வாழ்வை குலைப்பதும் நாம் அன்றோ !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா
ஆசை என்பது சிலந்தி வலை
அதிலே சிலந்தி நாம் தானே
சிக்கி திறணித் தவித்து விழும்
செயலில் நிற்பதும்  நாம் தானே 

கங்கை நாடிச் சென்று நிற்போம்
கர்மம் அகலக் குளிக்க என்று 
அங்கே தர்க்கம் தொடங்கி நிற்கும்
ஆணவம் அங்கே தலை விரிக்கும் 

ஆலயம் வணங்கச் சென்று நிற்போம் 
அவசரம் கொண்டு முந்தி செல்வோம் 
பிழையென யாரும் சொல்லி விட்டால்
நிலையினை இழந்து கத்தி நிற்போம் 

இலவசம் என்றால் ஓடி நிற்போம்
எதையும் வாங்கத் துடித்து நிற்போம் 
மனமதில் சுரணை மடிந்து நிற்கும்
மடியினில் கட்டத் தொடங்கி நிற்போம் 

ஊழல் மனதில் ஊறி நிற்க
உயர்வாய் அறிவுரை உரைத்து நிற்போம்
வாழ்வின் மகத்துவம் மனம் எண்ணா
வாழ்வை குலைப்பதும் நாம் அன்றோ  

No comments: