்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி யில் ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயம் முன்பாக நேற்று முற்பகல்11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போராட்ட பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் அறவழி போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம்.06ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது.
நேற்று ஆரம்பமான போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டுமென உறவுகள் வலியுறுத்தியதுடன், சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பரந்தன் குறூப், கிளிநொச்சி குறூப் நிருபர்கள்
நன்றி தினகரன்
சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டது
கொழும்பு துறைமுக ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டம் நேற்று கைவிடப்பட்டது. நேற்றைய தினம் அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து முற்பகல் 10. 30 மணியளவில் சட்டப்படி வேலைப் போராட்டத்தை கைவிட்டதாக துறைமுக ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையடுத்து தமது சட்டப்படி வேலை போராட்டத்தை கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை மேற்கொண்டனர். அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்றுமுன்தினம் மேற்படி தொழிற்சங்கத்தினருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படுமென அவர் உறுதியளித்தார். அத்துடன் அது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்படுமென்றும் அவர் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார். அதனையடுத்து நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை வெளியிடப்பட்ட நிலையில் துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட சட்டப்படி வேலை போராட்டத் தை கைவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
நன்றி தினகரன்
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பு
- கொழும்பு துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் வலியுறுத்தி கலந்துரையாடல்
- தி ஹிந்து செய்தி வெளியீடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துள்ளதாக, இந்திய செய்தி நிறுவனமான, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து இச்சந்திப்பு இடம்பெற்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மதித்துச் செயற்படவேண்டும் என்பதே இந்தச் சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு கொள்கலன் முனையத்தை 100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டதோடு, மேற்கு கொள்கலன் முனையத்தை 35 வருட குத்தகையின் கீழ் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணண்நது அபிவிருத்தி செய்ய இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
தனியார் காணியில் விகாரை; நீதிமன்றம் செல்லுமாறு அங்கஜன் எம்.பி அறிவுரை
வலி. வடக்கில் தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
வலி வடக்கில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் திஸ்ஸ விகாரை தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வலி வடக்கு தவிசாளர், தமது மீள்குடியேற்ற பகுதியில் உள்ள அரச காணியில் விகாரை கட்டுவதற்காக தம்மிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் தற்போது சபைக்கே தெரியாமல் தனியார் காணிகளில் விகாரை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
இதன்போது பதிலளித்த அங்கஜன் இராமநாதன், தனியார் காணிகளில் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டுவது தொடர்பில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் உள்ள நிலையில் சபை அதனை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
கோப்பாய் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
மணியுடன் இணைந்து செயற்பட்ட 9 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
தமிழ் தேசிய முன்னணியின் அதிரடி நடவடிக்ைக
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 9 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 9 உள்ளூராட்சி உறுப்பினர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின்போது, தமது கட்சியின் கொள்கைகளை மீறி கட்சியின் தீர்மானத்தை மீறி அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்த மன்னிக்க முடியாத குற்றங்களை புரிந்த குறித்த ஒன்பது பேரையும் விசாரணைகள் இன்றி மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அவர்களில் மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களை ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்த நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நால்வரும் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பிரகாரம் வழக்கு முடிவடையும் வரையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நால்வரையும் நீக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையிலேயே ஏனைய ஆறு உறுப்பினர்களான வரதராஜன் பார்த்திபன், சி. தனுஜன், இ.ஜனன், ப.பத்மமுரளி, அ.சுபாஜினி, இ.ஜெயசீலன் ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது, தமது கட்சியினை சேர்ந்த ப.மயூரனுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக அகிலாண்டரூபி, கௌசல்யா மற்றும் தவிசாளர் தெரிவில் போட்டியிட்டவரும், தற்போதைய தவிசாளருமான ப.மயூரன் உள்ளிட்டோரையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகள் இன்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த 9 உறுப்பினர்களும் நீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமித்தி தங்கராசா - நன்றி தினகரன்
காணாமல் போனோரது உறவினர்கள் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்
நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான நேற்று வடக்கில் காணாமல் போனோரது உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் காலை 10 மணியளவில் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, போராட்ட இடத்துக்கு வருகை தந்த பொலிசார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்து, போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனவும் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என கடும் தொனியில் தெரிவித்தனர்.
எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிசாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர். கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர சபை மேயர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் சுதந்திரமான நேற்று அடையாள உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டதுடன், வவுனியா பொலிஸ் பிரதேசத்திற்குள் ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தவேண்டாம் என்று உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த உத்தரவையும் மீறி அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை10 மணிக்கு பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன் அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். இதேபோன்று முல்லைத்தீவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட, ஓமந்தை விசேட நிருபர்கள்
நன்றி தினகரன்
பொத்துவில் - பொலிகண்டி பேரணி அமைதியாக நிறைவடைந்தது
- தியாக தீபம் திலீபன் உள்ளிட்ட பலருக்கும் அஞ்சலி
- யாழ். பல்கலை நினைவுத்தூபிக்கு முள்ளிவாய்க்கால் மண் கையளிப்பு
வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாநகரை இன்று பிற்பகல் வந்தடைந்தது.
தந்தை செல்வா நினைவிடம், உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோர் தூபி, தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபி ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கு சிவில், சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில்,பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் இந்தப் பேரணி கடந்த புதன்கிழமை (03) பொத்துவில் ஆரம்பமானது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஊடாக நான்காவது நாளான நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாக தீபம் நினைவுத் தூபி, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றல் ஊடாக பேரணி பருத்தித்துறை வீதி ஊடாகவடமராட்சி மண்ணை வந்தடைந்தது.
முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட கைப்பிடி மண்ணை, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பயன்படுத்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இன அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12மணிக்கு தென்மராட்சி பிரதேசத்தை வந்தடைந்தது. இதன்போது சாவகச்சேரி பகுதியில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தீப் பந்தந்தை ஏந்திய வண்ணம் மத ஆராதனைகளில் ஈடுபட்டு பின்னர் யாழ் நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தனர்.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், சாவகச்சேரி விசேட நிருபர் - சுபேஷ், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment