இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா ஆழ்ந்து நேசித்த பறவை இனம் புறா.
வாழ்கின்றன. அவற்றில் சில படிப்படியாக மறைந்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது அதன் விலை 30 சதம்தான் !
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில்
முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து, இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.
ஒரு சிகையலங்காரத்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் ஜீவா.
சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார். இந்தச்சரிதை ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.
முழுநேர எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில்
அறிமுகமான ஜீவா, இதழாசிரியராகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது. அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.
ஆயினும் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளோ- காகிதத்தட்டுப்பாடோ - வாழ்வாதார நெருக்கடியோ இல்லாத இந்த கணினி யுகத்திலும் கொழும்பிலிருந்து வெளியான மல்லிகை, அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டதும் ஈழத்து இலக்கிய உலகில் மறக்கமுடியாத செய்தியாகும்.
மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் கண்டோம்.
ஏறு போல் நட - ஓய்தலொழி - குன்றென நிமிர்ந்து நில் - சிதையா நெஞ்சுகொள் - சுமையினுக்கு இளைத்திடேல் - தூற்றுதல் ஒழி - தோல்வியிற் கலங்கேல் - ரௌத்திரம் பழகு - வெடிப்புறப்பேசு - முதலான குணாதிசயங்கள் இருந்தன. இந்த அருங்குணங்கள் மல்லிகைஜீவாவிடமும் நீடித்திருந்தது என்பது பரகசியம்.
இலக்கிய இதழை யாழ். மண்ணில் மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர் சூட்டலாம்...? என்று
தனது இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.
இதயம் - கமலம் - மலர் - செந்தாரகை - கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார். மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.
மல்லிகையின் முதலாவது ஆசிரியத்தலையங்கத்தினை ஜீவாவின் கையெழுத்தில் இங்கே பார்க்கலாம்.
இதனை பொக்கிஷமாக பாதுகாத்து தந்தவர் மூத்த பத்திரிகையாளரும் ஜீவாவின் நண்பருமான – தற்போது கனடாவிலிருந்து – தமிழர் தகவலை வெளியிடும் எஸ். திருச்செல்வம்.
ஜீவாவுக்கு 60 வயது பிறந்து மணிவிழாக்காலம் தொடங்கியபோது, திருச்செல்வம் அவருக்கு மலர்மாலை எடுத்துச்சென்று வாழ்த்தினார்.
செல்வதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் ஸ்டார் கராஜ் என்ற தொழிலகத்தை நடத்திக்கொண்டிருந்த ஈழத்து மூத்த முற்போக்கு எழுத்தாளரும் அரசியல் கருத்தியலில் ஜீவாவுடன் முரண்பட்டிருந்தவருமான கே. டானியலையும் திருச்செல்வம் அழைத்துச்சென்றார்.
டானியலும் உடன் சென்று ஜீவாவை வாழ்த்தினார். அந்நாட்களில் எமது இலக்கிய உலகம் இவ்வாறுதான் இருந்தது.
இன்று..?! முகநூல் எழுத்தாளர்களின் அக்கப்போர்தான் கூடியிருக்கிறது !
மல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல் வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் பல சிற்றிதழ்கள் சிலரது
ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன. இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.
பொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் - கூட்டுறவு அடிப்படையில் குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.
சுமார் 47 வருடகாலமாக வெளிவந்த மல்லிகையின் சாதனை இதுதான் !
சாதாரண குடும்பத்தில் பிறந்து தனக்குத்தெரிந்த தொழிலையே செய்து வாழ்ந்தவரை - தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் இடதுசாரி அரசியலுக்குள் அழைத்து வந்தார். ராஜகோபாலன் என்ற இலக்கிய ஆர்வலர் இலக்கியத்தின்பால் திருப்பினார். தோழர் புத்தகக்கடை பூபாலசிங்கம், ஜீவாவுக்கு புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தார். கார்த்திகேசன் மாஸ்டரும் புத்தகக்கடை பூபாலசிங்கமும் ஜீவா சென்றிருக்கும் இடத்துக்கு முன்பே சென்றுவிட்டார்கள்.
இராஜகோபாலுக்கும் தற்போது 95 வயது கடந்துவிட்டது. கனடாவில் வசிக்கிறார். இவரது உறவினர்தான் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர் வதிரி சி. ரவீந்திரன்.
அண்மையில் நடந்த ஜீவா நினைவேந்தலில் ராஜகோபாலின் புதல்வன் ரொஜர்ஸ் கனடாவிலிருந்து கலந்துகொண்டு உரையாற்றினார்.
மல்லிகை ஜீவாவின் தர்மாவேசம்
மல்லிகை நடத்தியபொழுது இடதுசாரிச்
சிந்தனையாளர்களினதும் முற்போக்கு இலக்கியவாதிகளினதும் சகவாசத்தினால் தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள முயன்று பிற மொழி இலக்கியங்களுக்கும் மல்லிகையில் களம் வழங்கினார்.
சகோதர சிங்கள இலக்கியவாதிகளின் மீது நேசமுற்று பிரபல மூத்த சிங்கள இலக்கிய மேதை மார்ட்டின் விக்கிரம சிங்காவை கௌரவித்து மல்லிகை முகப்பில் அவரது படத்தை வெளியிட்டு சிறப்பிதழ் வெளியிட்டார்.
அதனைக்கண்டு பொறுக்கமுடியாத ஒரு அதிதீவிர தமிழ்க்கொழுந்து, யாழ். மத்திய கல்லூரிக்கு முன்னால் தமது பிரியத்துக்குரிய சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஜீவாவை வழிமறித்து - மார்ட்டின் விக்கிரமசிங்காவின் படத்துடன் வெளியான மல்லிகை இதழை வாங்கி, அவர் முன்னாலேயே கிழித்து முகத்தில் எறிந்துவிட்டுச்சென்றது.
அதன் பின்னும் பல வருடங்கள் மல்லிகை வெளியானது. ஜீவா தொடர்ந்தும் இலங்கையெங்கும் அலைந்து திரிந்து மல்லிகை விநியோகித்து ஈழத்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தார். வளம்படுத்தினார்.
ஆனால் - அந்த அதி தீவிர தமிழ்க்கொழுந்து
அகதியாகச்சென்று ஐரோப்பிய நாடொன்றில் தனது வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய மொழி படித்து வாழ்கிறது.
ஜீவா ஐரோப்பாவில் நடந்த வருடாந்த இலக்கிய சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் நீண்ட நேரம் எழுந்து நின்று உரையாற்றியபோது, தான் கடந்து வந்த பதையை சொன்னார்.
அவர் பேசி முடித்ததும் முழுச்சபையும் எழுந்து நின்று தொடர்ச்சியாக சில நிமிடங்கள் கரகோசம் எழுப்பியது.
அந்தக்கூட்டத்தில், பல வருடங்களுக்கு முன்னர் மல்லிகையை வாங்கி கிழித்து ஜீவாவின் முகத்தில் விட்டெறிந்த தமிழ்க்கொழுந்தும் இருந்தது.
அந்தக்கொழுந்து ஜீவாவை சந்தித்து தன்னை நினைவுபடுத்தி மன்னிப்புக்கேட்டபோது, “ அய்யா, நான் ஓடிவந்துவிட்டேன். நீங்கள் இன்னமும் அங்கே தெருத்தெருவாக அலைந்து ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு தொண்டாற்றுகிறீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள் “ எனச்சென்னதும், “ சரி... எப்படி இருக்கிறீர்..? எத்தனை குழந்தைகள், அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துவிடும். எங்கிருந்தாலும் தாய் நாட்டை மறந்துவிடாதீர்கள் “ என்றார் ஜீவா !
ஜீவா சில சமயங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றும் முகத்துக்கு நேரே பேசும் இயல்புள்ளவர். யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த தம்பித்துரை அன் சன்ஸ் என்ற பத்திரிகை - புத்தகக்கடைக்கு மாதாந்தம்
மல்லிகையில் பத்துப்பிரதிகளை வழங்குவார். அந்தக் கடை உரிமையாளர் அதனை பத்திரமாக பாதுகாத்து மேசையின் கீழே வைத்திருந்துவிட்டு, அடுத்த தடவை ஜீவா புதிய இதழின் பிரதிகளை கொடுக்கவரும்பொழுது, " எதுவும் விற்கவில்லை" - என்று மேசையின் கிழே இருந்த பத்து பிரதிகளையும் எடுத்துக்கொடுப்பார். இந்த நாடகம் பல மாதங்களாக அரங்கேறியது. வழக்கம்போல் கடையில் தொங்கும் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், தினமணிக்கதிர், பொம்மை, பேசும் படம் இதழ்கள் விற்பனையாகிவிடும்.
ஒரு நாள் ஜீவாவின் தர்மாவேசம் விழித்துக்கொண்டது.
'' நாளைக்கு நீர் இறந்துபோனால் உம்முடைய சாவீட்டுக்கு குமுதம், ஆனந்த விகடன், பொம்மை, பேசும் படம் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்த ஜீவாதான் வருவான். " - எனச்சொன்னது ஜீவாவின் தர்மாவேசக்குரல்.
ஒரு சமயம் The Island பத்திரிகை வெளியிடும் நிறுவனம் வெளியிட்ட திவயின சிங்கள ஏடு ஜீவாவை பேட்டி கண்டு எழுத விரும்பி நாள் குறித்தது. அவருக்கு சிங்களம் தெரியாது. என்னை உடன் அழைத்துச்சென்றார். அந்த நேர்காணல் சந்திப்பை கொழும்பு கலாபவனத்தில் (Art Gallery ) ஒழுங்கு செய்து தந்தவர் கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய தமிழ் அபிமானி கே.ஜி.அமரதாஸ.
அவ்வேளையில் குட்டிமணி தங்கத்துரை முதலானோர் சிறையில் இருந்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக பிரபலமாகியிருந்தார்.
சிங்கள வாசகர்களுக்கு தமிழ் இலக்கியம் போதியளவு அறிமுகம் இல்லாதிருந்த காலம். ஆனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா, டி.பி. இலங்கரத்னா, குணதாச அமரசேகர, கருணாசேன ஜயலத், ஜீ. பி.சேனாநாயக்கா, குணசேன வித்தான, ஆரியரத்தின வித்தான, கே.ஜயத்திலக்க, மடவள எஸ். ரத்நாயக்கா போன்ற இலக்கியவாதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியிருந்தனர்.
ஜீவா, அந்த நேர்காணலில் மேலே குறிப்பிட்ட சிங்கள எழுத்தாளர்களின் பெயர்களைச்சொல்லி, இவர்களையெல்லாம் எமது தமிழ் இலக்கிய வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள வாசகர்களுக்கு தெரிந்த பெயர்கள் அமிர்தலிங்கமும் குட்டிமணியும்தான். எனச்சொன்னதும், அந்தச் சிங்கள நிருபர் திகைத்துவிட்டார். பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு, இந்தக்கருத்தையே இந்த நேர்காணலுக்கு தலைப்பாக எழுதுவேன் என்றார்.
அந்த நிருபர் சொன்னவாறே அந்தத்தலைப்பு ஜீவாவின் தர்மாவேசக்குரலாக அந்தச்சிங்கள ஏட்டில் ஒலித்தது.
தொடக்க காலத்தில் மல்லிகையின் ஆண்டு மலர்கள் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகும். பிற்காலத்தில் ஜனவரி மாதத்தில் வெளியானது. மல்லிகை 46 ஆவது ஆண்டு மலரில் 2001 இல் நாடாளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி., மல்லிகை பற்றி உரையாற்றியபொழுது ஜீவாவையும் அவரது தேசிய உடையையும் விதந்து போற்றியது பற்றிய தகவல் பதிவாகியிருக்கிறது. நாடாளுமன்ற பதிவேட்டுத் திகதி (Hansard - - 04-02-2001)
( தொடரும் )
No comments:
Post a Comment